Friday, May 26, 2006

ஓகை - பெயர்க்காரணம்

ஓகை - பெயர்க் காரணம்.

ஓகை என்பது காவிரியின் கடை முக்கோணத்தில் (டெல்ட்டா) இருக்கும் ஒரு சிற்றூரின் பெயர். இப்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறதென நினைக்கிறேன். இந்த சிற்றூரில்தான் மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் என் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள். என் தாத்தா, அப்பா மற்றும் சில நேரங்களில் என்னையும்கூட இந்த ஊரின் பெயரை எங்கள் பெயருடன் சேர்த்து என் உறவினர்கள் அழைப்பார்கள் . என் வாழ்நாளில் நான் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த ஊரில் கழித்திருக்கிறேன். ஆனாலும் அந்த ஊரும் அந்தப் பெயரும் எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. ஓகை என்ற சொல்லைக் கம்பரும் மற்றவர்களும் உவகை என்ற பொருளில் பயன் படுத்தியிருக்கின்றனர்.

என் பத்து வயது வரை என் வாழ்க்கை குடந்தையில்தான் நடந்தது. அதனால் என் நினைவுகளில் நிரந்தரமாய்த் தங்கிவிட்டது தஞ்சைத் தரணி. இப்பகுதியின் ஏதோ ஒரு சிற்றூரின் விவரிப்பு ஓகைக்கும் பொருந்தும். இப்பகுதியின் எந்த ஒரு சிற்றூரையும் இப்படி விவரிக்கலாம்.

வயலும், வைக்கோல்போரும், வாய்க்காலும், வரப்புகளும், வண்டல் மண்ணும், வற்றாத கிணறுகளும், வாழ்வதற்கான அத்தனை வனப்புகளைக் கொண்டதும், மருத நிலத்தின் பண்புகள் மிகுந்து மிளிருவதுமான ஒரு நிலத்துண்டு.

எனக்கு ஓகை என்று சொல்லும்போது தஞ்சைத் தரணியுடன் ஏற்படும் தொடர்பில் ஒரு கற்பனை சுகம் வந்துவிடும். இந்த சுகம் என் எல்லா புலன்களையும் வருடிவிட்டுச் செல்லும்.

வெறுங்காலில் நடக்கும்போது மெத்திடும் மென்மணலின் சுகம், எப்போதோ தட்டுப்படும் நெரிஞ்சிலைத் தூர எறிந்த பின்னும் தொடரும். சுற்றிவரும் காற்றில் ஈரம் உயிர்ப்பாயிருக்கும். அங்கு நான் உண்ட கன்னலும் களியும் இன்னமும் நாவில் ருசிக்கும். ஆறும் சோலையும், மாவும் தெங்கும், ஆலும் அரசும், வாழையும் தாழையும், நாணலும் மூங்கிலும், கோவிலும் குளமும், மடுவும் குட்டையும், தேரும் திருவிழாவும், மீனும், மாடும், ஆடும், ஆனையும், இன்ன பிறவும் கண்களை விட்டகலாமல் இன்றளவும் நிற்கும்.

என் மூக்கு இன்னமும் இழக்காத ஒரு கலவை சுகந்தம் சுவாசத்தில் என்றும் கலக்கும். சாணமும், புழுதிக் காற்றின் மண்மணமும், பச்சை நெடியும், இவற்றை இணைக்கும் ஏதோ ஒன்றும், நீர்நிலைகளின் பாசி மணமும், நெல்வேகும் புழுங்கல் மணமும், வெற்றிலை பாக்கு வாசனையும், பூக்களுக்கு மணமிருப்பதை சிலநேரம் மறந்து போகச் சொல்லும். இந்நிலத்தில் காற்றின் ஈரமும் கடுங்கோடையும் கூட்டணியாகிச் சுரக்கச் செய்யும் வியர்வையின் மணம் கூட வேறானதோ என உணரும் ஒரு பொய்யை என் மனம் பலவேளை படைப்பிக்கும்.


