Tuesday, January 02, 2007

திருவாதிரைத் திருநாள்

அந்த நாளும் வந்திடாதோ!

அந்த சின்னப் பையனுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் விடுமுறை கிடைக்கும். காலையில் சுடச்சுட நெய்மணக்கும் களி கிடைக்கும். இந்தக் களிக்கு தான் எத்தனை ருசி! ஆண்டவன் இந்த களியின் ருசியைப் போல் வேறெங்கும் வைத்ததில்லை. புழுங்கலரிசியை வறுத்து, பொரியரிசி ஆக்கி, சற்றே (மிக முக்கியம்-சற்றேதான்) பொடித்து, வெல்லம் சேர்த்து, நெய்வார்த்து கிண்டியெடுத்த களியின் ருசி, ஆகா! ஒரு வருஷம் வரை அப்படியே நாவில் நிற்கிறதே!! அதனால்தானோ என்னவோ இதை திருவாதிரை அன்று மட்டும் செய்கிறார்கள்! இனி அடுத்த திருவாதிரைக்குதான் களி!

திருவாதிரை என்றால் சிதம்பரம்தான் சிறப்பு. ஆனால் அந்தச் சின்னப் பையன் குடந்தையில் அல்லவா இருந்தான். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பெரியத் தெருவுக்கு போவான். அப்பாவுடன் வெளியில் செல்வதென்றால் அது எப்பவும் லாபம் தான். ஏதாவது ஒன்று நிச்சயம் கிடைக்கும். அன்று அங்கு அத்தனை சிவன் கோயில் சாமிகளும் புறப்பட்டு வந்து வரிசையில் பெரிய கடைத் தெருவில் நிற்கும். அப்பா ஒவ்வொரு சாமியாய் கும்பிட்டு வரும்வரை அந்த கடைத்தெருவின் அத்தனை ஆரவாரத்தையும் ஆசை தீர பருகியனுக்கு அவ்வப்போது அப்பா திருநீறு பூசி விடுவார். சில சாமிகளைப் பார்க்க அவன் இரண்டு கக்கத்து இடுக்கிலும் கை கொடுத்து தூக்கி மேலே காண்பிப்பார். அவனும் கும்பிட்டுவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வான். அவர் இறக்கி விட்டவுடன் மறக்காமல் அப்பா கையைப் பிடித்துக் கொள்வான். அத்தனைக் கூட்டத்தில் அப்பாவை தொலைத்துவிடக் கூடாது அல்லவா!

நான் தாங்க அந்த சின்னப் பையன். ஒவ்வொரு திருவாதிரை அன்றும் மனதில் இந்த படத்தை ஒட்டிப் பார்த்துவிடுவேன். இந்த முறை உங்களோடு சேர்ந்து ஓட்டிப் பார்க்கிறேன்.

திருவாதிரை அன்று சிவன் கோயில் நகையை திருடலாமா? அப்படி ஒரு கதையைப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்களேன். "மாதேவடிகள் ஹாரம்"