மகளிர் தின வாழ்த்து
இது என் ஐம்பதாவது பதிவு.
* * *
மகளிர் தின வாழ்த்து
==================
குப்பைத் தொட்டியே குடிகொண்ட தொட்டிலாய்
தப்பிதப் பிறப்பால் தவிக்கும் பெண்சிசுவே,
சேரியின் சகதியில் சிரித்து விளையாடி
காரிருள் மேனியாய் மாறிய பெண்மகவே,
பள்ளிகள் உனக்கே இல்லையென் றெண்ணி
சுள்ளிகள் பொறுக்கும் சுட்டிப் பெண்ணே,
பிஞ்சுவிரல் கொண்டு தீக்குச்சி அடுக்கும்
அஞ்சாம் வகுப்பில் அமரும் வயதின்
கெஞ்சும் கண்கள் கொஞ்சும் பெண்மகளே,
மச்சு வீட்டில் பத்துத் தேய்க்கும்
பத்தே பிராயப் பதுமைப் பெண்பிளாய்,
பட்டாம் பூச்சிபோல் பறந்திடும் பருவத்தில்
கட்டடம் கட்ட கல்தூக்கும் பெண்பிளாய்,
சூட்டுத் தார்சட்டி சாலைப் பணிகளில்
வாட்டும் பேதையாம் தாவணிப் பெண்ணே,
இரவில் இருளில் இன்னொரு நிழல்தர
மரமாய் மாறிய மாமட மடந்தையே,
திருமணம் கொய்த சிறகுகள் இழந்து
பறக்கவும் ஏலா பரிதாபப் பெண்ணே,
உனக்கொரு மகவாய் அதற்கே வாழ்வாய்
மனத்திடம் கொள்ளும் மனிதப் பாவாய்,
ஒளியறு பயணத்தில் ஒயில்ஒளித்த பெண்ணே,
ஓயாமல் உழைத்து ஒயில்ஒழிந்த பெண்ணே,
அச்சறு சக்கரம் ஆடி வீழ்ந்திடும்போல்
மக்கள் வளர்ந்ததும் அவர்வழிப் போக
இதுவரை வாழ்வினை இழந்திட்ட பெண்ணே,
நாட்களும் நீண்டு நலிந்து முதுமை
ஆட்கொண்ட பின்னர் அயலார் தயைக்கு
தாழ்ந்து விரிந்த கையுடை மூதாட்டி,
வாழ்த்தவும் எனக்கு வார்த்தை வரவிலை
மகளிரின் தினமாய் மார்ச்சு எட்டை!
இனிவரும் தலைமுறை இவ்வகை மகளிரை
கனவிலும் நனவிலும் காணுதல் இலமாய்
திண்ணமாய்ச் செய்வோம் தினமும் எண்ணுவோம்,
பெண்களின் கல்வியை பேணுவோம் நாமே!!
(நிலை மண்டில ஆசிரியப்பா)
9 Comments:
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
அருமையான கவிதை.... பெண்கல்வி பேண வேண்டிய கட்டாயத்தை அழகாக சொல்லியிருந்தீர்கள்
50க்கு வாழ்த்து(க்)கள்.
50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஓகை நடராஜன் அவர்களே! சீக்கிரமே சதமடிக்கவும் கூட!
எவ்விதம் சொல்லுவேன்
என்னுடை உணர்வினை
ஐம்பதாம் பதிவாய்
அருமகள் கல்விபேணி
அழகாய் உரைத்திட்ட
பாங்கினை என்சொல்வேன்!
ஐம்பது நூறாகப் பெருகிடவே
இன்பமாய் வாழ்த்துகிறேன்!
புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டதாம் பூனை!! உங்க நிலைமண்டில ஆசிரியப்பாவைத் தொடர்ந்து நம்ம வெண்பா பதிவைப் பாருங்க!!
ஓகை
அன்று ஆண்பிள்ளையை ஏன் அக்குந்தியிட்டாள் தண்ணீரில் ஓ..அது தவறுக்குப்பிறந்ததாலா? விதி வீதி வரை வந்தாலும் வீடு வரைவந்தாலும் குழந்தைகள் பட்டுத்தான் தீரவேண்டும் தவறுக்குத் தண்டணையை என பெரியவர்கள் சொல்வார்கள் அதுவும் அப்படித்தானோ?
ஓ மறந்து விட்டேன் கவிதை கண்ட சுகத்தில் தங்களது ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக் கூற.
நல்வாழ்த்துகள் ஓகை தங்களது ஐம்தாவது பதிவுக்கு
ஜி_Z, துளசியக்கா, இலவசக் கொத்தனார், எஸ்கே, என்னார் - அனவருக்கும் நன்றி.
50-ஆவது பதிவை பெண்கள் தின வாழ்த்தாக அமைத்ததற்கு வாழ்த்துக்கள்!
Post a Comment
<< Home