Thursday, October 26, 2006

'பூங்கா' வைப் பற்றிய ஐயங்கள்.

தமிழ்மணத்தின் பூங்காவைப் பற்றி எனக்கு பல ஐயங்கள் எழுகின்றன.

16ம் தேதிய வெளியீட்டில் மரணதண்டனை பற்றிய ஒருதலையான பதிவுகளை அதிகம் கண்டதற்கு நான் கற்பித்துக் கொண்ட காரணம் தமிழ்மணத்தில் அதிகமான பதிவுகள் ஒரு சார்பாக வந்ததால்தான் இப்படி என்பதுதான்.

பூங்கா சொல்கிறது,

//புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து//

மேலும்,

// ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் பதிவுகளுக்கு எண்ணிக்கை வரையறை எதுவும் இல்லை. பதிவரினாலே அனுமதி தரப்பட்ட தரம்வாய்ந்ததெனத் தோன்றும் படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பெறும். //

ஆகவே தமிழ்மணம் எப்படியோ பூங்காவும் அப்படியே என்று எடுத்துக் கொண்டேன்.

ரவி ஸ்ரீனிவாஸ் இதை சுட்டிய போது ரவியின் கருத்துக்களை பதிப்பது பூங்காவின் தனி உரிமை என்ற அளவிலேயே நான் எடுத்துக் கொண்டேன். ஆனால் பூங்காவின் விளக்கம் எனக்கு பல ஐயங்களை உண்டாக்குகிறது.

பூங்காவின் தொகுப்பாளர் மேசையிலிருந்து:

// இறையாண்மை என்பது இந்த நூற்றாண்டின் பயங்கரவார்த்தை. ஒவ்வொரு மனிதனுக்கும் நாகரீகத்தின் வழி வந்ததாகக் கற்பிக்கப்படும் இறையாண்மை கடைசியில் சில அரசியல்வாதிகளின் நலன்களுக்காக நாடுகளுக்கு இருப்பதாகவும், மாற்றமுடியாததாகவும் கற்பிக்கப்படுகிறது//

இந்தக் கருத்துக்கள் ஒரு பதிவிலிருந்து அறியப் படலாம். ஒரு தொகுப்பாளர் மேசையிலிருந்து அறியப்படும்போது, இது ஒரு அப்பழுக்கற்ற சார்பு நிலையாக எனக்குப் படுகிறது.

லக்கிலுக்கின் பதிவு பற்றி:

// கட்டுரையளவிலே நன்றாகவிருந்தும், இவ்வாரமுங்கூட, இதே மரணதண்டனை தொடர்பான லக்கி லுக்கின் “முகமது அப்ஸல் யார்? உண்மை நிலவரம் என்ன?” என்ற பதிவும் இன்னமும் சான்றுகளோடு விரிக்கப்பட்டால்மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும் என்ற ஆசிரியர்குழு உள்ளேயான விவாதத்தின்பின்னாலே தீர்மானிக்கப்பட்டது. //

இன்னமும் சான்றுகள் விரிக்கப்படவேண்டிய நிலையில் இருக்கும் கட்டுரை என்று பூங்காவே கருதும் ஒரு அரசியல் கட்டுரை எப்படி கட்டுரையளவில் நன்றாக இருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது என்று தெரியவில்லை.

அந்தப் பதிவை நானும் படித்திருக்கிறேன்.

அதே விளக்கத்தில்:

// பூங்கா ஆசிரியர் குழுவுக்கும் ஒரு பொதுநோக்கும் ஓரளவுக்குக் கருத்தளவிலே ஒன்றிச் செயற்படும் அரசியல், சமூகச்சித்தாந்தச்சாய்வும் உண்டு. //

இது பொதுவான ஒரு கருத்தாக இருந்தாலும், இந்த விளக்கத்தை முழுமையாகப் படித்தபின், தொகுப்பாளர் மேசையை படிக்கும் போது பூங்காவைப் பற்றிய அறிவிப்பிலும் விவரிப்பிலும் சொல்லாமல் விடப்பட்ட பலவற்றை எண்ண வேண்டி வருகிறது. தமிழ்மணத்தில் ஒரு சார்புடைய பதிவுகள் மிக அதிகமாக வருகின்றன என்பதற்குக் காரணம் அந்த வகைப் பதிவாளர்கள் அதிகமாக இருப்பதும் அவர்கள் அதிகமாக எழுதுவதும். ஆனால் அந்த எழுத்துகளின் தொகுப்பே பூங்காவோ அல்லது பூங்காவே அதற்குத் தானோ என்பதான ஐயம் எனக்கு வந்திருக்கிறது.

Monday, October 16, 2006

விடுதலைப் பட்டறை

-அறிவியல் புனைகதை-

பேய் பிடித்திருந்த அந்த பத்து பேரின் கூச்சல் அப்படியொன்றும் நாராசமாக இல்லை. ஆனால் ரசிக்கும்படியாகவும் இல்லை. சக்திவேல் சித்தரின் சக்திபீடம் என்றழைக்கப்பட்ட அந்த சிறு கோயிலுக்குச் சற்று தள்ளி இருந்த கொட்டகையில்தான் அந்த பத்துபேரும் வரிசையாக அமர்ந்து உலகில் இல்லாத சுருதிகளில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். பவுர்ணமி முன்னிரவின் ஒளியையும் சிற்சில அகல் விளக்குகளின் ஒளியையும் தவிர அந்தப் பிரதேசத்தில் வேறு வெளிச்சமே இல்லை. அவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார்கள். திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையிலிருந்து பிரியும் ஓர் ஒற்றையடிப் பாதையில் கொஞ்ச தூரம் சென்றால் அந்தப் பீடம் வரும். பதினான்கிலிருந்து நாற்பது வயது வரை இருந்த அவர்களில் பெண்களும் இருந்தார்கள். எல்லோரும் ஒற்றை ஆடை அணிந்திருந்தார்கள். ஆண்கள் வேட்டி மட்டும் இடுப்பில். பெண்கள் பாவாடை மட்டும். குளத்தில் குளிக்கும்போது அணிவதுபோல் அணிந்திருந்தார்கள். கையில் சவுக்குடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சித்தர் வந்தார். எல்லோரும் அமைதியானார்கள்.

