Wednesday, August 15, 2007

கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!

சுதந்திர தின சிறப்புச் சிறுகதை!

தெக்கிக்காட்டான், வவ்வால், செல்வன் மூவருக்கும் இந்தக் கதையை சமர்பிக்கிறேன்.

கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!

செல்லமுத்து தன் விருப்ப நடிகரின் படத்தை மூன்றாவது முறையாகப் பார்த்துவிட்டு மாலைக்காட்சி முடிந்து வெளியே வந்தான். மணி ஒன்பது ஆகியிருந்தது. ஊருக்குப் போக பத்து மணிக்கு கடைசி பஸ். பையில் இருபத்தி ஆறு ரூபாயும் சொச்சமும் இருந்தது. ஊருக்குப் போக ஆறு ரூபாய் போய்விட்டல் மீதி இருபத்தி ரூபாய் சொச்சம் இருக்கும். இப்போது அவனது மொத்த சொத்தே அவ்வளவுதான். கும்பகோணம் பஸ் நிலையம் பக்கமாக வந்தான். ஊருக்குப் போய் என்ன செய்யப் போகிறான்? அம்மா வைத்திருக்கும் மோர் சொற்றை தின்றுவிட்டு, திண்ணையில் படுத்துத் தூங்கிவிட்டு காலையில் எழ வேண்டும். அப்பறம் கார்காரர் வயல் பம்புசெட்டில் குளித்துவிட்டு கொஞ்சம் பழையது சாப்பிட்டுவிட்டால் அவ்வளவுதான். வேறு வேலை கிடையாது. யாராவது எங்காவது கூப்பிட்டால்தான் உண்டு. கார்காரர் வயலுக்கு அடுத்த திங்கட் கிழமைதான் போகவேண்டும். அப்பறம் தான் வேறு காசை கண்ணால் பார்க்க முடியும்.

பஸ் நிலையத்துக்கு போகும் வழியில் புதிதாக ஒரு இட்லிகடை வந்திருந்தது. இட்லிப்பானையில் ஆவி பறந்து வந்துகொண்டிருந்தது. ஒருத்தன் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தான். 4 இட்லி ரூ.ஐந்து என்று ஒரு பலகையில் சாக் பீசால் எழுதியிருந்தது அவனை ஈர்த்தது. கணக்கு போட்டு பார்த்தான். 6 இட்லி சாப்பிட்டுவிட்டு இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு காலையில் முதல் பஸ்ஸுக்கு போய்விடலாமென்று முடிவு செய்தான். உள்ளே போய் ஒரு நோட்டம் விட்டபோது இரண்டாவது பெஞ்சில் வாசு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாசு இவனோடு பத்தாவது வரை படித்து இவனோடேயே ஃபெயிலானவன். அதன்பிறகு கொல்லத்து வேலை செய்யப்ப் போகிறேன் என்று சொல்லி போனவனை இப்போதுதான் நாலு வருஷம் கழித்து பார்க்கிறான். பக்கத்தில் போய் அமர்ந்தான்.

- லே வாசு, எப்பிர்ரா இருக்க?
- அட செல்லமுத்து, இங்க எங்கடா வந்த? ஊர விட்டு நவுர மாட்டியே, என்னா தலைவர் படமா?
- வேற எதுக்குடா நான் வரப்போறேன்?
- என்னடா செல்லா செய்யிற?
- கார்காரர் வயல்லதான் வேலை.
- அப்பாவுக்கு எங்கடா வேலை?
- ரெண்டு வருஷத்துக்கு முன்னால தவறிப் போய்ட்டார்டா.
- அடடா, செல்லா, கடசி பஸ் போயிருக்குமேடா?
- பத்து மணிக்கு ஒன்னு உண்டுடா, ஆனா ரெண்டாவுது ஆட்டம் இன்னோரு படம் பாத்துட்டு காலைல தாண்டா போறென்.
- எங்கடா படுக்க போறே?
- பஸ் ஸ்டாண்டுல படுத்துட்டு மொத ப்ஸ்ஸுல போயிருவேன்.
- நாளக்கி வேல இருக்கா அதான் கருக்கல்ல போறியா?
- அடுத்த வாரந்தாண்டா வேல. அதுவரைக்கும் சும்மாதான் இருப்பேன். நீ என்னாடா செய்யிற?
- ஒரு காண்ட்ராய்ட்டர்கிட்ட வேல செய்யிறண்டா. லே, சித்தாள் வேலைக்கு நாளைக்கு மட்டும் வர்ரியாடா? எங்க காண்ட்ராய்ட்டருக்கு கொஞ்சாம் ஆளு கொறயுதுன்னாரு. கொறைஞ்சது அம்பது ரூவா வாங்கித் தாரென்.
- அம்மா தேடுமேடா!
- கார்காரர் வூட்டுக்கு போன் போட்டு சொல்லு.
- நம்ம்பரெல்லாம் தெரியாதுடா
- நான் புடிச்சி தாரென். வா. நானும் படத்துக்கு வாரேன். என் கொட்டாயிலேயே படுத்துக்க.