வாகீச கலாநிதிகளின் வளமான தமிழும், வட்டார வழக்காய் வாஞ்சையில் மூழ்கி வடிவிழந்த சொற்களும், பல்லியத்தின் பண்பட்ட பல இசையும், பண்டிதரின் பண்ணிசையும், பாமரரின் நாட்டுப் பாடல்களும், வடமொழி விற்பனரின் வியாக்கியானமும், வேத கோஷமும், நட்பின் நையாண்டியும் நக்கலும், இவையேதும் காதில் விழாதிருக்கும் நேரத்தில் விரிவான ஆலாபனையாய் ஒரு நூறு பறவைகளின் ஓங்காரமும் கேட்கும்.

கங்கைக் கரையை கம்பர் விவரித்தது எனக்கு காவிரிநிலத்தை விவரித்தது போலவே இருக்கிறது. மருதநிலச் சிறப்பைப் பற்றி ஒரு கம்பராமாயணப் பாடல்:

தண்டலை மயில்கள் ஆடத்
....தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
....குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
....தேன் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
....மருதம் வீற்றிருக்கும் மாதோ.

(நான் புரிந்து கொண்ட) பொருள்: சோலையில் மயில்கள் ஆட விளக்குகளாக தாமரை மலர்கள் தயார். ஆனால் மேகங்களோ முரசொலிக்கு ஏங்கிநிற்க, கண் விழித்துப் பார்க்கின்றனவே குவளை மலர்கள். தெள்ளிய நீர்நிலைகளின் சிற்றலைகள் திரைச்சீலையாய் நெளிய, தேனிசை பிழியும் மகர யாழையும் மிஞ்சும்படிக்கு வண்டினங்கள் இனிதாய்ப் பாடிகொண்டிருக்கின்றன. இந்த நாடகாமாய் வீற்றிருக்கிறாளே மருத நில மங்கை!

Tuesday, May 16, 2006

தமிழ்த்தாய் - பாரதியாரின் பாடல்.

'தமிழ்த்தாய் என்று தலைப்பிடப் பட்டிருக்கும் பாரதியாரின் இந்தப் பாடலில்தான் 'மெல்லத் தமிழினிச் சாகும்...' என்ற பாடல்வரிகள் வருகின்றன. இந்தப் அடி தவறாக பலராலும் மேற்கோள் காட்டப் படுகிறது. இப்பாடலை முழுதும் படிக்காமலும் புரிந்து கொள்ளாமலும் எதிர்மறையான கருத்துகளுக்கு மேற்கோள் காட்டும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இப்பாடலை அனைவரும் படித்துப் பொருள் உணரும் பொருட்டு சில இடங்களில் பதம் பிரித்தும் சில சந்திகளை மாற்றியும் கொடுத்திருக்கிறேன்.

தமிழ்த்தாய் தமிழர்களை புதுப்புது அறிவுகளை தமிழுக்குக் கொண்டு வாருங்கள் என வேண்டுவதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு ஒரு துணைத் தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

"தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்"

ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
.. ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
.. மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
.. மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்:
ஆன்ற மொழிகளின் உள்ளே - உயர்
.. ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
.. காற்றையும் வானவெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் - பல
.. தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங்கள் பல தந்தார் - இந்தத்
.. தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரம் கெட்டவன் காலன் - தன்முன்
.. நேர்ந்த(து) அனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றும் தீதென்றும் பாரான் - முன்பு
.. நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடும் காட்டுவெள்ளம் போல் - வையச்
.. சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன்
.. காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
.. யாவும் அழிவுற்(று) இறந்தன கண்டீர்.

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
.. சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
.. ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்!- இனி
.. ஏதுசெய்வேன்? என(து) ஆருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்குக்
.. கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
.. பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்:
மெத்த வளருது மேற்கே - அந்த
.. மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை,

சொல்லவும் கூடுவதில்லை - அவை
.. சொல்லும் திறமை தமிழ்மொழிக்(கு) இல்லை!
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
.. மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்"

என்(று) அந்தப்பேதை உரைத்தான் - ஆ!
.. அந்த வசை எனக்(கு) எய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
.. செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - அன்று
.. சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
.. ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

* * * *
தமிழ்த்தாய் இவ்வாறு நம்மை 'வேண்டுவதாகக்' குறித்திருந்தாலும் நாம் கட்டளையாகவே எடுத்துக் கொள்ளலாம்.