"உங்களைப் பிடித்த பைசாசங்கள் வெளியேறி வானில் கலக்கும். அவை இனி எப்பொழுதும் உங்களிடம் வரா. நீங்கள் அதை உணர்வீர்களாக! உங்கள் எல்லா புலன்களும் அதை உணருமாக!! அப்போது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்வீர்கள். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இது நடக்கும். அதன் பின் இங்கேயே தூங்கி காலை புதிதாய் எழுவீர்கள். புது மனிதராய் வீடு செல்வீர்கள்". நல்ல ஒரு தொனியோடு இதைச் சொல்லிவிட்டு ஒரு திருவாசகத்தைப் பாடிவிட்டு சென்றுவிட்டார். பன்னிரண்டு மணிக்கு மலை அடிவாரத்தில் மெலிதாக புகைபோல எழுந்தது. திரி திரியாய்ப் பிரிந்து வானில் கலந்து மறைந்தது. அங்கு அடர்த்தியான அமைதி நிலவியது. எல்லோரும் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டார்கள். அந்த சிறு வெண் புகை மண்டலம் காற்றில் கலந்து நீர்த்துப்போனதைக் கண்ணாரக் கண்டார்கள். சித்தர் குளிர்ந்த சுனைத் தண்ணீரை எல்லோர் மேலும் தெளித்தார். எதுவும் பேசாமல் வெரும் சைகைகளாலேயே அவர்களிடம் உடை மாற்றிக் கொண்டு கிழக்கு நோக்கிப் படுக்கச் சொன்னார்.

காலை சூரியனின் இளங்கதிர்கள் அவர்களை எழுப்பியபோது பறவைகளின் இன்னிசைகளுடன் புதிதாக எழுந்தார்கள். தம்மை அழைக்க வந்தவர்களுடன் அமைதியாக தியானத்தில் அமர்ந்திருந்த சித்தரிடம் மவுன ஆசிகளைப் பெற்றுச்சென்றார்கள்.

வேலூரின் புறநகர்ப் பகுதியில் ஒரு தனியார் கழகம். (private club)

"ஒரு நெத்திலி ஃபிரை கொடுப்பா" என்ற சபாபதி,

" ராஜாராம் உங்களுக்கு என்ன வேணும், என்று கேட்டார்.

ராஜாராமும் சபாபதியும் ஒரு பயணத்தில் சந்தித்து நண்பர்களாக ஆனவர்கள். இருவரும் ஐம்பது வயதைக் கடந்திருந்தார்கள். சபாபதி பொறியாளர். சொந்தமாக சிறு தொழில் நடத்துகிறார். ராஜாராம் மருத்துவர். சில மருத்துவமனைகளில் அழைக்கப்படும் மருத்துவர். (visiting docter) தனியாகவும் மருத்துவம் செய்து வருகிறார். இந்தக் கழகத்தில் அவர்கள் எப்போதாவது சந்திப்பார்கள்.

"விஸ்கி" என்றார் ராஜாராம்.

சபாபதி தன் துரவரை(driver) அழைத்து காரிலிருந்து ஏதோ எடுத்துவரச்சொன்னார்.

"இங்க ஸ்காட்ச் இருக்காது. அவன் ஷீவாஸ் ரீகல் எடுத்து வரப் போறான்", என்றார் சபாபதி.

"புது எடத்துக்குப் ஃபேக்டரியை மாத்திட்டீங்களா? எப்படி ஓடுது?", என்று வினவினார்.

"திருவண்ணாமலை அடிவாரம். எனக்கு இந்த பொலூஷன் கண்ட் ரோல் (மாசுக்கட்டுப்பாடு) தொல்லையிலிருந்து விடுதலை கெடச்சிருச்சு. ஆனா வீட்டை போளூர்ல வச்சுகிட்டு தெனம் 40 கிமீ போய் வர்றது பிரச்சனையா இருக்கு. திர்ணாமலைக்கு மாத்திடலாமான்னு பாக்கிறேன்".

"போளூர்ன்ன உடனே நினைவுக்கு வருது. அந்த பக்கத்திலேர்ந்து ஒரு பேஷண்ட் எங்கிட்ட வந்தான். சிறு வயசுதான். புத்தி கொஞ்சம் பேதலிச்சு போய் இருக்கான். பேயடிச்சிருக்குன்னு சொன்னாங்க. பாவம் அவனுக்கு ஏதோ மன நோய் பீடிச்சிருக்கு".

"சைக்கியாட்ரிஸ்ட்டு கிட்ட அனுப்ப வேண்டியதுதானே".

"அவர்கள் அவன் நோயை மேலும் அதிகமாக்கிடுவாங்க. இது மாதிரி வியாதிகளுக்கு அவங்க சரிபட மாட்டாங்க".

"என்ன டாக்டர், நீங்களே இப்படிச் சொல்றீங்க. அப்பறம் வேப்பலதான் அடிக்கனுமா?"

"ஆமா. அடிக்கிற அடில பேய் இவங்கள உட்டுடும். அல்லது இவங்க பேய உட்டுடுவாங்க. இந்த பையனுக்கு 25 வயசிருக்கும். நல்ல வசதியா இருக்கான். படிச்சவன். வேலூர்லதான் வேலை. தினம் கார்ல வந்துட்டு போறான். இப்ப அவன் காரை பேய் மாதிரி ஓட்றதா சொல்றாங்க".

"ராஜாராம் பேய் பிசாசெல்லம் இருக்கா?"

"ஒரு டாக்டர்கிட்ட கேக்கிற கேள்வியா இது. சரி, நீங்க சொல்லுங்க, பேய் பிசாசெல்லாம் இருக்கா?"

"சக்திவேல் சித்தர்னு ஒருத்தர் திர்ணாமலைல பேய்கள்கிட்டயிருந்து விடுதலை கொடுக்கிறார்னு கேள்வி பட்டிடுக்கீங்களா?"

"யாரோ சொன்னாங்க. அங்க ஆவி பிரியறதைக் கண்ணாலேயே பாக்கிறமாதிரி சொல்றாங்க".

