Friday, February 08, 2008

மடக்கு மகாத்மியம்

டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் 'டைம்ஸ் இன்று' என்று ஒரு தமிழ்ச் சிறப்பிதழ் வெளியிட்டிருப்பதையும் அதற்கான விமர்சனத்தையும் சுரேஷ்கண்ணன் மரத்தடியில் எழுதி இருந்தார். அவர் அவரது வலைப்பூவிலும் எழுதி இருக்கிறார். சுரேஷ்கண்ணன் புண்ணியத்தில் டைம்ஸ் நிறுவனத்திற்கு சில நூறு ரூபாய்கள் விறபனை கிடைத்திருக்கிறது. இப்பதிவு அவ்விதழைப் பற்றியதென்றாலும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றியெல்லாம் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவ்விதழை அமைத்திருக்கும் விதம் பற்றி எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.

ஒரு புத்தகத்தின் சிறப்பு அதன் உள்ளடக்கத்தில்தானே என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது. ஒரு புதிய மனிதரைக் கண்டு அவருடன் உள்ளடக்கம் சார்ந்த எதையும் செய்வதற்குமுன் அவர் உடைகளை ஆய்வது நமக்கெல்லாம் இயல்புதான். அதுவும் அவர் மாற்றுப்பாலைச் சேர்ந்திருந்தாலோ கேட்கவே வேண்டாம். இந்த உடை ஆராய்ச்சி எல்லைகளை விரித்து எல்லைகளைத் தாண்டி மனவெளிக்குள் நடக்கும், நடந்துகொண்டே இருக்கும். இதைப்போலவே என் இயல்பு என்னவென்றால் பருவ இதழ்களில் வரும் விளம்பரங்களை வெகுவாக ரசிப்பதும் உள்ளடக்கத்தைப் படிப்பதுமாக சேர்ந்தே இருக்கிறது. விளம்பரதாரர்களின் நோக்கம் என்னவோ விற்பனை என்றாலும் என்னளவில் அவர்கள் நோக்கம் கொஞ்ச கொஞ்சமே நிறைவேறும். அவர்கள் சொல்வதற்காக நான் எதையும் வாங்கிவிட மாட்டேன். ஆனால் அவர்கள் இலவசமாய் எனக்களிக்கும் ரசானுபவமோ ரொம்பவும் அதீதமானது, அலாதியானது. இத்துடன் இதழ்களின் விலைக் குறைப்புக்கும் அவர்கள் செய்யும் தொண்டு மகத்தானது.

நூறு ரூபாய் விலையுள்ள இந்த இதழின் தயாரிப்பு மடத்தனமாக இல்லை என்று சொல்வதற்கில்லை. இதன் அமைப்பில் பல கோளாருகாள் இருக்கின்றன. புத்தகத் தயாரிப்பின் எந்த நுணுக்கத்தையும் நான் அறியாதவன் ஆயினும் ஒரு பயன்பாட்டளனாய் என் கவனிப்புகளை இங்கு வைக்கிறேன். இவ்விடத்தில் அதே நூறு ரூபாய்க்கு ஆண்டுதோறும் வரும் ஆனந்தவிகடனின் தீபாவளி மலரின் அதி அற்புதமான தயாரிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 'டைம்ஸ் இன்று' எனத் தலைப்பிடப்பட்டு சிறப்பாசிரியர் சுஜாதா என்று குறித்திருக்கும் இவ்விதழின் முன்னட்டைப் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இருந்திருக்க வேண்டும். இதன் முன்னட்டையை விட பின்னட்டையில் வந்திருக்கும் சாஸ்தா நல்லெண்ணையின் விளம்பரம் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய இந்த ரசனையில் பலர் உடன்பட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நல்லெண்ணை விளம்பரத்தை சிறந்ததாக்கிய குற்றம் என்னுடையதன்று. அந்த முன்னட்டையினுடையது. இவ்விதழினுள்ளே ஏராளமான வண்ணப்படங்களும் ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன. அத்தனையையும் நவீன பானியைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை சிறப்பாக இருக்கின்றன. ஆனால் முன்னட்டையில் எனக்கு எந்த வசீகரமும் ஏற்படவில்லை.

இவ்விதழின் எழுத்துயரத் தேர்வுகளைப்(font size selection) பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். சில கதைகளும் கட்டுரைகளும் மிகச் சிறிய எழுத்துகளில் வந்திருக்கின்றன. நாஞ்சில்நாடனின் 'கோம்பை' சிறுகதையை மிகச்சிறிய எழுத்துகளில் பதித்திருக்கிறார்கள். இது தேவையே இல்லாமல் படிப்பவர்களை படுத்துவதாகும். இதழ் முழுதுமே எழுத்துயரம் சீராக இல்லை. இதை படிப்பதற்கு ஏதுவாக அமைத்திருக்க வேண்டாமா? சரியான எழுத்துயரத் தேர்வால் சில பக்கங்கள் கூடுவதால் அப்படி என்ன நட்டம் வந்துவிடப் போகிறது அவர்களுக்கு?

