தந்தமும் சந்தனமும்
நியூ ஃப்ளோரிடாவில் அவனுடைய ஆய்வகத்தில் படிப்படியாக முன்னேறியிருந்தான். பட்டவுடன் கணிசமான கதிர்கள் பிரதிபலிக்கக்கூடிய செல் ஸ்பெக்ட்ரோ-ஸ்கோப் தயாரிப்பதற்கான முதல்கட்டத்தைத் தாண்டிவிட்டான். மீண்டுவந்தவற்றைப் பகுத்து உண்மையான அளவுகளுடன் முப்பரிமான செல் கட்டமைப்பின் பிம்பம் உருவாக்கும் இரண்டாவது கட்டமும் தாண்டியாகிவிட்டது. இப்பொழுது மூன்றாவது கட்டம். இந்த வேலைக்கு தோதான ரோபோவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பேரழிவின் உச்சமான அந்த உலகப்போர் உலகின் முக்கால் பாகத்தை தீய்த்து முடிந்தபிறகு இழந்தவற்றையெல்லாம் மீண்டும் செய்ய செல் செல்லாகத் தேடிக்கொண்டிருந்த இருபத்திமூன்றாம் நூற்றாண்டில் மிச்சமிருந்த மனித கூட்டத்தில் அவனும் ஒருவன். இந்தியாவின் தெற்கிலிருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் அவன் தேடும் தந்தம் மற்றும் சந்தனத்தின் செல்கள் கிடைக்குமென்று உறுதியாக நம்பினான். உருப்படியாக ஓரிரு செல்கள் கிடைத்தால்கூட போதும். அவற்றிலிருந்து மீண்டும் இவற்றை உருவாக்கி புகழ் மற்றும் பணத்தின் உச்சிக்குச் சென்றுவிடுவான். பல வலைப்பதிவுகளிலிருந்து தோண்டியெடுத்த செய்திக்குவியலை, உண்மை தேடும் மென்பொருளில் வடிகட்டியபிறகு கிடைத்த செய்திகளிலிருந்து அவனுக்கு பெரும் நம்பிக்கை வந்திருந்தது.
மனைவி கேட்டாள், "இருபதாம் நூற்றாண்டில் இந்த வீரப்பன் என்பவன் உண்மையிலேயே இருந்தானா? தந்தங்களையும் சந்தனக்கட்டைகளையும் தான் அலைந்த காடுகளில் புதைத்திருந்தானா?"
"உண்மை காணும் மென்பொருள் வீரப்பன் என்று ஒருவர் இருந்ததை உறுதியாகச் சொல்லுகிறது. சந்தனக்கட்டைகளையும் தந்தங்களையும் புதைத்து வைத்ததைப் பற்றி சந்தேகமாகத்தான் சொல்கிறது, ஆனால்எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது" என்று சொன்னான்.
"இதற்காகப் பல நிறுவனங்கள் முயன்று கொண்டிருக்கின்றன. நான் வேலை செய்யும் நிறுவனம் கூட முயல்கிறது. அனால் நாம் தேடுகின்ற இடம் யாருக்கும் சுலபமாகத் தோன்றாது."
மெகா ரோபோ மாலில் இந்த வேலைக்குத் தோதான ரோபோவைத் தெரிவு செய்தார்கள். நீண்ட ஆழ்துளை தோண்டி சாம்பிள் சுத்தம் செய்து செல்பற்றி முதன்மைத் தகவல் சொல்லும் திறமையுடைய ரோபோ. அவனுக்கு திருப்தியாக இருந்தது. கடைசிக்கட்டம் செயல்பாடுதான் - இவ்வளவுக்கும் பக்கபலமாய் இருந்து ஆய்வகத்தில் ஒத்துழைத்த மனைவி அவுட்டோர் வேலைகளுக்கு வரமாட்டாள். அதுவும் வெகுதூரம் - தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி. நீண்ட யோசனைக்குப் பின், அவன் மட்டும் செல்வது என்று தீர்மானித்தார்கள்.