சபாபதி மூன்றாவது சுற்றிலும் ராஜாராம் இரண்டாவது சுற்றிலும் இருந்தார்கள். இவர் பிராந்தி அவர் விஸ்கி.

"ஒரு தந்தூரி சிக்கன் வாங்கிட்டு வாப்பா. இங்க இல்லன்னா கார எடுத்துகிட்டு போய் வெளிலருந்து வாங்கிட்டுவா" என்று கழக ஊழியரிடம் சொன்னார்.

"டாக்டர் இருக்கார்னு தந்தூரியா, 65 க்கு இன்னிக்கு விடுதலையா?"

"ராஜாராம், நான் தந்தூரிக்கு மாறி ரொம்ப நாளாச்சு. எண்ணை ஆகமாட்டேங்குது. இந்த நெத்திலி பிரைக்குதான் தந்தூரி மாதிரி ஒரு வழி கண்டுபிடிக்கணும். அப்புறம் ராஜாராம் அந்த சித்தர் படாத கஷ்டங்கள்லாம் பட்டு இமயமலைக்கெல்லாம் போய் பலதை கத்துகிட்டு வந்திருக்கார்".

"ஆனா பேய் பிசாசுன்னு சொல்றது எல்லாம் கதை இல்லியா? மக்கள ஏமாத்தறது இல்லியா. ஆயிரக்கணக்கில பணமெல்லாம் வாங்குறது பித்தலாட்டம்".

"ராஜாராம், எல்லா பித்தலாட்டமும் தப்பு நோக்கத்துக்காக இல்ல. சைக்கோ டாக்டரால இத குணப்படுத்த முடியலையே. நீங்களே ஒத்துகிறீங்க. ஆனா சித்தர் செய்யிறாரே. பணம் வாங்காம செய்தா அந்த நோய் குணமாகாதே".

இதில் இன்னொரு கோணமிருப்பதை புரிந்து கொள்ள ராஜாராமுக்கு சற்று நேரம் பிடித்தது. உடனே மூன்றாவது சுற்றைத் தவிர்த்துவிட்டார். தந்தூரியை ஒரு கை பார்க்கத் தொடங்கினார்".

"சபாபதி உங்களுக்கு இதிலே ஏதோ விஷயம் தெரியும் போலிருக்கே...."

"யாரோ ஒரு பையனைப் பத்தி சொன்னீங்களே அவனுக்கு எப்படி பேய் புடிச்சதா சொல்றாங்க. அவனப்பத்தி சொல்லுங்க".

"அவன் பேரு சிவாஜி. ஒரு நாள் ஒரு ஆக்ஸிடெண்ட்டுல ஒரு சின்ன கொழந்த தலை நசுங்கி சாவறதப் பார்த்திருக்கான். காப்பாத்த ஓடி வந்த அந்த கொழந்தையோட அம்மாவும் அங்க அடிபட்டு ஸ்பாட்டிலேயே அவுட். அங்கேர்ந்து வீட்டுக்கு ஓடி வந்துட்டான்".

"இவனா மோதுனான்".

"இல்ல. காரை ஓரமா நிறுத்தி ஒண்ணுக்குப்போக போயிருக்கான். அது ஒரு வளவான இடம். வேகமாக வந்த வேன் இவன் காரை ஒதுக்கிப்போகப் போனபோது சாலையோரத்தில் விளையாடியக் குழந்தை மேல் ஏறிட்டுது. இவனுக்கு குற்ற உணர்வு. வளவுல கார நிறுத்தி இப்படி ஆயிடுச்சேன்னு. அன்னையிலேருந்து அப்டி ஆயிட்டான்".

"அந்த சிவாஜியோ எம்ஜியாரோ அவன உடனே நம்ம சித்தர்கிட்ட அனுப்புங்க. பவுர்ணமி அன்னிக்கு மட்டும்தான் அவர் இதச் செய்வாரு. சாயங்காலம் எட்டு மணிக்குள்ள போயிடணும். மறுநாள் காலை நிம்மதியா வந்துடுவான். எட்டு மணிலேர்ந்து அவனுக்கு விதவிதமா ட்ரீட்மெண்ட். பயப்படாதீங்க. சவுக்கடி, வேப்பிலை அடி இதெல்லாம் இல்லை. சுலோகமும் யோகமும்தான். அஞ்சாயிரம் ஆகும். அதுக்கு மேலயும் விருப்பப்படி கொடுக்கலாம். சரியாடுச்சுன்னா நான் சொல்றேன் அதுல என்னா உள் விஷயமுன்னு".

"சரி நான் அனுப்பிப் பார்க்கிறேன். அவனுக்கு அவனோட பேய்கள்கிட்டேர்ந்து விடுதலை வேணும்".

ஆனால் சிவாஜி பலநாட்களாக அவரது மருத்துவமனைக்கு வரவே இல்லை.

போளூர்-வேலூர் சாலையில் மிக உற்சாகமாக வந்து கொண்டிருந்தார்கள் சங்கரும் மனோவும். சங்கர்தான் அந்த புதிய பல்சர் வண்டியை படு உற்சாகமாக ஓட்டிக் கொண்டு வந்தான். சில நாட்களுக்கு முன்பு வாங்கிய அந்த வண்டியை அனுபவித்தான் சங்கர். அவர்கள் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள். விடுதியில் தங்கியிருந்தார்கள். அவர்கள் அந்த சிவாஜியின் விபத்து வளைவைக் கடந்து வந்துகொண்டிருந்தார்கள்.

"மனோ இருட்டிப் போச்சு. இனி லாரிக்கானுங்க ஹெட்லைட் அடிச்சே டார்ச்சர் பண்ணிடுவானுங்க".

"டேய் உனக்கு பேஜாரா இருந்தா சொல்லு நான் ஓட்டுறேன்", என்றான் மனோ. "இல்ல நானே ஓட்டுறன்" என்ற சங்கர் நிதானமாய் வண்டி ஓட்ட ஆரம்பித்தான்.

மாலை ஆறுமணிக்கு தன் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் ராஜாராம் வாசலில் சிவாஜி நிற்பதைக் கண்டார். பதற்றமாக இருந்தான். உள்ளே பல நோயாளிகள் காத்துக் கொண்டிருந்தனர். இவனை தன் கூட வரச் சொல்லி தன் அறைக்குச் சென்றார்.

