சென்னை சங்கமம்.
சென்னை சங்கமம்.
பல நாட்கள் நடந்த சென்னை சங்கமத்தில் திகர் நடேசன் பூங்காவில் (வழக்கமாக வலைப்பதிவர் சந்திப்பு நடக்குமே அதே இடம்தான்) நடந்த ஒரு நிகழச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருதேன். 23ம் தேதி வெள்ளிக்கிழமை. நான் சென்ற போது மாலை ஆறு மணி இருக்கும்.
கிராமிய இசையும் அதற்கேற்ற ஆடலுடனும் கூடிய சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை. செண்டை தாள ஒலி படு அமர்க்களமாக இருந்தது. அம்மாதிரி நிகழ்ச்சிகள் சென்னை மக்களுக்கு மிகவும் புதிது என்றே நினைக்கிறேன். முந்தைய நாட்களில் கிராமங்களில் சிறு நகரங்களில் கோவில் திருவிழா நேரங்களிலும் பெருந்தனக்காரர்களின் வீட்டு வைபவங்களிலும் இவை அதிகமாக நடத்தப்படும். இப்போது மிகவும் அருகி விட்டது. இவற்றை மீட்டெடுத்து நகரங்களிலும் பரப்பவேண்டும் என்ற நோக்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்த கிராமிய நிகழ்ச்சிக்குப் பிறகு சௌமியா அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது கிராமிய இசையை ரசித்த மக்களில் பெரும்பான்மையினர் கலைந்து செல்வார்கள் என்று நினைத்தேன். நான் நினத்ததுபோல் நடக்கவில்லை. கூட்டம் அப்படியே இருந்தது. ஏழு மணியிலிருந்து எட்டரை மணிவரை சௌமியா பாடினார். அனைத்தும் தமிழ்ப்பாடல்கள். சில பாரதியார் பாடல்கள். இந்நிகழ்ச்சிக்காகவே சிறப்பாக தயாரித்து வந்திருந்த ஒரு பல்லவியை ராகம் தானம் பல்லவியாகப் பாடினார்.
நான் அறிந்தவரை சௌமியா செய்தது கர்நாடக இசை மரபுக்கு மிகவும் புதியது. "மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே" என்ற பல்லவியை மோகனம், வசந்தா மற்றும் தர்பார் ராகமாளிகையாகப் பாடினார். ராகமும் தானமும் பல்லவியும் பல்லவிக்குப் பிறகு பாடிய சுரவரிசைகளும் இவ்வாறு ராக மாளிகையாகவே அமைத்து பாடினார். மிருதங்கம் வாசித்தவர் மிக அருமையாக வாசித்தார். இந்த ராகம் தானம் பல்லவி சுமார் முக்கால் மணி நேரம் பாடப்பட்டது.
வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு,
வந்தே மாதரம், வந்தேமாதரம், வந்தே மாதரம்!
என்று பாடி நிகழ்ச்சியை முடித்தார்.
மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே ஒரு இனிமையான மாலைப் பொழுது. வரவேற்கத்தக்க இந்த முயற்சி வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும். அடுத்த முறை பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
10 Comments:
நல்ல நிகழ்ச்சியா இருந்துருக்கே!!!!!
கொடுத்துவைத்தவர் நீங்கள்.
வாங்க துளசியக்கா. ஒரே ஒரு நிகழ்சீக்குத்தான் போக முடிந்தது. சென்னையிலேயே இருந்தாலும் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
சென்னைக்காரங்க எல்லாம் கொடுத்து வெச்சவங்கதான் போங்க.
//"மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே" என்ற பல்லவியை மோகனம், வசந்தா மற்றும் தர்பார் ராகமாளிகையாகப் பாடினார்.//
என்னதான் ஸ்வரங்களை விஸ்தாரமாப் பாடி ஒரு ஒரு செங்கலா வெச்சு கட்டடம் கட்டுற மாதிரி ராகத்தை வெளி கொண்டு வந்தாலும் அது ராகமாலிகைதானே!! (தட்டெழுத்துப் பிழைன்னு தெரியும். ராகமாலிகை பத்தித் தெரியாதவங்க தப்பா படிச்சு புரிஞ்சுக்கக்கூடாதேன்னுதான் சொன்னேன்.)
