Tuesday, January 15, 2008

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.

இன்று பொங்கல் நன்னாளில் இந்த நல்ல செய்தி வந்திருக்கிறது. சில (பல) நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்பிரவரி மாதங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இவ்வழக்கில் விரைந்து செயலாற்றி வெற்றிக்கனி பறித்த நம் தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கக் கடைமைப் பட்டிருக்கிறோம்.

இவ்விளையாட்டைத் தடை செய்யக் கோரி விலங்கு நல வாரியம் தொடுத்திருக்கும் வழக்கு பொருளற்ற பல அம்சங்களை உடையதாகவே எனக்குப் படுகிறது. இப்போது நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் பார்வையாளர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று செய்திகள் சொல்லுகின்றன. உண்மையில் ஒரு மனித நல வாரியமே ஜல்லிக்கட்டு தடை கோரி நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றான இந்த விளையாட்டு சீர் படுத்தப்பட்டு பாதுகாப்பானதாக்கி மேலும் பிரபலப்படுத்தப்பட வேண்டுமே தவிர தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாரியத்தால் முன்னர் தடை பெறப்பட்டதற்குக் காரணம், உயர்நீதிமன்றத் தீர்ப்பைனால் சற்றே அசந்திருந்த நேரத்தில் வாரியம் சாமர்த்தியமாக செயல்பட்டதுதான் என்று அறிய முடிகிறது.

இவ்வழக்கில் தடை கொடுத்த உச்சநீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் வழக்கம் போலவே விமர்சனங்கள் தாக்கின. சட்டம் ஓர் இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதமே விளக்கு என்ற அறிஞர் அண்ணா கூறியதை இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.

சரியான நேரத்தில் சரியான வாதங்களல் தேவையான தீர்ப்பினைப் பெற்றுத் தந்த தமிழக அரசுக்கு நன்றி.