"டாக்டர் பயங்கர கொடுமையா இருக்கு. ராத்திரில ரொம்ப தீவிரமா ஆயிடுறேன். எல்லாரும் என்னைப் பார்த்துப் பயப்படுறாங்க. கொஞ்ச நாள்ல கட்டிப் போடுவாங்க போலிருக்கு".

"தம்பி ஏன் நீங்க இவ்வளவு நாளா இங்க வரல".

"பல முயற்சி செய்து பாத்துட்டேன். ஒண்ணும் நடக்கல. தற்கொலை பண்ணிக்கலாம் போலிருக்கு".

"சே, அப்படியெல்லாம் சொல்லாதே. உன் பிரச்சனை தீர்ர நாள் வந்திடுச்சு. ஒரு முயற்சி பண்ணி பாரு. நல்ல வேளை. இன்னிக்கு பவுர்ணமி. நீ எட்டு மணிக்குள்ள திருவண்ணாமலைல சக்திவேல் சித்தர்கிட்ட போ. கையில பணம் அஞ்சாயிரம் இருக்கா, கார் இருக்கா?"

"இருக்கு டாக்டர். நானும் கேள்வி பட்டிருக்கேன். எட்டு மணிக்குள்ள போகணுமா. இப்பவே ஆறரைக்கு மேல ஆயிடுச்சே, நான் உடனே கிளம்பறேன். வரேன் டாக்டர்".

அவன் பேய் போல் விரைந்து பிசாசாய் திருவண்ணாமலை நோக்கி போளூர் சாலையில் காரில் விரைந்தான். நன்றாக இருட்ட ஆரம்பித்திருந்தது.

"மனோ தூரத்துல ஒருத்தன் ஹெட்லயிட்ட ஹை பீம்ல வச்சுகிட்டு பேய் மாதிரி வர்றான் பாரு".

"சங்கர் அது கார் மாதிரி இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் ஓரமாகவே போ".

நட்ட நடு சாலையில் எம்பி எம்பி பறந்து வந்துகொண்டிருந்தது அந்த கார். அதன் முன் விளக்கொளியில் சங்கர் தடுமாறிப் போனான். அவசரமாக இடதுபக்கம் ஒதுங்கி வண்டிக்கு தடையிட்டு வேகத்தை குறைத்தான். சற்றே வலப்புறம் சாய்ந்த வண்டியை நிமிர்ந்த தடையிலிருந்து வலது காலை எடுத்து சாலையில் ஊன்றினான். அங்கே புதிதாய் கழித்திருந்த மாட்டுச் சாணத்தில் காலை வைத்துவிட்டான். வண்டி சறுக்கியது. 'சங்கர்' என்று அலறிய மனோ வண்டியிலிருந்து விழுந்துவிட்டான். ஆனால் கிடைசாய்ந்த வண்டியோ அரைவட்டம் சுழன்று முன்நோக்கி பனிக்கட்டியைப் போல் சறுக்கிச் சென்றது. சங்கரும் கீழே விழுந்து சாலையின் இடது புறத்தில் உருண்டான். ஒரு மரத்தடியில் மோதி உருள்வதை நிறுத்தினான். மரத்தடியில் பல மனிதச் சாணங்களின் அபிஷேகம் கிடைத்தது. சங்கர் கொதித்தெழுந்து தன் மேல் சட்டையைக் கழற்றி விசிறி எறிந்தான். கோபத்தின் குன்றேறி நின்ற சங்கர் ஒரு பெரிய வசவினால் அந்த காரோட்டியைப் பழித்துக்கொண்டே ஓடிச்சென்று வண்டியை எடுத்து வெடித்துக் கிளப்பி அந்த காரின் பின் சென்றான். பின்னால் மனோ 'சங்கர் சங்கர்' என்று அலறிக் கொண்டே ஓடிவந்தான்.

சிவாஜி ஓட்டிச் சென்ற அந்த கருப்பு நிற சாண்ட்ரோ ஒரு பாரமேற்றிய இரட்டை மாட்டு வண்டியை குறுகிய சாலையில் முந்த முடியாமல் உறுமி உறுமி தவித்துக் கொண்டிருந்தது. மாட்டு வண்டி மெதுவாக அந்த வளைவைக் கடக்க முயன்று கொண்டிருந்தது. சங்கர் இந்த காரை துரத்திப் பிடித்துவிட்டான். வலப்புறம் துரவரின் சன்னலுக்குக்கருகில் வண்டிக்கு இணையாகச் சென்றான். அடைத்திருந்த சன்னலை சிவாஜி திறக்கவே இல்லை. சங்கர் வலது கையை ஆட்டி ஆட்டி வசவுகளை வீச, சிவாஜி முடுக்கியை மிதித்து உறுமி உறுமி பொறி மொழியில் பதில் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் சங்கர் தன் அபாய நிலையை சற்றும் உணரவில்லை. அந்த காருக்கு சிறு இடைவெளி கிடைத்தாலும் வலப்புறம் திரும்பி தன்னை சரித்துவிடும் என்பதை உணராதவனாய் தன் மோட்டார் சைக்கிளில் அந்த சீருந்துடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தான். கிடைத்த சிறு இடைவெளியில் இவனை சற்றும் மதியாமல் தன் காரை வலப்புறம் ஒடித்துத் திருப்பி பாய்ந்து சாலையில் ஏகிச் சென்றான் சிவாஜி. "ஆ........அ" என்று அலறிய வண்ணம் சாலையின் வலப்புறத்திற்கு தூக்கி எறியப்பட்டான் சங்கர். அந்த வளைவில் - அதே வளைவுதான் -அவனது வண்டி தன் போக்கில் சென்று எங்கோ முட்டிக்கொண்டது. சங்கர் தான் உயிரோடிருப்பதை முதலில் உறுதி செய்து கொண்டான். கண்களை அகலவிரித்து அருகில் நோக்கினான். 'ஆ, இது என்ன கோரம்! இங்கே எங்கே வந்தது இந்த கொடிய ஓநாய்'. அவனருகே அலங்கோலமாய்க் கிடந்தது விபத்தில் அடிபட்ட ஒரு தெரு நாய். குடல் சரிந்து கோரமாய் வாய் பிளந்து கோலிக் கண்களுடன் சங்கரின் முகத்துக்கு நேராக காட்சி தந்தது. சங்கர் அலறிய அலறல் அந்த பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. அவனைத் தொடர்ந்த மனோ பதறிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான்.