இருபத்தி ஆறு ரூபாய் சொச்சம் அப்படியே இருந்தது. சாப்பாட்டுக்கும் சினிமாவுக்கும் வாசுவே பார்த்துக் கொண்டான். மறுநாள் மாலை அது நூறு ரூபாய் மேல் ஆனது. அந்த வாரம் பூராவும் சித்தாள் வேலை இருந்தது. சனிக்கிழமை மாலை செல்லமுத்துவிடம் ஐநூறு ரூபாய்க்கு பக்கம் பணம் இருந்தது. சனிக்கிழமை டாஸ்மார்க்கில் சரக்கடித்துவிட்டு வாசு கொட்டகையிலேயே படுத்து உருண்டான் செல்லமுத்து. காலையில் எழுந்தவுடன் ஊர் ஞாபகம் பலமாக பிடித்துக் கொண்டுவிட்டது. திடீரென பணம் சம்பாதிப்பது எளிதாகத் தோன்றியது அவனுக்கு. அவ்வளவு பணம் அவன் மொத்தமாக ஒரு வாரத்துக்குள்ளாகச் சம்பாதித்ததில்லை. அடுத்த வாரமும் ஊரில் வேலை இல்லை என்றால் வாசு கும்பகோணம் வந்துவிடச் சொன்னான். 'பார்ப்போம், கார்காரரு மேல கீல பாத்தார்னா பேசாமா வாசுகிட்ட வந்துட வேண்டியதுதான்'. செல்லமுத்து இப்போது ஆளே கொஞ்சம் பூரிப்பாகத் தெரிந்தான். 'அம்மாவும் லச்சுமியும் அசந்துபோவப் போவுதுங்க'. 'ஆத்துல குளிச்சிட்டு பத்து மணி பஸ்ஸை பிடிக்கலாமெ'ன்று முடிவுசெய்தான்.

ஒரு வாரமாக போட்டிருந்த சட்டையையும் கைலியையும் ஆற்றில் தோண்டியிருந்த ஊற்றில் ஒரு கட்டி துனி சோப் வாங்கித் துவைத்து படித்துறையில் காயவைத்தான். குளித்து முடித்து லேசாகக் காய்ந்திருந்த துனிகளை உடுத்திக் கொண்டு படித்துறையை விட்டு வெளியே வந்தான். சிலு சிலு வெனக் காற்று புது உடம்பில் பாதி ஈர உடைகளினூடே பட்டு ரொம்பவும் புத்துணர்வாக இருந்தான். பஸ் நிலையத்துக்கு போகும் வழியில் ஒரு பெரிய சைவ உணவகத்தின் வாசலில் நின்றான். வெங்காய சாம்பாரின் மணம் மூக்கைத் துளைத்து அவனை உள்ளே இழுத்தது. ஊரில் சட்டியில் இருக்கும் பழைய சாதத்தை நினைத்தான். உடனே உள்ளே நுழைந்தான். 'பதினொன்ர பஸ்ஸுக்கு போவுலாம்'.

-ஒரு ரோஸ்ட் அப்பறம் ஒரு ரவா.

தோசைக்கு சொல்லிவிட்டு சுற்றி ஒரு நோட்டம் விட்டான். ஏசி அறையிலிந்து வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தான். கிருஷ்ணமூர்த்தி செல்லமுத்துவின் பெரியப்பா பையன்.

-மூர்த்திண்ணே..