குறைகளாகவே சொல்லி வருவதால் இப்போதுசில நிறைகளைச் சொல்லிவிடுகிறேன். நல்ல காகிதத் தேர்வு, சிறப்பான வண்ண அச்சு, அசர வைக்கும் விளம்பரப்படங்களின் துல்லியம், கொழுத்தோ சோனியாகவோ இல்லாத சிக்கென்ற கணம், படங்களை ரசிக்க A4 காகித அளவு, இவற்றுடன் ஒரு பக்கக்குறிநூல்(book mark). இனி குறைகளைத் தொடரலாம். இந்த பக்கக்குறிநூலில் ஒரு விளம்பர அட்டையை முடிச்சிட்டு கொடுத்திருக்கிறார்கள். மீரா சிகைக்காய் பொடியின் விளம்பர அட்டை. டைம்ஸ்காரர்கள் கிடைத்த இடத்திலெல்லாம் நன்றாக விளம்பரம் செய்யட்டும். இதிலும் காசு பார்த்து மகராசர்களாய் இருக்கட்டும். ஆனால் இந்த அட்டை ஓர் அட்டையில்லை. சற்றே தடியான தாள்தான். இதில் துளையிட்டு வலுவாக முடிச்சிட்டிருக்கிறார்கள். இரண்டுமுறை புத்தகத்தை இடம் மாற்றியதில் அந்தத் துண்டுத்தாள் இடம் தெரியாமல் போய்விட்டது. மிஞ்சிய நூலோ முடிச்சுடன் அல்லாடுகின்றது. இங்கேயும் நம்மை படுத்தியெடுக்கிறார்கள். நீளம் குறைவான இந்த நூலினால் எந்த பயனும் இல்லை. புத்தக உயரத்தைவிட சற்று நீண்டிருந்தால்தானே அதை பக்கக்குறியாக பயன்படுத்த இயலும்? மாறாக அதை வெட்டி எறியும் வேலையை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த துண்டுத்தாளுக்குப் பதிலாக நெகிழியில்(plastic) கொடுத்திருக்கலாம் அல்லது நூலையாவது சற்று நீளமாகக் கொடுத்திருக்கலாம்.

இப்போதுதான் மிக முக்கியமான இடர்பாட்டை எழுதப் போகிறேன். இக்கட்டுரையை என்னை எழுதத் தூண்டியதான ஒரு பெரிய மடத்தனம் இவ்விதழில் இருக்கிறது. அதுதான் மடக்கு மடத்தனம். இவ்விதழின் முன்னட்டையை நீளமாக்கி இரண்டாக வெளிமடிப்பு மடித்து அமைத்திருக்கிறார்கள். மடிக்கப்பட்ட பக்க விளிம்பு நான் புத்தகத்தைப் பிடிக்கும் போதெல்லாம் என் இடது கையை உறுத்துகிறது. இங்கே சில மென்கரங்களை எண்ணிப் பார்க்கிறேன். மேலும் உறுத்துகிறது. பொதுவாக பயன்பாடு அதிகமாகும்போது புத்தகங்களின் முன்னட்டையின் வலப்புற மேல்முனையும் கீழ்முனையும் கொஞ்சமாக சுருண்டுகொள்ளும். எங்கேயாவது புத்தகங்கள் முதுகுபுறத்தில் சுருளுமோ? இங்கே என் புதிய புத்தகத்தில் முன்னட்டை மடக்கு முதுகுப்புறத்தில் சுருண்டு கண்ணையும் உறுத்துகிறது. ஏற்கெனவே சில ஆங்கில சிறப்பிதழ்களில் இந்த அவஸ்தையை நான் அனுபவித்திருக்கிறேன். இப்போது தமிழில் என்கிறபோது ஆயாசமாக இருக்கிறது. இந்த மடக்கினுள்ளே தமிழ்நாடு சுற்றுலத்துறையின் ஒரு நல்ல விளம்பரம் இருக்கிறது. இப்போது என்னிடம் இருக்கும் இதழ் முன்மடக்கு முதுகு மேல்நுனியும் முதுகு கீழ்நுனியும் சுருண்டு மடக்கு மட்டும் மின்விசிறிக் காற்றில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

இவர்கள் இந்த மடக்கு மகாத்மியத்தை முன்னட்டையோடு நிறுத்தவில்லை. உள்ளே பல விளம்பரங்களையும் மடக்கு பக்கங்களாகவே அமைத்திருக்கிறார்கள். சற்று வேறுபட்ட பக்கவாட்டுத் தோற்றமும் சீரற்ற பக்க அளவுகளுமாக காட்சியளிப்பதைத் தவிர உள்ளேயிருக்கும் மடக்குப் பக்கங்களினால் வேறு பிரச்சனைகள் இல்லை. என்ன, நீங்கள் மெனக்கெட்டுப் பிரித்துப் பார்க்கும்போது நல்ல விளம்பரமாக ஒரு சுகானுபவம் கிடைக்கலாம் அல்லது கடுப்பைக் கிளப்பும் வெற்றெழுத்து விளம்பரமும் கிட்டலாம்.

இது டைம்ஸ் காரர்களின் முதல் தமிழ் முயற்சியென நினைக்கிறேன். தமிழுக்கும் வந்ததற்காக அவர்களுக்கு நன்றி சொல்வோம்.

2 Comments:

At February 08, 2008 5:12 PM, Blogger ஜீவா (Jeeva Venkataraman) said...

இந்த இதழ் சுவையானதோ இல்லையோ தெரியவில்லை, உங்கள் எழுத்தில் சுவைக்கேதும் குறைவில்லை!

 
At February 09, 2008 8:48 AM, Blogger ஓகை said...

நன்றி, ஜீவா வெங்கடராமன்.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home