இரவின் வைபவங்கள் எல்லாம் முடிந்து காலையில் கொட்டகையில் கண்விழித்த சிவாஜிக்கு அந்த இளம் வெயிலும், மலைகாற்றும், பள்ளத்தாக்கும், பறவை ஒலிகளும், பனிப்புற்களும் பரவசத்தைத் தந்தன. புதிதாய் உணர்ந்தான். மெதுவாய் எழுந்தான். சித்தரைப் பணிந்தான். அமைதியாய் வண்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி செலுத்தினான். இரண்டு நாட்கள் நிம்மதியாய் ஓய்வெடுத்தான். இரண்டு நாட்களும் தெளிவாக இருந்தான். இனி ஒன்றுமில்லை என்ற தெளிவுக்கும் வந்துவிட்டான். மருத்துவர் ராஜாராமைப் பார்த்து நடந்ததை விவரித்தான். ராஜாராம் ஓரளவிற்கு இதை எதிர்பார்த்திருந்தார். இருந்தாலும் ஆச்சர்யப்பட்டார். சபாபதியை தொலைபேசியில் அழைத்து சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

அதே தனியார் கழகத்தில் அவர்கள் சந்தித்தார்கள். நிகழ்ந்ததை விவரித்து பின் ராஜாராம் கேட்டார்.

"சபாபதி, சித்தர் எப்படி இதை சாதிக்கிறார்?"

"சுலோகம், திருவாசகம் அப்பறம் கொஞ்சம் யோகம்."

"அப்புறம்"

"அந்த சூழ்நிலை, பவுர்ணமி, மலைக்காற்று..."

"அப்புறம்"

"நம்பிக்கை. தமக்கு குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை."

"இதுதான் முக்கியமான காரணம். அப்பறம் ஏதாவது இருக்கா?"

"அவ்வளவுதான்."

"ஏதோ சொல்றேன்னு சொன்னீங்களே அன்னிக்கு."

"இல்லை. வேற ஒன்னுமில்லை. அன்னிக்கு நான் கொஞ்சம் ஹை. அதான் ஏதாவது புரியாம சொல்லியிருப்பேன்."

"உங்களுக்கு வேற ஏதோ தெரியும்னு நான் யோசன பண்றேன்."

"வேற இதுல என்ன இருக்க முடியும் டாக்டர்? எல்லாம்தான் தெளிவா இருக்கே."

"நிச்சயமா?"

"ம்"

"சரி. வர்ர பவுர்ணமி ராத்திரி நான் உங்க ஃபேக்ட்ரிக்கு வரட்டுமா?"

"தாராளமா வாங்க. ஆனா ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"என்னான்னு தெரிஞ்சுக்கலாமுன்னுதான்."

".........................."

"நான் வராம இருக்க மாட்டேன். நிச்சயமா வருவேன் சபாபதி."

"வேண்டாம். நீங்க வரவேண்டாம். உங்களுக்கு வேண்டிய தகவலை நான் சொல்றேன்."

அவர் சொன்னது இதுதான். சபாபதியினுடையது ஒரு அலுமினிய வார்ப்புத் தொழிற்சாலை. அங்கே அலுமினியம் உருக்கும் போது அதை சுத்திகரிக்கப் போடப்படும் வேதி பொருட்கள் பெரும் புகையை கிளப்ப வல்லன. ஒரு பவுர்ணமியன்று இரவு இவ்வாறு செய்யும்பொழுது ஏதோ ஒரு தவறுதலான வேதிப் பொருளினால் மிகப் பெரிய வெண்புகை மண்டலம் கிளம்பி வெகுதூரம் மேலே சென்றது. அதைக் கண்ட பேய்பிடித்த ஒருவன் தன்னைப் பிடித்த பேயே அவ்வாறு வெளியேறியதாக சித்தரிடம் சொல்ல சித்தரும் அதை உள்வாங்கிக் கொண்டார். பகலில் பைனாகுலரினாலும் காண முடியாத ஒரு இடத்தில் அந்த தொழிற்சாலை அமைத்திருந்ததைக் கண்டுபிடித்து சபாபதியை வரச்சொன்னார். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அவ்வாறு செய்ய முடியுமா எனக் கேட்டார். சித்தர் மீது பெருமதிப்பு வைத்திருந்த சபாபதியும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

"சபாபதி, ஈஸ் திஸ் நாட் ச்சீட்டிங்? இது பக்கா ஏமாற்று வேலை இல்லையா?"

"நோ. தன் சொந்த பயங்களினால் தங்களை ஏமாற்றிக் கொண்டவர்கள் மீண்டும் தங்களை ஏமாற்றிக் கொண்டு குணமடைகிறார்கள். அவ்வளவுதான்."

"அந்த நோக்கில் உண்மைதான்....ஆனால் ஏராளமாக பணம் பண்ணுகிறீர்களே?"

"பணம் கொடுக்காமல் கிடைக்கும் மருத்துவத்துக்கு மதிப்பிருக்குமா டாக்டர்? இங்கே அவர்கள் கொடுக்கும் பணமும் மருத்துவத்தில் ஒரு பகுதி இல்லியா? இந்த மனோதத்துவம் உங்களுக்கு புரியுமில்லயா? அதுவும் இது போன்ற விஷயங்களில் மனம்தான மருத்துவம் செய்யுது."

"நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை, சபாபதி."

"எனக்கு ஒரு பவுர்ணமிக்கு பதினையாயிரம் கொடுக்கிறார். இரண்டாயிரம்தான் எனக்கு செலவாகும். இதில இதுவரை வந்த லாபத்தை அப்படியே வைத்திருக்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. சித்தர் இதில் வரும் பணத்தை தர்ம காரியங்களுக்குத் தான் பயன்படுத்துகிறார். அந்த புகை வடிவுதான் உங்களைப் பிடித்த ஆவி என்று அவர் சொல்லுவதில்லை. எல்லாம் இவர்களாக நினைத்துக் கொள்வதுதான்."