//நான் அறிந்தவரை சௌமியா செய்தது கர்நாடக இசை மரபுக்கு மிகவும் புதியது//
இடத்துக்கு ஏத்தா மாதிரி ஒரு பல்லவி பாடினதைச் சொல்லறீங்களா? நல்ல முயற்சி. ஆனா பலரும் முன்னாடி செஞ்சு இருக்கறதுதான்னு நினைக்கறேன். சிமுலேஷன், திராச எல்லாம் வந்து சொன்னாத் தெரிஞ்சுக்கலாம்.
ராகமாளிகை என்று நான் எழுதியது தட்டச்சுப் பிழை இல்லை. பிழை. ராகமாலிகை என்பது சரிதான். ஆனால் ராகமாளிகை என்றும் சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.
நான் புதுமை என்று குறிப்பிட்டது ராகமாலிகையில் ராகம் தானம் பல்லவி. இது போல் நான் கேள்விப் பட்டதுகூட இல்லை.
ஒரு வரியில் மூன்று ராகங்கள் என்பதும் புதுமைதான். 'மோகன வேளையில்' என்பதை மோகன ராகத்திலும் 'வசந்த காலத்திலே' என்பதை வசந்தா ராகத்திலும் 'நடேசன் தர்பாரிலே' என்பதை தர்பாரிலும் ஒரே வரியில் மூன்று ராகங்களில் திரும்பத் திரும்பப் பாடி அசத்திவிட்டார் சௌமியா.
நடராஜன் - இதுக்கெல்லாம் கூப்பிடாம விட்டீங்களே! ஒண்ணே ஒண்ணுன்னாலும், உருப்படியான சங்கதி. துளசி அக்கா சொல்ற மாதிரி "மாலிகை" சரி. நான் நிறைய கேட்டிருக்கேன். போன சீசனிலேயே. ஆனால், அன்றைய தினதுக்குன்னு புதுசா பாடினது, நல்ல முயற்சி.
ஓகை, நம்ம விக்கி பசங்க பதிவு எல்லாம் படிக்கிறது இல்லைன்னு நல்லாத் தெரியுது! இந்த பதிவுக்கு வந்து கருத்தெல்லாம் சொன்னீங்க, மறந்து போச்சா?
பொதுவா ரா.த.ப. பாடும் பொழுது பல்லவி ராகமாலிகையாத்தான் இருக்கும். பல்லவி ஓரிரண்டு வரிகள்தான் இருக்கும். சில சமயங்களில் தானம் ராகமாலிகையாகக் கூடக் கேட்டது உண்டு. அதனால அசர வேண்டாம்.
//ஒரு வரியில் மூன்று ராகங்கள் என்பதும் புதுமைதான்.//
ஒரு ஒரு வார்த்தையையும் ஒரு ஒரு ராகத்தில் பாடற ஜாம்பவான்கள் எல்லாம் இருந்தாங்க, இருக்காங்க. அதை எல்லாம் கேட்கறதே சுகானுபவம். ஆனா அதையே தனது மேதாவித்தனத்தைப் பீத்திக்கறதா சொல்லறவங்களும் உண்டு! ;-)
//துளசி அக்கா சொல்ற மாதிரி "மாலிகை" சரி. //
JC, மாணவன் சரியா பதில் சொன்னா ஆசிரியைக்குத்தான் பாராட்டுன்னு முடிவு பண்ணிட்டீங்க போல! அப்படியே இருக்கட்டுமே. பேர் எனக்கா இருந்தா என்ன, எங்க டீச்சருக்கா இருந்தா என்ன!! :))
மரபூராரே, அன்று திடீரென நேரம் கிடைத்தது. உங்கள் நினைவு வரவில்லை. இதற்காக என்னை அழைக்க மறக்க வேண்டாம்.
கொத்தனாருக்கு சேர வேண்டிய பாராட்டை அவரரஅசிரியரிடம் சேர்த்துவிட்டீர்கள்.
இகொ, ராகமாலிகை ரா-தா-ப பற்றி அறிந்தோரிடம் கேட்டு பதில் சொல்கிறேன்.
ஓகை, சுட்டி எல்லாம் குடுத்து இருக்கேன், நீங்களும் வந்திருக்கீங்க. இப்போ நான் என்ன கேள்வி கேட்டேன்னு நீங்க பதில் சொல்லக் கிளம்பறீங்க. நம்ம விக்கி பதிவைப் பாருங்க போதும்.
Post a Comment
<< Home