சற்று உரக்கக் கூப்பிட்டவன் அவன் இருந்த தோரணையைப் பார்த்து கூப்பிட்டிருக்க வேண்டாமோ எனத் தயங்கினான். ஆனால் கிருஷ்ணமூர்த்திக்குக் கேட்டுவிட்டது. இவனருகே வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

- சின்னம்மா, லச்சுமியெல்லாம் எப்பிர்ரா இருக்காங்க?
- நல்லா இருக்காங்கண்ணே.
- எதுக்குடா கும்மோணம் வந்த? ஊர வுட்டு நவுர மாட்டியே!
- தலைவர் படம் பாக்குலாமுன்னு திங்க கிலமை வந்தேன். இங்க என் பெரண்டு காண்ட்ராய்ட்டர்கிட்ட வேல இருக்குன்னான். ஒரு வாரம் செஞ்சுட்டு இப்ப ஊருக்கு போய்கிட்டு இருக்கேண்ணே. பதினொன்ர ப்ஸ்ஸ¤க்கு போறன்.
- ஏண்டா சித்தாள் வேலையா செய்த?
- ஆமாண்ணே.
- எவளவுடா சம்பாரிச்ச?
- ஐநூறு கெடச்சுதுண்ணே.
- அடி சக்க, ஒரு வாரத்துல ஐநூறா?
- ஆமாண்ணே, இந்த வேல தேவலாம்ணே. ஏண்ணே, காரா வாங்கியிருக்கீங்க?
- ஆமாண்டா. யார்ரா சொன்னா?
- அம்மா சொல்லிச்சி.
- மாமன் ஊட்ட்ல எல்லாம் எப்பீர்ரா இருக்காங்க?
- அதான் செத்தா வாழ்ந்தா இல்லன்னு ஆயிருச்சேண்ணே. அப்பறம் ஏண்ணே எங்கிட்ட கேக்குறீங்க?
- மூனாம் வூட்ல இருக்கீங்க, அதாண்டா கேக்குறேன்.
- நீங்க பொண்ணு கட்ட போற வூடு. அந்த அக்கறையில கேக்குறீங்க. எனக்கு ஒன்னும் தெரியாதுண்ணே.
- ஊர்ல என்னடா பண்ணுற? கார்காரரு வயல்லதான் வேலையா? என்னா தாராரு?
- மாசம் ஆயிரம் தராரு. கொஞ்சம் நெல்லு தருவாரு. பொங்கல் தீவாலிக்கி எதுனாச்சும் கொடுப்பாரு.
- எப்பீர்ரா காசு சேத்து லச்சுமிய கரையேத்த போற?
- சேர வேண்டிய ஒன்ர ஏக்கரத் தான் மாமங்காரன் கேஸ் போட்டு புடுங்கிட்டான். நீங்க பொண்ணு எடுக்கப் போற வூட்டச் சொல்றனேன்னு வித்தியாசமா நெனைக்காதீங்கண்ணே. உங்களுக்கே தெரியுமில்ல.....

- செல்லமுத்து காப்பி வாங்கிக்கடா.
- வேணாண்ணே.
- லே பாதி காப்பி குடி...... ஒரு காப்பி குடுப்பா. பில்ல ஏங்கிட்ட குடு.
- அண்ணே நான் தர்ர்ண்ணே.
- நீ குடுக்குறப்ப மவராசனா குடு. இப்ப நான் தார்ரென். ஏண்டா செல்லமுத்து ராத்திரி கடசி ப்ஸ்ஸுல ஊருக்கு போடா. எனக்கு முக்கியமா ஒரு வேல இருக்கு. மெட்ராசுலேர்ந்து ஒருத்தர் வர்ராரு. ராத்திரி ட்ரெய்ன்ல அவரு கெளம்புராரு. கொஞ்சம் கூடமாட இர்ரா.
- அம்மா தேடும்ணே. ஊரவுட்டு வந்து ஒருவாரம் ஆச்சி.
- மாமா வூட்டுக்கு போன் போட்டு நான் சொல்றண்டா. நடுவூட்டு பொடியன் போய் சொல்லிருவான். என் கூட வா. சாமிமல போகனும்.

கிருஷ்ணமூர்த்தி தன் கைபேசியில் யாரிடமோ பேசி அவன் அம்மாவுக்கு தகவல் சொல்லச் சொன்னான். இருவரும் சுவாமிமலை சென்று அங்கு ஓரிடத்தில் ஒரு புத்தம்புது ஐம்பொன் சிலை வாங்கினார்கள். அழகாக கள்ளிப் பெட்டியில் வைத்து மூடி ஆனி அடித்து டிக்கியில் ஏற்றிவைத்தான் செல்லமுத்து. வரும்போது கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.