"பல டாக்டர்கள் நேரடியாக அடிக்கும் கொள்ளைக்கு இது பரவாயில்லை போலிருக்கே!"

"நான் ஒரு மெட்டலர்ஜிகல் எஞ்சினீயர். எனக்கு இது ஒரு ஹாபி மாதிரி. ஒவ்வொரு பவுர்ணமி அன்னிக்கும் நான் ஃபேக்ட்ரிக்கு போய் புதுசு புதுசா பரிசோதனை செய்யறதா சொல்லி விதம்விதமா ஆவிகளை உருவாக்குறேன். இதுல மத்தாப்பு செய்யுற மக்னீசியம் சால்டெல்லாம் கலந்து இப்ப ஏகப்பட்ட விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கேன்."

ராஜாராம் நன்றி சொல்லி புறப்பட்டார். 'ஆன்மீகமோ அல்லது பித்தலாட்டமோ ஏதோ நாலு பேரு நல்லபடியா ஆனா சரிதான்' இந்த எண்ண ஓட்டத்துக்கு வந்துவிட்டார்.

அகோரமாய் அலைக்கழைக்கப் பட்ட அந்த முன்னிரவில் கிடைத்த மகா அலங்கோல நாய்ப்பிணத்தின் விஸ்வரூப தரிசனத்தால் சங்கரின் புத்தி பேதலித்திருந்தது. பல நேரங்களில் தூக்கத்திலிருந்து எழுந்து பயங்கரமாக அலற ஆரம்பித்தான். விடுதி மாணவர்கள் கவலையுற்றார்கள். அப்போது போளூர் சாலையில் எதேச்சையாக சிவாஜியைப் பார்த்தார்கள் மனோவும் சங்கரும்.

"டேய் சங்கர், அவந்தாண்டா, அதே கருப்பு சாண்ட்ரோ, அதே நம்பர். கொலகாரப்பாவி."

சங்கர் அவன் காருக்குக் குறுக்கே வண்டியை நிறுத்த சிவாஜி வெளியே வந்தான். தடித்த வாக்குவாததில் அமைதியாகப் பேசிய சிவாஜி கடைசியாகச் சொன்னான்.

"ஃப்ரண்ட்ஸ், டாக்டர் ராஜாராம்னு வேலூர்ல ஒருத்தர் இருக்கார். அவரோட அட்ரஸ் தர்ரேன். போய்ப் பாருங்க. நிச்சயமா சரியாகும். என்னைக் குணமாக்கியது அவர்தான்."

மனோவும் சங்கரும் ராஜாராமிடம் வந்தார்கள். மனோ விவரித்தான். ராஜாராம் சங்கரைப் பார்த்து கேட்டார்,

"தம்பி உம் பேர் என்னா?"

"ஜோசப்"

"ஜோசப்?", கொஞ்சம் யோசித்த ராஜாராம் அவனை வெளியே அனுப்பிவிட்டு மனோவிடம் பேசினார்.

"தம்பி உங்க ஃபிரண்டு இந்துவா இருந்தா திர்ணாமலைக்கு அனுப்புவேன். நீங்க ஒன்னு செய்ங்க. ஒரு பாதிரிகிட்ட கூட்டிட்டு போங்க. மனமாற்றம் தான் இதுக்கெல்லாம் மருந்து."

"சார் அவன் இந்துதான். யாருக்கும் தெரியக் கூடாதுங்கறத்துக்காக பேர மாத்தி சொல்றான். அவங்க அப்பா திருவண்ணாமலைல ஒரு ஃபேக்ட்ரி வச்சிருக்கார். அவருக்குத் தெரிஞ்சா மொதல்ல பைக்க புடுங்கிடுவார்."

"அவன் அப்பா பேரு?"

"சபாபதி"

தனக்குள் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே அவர்களை வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை சக்திவேல் சித்தரிடம் போகச் சொன்னார். யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் சொல்லி வைத்தார்.

அன்று பவுர்ணமி. நிதானமாக போளூர் சாலையில் திருவண்ணாமலை நோக்கி மனோ வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். பின்னால் பதற்றமாக சங்கர் அமர்ந்து வந்தான். இருள் கவிழ்ந்துவிட்டிருந்தது. அவர்கள் அந்த வளைவை நெருங்கினார்கள். சங்கர் கொஞ்சம் ஆவேசமானான்.

"வண்டியை ஆட்டாம வாடா" என்றான் மனோ.

முன்னால் ஒரு மாட்டுவண்டி நின்றுகொண்டிருந்தது. சற்று தள்ளி சாலையின் வலதுபுறத்தில் இன்னொரு மாட்டு வண்டியில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வண்டிக்காரன் மாடுகளுக்கு புல் கொடுத்துக் கொண்டிருந்தான். இந்த சூழலில் சற்றே நிதானித்த மனோவை விரட்டினான் சங்கர். அவர்கள் பாதையில் அவர்களுக்கு முன்னால் வரிசையாக நான்கு வண்டிகள் தேங்கியிருந்ததை அந்த வளைவு மறைத்திருந்தது.

"சீக்கிரம் இந்த வளைவைத் தாண்டு மனோஒ..." என்றான் சங்கர் சிலிர்க்கும் குரலில். மனோ முடுக்கியதில் சீறிப் பாய்ந்த வண்டி முதலில் திணறி வளைந்து நெளிந்து அந்த வளைவைக் கடந்து சமநிலைக்கு வருவதற்குமுன் ஒரு சைக்கிள் ஓட்டியை நிலைகுலையச் செய்தது. அவன் அங்கு புல் மேய்ந்துகொண்டிருந்த ஒரு மாட்டின் வயிற்றில் பறந்து முட்டிக் கொண்டான். ஆத்திரத்தில் அவனை அந்த மாடு மிதித்த மிதியில் அவன் அந்த பிராந்தியம் முழுமைக்கும் கேட்குமாறு அலறினான்.

