Tuesday, May 16, 2006

தமிழ்த்தாய் - பாரதியாரின் பாடல்.

'தமிழ்த்தாய் என்று தலைப்பிடப் பட்டிருக்கும் பாரதியாரின் இந்தப் பாடலில்தான் 'மெல்லத் தமிழினிச் சாகும்...' என்ற பாடல்வரிகள் வருகின்றன. இந்தப் அடி தவறாக பலராலும் மேற்கோள் காட்டப் படுகிறது. இப்பாடலை முழுதும் படிக்காமலும் புரிந்து கொள்ளாமலும் எதிர்மறையான கருத்துகளுக்கு மேற்கோள் காட்டும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இப்பாடலை அனைவரும் படித்துப் பொருள் உணரும் பொருட்டு சில இடங்களில் பதம் பிரித்தும் சில சந்திகளை மாற்றியும் கொடுத்திருக்கிறேன்.

தமிழ்த்தாய் தமிழர்களை புதுப்புது அறிவுகளை தமிழுக்குக் கொண்டு வாருங்கள் என வேண்டுவதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு ஒரு துணைத் தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

"தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்"

ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
.. ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
.. மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
.. மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்:
ஆன்ற மொழிகளின் உள்ளே - உயர்
.. ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
.. காற்றையும் வானவெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் - பல
.. தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங்கள் பல தந்தார் - இந்தத்
.. தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரம் கெட்டவன் காலன் - தன்முன்
.. நேர்ந்த(து) அனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றும் தீதென்றும் பாரான் - முன்பு
.. நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடும் காட்டுவெள்ளம் போல் - வையச்
.. சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன்
.. காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
.. யாவும் அழிவுற்(று) இறந்தன கண்டீர்.

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
.. சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
.. ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்!- இனி
.. ஏதுசெய்வேன்? என(து) ஆருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்குக்
.. கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
.. பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்:
மெத்த வளருது மேற்கே - அந்த
.. மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை,

சொல்லவும் கூடுவதில்லை - அவை
.. சொல்லும் திறமை தமிழ்மொழிக்(கு) இல்லை!
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
.. மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்"

என்(று) அந்தப்பேதை உரைத்தான் - ஆ!
.. அந்த வசை எனக்(கு) எய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
.. செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - அன்று
.. சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
.. ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

* * * *
தமிழ்த்தாய் இவ்வாறு நம்மை 'வேண்டுவதாகக்' குறித்திருந்தாலும் நாம் கட்டளையாகவே எடுத்துக் கொள்ளலாம்.

4 Comments:

At May 16, 2006 12:07 PM, Blogger ஓகை said...

ச.சங்கர், கௌசிகனின் பதிவில் இட்டிருந்த பின்னூட்டமே என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. சங்கர் நன்றி.

நடராஜன்.

 
At May 16, 2006 1:27 PM, Anonymous johan-paris said...

பாரதியார் பாடல் என்றில்லை பல பல பழந்தமிழ்ப் பாடல்கள் ;படித்தவ்ர்களால் கூடத் தவறாகக் கையாளப்படுகிறது.
யோகன்
பாரிஸ்

 
At May 16, 2006 2:50 PM, Blogger குமரன் (Kumaran) said...

நன்று செய்தீர்கள். இதனை நான் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தேன். விரைவில் விளக்கங்களுடன் என் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' வலைப்பூவில் செய்கிறேன். தற்போது வேலை அதிகமாக இருப்பதால் சின்னச் சின்னப் பதிவுகள் இட்டுக் கொண்டுள்ளேன்.

 
At May 16, 2006 8:25 PM, Blogger ஓகை said...

உண்மைதான் ஜோஹன். ஆனால் இந்தப் பாடல் பாரதி ஏதோ ஆரூடம் சொல்லிவிட்டதுபோல் மேற்கோள் காட்டப் படுகிறது.

குமரன், உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டு வருகிறேன். மிக நல்ல சேவை. மகிழ்ச்சியாக இருக்கிறது.

நடராஜன்.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home