Friday, May 05, 2006

தேர்தல் 2060

தேன்கூடு & தமிழோவியம் இணைந்து நடத்தும் வலைப் பதிவாளர்களுக்கான 'மாதாந்திரப் போட்டி' யில் என்னுடைய பதிவு:


தனியைத் தக்க வை



தலையனையைப் பிதுக்கிப் பிசைந்துகொண்டு இந்த விஸ்கஸ் படுக்கையில் புரளுவது அலாதி சுகம்தான். அறையின் வெப்பத்தை பதினைந்துக்குக் குறைத்தேன். நேற்று நள்ளிரவுக்கு மேல் கேபிள்விஷனைப் பார்த்த்துக்கொண்டிருந்தது இன்று கண்களை அழுத்துகிறது. ஆனால் என்ன செய்வது? இன்று 2060ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல். பெரிய இரண்டு கட்சிகளும் தடாலடியாக புதிய அதிர வைக்கும் ஊழல் புகார்களை ஒருவர் மீது ஒருவர் நேற்று அள்ளி வீசிக் கொண்டார்கள். ரொம்பவும் விறுவிறுப்பாக இருந்தது.


தேர்தலுக்கு முந்தய நாளுக்கென்றே சிறப்பாகத் தயாரித்து தனியாக வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நேரம் போனதே தெரியவில்லை. இன்று அரசு விடுமுறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமையை நூற்றாண்டுகளுக்கு சாதித்து, மேலும் பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இதோ இன்றைக்கு மற்றுமொரு ஒரு பொதுத் தேர்தல் தமிழக சட்டசபைக்கு. தேர்தல் தினத்தை விடுமுறையாக வைத்திருப்பதால் ரொம்பவும் போரடிக்கிறது. வயது முப்பத்தைந்துக்கு மேல் ஆகிறது. குடும்பமென்று ஒன்றும் ஆகவில்லை. ஆனால் தனியாக இருப்பது ஒன்றும் கஷ்டமாக இல்லை. இருந்தாலும் சொந்தமாகவோ தத்தாகவோ குழந்தைகள் இல்லாதிருப்பதுதான் பெருங்குறையாக இருக்கிறது. எனக்கு வளர்ப்பாக ஒரு ரோபோ கூட கிடையாது. பொழுதைத் தள்ளுவதுதான் சில நேரங்களில் பெருங்கஷ்டம்.


என்ன செய்வதென்றே புரிவதில்லை. காலை எட்டுமணிக்கெல்லாம் வாக்குப்பதிவு ஆரம்பித்துவிட்டிருக்கும். ஒன்பது மணி ஆனபின்னும் நான் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறேன். விடுமுறையும் சோம்பேறித்தனமும் சயாம் இரட்டையர்கள் போலும். பிரிப்பதற்கு ஒரு லேசரேஷன் செய்தால்தான் முடியும் போலிருக்கிறது.

பத்து கட்சி கூட்டணியும் பதிமூன்று கட்சி கூட்டணியும் மோதுகின்றன. முன்னெல்லாம் சுயேச்சைகள் என்று ஐம்பதுபேர்கூட போட்டியில் இருப்பார்களாம். சே! எவ்வளவு நாகரீகமற்றவர்களாய் இருந்திருக்கிறோம்? இப்போது அப்படியா? மூன்று பேர்தான் சுயேச்சை என்ற உச்சவரம்பும், இவர்களைத் தீர்மானிக்க பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே குட்டிக்குட்டியாய் ஆன்லயன் தேர்தல்களுமாய் ரொம்பத்தான் ஜனநாயகமாகப் போய்கொண்டிருகிறார்கள் தேர்தல் ஆணையத்தினர். எவ்வளவுதான் குறைந்த ஊழல்க் காரர்களாய் இருந்தாலும் சுயேச்சைகள் ஏன் பெரும்பாலும் வெல்லுவதில்லை?