இந்தியாவில் இப்பொழுது அந்தப் பகுதிக்கு மிக அருகிலிருந்த மொரப்பூர் வான் துறையில் இறங்கினான். பெற்றிருந்த அனுமதிக்கான அடையாள விசாரணைகள் முடிவடைந்தபின், தகவலறிய ஒரு அதிகாரியை அணுகினான். புன்னகையுடன் தகவலைத் தந்தவர் வெற்றிக்கான வாழ்த்தையும் சொன்னார். அவர் கொடுத்த ஹோவர் காரில் சத்தியமங்கலம் வந்தான். வனத்துறை அலுவலகம். அங்குள்ள அதிகாரி சொன்னார்.
"நீங்கள் கேட்ட இடங்களிலிருந்து சாம்பிள் எடுக்க நேற்றுவரை யாரும் அணுகவில்லை. ஆனால்........" "சொல்லுங்கள் சார்", அந்த ஆனாலுக்கு நெற்றி சுருக்கினான். "நியூஃப்ளோரிடாவிலிருந்து ஒரு பயோடெக் நிறுவனம்,இன்று கடிதத்தில் அனுமதி கேட்டு இருக்கிறார்கள்."
நியூ ஃப்ளோரிடா என்றவுடன் சற்று அதிர்ந்தவன் உடனே சொன்னான்,
"சரி அவர்களுக்கும் கொடுங்கள்".
"இந்த விஷயத்தில் அரசாணை தெளிவாகக் கூறுகிறது. பூமி மேற்பரப்பில் பலப்பல தாவரங்கள் மற்றும் உயிரினங்கள், மிச்சம் மீதி செல்கள் இல்லாமல் தீய்ந்துவிட்டபடியால், புதைக்கப்பட்ட செல்வங்கள் மதிப்புமிக்கவை என்றும், இதற்கான சாம்பிள் கேட்பவர்களிடம் அதற்கான அதிக கட்டணம் தருபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கலாம் என்று"
"கட்டணம்"
"கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் கோரிக்கைக்கு குறைந்தபட்சம் 35,000 யுனிவர்சல் டாலர்கள்". நிம்மதிபெருமூச்சு வந்தது அவனுக்கு.
"ஆனால்.." பகீரென்றிருந்தது அவனுக்கு. மீண்டும் 'ஆனால்'.
"சொல்லுங்கள் சார்"
"அந்தக் கம்பெனி 2 மில்லியன் UNS $ தரத்தயாராயிருக்கிறார்கள்".
"சார், ரொம்பப் பெரியத் தொகை. இதை நான் நம்பவில்லை."
"நீங்களே கடித நகலைப் பாருங்கள்" உணர்ச்சிகளால் கொஞ்சம் நெருக்கப்பட்டிருந்த அவன் கடிதத்தைப் பார்த்தபின் ஆச்சர்யத்தால் விரிந்தான். அது அவன் மனைவி வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து வந்திருந்தது. அவள்தான் கையெழுத்திட்டிருந்தாள். ஆனால் அவளுக்கு இது ஏன் இன்றுவரை தெரியவில்லை என்று ஆச்சர்யப்பட்டான்.
"சார் இது விசாரனைக் கடிதம்தான். ஆனால் நான் நேரில் எல்லா ஏற்பாடுகளுடன் வந்திருக்கிறேன். 2 மில்லியன் எல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம் சார். என்னை எப்படியாவது அனுமதியுங்கள்."
"விதிகளின்படி கடமையாற்றத்தான் நான் இங்கிருக்கிறேன்."
"சார் 50 ஆயிரம் UNS தருகிறேன். 35 ஐ அரசுக்கு செலுத்திவிட்டு என்னை அனுமதியுங்கள்."
மானிட்டரில் செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தவர் இருக்கையைவிட்டு விரைப்பாக எழுந்தார்.
