Monday, May 01, 2006

சென்னை ஓட்டு யாருக்கு?

சென்னை ஓட்டு யாருக்கு?

தமிழகத்தின் கோட்டை இருக்கும் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. இந்த முறை சென்னை மக்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறார்கள்? யாருக்குப் போடவேண்டுமென்றால் நிச்சயமாக அதிமுகவிற்குதான். தண்ணீரின் அருமை தாகத்தில்தான் தெரியும். இப்போது தாகமில்லையே! தண்ணீரின் அருமையை நினைவில் வைத்திருப்பார்களா சென்னை மக்கள்?

நான் 25 ஆண்டுகளாக சென்னைவாசி. வந்து வாட்டிய 25 கோடைகளிலும் இந்தக் கோடை வித்தியாசமானதுதான். தன் சொந்த நலன்களுக்காகவே எல்லா அரசு திட்டங்களும் என்று அரசின் அலுவல்களை திமுக அரசும் மாறி மாறி வந்த அதிமுக அரசும் வரையறுத்து வைத்திருந்த நிலையில், இந்த அரசு அறிமுகப் படுத்தி செயல்படுத்திய மழைநீர் சேமிப்புத் திட்டம் என்னை பிரமிக்க வைக்கிறது.

பிரமிப்பு என்பது பெரிய அர்த்தமுள்ள ஒரு சொல். கடைந்தெடுத்ததும் கடைநிலையானதுமான சுயநலமே தமிழ்நாட்டின் அரசியல் என்று வெறுப்பின் புதிய எல்லைகளுக்கு நாம் செல்லுகின்ற நேரத்தில், இந்த திட்டத்தினால் அரசியல்வாதிகளுக்கு என்ன கிடைக்கும் மக்களுக்கு என்ன கிடைக்கும் என்ற இரண்டு கேள்விகளின் பதில்களும் ஒன்று சேர்ந்து பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இத்திட்டம் அமுல் படுத்தியதில் அரசு காட்டிய உண்மையான அக்கரையும் தீவிரமும் அதிசயத்தக்கவை.

அடுத்ததாக அரசு செயல்படுத்திய புதிய வீராணம் திட்டம். பழைய வீராணம் திட்டத்தின் லாவன்யமும் அரசு பணமும் சக்தியும் வீணான அழகும் நாம் அறிந்ததுதான். ஆனால் புதிய வீராணம் திட்டம் முழுமையாக செயல்படுத்தப் பட்டு தண்ணீரும் வந்தே விட்டது. இதற்கு எதிர்கட்சிகள் போட்ட முட்டுக் கட்டைகளும் அப்பகுதி விவசாயப் பெருமக்களைத் தூண்டிவிட்டு செய்யப்பட்ட பிரச்சாரங்களும் தோற்றோடிப் போகுமளவிற்கு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டது.
இந்த ஆண்டு பருவ மழை அபரிமிதமாகத் தண்ணீரைக் கொட்டிவிட்டது. இதனாலேயே சென்னை மக்கள் தண்ணீரை மறந்து ஓட்டளித்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன். சென்னையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாமல் தமிழ்நாட்டின் வீராணம் பகுதியிலும் கர்நாடகத்திலும் நல்ல மழை பெய்துவிட்டால் வீராணம் தண்ணீர் சென்னைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். இயற்கையில் இவ்வாறு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். மேலும் வீராணத்தால் சென்னைக்கு தண்ணீர் தரமுடியாத நிலை ஏற்பட்டாலும் நிலத்தடி நீரையே நம்ப வேண்டிய நிலை ஏற்படும். மழைநீர் சேமிப்புத் திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தவிக்கும் வாய்களுக்கு சற்றேனும் தண்ணீர் கிடைக்க வழி இருக்கும்.

சென்னை மக்கள் இந்த தண்ணீர் பிரச்சனைக்காக மூன்று வழிகளில் அதிமுகவுக்கு வாக்களிக்க கடைமைப் பட்டிருக்கிறார்கள்.
1. எல்லாமே பொய்த்து கடைசி ஆதரவாக இருக்கவேண்டிய கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் மூலம் திமுக தரும் இடைஞ்சல்கள். இதனால் எதிரணிக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.
2. சென்னையின் ஏரிகள் வரண்டு ஆனால் வீராணத்தில் தண்ணீரிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த, ஒரு செயல்படுகின்ற திட்டத்தை பல்விதமான எதிர்ப்புகளுக்குமிடையில் செயல்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதற்காக வாக்களிக்க வேண்டும்.
3. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை உறுதியுடன் நிறைவேற்றியதற்காக வாக்களிக்கவேண்டும்.

அதிமுகவுக்கு வாக்களிக்க வேறு காரணங்களால் வாக்களிக்க விருப்பமில்லாவிட்டாலும் மேற்சொன்ன காரணங்களால் திமுகவுக்கு வாக்களிக்காமல் இருக்கவேண்டும். ஏனென்றால் இரண்டு அம்சங்களில் திமுக சென்னை மக்களுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது.
சென்னை மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

2 Comments:

At May 01, 2006 11:44 AM, Blogger மகேஸ் said...

அம்மாவிற்கு ராசியான பச்சை நிறத்தில் எழுதியுள்ளீர்கள். வெற்றி அம்மாவிற்கே!!

 
At May 01, 2006 11:50 AM, Blogger ஜெயக்குமார் said...

வீராணம் திட்டம், வீனானதிட்டம் என்றார் கலைஞர். ஏனென்றால் அதில் ஊழல்பண்ண அதிகவழிகள் உள்ளன என்பது கலைஞரின் அனுபவ உண்மை.
ஆனால் அதை வீரமுடன் செயல்படுத்தியது ஜெ-யின் திறமைதான் என்று சொல்லவேண்டும்.

தன் மகன் மேயராக ஒரு குடம் கிருஷ்ணா நீரைக்காட்டி, கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு கொண்டுவந்துவிட்டோம் என்று கலைஞரின் தன் வாக்குறுதியை நிறைவேற்றினார் கலைஞர்.

இதே நிலையைத்தான் இந்த தேர்தலில் கலைஞர் ஜெயித்தாலும் எடுப்பார்.

ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே கலர் டிவிக்களும், ஒரு சில மாதங்கள் மட்டுமே 2 ரூபாய்க்கு அரிசி கொடுத்துவிட்டு , "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று சொல்லி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிடுவார்.

 

Post a Comment

<< Home