ஓட்டு கேட்டு அலையும் ரோபோ வண்டிகளின் சர்புர்ரெல்லாம் நேற்றோடு நின்று போய்விட்டது. அப்பா! இனிமேல் தெருக்கள் அமைதியாக இருக்கும். இன்பாக்ஸில் ஓட்டுக்கேட்டு மின்னஞ்சல்கள் நிரம்பி வழியாது. குருஞ் செய்தியிலும் பாப் மெயில்களும் - அப்பப்பா போதுமடா சாமி - இந்த ஒருமாதமாய்ப் பாடாய்ப் படுத்திவிட்டன.


கேபிள்விஷனில் முடிவுகளைப்பற்றி ஹேஷ்யங்கள் வர ஆரம்பித்துவிட்டன. சற்று நேரம் திரையை என்முன் இழுத்துவைத்து பார்த்தேன். ஒன்றும் பெரிதாய் விறு விறுப்பு இல்லை. யார் வந்தால் என்ன? யார் முந்தினால் என்ன? யார் பிந்தினால் என்ன? கதவு தட்டப்பட்டது. பக்கத்து பிளாட்டிலிருந்து ஜெயன் எப்போது ஓட்டுப்போடப் போகிறேன் என்று டோர்விஷனில் கேட்டான். இன்னும் முடிவு செய்யவில்லையென்று சொல்லிவிட்டு மீண்டும் படுக்கையில் புரண்டேன்.

சில நேரங்களில் அலுவலகம் கூட சொர்க்கமாகத் தோன்றுகிறது. நாமாக யோசிக்கவே வேண்டாம். அலுவல் ஆற்றில் குதிக்க வேண்டியதுதான், அது நம்மை அதன் போக்கிற்கு இழுத்துச் சென்றுவிட்டு மாலையில் நம் அறையில் விட்டுவிடும்.

எப்படி ஓட்டுப்போடலாமென்று யோசித்தேன். இந்த ஆன்லைனில் ஓட்டுப்போடும் வசதியை எப்போது செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. இன்றைய தேதிக்கு ஓட்டுப்போடுவதற்கும், நமக்கே நமக்கான குழந்தையை நாமாகப் பெற்றுக் கொள்வதற்கும் மட்டுமே நாம் நேரடியாக செயல்பட வேண்டியிருக்கிறது. பின்னது சரி. ஆன்லயனில் முடியாது. ஆனால் ஏன் ஓட்டு போடமுடியாது? ஆன்லயனில் வாக்களிப்பதை ரெஃபரெண்டங்களுக்குப் பயன்படுத்தும் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு மட்டும் இன்னும் பழமையான முறையை வைத்துக் கொண்டிருக்கிறது. ஊழல் செய்து விடுவார்களாம். எல்லாவற்றிலும் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் மட்டும் மற்றவர்கள் யாரும் ஊழல் செய்துவிடக் கூடாது. ஒவ்வொருவரின் நேர்மையையும் மற்ற எல்லாரும் பார்த்துக் கொள்வார்கள்!

பதினொன்றே முக்காலுக்கு நடமாடும் வாக்குச்சாவடி என் தெருவுக்கு வருமென்று மின்னஞ்சலும் தாளஞ்சலும் அரசு அனுப்பியிருந்தது. அது வரட்டும் நாம் சாவடிக்குப் போக வேண்டாம். குடிமைச் சீட்டை (citizen card) எடுத்து தயாராக வைத்துக்கொள்வோம். சீட்டை உட்செலுத்தி பின் இடதுகை பெருவிரல் ரேகையையும் காட்டினால்தான் சாவடிக் கதவு திறக்கும். பக்கத்து பிளாட்டில் அரவம் கேட்டது. ஜெயனைக் கூப்பிட்டேன். வந்தான். ஓட்டுப் போட்டு விட்டானாம். ஏதாவது புதுமை உண்டா என்று கேட்டேன். அவன் வீட்டினர் மதுரையிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்தவர்கள். எந்த தொகுதியைச் சேர்ந்தவரென்பது தானாகவே வந்துவிடுகிறது. குடிமைச்சீட்டின் படி உங்கள் தொகுதிக்கு இந்தியாவில் எங்கிருந்தபடியும் வாக்களிக்கலாம். இதை அவன் அதிசயித்து சிலாகித்தான். இதிலென்ன அதிசயம்? ஆன்லயன் வசதியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வருகிறார்கள். அவ்வளவுதான். நான் பிறப்பதற்கு முன்னெல்லாம் இரண்டு முறை ஓட்டளிப்பதைத் தடுப்பதற்கு கைவிரலிலே ஒரு அழியாத மை அடையாளம் வைப்பார்களாம். அந்த காலத்தில் கழுதைகளுக்கு அடையாளத்திற்காக சூடு போடுவதைப்போல!