"மிஸ்டர், பழைய இந்தியாவைப் போல் எண்ணிக்கொண்டீர்கள் போலிருக்கிறது. பேரழிவு உலகப்போரோடு இந்தியாவில் லஞ்சமும் அழிந்தது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்". உரத்த குரலில் சொல்லிவிட்டு அமர்ந்தார். மீண்டும் மானிட்டர் திரையில் ஆழ்ந்தார்.
அவனால் திகைத்து அமர்ந்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை . தனது பாம்டாப்பிலிருந்து வந்த பீப் சத்தம் கூட அவனுக்குக் கேட்கவில்லை. தீவிரமாக சற்று நேரம் திரையைப் படித்தபிறகு நிமிர்ந்த அதிகாரி இவனைப் பார்த்தார். அவர் முகம் மாறியிருந்ததாக உணர்ந்தான்.
"சார் உங்கள் பாம்டாப்பிலிருந்து செய்திக்கான அழைப்பு வருகிறது பாருங்கள். செய்தி உங்களுக்கு அனுகூலமாக இருக்கட்டும்".
செய்தி மனைவியிடமிருந்துதான். ' அன்பே, எங்கள் நிறுவனமும் இதற்கு இந்த இடத்திலேயே முயற்சிக்கிறது. இன்றுதான் எனக்குத்தெரியும். நான்தான் அதற்கான விசாரனைக் கடிதத்தையே அனுப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் வேறொரு இடத்தில் தேடுங்கள். விவரங்களை நான் தருகிறேன். 'கி.பி.2056ல் ஒரு தலைவரின் சடலத்தை ஏராளமான சந்தன மாலைகளுடன் தந்தப்பேழையில் வைத்து அடக்கம் செய்திருக்கிறார்கள். சென்னைக் கடற்கரை இருந்த இடத்தில் இருக்கும் ஆறு தலைவர்களின் சமாதிகளில் அதுவும் ஒன்று. தந்தமும் சந்தனமும் அதிகமாக புழக்கியதால் இந்த தலைவருக்கு வைக்கப்பட்ட விசாரணைக்கமிஷனைப் பற்றிய பதிவிலிருந்து இது தெரியவந்தது. அதன்பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய சுனாமியில் சென்னை மூழ்கியதால் பேரழிவு உலகப்போரில் தீய்ந்து போயிருக்காது. நம்முடைய ரோபோ நீருக்கடியிலும் வெலை செய்யும் திறன் கொண்டது. காஞ்சிபுரத்தில் நீர்முழுகி வேலை செய்யத் தேவையானதை வாங்கிக்கொண்டு உடனே சென்னை செல்லுங்கள்.'
ஆண்டவன் ஒருவன் இருக்கத்தான் செய்கிறான். அவன் மனைவி ரூபத்தில் செய்தி அனுப்புகிறான். இதுவரை பூமியில் ஏற்பட்ட சுனாமிகளில் மிகப் பெரிதான ஒன்று பேரழிவு உலகப்போருக்கு முன் ஏற்பட்டு இந்திய கிழக்குக் கடற்கரையில் சராசரியாக 50 கிலொமீட்டர்களை கபளீகரம் செய்துவிட்டிருந்தது. பாலாற்று முகத்துவாரம் மிகப்பெரிதாகி காஞ்சிபுரம் துறைமுகமாகியிருந்தது. காஞ்சி நகரில் வேண்டியதை வாங்கிக் கொண்டான். காஞ்சித் துறைமுகத்தில் ஸ்க்யூபா கிராஃப்ட் பதிவு செய்தான்.
"சென்னையில் ஓரிரவு தங்கவேண்டும். உங்கள் கட்டணத்தை சொல்லுங்கள்."
"சார், இரவெல்லாம் தங்க முடியாது. மூழ்கிய சென்னையைப் பார்க்க சுற்றுலாத்துறையின் ஏற்பாடுதான் இந்த ஸ்க்யூபா கிராஃப்ட். இரவில் வெளிச்சமும் இருக்காது. பாதுகாப்பும் இருக்காது."