- அந்த ஒன்ர ஏக்கர் நெலம் கெடைச்சிருந்தா என்னடா செய்வ?
- அது இருந்தா நாங்க ஏண்ணே இப்பிடி இருக்கோம்?
- லே, அதுலேர்ந்து எவளவுடா வந்துடும்?
- ஒருத்தருக்கு கைகட்டி நிக்க வேணாண்ணே. யார் கையும் எதிர்பாக்க வேணாம்.
- அதெல்லாம் சரிடா. எவளவு வந்துடும், அதச் சொல்லு.
- எவ்ளவு வந்தா என்னாண்ணே. நம்ம வய. நம்ம ஒழப்பு. நம்ம சோறு.
- சித்தாளு வேல செஞ்சு வாரம் ஐநூறு கெடச்சுதே, அத அம்பதால பெருக்கு. வருசத்துக்கு இருவத்தி அஞ்சாயரம் ரூவா. அது வயல்ல கெடைக்குமாடா?
- நல்லா பாடுபட்டா கெடைக்கும்ணே.
- ஆத்துல தண்ணி வர்லன்னா, வயல்ல பூச்சிபொட்டு புடிச்சுதுன்னா, மழையே பேயலன்னாலும் இல்ல கொட்டுகொட்டுன்னு கொட்டிச்சின்னாலும் நீ சொல்றது நடக்குமாடா?
- சில வருசம் நட்டம் வருண்ணே
- டேய் சில வருசம் இல்லடா. பத்து வருசத்துல ஒரு வருசம் ரெண்டு வருசந்தாண்டா லாவம் வரும். அப்பிடி வர்ர லாவம் கொஞ்சம். ஆனா நட்டம் வந்தா பெருசா வரும்டா. அப்பறம் ஒரு வருசத்துல எல்லாருக்கும் நல்லா விளஞ்சா அந்த வருசம் நல்ல வெல கெடைக்காதுடா.
- அண்ணே, நீங்க பதினஞ்சி ஏக்கர் வச்சிருக்கீங்க உங்களூக்கு எப்புடிண்ணே லாவம் வருது? நட்டம் வராம இருக்கு?
- இப்பதாண்டா நீ பாயிண்டுக்கு வர்ர செல்லமுத்து. லாவ நட்டக் கணக்கு இத்தன ஏக்கருக்கு இத்தனன்னு தோதா மாறிக்கும்டா. அப்பறம் நான் விவசாயியா இருந்து வியாபாரியா மாறிட்டேன். என்னோட லாவநட்டக் கணக்கே வேற.
- புரியலேண்ணே.
- சித்தாளு வேல செஞ்சியே அத வேலைன்னு நெனைக்காம யாவாரமா யோசிச்சிப் பாரு. ஒன்னோட உழைப்ப கொடுத்து அதுக்கு வெல கிடைச்சிருக்குன்னு நெனைச்சுப் பாரு. கூலின்னு நெனைக்காதே. கார்காரருக்கு நீ என்னா தர்ர, அவுரு உனக்கு என்னா தர்ராரு, யோசிச்சுப் பாரு.
- அவரு என்ன்ண்ணே செய்வாரு..........
- லே செல்லமுத்து, அவருக்காக நீ யோசிக்காத. ஒனக்காக யோசிச்சி என்னா பதில் வருதுன்னு சொல்லு.

செல்லமுத்து குழம்பிப் போனான். வாரம் ஐநூறு ரூபாயும் மாதம் ஆயிரம் ரூவாயும் நிச்சயம் ஒன்றல்ல. மாமனிடமிருந்து போனல் போகுதுன்னு அந்த ஒன்னரை ஏக்கர் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி வாங்கிக் கொடுத்தாலும் நிலைமை எப்படி மேம்பட்டதாக இருக்கும் என்று புரியவில்லை. நம்முடைய நிலம், நம் உழைப்பு, நமது சோறு என்கிற எண்ணம் தரும் திருப்தியை பணமாக மாற்றினால் ஒன்றும் தேறுவதாக இல்லை. கிருஷ்ணமூர்த்தியை சின்ன வயசிலேர்ந்து தெரியும் நல்ல மனசுக்க் காரன். பங்காளி மாதிரியே நடந்த்துக்க மாட்டான். நிச்சமாக மனசைக் கலைப்பதற்காக சொல்லவில்லை என்ற நம்பிக்கை செல்லமுத்துவுக்கு இருந்தது. பத்து வயதில் பம்பரம் விடச் சொல்லிகொடுத்த கிருஷ்ணமூர்த்தி இப்போது பணம் செய்யச் சொல்லிக் கொடுக்கிறான்.

ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ஒரு பெரிய ஓட்டலில் அறை எடுத்திருந்தான் கிருஷ்ணமூர்த்தி. மெட்ராஸ் காரர் வருவதற்காக காத்திருந்தார்கள். அடிக்கடி கிருஷ்ணமூர்த்தி தன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். நன்றாக மதிய உணவு சாப்பட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டான் செல்லமுத்து. மெட்ராஸ்காரர் வந்துவிட்டர் போலிருக்கிறது. பேச்சரவத்தில் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டான்.

- தீபக் சார், அடுத்த ஆர்டர் எப்ப தர்ரீங்க? நெறைய குடுத்தீங்கன்னா தொழிலையே மாத்திடுவேன்.
- ஆமாம் கிருஷ்ணமூர்த்தி. நூறு கோடி பேருக்கு சாப்பாடு போட முப்பது கோடிப் பேர் விவசாயத்துல இருந்தா போரும்னு எனக்குத் தோனுது. இப்ப எழுபது கோடிப்பேர் இருக்கீங்களே!
- ஆமாம் ப்ஃபே சாப்பாடு மாதிரி எவளவு இருந்தாலும் வயிறு கொள்ற அளவுக்குத்தான சாப்பிட முடியும்? ஆனா தீபக் சார், ரொம்பப் பேருக்கு வேற தொழிலே தெரியாதே?
- அங்க கூட்டம் ஜாஸ்தி. அதுனாலத் தான் அங்க லாபம் கம்மியா இருக்கு. டெக்னாலஜி முன்னேற முன்னேற நெலம இன்னும் மோசமாத் தான் போகும். அதான் கணக்க பாக்கணும். உழுதவன் கணக்குப் பாத்து எத்தன உழக்கு மிஞ்சுதுன்னு பாக்கணும். நீங்கதான் அதுல கில்லாடியாச்சே ! இந்தப் பையன் யாரு கிருஷ்ணமூர்த்தி?
- அது என் சித்தப்பா பையன். அவனுக்கும் தொழில் விவசாயம்தான்.. போனவாரம் வரைக்கும்.
- இந்த வாரம் வேற வேலையா, வெரி குட். தம்பி நீ பொழைச்சுகுவ. உங்க அண்ணன் சொல்றதக் கேளு.
- செல்லமுத்து, அவுரு என்னா புது வேலைன்னு கூட கேக்குல பாரு.

செல்லமுத்து தீவிர சிந்தனை வயப்பட்டான். ரயிலடியில் அவரை வண்டியேற்றிவிட்டு கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.
- இந்தா செல்லமுத்து நூறு ரூவா வச்சுக்க. அம்மா லச்சுமிக்கு எதுனாச்சும் வாங்கிட்டுப்
போ. பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுமா?
- அண்ணே, மூனாம் வூட்டுக்கு போன் போட்டு அந்தப் பொடியன கூப்புடுங்கண்ணே.
- ஏண்டா.
- நான் வாசுவைப் பாக்க போறேண்ணே
- அடி சக்க. மாறிட்ட போலருக்கு. லே, மேல மேலப் போறதுக்கு கும்மோணத்து வுட்டு வெளியப் போய் பாக்கணுண்டா. நீ இப்ப வாசுக்கிட்ட போ. புதன்கிழமை என்ன வந்து பாரு.
-சரிண்ணே

செல்லமுத்து அதன் பிறகு லச்சுமி கல்யாணத்துக்கு கார்காரர் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கத்தான் தன் ஊருக்குப் போனான். தன் சொந்த வாடகைக் காரில் போனான். பொகும் போதும் வரும்போதும் தன் மாமா வீட்டைக் கடக்கும் போது தானாக அவன் கை ஹாரன் ஒலி எழுப்பியது. அது சொன்னது,

-ஜே கிருஷ்ணமூர்த்தி மாதிரி எனக்கு போதனை பண்ணின இந்த வீட்டு மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!

* * * * * * * * * * * * * *

ஓகை நடராஜன்
15-08-2007
*****************

27 Comments:

At August 15, 2007 12:24 PM, Blogger வவ்வால் said...

ஓகை சார்,

விவசாயம் குறித்து வலைப்பதிவில் பேசுவதையே பெரிய விஷயமாக நீங்கள் பாராட்டுவதை எப்படி எடுத்துகொள்வது என தெரியவில்லை.உண்மையில் அது பாராட்டு தானா? எப்படி ஆயினும் நன்றிகள்!

நீங்கள் சொன்னது போல பலர் விவசாயம் சார்ந்த வேலை செய்வோர் நகரத்திற்கு வேறு வேலை தேடி செல்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அவர்கள் அவ்வாறு வேலை செய்து சொந்த காரில் ஊருக்கு வருவதாக சொல்வது தான் இடிக்கிறது.