"அந்த சைக்கிள் காரன் கீழ விழுந்துட்டான் போலருக்கு சங்கர்"

"ஒம் வேலைய பாத்துகிட்டு நே..ரா போடா"

மறுநாள் சங்கருக்கு பேய் விலகியிருந்தது. அந்த சைக்கிள் காரனுக்குப் பேய் பிடித்திருந்தது.

* * * * * * * * * * * * *

Friday, October 13, 2006

சென்னையில் வரலாறு காணாத வன்முறை

- - -

- - - இது போன்ற தேர்தலை நான் சென்னையில் பார்த்ததில்லை.

- - - நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

- - - நடந்தது தேர்தலே அல்ல.

- - - தெலுங்கு திரைப்படங்களை மிஞ்சும் காட்சிகள்.

- - - பீகாரில் நடந்தவைகளாக நாம் கேள்வியுற்ற காட்சிகள்.

- - - சட்டத்தை எதிப்பவர்கள் நிம்மதியாக அல்வா சாப்பிடலாம்.

- - - ஜனநாயகத்தை எதிர்ப்பவர்கள் கெக்கொலி கொட்டலாம்.

- - - மீண்டும் தேர்தல் நடந்தால் திமுக அணி சென்னையில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும்.

- - - அது முறையாக தேர்தல் நடந்தால்.

- - - சென்னையில் நடுநிலையாளர்களிடம் திமுகவின் செல்வாக்கு பெரிதாக சரிந்திருக்கிறது.

- - - ***

Sunday, October 08, 2006

"பா"

மரபுக் கவிதை ஆர்வலர்களே,
கவிதை ஆர்வலர்களே!
'பா' என்ற புதிய பதிவை மரபுக் கவிதைகளுக்கென ஆரம்பிதிருக்கிறேன்.
வாருங்கள், உங்கள் கருத்துகளைத் தாருங்கள்.

மரபுக் கவிதைகளை விரும்புகிறவர்களை
வற்புறுத்தி அழைக்கிறேன்.

மற்றவர்கள் அனைவரையும் விரும்பி அழைக்கிறேன்.

சுட்டி.

Saturday, October 07, 2006

அப்சலை தூக்குல போடுங்க "டா!"

'...தூக்குல போடுங்கடா' என்றொரு பதிவு முத்து-தமிழினி எழுதியிருக்கிறார். அங்கு இட்ட பின்னூட்டம் இது.

இதை என் வலைப்பூவில் ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.

அதிர வைக்கும் தலைப்புகள் வைப்பது இப்போது வலையுலகின் போக்கு. அதன்படியும் மற்றபடிக்கு நுனுக்கமாயும் வைக்கப்பட்ட தலைப்பு. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, விசாரனை முடித்து, தீர்ப்பளித்து, அதை நடைமுறைப் படுத்தப் போகும் அரசு ஊழியர்களைத்தான் அப்படி டா போட்டு அழைக்கிறார் என்று முதலில் தோன்றினாலும் இங்கே ஒரு இக்கு வைத்திருகிறார். அதாவது 'என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....' . முத்துவை தேசத் துரோகி என்று அழைத்துவிடக் கூடாது என்பதற்காக தூக்கில் போடுங்க என்கிறார். இல்லை, போடுங்க 'டா' என்கிறார். பின்னூட்டங்களில் அவர் மையமாக எழுதிவிட்டதாக பலரும், மேலும் அவருமே பதிவில் ஐயப் பட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான பதிலைத் தான் அந்த டா வில் சூசகமாகச் சொல்லியிருக்கிறாரோ? தேசத் துரோகி என்று தன்னை யாரும் அழைக்கவில்லை என்றால் தூக்கில் போட வேண்டாம் என்கிற மறை பொருளையும் சொல்லுகிறாரோ என்கிற ஐயத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அவர் தான் தேசத்துரோகி என்று அழைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறை வியக்க வைக்கிறது. இந்த வியப்பு முத்துவின் முந்தைய பதிவுகளைப் படித்ததனால் வருகிறது.

' மரண் தண்டனைக்கான காரணங்களாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பிரபு ராஜதுரை எடுத்துக்கூறிய புள்ளிகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு கனக்கு. எப்படி கணக்கில் எடுக்கவேண்டும் என்றும் முத்து தன் பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறார். கூடவே பிரபு ராஜதுரை எழுதிய இதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ""ஷரியா" - சரியா?: ஓர் எதிர்வினை " என்கிற கட்டுரையை அவர் மரத்தடி குழுமத்திற்காக எழுதியிருக்கிறார்.

குழலிக்கு பிடிக்கிற மாதிரி எழுதியிருக்கிறார். குழலி முதல் பின்னூட்டத்தில் 'அதே அதே' என்கிறார். அடுத்த பின்னூட்டத்தில் 'அது....' என்று சொல்கிறார். அகவே குழலியின் பதிவுடன் சேர்த்தே இந்தப் பதிவுக்கும் பொருள் கொள்ளலாம் என்பதும் ஒரு விருப்பத் தேர்வாக(choice) இருக்கிறது.

இந்தப் பதிவின் திரண்ட கருத்து அந்த 'டா' வில் இருக்கிறது என்பதே நான் புரிந்து கொண்டது.

'ஆமாண்டா' என்றும் அதற்கு மேலும் பின்னூட்டங்கள் வரக்கூடும். நல்ல விளக்கங்களுடன் கூடிய பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 05, 2006

ஒரு ஜெர்மானியர் சொன்னது.

ஜெர்மனியில் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி பற்றி செய்தி இன்று இந்து பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் விரிவாக வந்திருந்தது. அதன் சுட்டி.

ஜெர்மனியின் வெளிநாட்டுத்துறை அமைச்சர், ஒரு பில்லியன் (நூறு கோடி) மக்களுக்கு மேல் மக்கள்தொகை, 400க்கு மேற்பட்ட வட்டார மொழிகள், 20 தேசிய மொழிகள் இவற்றைக் குறிப்பிட்டதுடன் மற்றொன்றைக் குறிப்பிடுகிறார். ஒரு சீக்கியரை பிரதமராகவும் ஒரு முஸ்லீமை குடியரசு தலைவராகவும் மிகப் பெரிய அரசியல் கட்சி ஒரு கிருஸ்துவ பெண்மணியைத் தலைவராகவும் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கட்டுவதற்கு இந்தியாவை முன்னுதாரணமாக வைத்தே வலிமையையும் தெம்பையும் பெறமுடியும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த புத்தகக் கண்காட்சி நமது வலப்பதிவாளர்களின் கவனத்தை ஏன் கவரவில்லை என்று தெரியவில்லை. விவரமான பதிவுகளை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.