"கண்ணுக்கு நடுவில மைடப்பா,
உன்னோட தாய்மொழி லப்டப்பா" என்ற சமீபத்திய விடியோ படப்பாடல் நினைவுக்கு வருகிறது! ம், கசம்!

குறித்த நேரத்திற்கு நடமாடும் சாவடி வந்தேவிட்டது. என் செய்திப்பெட்டி சினுங்கிய வண்ணமாக இருக்கிறது. நான் இன்னும் தூங்கின மேனியாக இருக்கிறேன். அரசு தான் இப்படி ஓட்டுபோட வருந்தி வருந்தி என்னை அழைக்கிறது. அப்படிபோய் இந்த ஓட்டைப் போடாவிட்டால்தான் என்ன? ஓட்டுப் போட்டவுடன் அரசாங்கம் நமது கணக்கில் ஏற்றும் 3000 ரூபாய் ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் குடிமைப் பேரேட்டில் நம் தேசபக்திக் குறியெண் குறைந்துவிடும். ஒழுங்காக வரிகட்டவேண்டும். ஒழுங்காக ஓட்டுப் போட வேண்டும். தேசபக்திக் குறியெண் அப்படியே இருக்கும். இல்லையென்றால் குறைந்துபோய் நம்மை கழுத்தறுக்கும். அட அது குறைந்தால்தான் என்ன? வங்கிகளில் கடன் தருவதற்கு கொஞ்சம் மேலே கீழே பார்ப்பார்கள். தேர்தலுக்கு நிற்க மனுச்செய்யும் போது ரொம்ப குறைவாக இருக்கிறது என்று சொல்லி நிராகரிப்பார்கள். பள்ளிகளில் அனுமதி கிடைப்பதில் கொஞ்சம் பிரச்சனையிருக்கும். போகட்டுமே! இதெல்லாம் யாருக்கு வேண்டும்? எல்லா வரிகளையும் ஒழுங்காய் கடைசிநாளுக்கு முன்பாகவே கட்டியாகிவிட்டது. இதுவரைக்கும் முக்கால்வாசி தேர்தல்களில் ஒழுங்காக ஓட்டும் போட்டாகிவிட்டது. கொஞ்சம் குறைந்தால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. ஆனால் பாருங்கள், வரி கட்டுவதற்கு கொஞ்சமாக புள்ளிகளையும் ஓட்டுப் போடுவதற்கு அதிகமான புள்ளிகளையும் வைத்திருக்கிறார்கள் புத்திசாலிகள்! தலையனையை இன்னும் கொஞ்சம் என்னுள் தினித்துக் கொண்டேன்.

இந்த நண்பர்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று? எங்கே போய் ஒழிந்தார்கள் எல்லாரும்? தொலைபேசிகளுக்கு என்ன ஆயிற்று? எல்லா தொலைபேசியும் செத்து கித்து போய்விட்டதா? ஹோலோ திரையில் சமீபத்திய வெளியீடு தமிழ்ப்படமொன்றைப் போட்டேன். பிரபலமான ஹீரோவும் ஹீரோயினும் முப்பரிமானத்தில் கொழுகொழுவென்று அசிங்கமாய் ஆடிப்பாடினார்கள். ஆனால் படத்தில் மனம் ஒட்டவில்லை.