நான் ஏதோ கட்டுக்கதையாக சொல்லவில்லை, இப்பொழுதும் நான் நேரடியாக பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.

சென்னையில் கே.கே நகர் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் இப்படி கட்டுமான வேலை , கேபில் போடும் வேலை , சாலைப்பணிகளுக்கு என சொந்த ஊரை விட்டு புலம்பெயர்ந்த தொழிலாலர்களை காணலாம். அவர்கள் சாலை ஓரங்களில் தான் வசிக்கிறார்கள். யாரும் நீங்கள் சொன்ன சுபிக்ஷம் அடையவில்லை.

 
At August 15, 2007 5:52 PM, Blogger Thekkikattan|தெகா said...

ஓகை,

முழுதும் படித்தேன். இதிலிருந்து நான் புரிந்து கொண்டது நலிவடைந்த சொல்லமுத்துக்கள் இன்றைய உலகில் விவசாய வேலைகள் பார்த்து குறைந்த பணம் ஈட்டுவதை விட, நகரங்களுக்கு சென்று அங்கு கிடைக்கும் வேலைகளைப் பார்த்து பணம் அதிகமாக ஈட்டுவதுதான் உசிதம்; அது தான் இன்றைய நடைமுறைக்கு உகந்தது என்பதனைப் போல ஒரு பிம்பத்தை தருகிறது. அப்படியா இது?

ஜே. கே இங்கு வந்தது பெயர் ஒற்றுமையால அல்லது இதன் மூலம் வேறு எதாவது சொல்ல வாறீங்களா, ஓகை :-) ?

 
At August 15, 2007 7:27 PM, Blogger ஓகை said...

//விவசாயம் குறித்து வலைப்பதிவில் பேசுவதையே பெரிய விஷயமாக நீங்கள் பாராட்டுவதை எப்படி எடுத்துகொள்வது என தெரியவில்லை.உண்மையில் அது பாராட்டு தானா? //

பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி நீங்கள் பேசுவதையே பாராட்டுகிறேன். மனமுவந்த பாராட்டுகள்

//நீங்கள் சொன்னது போல பலர் விவசாயம் சார்ந்த வேலை செய்வோர் நகரத்திற்கு வேறு வேலை தேடி செல்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அவர்கள் அவ்வாறு வேலை செய்து சொந்த காரில் ஊருக்கு வருவதாக சொல்வது தான் இடிக்கிறது.//

கதை நடக்கும் களம் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தின் மையப் பகுதி. அங்கேயே நான் கதையில் சொன்ன கணக்குகள் படிதான் வாழ்க்கை நடக்கிறது. இவை நான் கண்டும் கேட்டும் உணர்ந்ததுமான விஷயங்களே!

காரில் வரும் அளவுக்கு உயர்வது விவசாயம் தொடர்பானது அல்ல. தன் முனைப்பும் சரியான வழிகாட்டுதலும் உடைய ஒருவன் வாழ்வில் முன்னேறுவதான சாத்தியக்கூறுதான் அது. விவசாயம் சார்ந்து இருக்கும் வரை அதன் சாத்தியக்கூறு இன்றைய நிலையில் கிட்டத்தட்ட இல்லை என்பதும் மேலும் நலிவடைவதற்கே அங்கே சத்தியகூறுகள் அதிகம் என்பதையுமே என் கருத்தாகக் கூறியிருக்கிறேன்..


//அவர்கள் சாலை ஓரங்களில் தான் வசிக்கிறார்கள். யாரும் நீங்கள் சொன்ன சுபிக்ஷம் அடையவில்லை.//

ஆனால் சிலராவது மீண்டும் விவசாயம் சார்ந்த தொழில்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்று கூற முடியுமா?

 
At August 15, 2007 7:35 PM, Blogger ஓகை said...

// இன்றைய உலகில் விவசாய வேலைகள் பார்த்து குறைந்த பணம் ஈட்டுவதை விட, நகரங்களுக்கு சென்று அங்கு கிடைக்கும் வேலைகளைப் பார்த்து பணம் அதிகமாக ஈட்டுவதுதான் உசிதம்; அது தான் இன்றைய நடைமுறைக்கு உகந்தது என்பதனைப் போல ஒரு பிம்பத்தை தருகிறது. அப்படியா இது?//

நான் என் கருத்தாக முன்வைப்பது அதையேதான். கதையில் சொல்லியிருக்கும் கணக்குகள் தவறானவையா? செல்லமுத்துக்கு நான் சொல்லியிருக்கும் தீர்வு சரியில்லையென நீங்கள் கருதினால், உங்கள் தீர்வுதான் என்ன?