இதையும் பாருங்கள்.

Tuesday, October 03, 2006

பதிப்பறியேன் பார்வை

'நாடு கட்டிய நாயகன்' புத்தகம் முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் வலையுலகில் இவ்விஷயம் பற்றிய பரபரப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது. இவ்விஷயத்தில் பதிப்புலகைப் பற்றி அதிகம் அறியாத என் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பதிப்புலகம் பற்றி அதிகம் அறியாவிடினும் சொந்தத்தில் தொழில் செய்பவன் என்கிற முறையிலும் அதே நேரம் எழுத்துலகில் ஏதோ செய்ய முயற்சிப்பவனாகவும் எனது கருத்துக்களை முன் வைக்கிறேன். சில நாட்களுக்கு முன் இதே போன்று அமெரிக்காவில் காவ்யா விஸ்வநாதன் என்ற பெண் செய்த செயல் எனக்கு அதர்ச்சியளிக்கவில்லை. மாறாக அந்தப் பெண் மாட்டிக் கொள்ளும்படியாக அதைச் செய்ததே எனக்கு ஆச்சரியமளித்தது. வேறொருவரின் எழுத்தை எடுத்து உபயோகிக்கும் எண்ணம் இருப்பவர் அதை எழுதியவரே அறியா வண்ணம் திறமையாக எடுத்து வைத்துவிட முடியும்.

தென்கச்சி சாமிநாதன் தன்னைப் பற்றி கூறிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவருடைய புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு இராமகிருஷ்ண தபோவனம் வெளியிடும் ஒரு புத்தகத்தில்ருந்து தகவல்களை எடுத்துக் கொள்வாராம். ஒரு முறை அந்தத் தபோவனப் புத்தகத்தின் ஆசிரியர் இவரைக் கூப்பிட்டனுப்பினார். தம் சாயம் வெளுத்துவிட்டது என்று அஞ்சியபடியே அவரைக் காணச் சென்ற தென்கச்சியிடம் அவர், 'எங்கள் புத்தகத்தில் போடுவதற்கு நீங்கள் வானொலியில் கூறுவது போன்ற தகவல்கள் வேண்டும், நீங்கள் எங்கிருந்து தகவல்களை எடுக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டாராம்! புனைவுகள் மட்டுமல்லாமல் தகவல் சார்ந்த படைப்புகளிலும் இவ்வாறு மற்றவர்களின் அறிவும் உழைப்பும் சார்ந்த முயற்சிகளை தனதாக்கிக் கொள்ளும் போக்கும் தன்னுடைய படப்பாற்றலையும் சேர்த்து வேறொன்றுபோலத் தருவதும் சாதாரணமாக நடப்பவை என்று கருதுகிறேன். இவையெல்லாம் திருட்டு எனும் எல்லைக்குள் வருமா என்பது பெரும் சர்ச்சைக்குரியது.

ஆனால் தன் விஷயத்தில் நடந்திருப்பதாக திரு குமார் அவர்கள் சொல்வது அப்படிப் பட்டதுதான் என்று உறுதிப் படுத்துவதில் சர்ச்சைக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. தன் எழுத்தைப் புத்தகமாக்க முயன்று வரும் ஒரு வலைப் பதிவருக்கு நான் சற்று அறிந்த வட்டத்தில் இப்படி நிகழ்வது தனிப்பட்ட முறையில் எனக்கு துயரத்தைக் கொடுத்த செய்தி. அவர் துணிந்து அதை வலையில் பதித்து தன் மனக்குமுறலைப் பகிர்ந்து கொண்டது மிகவும் பாராட்டக் கூடிய செயல். அவர் அந்தப் பதிவில் கையாண்டிருந்த மொழியை சிலர் ஆட்சேபித்தாலும் எனக்கு அவ்வாறெல்லாம் தோன்றவில்லை. மிக நாகரீகமான முறையிலேயே அவர் தன் உணர்வுகளை வெளியிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் நான் கவனித்த அம்சங்கள்:

* இது வெளிச்சத்துக்கு வராமல் திரை மறைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தன் படைப்புகளை புத்தகமாகப் போடும் எண்ணத்தை தீவிரமாகக் கொண்ட எழுத்தாளர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் எச்சரிக்கை கிடைக்காமல் போயிருக்கும்.

* தன் உழைப்பையும் ஆர்வத்தையும் கொட்டி உருவாக்கிய படைப்பை பறிகொடுக்கும்போது ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மிக அருகில் பார்க்கும் நிலை நமக்கு ஏற்பட்டு விட்டது.

*இனையம், வலையுலகம் என்ற மிகக் குறுகியதும் நெருங்கியதுமான வட்டத்தில் இவ்வாறு நடப்பது இதன் அடுத்தடுத்த வட்டங்களில் மிக எளிதாக நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளைப் புலப்படுத்துகிறது.

*மிகுந்த சோதனையான காலகட்டத்தில் இந்த சூழலின் மிகப் பெரிய செயலாகப் புத்தகத்தை முடக்கி தொழில் தர்மத்தைக் காட்டியிருக்கிறார் பத்ரி.

*தமிழ் வலையுலகத்திற்கு மிக நெருங்கியவரான பத்ரி இது பற்றிய அறிக்கையோ அல்லது குறைந்தபட்சமாக வருத்தமோ நான் அறிந்தவரையில் தெரிவிக்காதது ஒரு நெருடலாக இருக்கிறது.

நாம் அறிந்த வலையுலக இருவர் - ஒரு எழுத்தாளர், ஒரு பதிப்பாளர் இருவரும் சிலவற்றை இழந்து கஷ்டத்தில் இருக்கிறார்கள். இதற்கு பொறுப்பானவர்கள் இதை உணரவேண்டும்.

.