நடமாடும் சாவடியும் போய்விட்டது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. எழுந்துபோய் ஆம்லெட் போட்டேன். நேற்று வாங்கிய சாண்விச், கொஞ்சம் பிரட், மற்றும் கொறி வகைகள் என சாப்பிட ஆரம்பித்து செய்திகளை கேபிள்விஷனில் கவனிக்க ஆரம்பித்தேன். ஆகா, சென்ற சட்ட மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரிசையாகக் காட்டுகிறார்கள்.

காணக் கண்கோடி வேண்டும்! என்ன இருந்தாலும் இந்தியா இந்தியாதான். உலகம் சாதிக்காத ஒன்றை சாதாரணமாக சாதித்துவிட்டதே! வழக்கம் போலவே - சத்தமில்லாமல்! எப்படி இருக்கிறது வண்ணமயமாக நம் சட்டசபை? சட்ட சபையிலும் நாடாளுமன்றத்திலும் சரிசமமாக பெண்கள், நான் பிறப்ப்பதற்கு முன்பிருந்த 33% பெண் ஒதுக்கீட்டை 50 சதமாக்கி பதினேழு ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடந்த மூன்று தேர்தல்கள் 50% பெண்கள் இட ஒதுக்கீட்டில் நடந்து முடிந்தது. எப்பொழுதும் ஆண் பெண் தொகுதிகளின் எண்ணிக்கை சமமாக இருக்குமாறு எல்லா சட்டமன்ற, நாடாளுமன்ற, ஊராட்சிமன்ற தொகுதிகளையும் இரட்டைப்படை எண்களாக்கியது இன்னும் சிறப்பு. தமிழ்நாட்டிற்கு எப்போதும் 234 தான். ஆண்களும் பெண்களும் எப்போதும் - இனி எப்போதும் - சரி சம எண்ணிக்கையில். எந்த உலகத்தில் எந்த கிரகத்தில் இந்த விந்தை நடக்கும்? இந்தியா, இந்தியா - இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்! இப்போது என்னுடைய தி.நகர் தொகுதி பெண்களுக்கான தனித்தொகுதி. தியாகராயநகர்(தனி). 33% இருந்த போதிருந்த தனித் தொகுதியொன்ற பெயர் இன்னும் நீடிக்கிறது. உண்மையில் ஒரு தொகுதி ஆண் தொகுதி அல்லது பெண் தொகுதிதான். இரண்டுமிலாதவர்களைக் கூட அவர்கள் விருப்பத்தின்படி ஆண் அல்லது பெண்ணாகப் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் பாவம் அவர்கள். அவர்களுக்கென்று எல்லா தேர்தல்களிலும் தனித் தொகுதி வேண்டுமென்று ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரிசமமான பெண்ணுரிமை! உண்மையிலேயே சாதனைதான். என் நெஞ்சம் கொஞ்சம் தேசபக்தியால் விம்மியது. எந்தப் பற்று இல்லாவிட்டாலும் தேசப்பற்றில் எப்படி எல்லோரும் ஒத்துப் போய்விடுகிறார்கள்? ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்களிக்கும் ஆண் பெண் எண்ணிக்கையை வைத்து ஒரு சிக்கலான கணித சூத்திரத்தின்படி ஒரு தொகுதி ஆண் தொகுதியா அல்லது பெண் தொகுதியா என்று தீர்மானிக்கிறார்கள். ஆண்களோ பெண்களோ குறைவாக வாக்களித்தால் தொகுதி கைமாறி விடும். தொகுதியில் எந்த கட்சியின் தொகுதியை எந்த கட்சி பிடித்தது என்பது ஒரு புறமிருக்கட்டும், எந்தெந்த தொகுதிகள் பால்மாறிப் போய்விட்டன (உண்மையிலேயே!) என்பது மிகப் பெரிய செய்தி! அப்பழுகில்லாத அர்த்தநாரீ ஆட்சி முறைதான்!


மணி நான்காகப் போகிறது. தேநீர் போட்டு குடித்தால் நன்றாக இருக்கும்.