மனைவியை அழைக்காமல் வந்தது எவ்வளவு பிசகு. இக்கட்டான வேளையில் அவள்தான் யோசனை சொல்வாள். அப்போது அவனுடைய பாம்டாப் அழைத்தது. ஆவலுடன் பார்த்தான். மனைவிதான். 'சென்னைக்குச் செல்லுங்கள். இரவு தங்க நான் ஒரு ஏற்பாடு செய்கிறேன். மாலை 4 மணிக்கு மேல் புறப்படுங்கள். உங்கள் இடத்துக்கான வரைபடம் அனுப்பியுள்ளேன். இலக்கை அடைந்தவுடன் நான் இணைத்துள்ள படத்தில் காட்டியபடி ஸ்க்யூபாகிராஃப்டிலுள்ள மூன்று விசைகளை கிராஃப்ட் ஓட்டிக்குத் தெரியாமல் ஒருசேர அழுத்துங்கள் . கிராஃப்ட் பழுதாகிவிடும். இரவில் வேலையை முடித்துவிடுங்கள்.'
ஆறு சுற்றுலாப் பயணிகளுடன் விரைந்து கொண்டிருந்தது சென்னையை நோக்கி ஸ்கூபாகிராஃப்ட். ஓட்டியைக் கேட்டான்.
"இந்த கலம் பழுதானால் உனக்கு சரிசெய்யத் தெரியுமா?"
"இல்லை சார். கலம் பழுதானால் விழுப்புரம் துறையில் இருந்து ஒரு மாஸ்டர் கிராஃப்ட் நம் கலத்தை விழுங்கியெடுத்துச் செல்லும். கவலைப்படாதீர்கள்"
அவன் கவலைப்பட ஆரம்பித்தான். ஆனால் திட்டமிட்டபடி எல்லாம் நிறைவேறியது.
மறுநாள் வெற்றிப் பெருமிதத்தில் நியூஃளோரிடாவில் இறங்கியவன் தன் மனைவியை முழுக்க அன்பில் நனைத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். "நான் தந்தத்தையும், சந்தனத்தையும் மீண்டும் உருவாக்குவேன். இறைவனுக்கு நன்றி. உனக்கும் நன்றி".
"எனக்கு கொஞ்சம் அதிகமாகச் சொல்லுங்கள்".
"ஏன்".
"அன்று மாலை சென்னையில் நீங்கள் சென்ற கலம் பழுதானபின் மாஸ்டர் கிராப்ட் ஏன் வரவில்லை தெரியுமா?"
"ஆமாம், ஏன் வரவில்லை? ஒவ்வொரு நிமிடமும் பயந்துகொண்டிருந்தேன்.".
"வாழைக்கான செல்களைத் தேடிய உங்கள் தம்பி திருச்சி சென்றிருந்தார். அவரை உடனே குடந்தைத்துறைக்குச் சென்று 2ம் நூற்றாண்டு பூம்புகாருக்கு சுற்றுலா செல்லும் ஸ்க்யூபா கிராப்ட்டை பிடிக்கச் சொன்னேன். அதே மூன்று விசைகள். கலம் பழுதாகியது. விழுப்புரம் துறையிலிருந்த ஒரே ஒரு மாஸ்டர்கலம் அங்கு சென்றுவிட்டது. நீங்களும் வேலையை முடித்துவிட்டீர்கள்."
அவள் கேட்ட கொஞ்சம் அதிக நன்றியை நிறைய நிறைய சொன்னான்.
*******************
3 Comments:
கதை நன்றாக உள்ளது. உங்கள் கற்பனைத் திறனை நினைத்து வியந்தேன். இடையிடையே அரசியல் உள்குத்து தூள்.
லொடுக்கு பாண்டி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
ஸ்கூபா காரைப் பற்றின கருத்தில் தான் பொருத்தம் என்றால் பெயரிலும் பொருத்தமா?
அருமை...
Post a Comment
<< Home