//ஜே. கே இங்கு வந்தது பெயர் ஒற்றுமையாலா..//

பெயர் ஒற்றுமை மட்டுமே.

 
At August 15, 2007 7:44 PM, Blogger வவ்வால் said...

ஓகை சார் ,

உங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு நன்றி! (அதற்குறிய தகுதி என்னிடம் இல்லை என்பது வேறு விஷயம்)

விவசாய வேலைகளை விட்டு பலர் விலகுகிறார்கள் என்பது உண்மையே, நானும் எனது நாற்று நடும் எந்திரம் என்னும் பதிவிலும் இதை கோடிட்டு காட்டியிருக்கிறேன்.

ஆனால் அப்படி மாற்றுபணி தேடி சென்றவர்கள் எல்லாம் கார் வாங்கும் அளவு முன்னேறவில்லை என்பதே எனது எண்ணம் , ஏதோ அவர்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாக இருக்கிறது என திருப்ப்தி பட்டுக்கொள்வது தான் நடக்கிறது. அதனாலேயெ யாரும் மீண்டும் விவசாயப்பணிகளுக்கு திரும்பவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் அவர்கள் மனதில் அப்போது கவுரமாகவாது இருந்தோம் என எண்ணாமல் இருக்க மாட்டார்கள். நான் சொல்வது நகரத்தில் சாலையோரம் வசிக்கிற தொழிலாளர்களை பற்றி!

விவசாயம் லாபகரமாக நடக்க வேண்டும் அதுவே எனது ஆசை. அப்படி நடந்தால் ஏன் இவர்கள் இடம் பெயர போகிறார்கள்.

 
At August 15, 2007 8:05 PM, Blogger Thamizhan said...

விவசாயத்தையே நம்பி வாழும் பெரு்ங்கூட்டம் ,ஒரு ஏக்கர் வைத்துக் கொண்டு பெருமையிலே அவதிப் படும் மிராசுதாரர்கள்,சொத்து பங்கு பிரிவினை என்ற பரம்பரை எதிரிகளாகும் உறவினர்
இதையெல்லாம் நேரே கிராமத்தில் பார்த்து வாழ்ந்தவர்களுக்கு மிகவும் நன்றாகப் புரியும்.

நாட்டிற்குத் தேவையான தொழில் கற்று எலெக்ட்ரீசியன்,தண்ணீர் பம்ப்செட் போன்று பல விதமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வோர் காரில் வராவிட்டாலும் இரண்டு சக்கர மன்னர்களாக வாழ்வதைப் பார்க்கலாம்.

 
At August 16, 2007 9:09 AM, Blogger Thekkikattan|தெகா said...

ஓகை,

நீங்கள் சொல்லும் அந்த சுலப சிகிச்சை எல்லா நகரங்களும் ஒரு கல்கத்தா போன்றதனை ஒற்றியே அமையக் கூடிய நிலைக்கே இட்டுச் செல்லும்.

விவசாயம் நலிவடைந்திருக்கிறது என்பதற்காக அதற்கான நவீன அணுகுமுறையையும், பாசன மேம்பாட்டையும் அடைவதனை உதறித் தள்ளிவிட்டு நீங்கள் அவர்களை நகரங்களுக்கு செல்லச் சொல்வது எப்படி ஒரு விவசாய நாட்டிற்கு உகந்ததாக அமைய முடியும்?

அதே ஜே.கே, அருமையாக தனது பாணியில் ஒரு சூழ்நிலையை விளக்கியிருப்பார். நகரத்தில் வேலை பார்க்கும் ஒருவர் எப்படி தான் எழுந்ததிலிருந்து, தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு, அன்றைய அலுவலக வேலையை முடிக்கும் வரையிலும் எது போன்ற மன உளைச்சலுக்கும், ஆற்றல் வீணடிப்பிற்கூடேயே தனது வாழ்வை அமைத்துக் கொள்கிறார் என்பதிலிருந்து தொடங்கி, அதுவே ஒரு கிராமப் புரத்தில் வசிக்கும் ஒரு விவசாயி காலையில் எழுந்து கலப்பையையும், ஏர் மாடுகளையும் பிடித்துக் கொண்டு தனது காலைப் பகுதி வேலையை முடித்து விட்டு, தனது மனைவி கொண்டு வரும் மதியக் கஞ்சிக்கு காத்திருக்கும் இரு வேறு உலகங்களை நமக்கு விளக்கிக் காண்பிப்பார். இதில் யார் நிறைவாக வாழ்ந்தவர்களாக இறுதியாக ஆழ் நிலை மனவோட்டத்தில் விளக்கப் பட்டிறுக்கும் அந்த கட்டுரையில்.