அடடா தேநீரெல்லாம் வேண்டாம். இப்போது இதை என்னும்போதும் தான் எனக்கு சுரீரென உறைக்கிறது. நான் கண்டிப்பாக வாக்களித்தே ஆகவேண்டும். அப்போது தொலைபேசி அழைத்தது.

"உங்கள் சாவடியில் உங்களைத் தவிர எல்லோரும் வாக்களித்தாகிவிட்டது. நீங்கள் வருவதாக இருந்தால் காத்திருக்கிறோம். இல்லையென்றல் நாங்கள் மூடிவிடுகிறோம்".

"இல்லை. இல்லை. கண்டிப்பாக நான் வருகிறேன். மூடி விடாதீர்கள்".

"சீக்கிரம் வாருங்கள், மிஸ் காயத்ரி".

நான் வாக்களிக்காவிட்டால் தொகுதி கைமாறி ஆண்களுக்குப் போனாலும் போய்விடும். தனித்தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவசரமாக உடைமாற்றிக் கொண்டு வெளியே ஓடி என் ஸ்கூவில் ஏறிச் சாவடிக்குப் பறந்தேன். வாக்களித்துவிட்டு சாவடியில் தரும் தேநீரைக் குடித்துக் கொள்ளலாம்.

************ 6th May 2006 அன்று எழுதியது**********

Thursday, May 04, 2006

மஹாஜன் மறைவு

மஹாஜன் மறைவு


சிலரது மறைவு எற்படுத்தும் தாக்கங்கள் அதிகம். மஹாஜன் பலவகைகளில் தனியானவர். சிறு வயதிலேயே பொது வாழ்வுக்கு வந்து கடந்த பத்தாண்டுகளில் புகழின் உச்சிக்கு சென்று பொசுக்கென்று மறைந்துவிட்டார், தான் இருக்குமிடத்திலெல்லாம் தனக்கென்ற தனிமுத்திரையை பதிக்க வல்ல ஒரு தலைவர்.


பாரதீய ஜனதா கட்சி தன் முக்கிய அங்கங்களில் ஒன்றை இழந்தது போல் இருக்கிறது. கட்சியின் சோதனையான ஒரு காலகட்டத்தில் ஒரு பெரிய இழப்பை அடைந்திருக்கிறது அந்தக் கட்சி. மஹாஜன் இல்லாத பாஜக தன்னியல்புக்கு வர சற்றே காலம் பிடிக்கும். இன்றைய நவீன இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சியில் அவரது பங்கு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது. பாஜகவின் சென்ற தேர்தலின் கோஷம் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற, நிச்சயமாக முழு உண்மையை நோக்கி இப்போதும் சென்றுகொண்டிருக்கிற ஒரு கோஷத்தை அவருடன் இணைத்தே அப்போது என்னால் பார்க்க முடிந்தது.
நம்பிக்கைதரும் பேச்சும், அதற்கேற்ற செயல்பாடுகளும் கொண்டவரும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவரும், சிரித்த முகமுடையவருமான ஒரு மனிதர் சோகம் ததும்பி வழியும் முறையில் மறைந்திருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கும், முக்கியமாக தன் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்றை இழந்து நிற்கும் பாஜகவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, May 01, 2006

சென்னை ஓட்டு யாருக்கு?

சென்னை ஓட்டு யாருக்கு?

தமிழகத்தின் கோட்டை இருக்கும் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. இந்த முறை சென்னை மக்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறார்கள்? யாருக்குப் போடவேண்டுமென்றால் நிச்சயமாக அதிமுகவிற்குதான். தண்ணீரின் அருமை தாகத்தில்தான் தெரியும். இப்போது தாகமில்லையே! தண்ணீரின் அருமையை நினைவில் வைத்திருப்பார்களா சென்னை மக்கள்?

நான் 25 ஆண்டுகளாக சென்னைவாசி. வந்து வாட்டிய 25 கோடைகளிலும் இந்தக் கோடை வித்தியாசமானதுதான். தன் சொந்த நலன்களுக்காகவே எல்லா அரசு திட்டங்களும் என்று அரசின் அலுவல்களை திமுக அரசும் மாறி மாறி வந்த அதிமுக அரசும் வரையறுத்து வைத்திருந்த நிலையில், இந்த அரசு அறிமுகப் படுத்தி செயல்படுத்திய மழைநீர் சேமிப்புத் திட்டம் என்னை பிரமிக்க வைக்கிறது.

பிரமிப்பு என்பது பெரிய அர்த்தமுள்ள ஒரு சொல். கடைந்தெடுத்ததும் கடைநிலையானதுமான சுயநலமே தமிழ்நாட்டின் அரசியல் என்று வெறுப்பின் புதிய எல்லைகளுக்கு நாம் செல்லுகின்ற நேரத்தில், இந்த திட்டத்தினால் அரசியல்வாதிகளுக்கு என்ன கிடைக்கும் மக்களுக்கு என்ன கிடைக்கும் என்ற இரண்டு கேள்விகளின் பதில்களும் ஒன்று சேர்ந்து பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இத்திட்டம் அமுல் படுத்தியதில் அரசு காட்டிய உண்மையான அக்கரையும் தீவிரமும் அதிசயத்தக்கவை.

அடுத்ததாக அரசு செயல்படுத்திய புதிய வீராணம் திட்டம். பழைய வீராணம் திட்டத்தின் லாவன்யமும் அரசு பணமும் சக்தியும் வீணான அழகும் நாம் அறிந்ததுதான். ஆனால் புதிய வீராணம் திட்டம் முழுமையாக செயல்படுத்தப் பட்டு தண்ணீரும் வந்தே விட்டது. இதற்கு எதிர்கட்சிகள் போட்ட முட்டுக் கட்டைகளும் அப்பகுதி விவசாயப் பெருமக்களைத் தூண்டிவிட்டு செய்யப்பட்ட பிரச்சாரங்களும் தோற்றோடிப் போகுமளவிற்கு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டது.
இந்த ஆண்டு பருவ மழை அபரிமிதமாகத் தண்ணீரைக் கொட்டிவிட்டது. இதனாலேயே சென்னை மக்கள் தண்ணீரை மறந்து ஓட்டளித்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன். சென்னையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாமல் தமிழ்நாட்டின் வீராணம் பகுதியிலும் கர்நாடகத்திலும் நல்ல மழை பெய்துவிட்டால் வீராணம் தண்ணீர் சென்னைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். இயற்கையில் இவ்வாறு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். மேலும் வீராணத்தால் சென்னைக்கு தண்ணீர் தரமுடியாத நிலை ஏற்பட்டாலும் நிலத்தடி நீரையே நம்ப வேண்டிய நிலை ஏற்படும். மழைநீர் சேமிப்புத் திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தவிக்கும் வாய்களுக்கு சற்றேனும் தண்ணீர் கிடைக்க வழி இருக்கும்.

சென்னை மக்கள் இந்த தண்ணீர் பிரச்சனைக்காக மூன்று வழிகளில் அதிமுகவுக்கு வாக்களிக்க கடைமைப் பட்டிருக்கிறார்கள்.
1. எல்லாமே பொய்த்து கடைசி ஆதரவாக இருக்கவேண்டிய கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் மூலம் திமுக தரும் இடைஞ்சல்கள். இதனால் எதிரணிக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.
2. சென்னையின் ஏரிகள் வரண்டு ஆனால் வீராணத்தில் தண்ணீரிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த, ஒரு செயல்படுகின்ற திட்டத்தை பல்விதமான எதிர்ப்புகளுக்குமிடையில் செயல்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதற்காக வாக்களிக்க வேண்டும்.
3. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை உறுதியுடன் நிறைவேற்றியதற்காக வாக்களிக்கவேண்டும்.

அதிமுகவுக்கு வாக்களிக்க வேறு காரணங்களால் வாக்களிக்க விருப்பமில்லாவிட்டாலும் மேற்சொன்ன காரணங்களால் திமுகவுக்கு வாக்களிக்காமல் இருக்கவேண்டும். ஏனென்றால் இரண்டு அம்சங்களில் திமுக சென்னை மக்களுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது.
சென்னை மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.