இங்கு வவ்வல் கூறியதைப் போன்று அவ்வாறு வலசை போகும் அத்துனை பேர்களும் கார், பங்களா என்று தனது வாழ்வை அமைத்துக் கொள்ள முடிவதில்லை. அதற்கு மாறாக தனது சுயகொளரவத்தையும் இழந்து, அந்த கால சுழற்சியில் அகப்பட்டு ஒரு உலோகத்தைப் போல மக்கிதான் மடிகிறார்கள். அதுவே உண்மை. குறைந்தப் பட்சம் இந்த நிலத்துடன் போராடும் பொழுதாவது அவைகளை அவர்கள் இழப்பது கிடையாது என்றே நினைக்கிறேன்.

 
At August 16, 2007 11:34 AM, Blogger ஓகை said...

//ஆனால் அப்படி மாற்றுபணி தேடி சென்றவர்கள் எல்லாம் கார் வாங்கும் அளவு முன்னேறவில்லை என்பதே எனது எண்ணம் , //

வவ்வால் ஐயா,

விவசாயத்தை விட்டுவிட்டு வெளியே வந்தபிறகு பெறுகின்ற மேன்மைக்கும் தாழ்மைக்கும் விவசாயத்திற்கும் தொடர்பில்லை. செல்லமுத்து கார் வாங்கியதும் அப்படித்தான். நான் சொல்லியிருக்கும் கணக்குகள் சரிதானா என்பது பற்றி ஒன்றுமே நீங்கள் சொல்லவில்லையே!

 
At August 16, 2007 11:38 AM, Blogger ஓகை said...

//நாட்டிற்குத் தேவையான தொழில் கற்று எலெக்ட்ரீசியன்,தண்ணீர் பம்ப்செட் போன்று பல விதமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வோர் காரில் வராவிட்டாலும் இரண்டு சக்கர மன்னர்களாக வாழ்வதைப் பார்க்கலாம்//

தமிழன், நீங்கள் சொல்வது முக்காலும் உண்மை. வேறு தொழில் ஏதும் தெரியாது என்பதே பலர் விவசாயத்தில் நீடிப்பதற்குக் காரணம். இரண்டு சக்கர வாகனம் வசதி என்பதைவிட தேவை என்கிற நிலை வந்துவிட்டது. வருகைக்கு நன்றி.

 
At August 16, 2007 11:46 AM, Blogger ஓகை said...

தெக்கா,

சுலப சிகிச்சை என்கிற உங்கள் எள்ளலை நான் ரசிக்கிறேன். 'கல்கத்தா போன்றதனை ஒற்றியே......' என்பது எனக்குப் புரியவில்லை. என் கதையில் நான் நகரமயமாக்கலை ஆதரிக்க வில்லை. பத்து பேருக்கு ஏழுபேர் சோறு செய்ய வேண்டுமா என்பது என் அடிப்படைக் கேள்வி. இதற்கு விடை உங்களிடம் இருக்கிறதா?

 
At August 16, 2007 4:55 PM, Blogger செல்வன் said...

ஓகை

கதையின் கருத்து மிகவும் அருமையாக உள்ளது.அதில் நீங்கள் எழுப்பிய கேள்விகளை நான் வழிமொழிகிறேன்.

விவசாயத்தில் 70 கோடி பேர் ஈடுபடுவது அவர்களுக்கு எந்த விதத்திலும் நன்மையை சேர்க்காது.அதே சமயம் உடனடியாக அவர்கள் வேறு தொழிலுக்கும் போக முடியாது.இளவது விவசாயிகள் (20- 30) கல்லூரி கல்வியை பார்டைமாகவாவது தொடர்வது, மார்ஜினல் விவசாயிகளின் குழந்தைகளை நன்கு படிக்க வைத்து வேறு துறைகளில் ஈடுபடுத்துவது ஆகியவை மூலம் இன்னும் 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை குறைக்கலாம்.

(முடிந்தால் பாப் அப் பின்னூட்ட பெட்டியை மாற்றுங்கள்.விவாதம் நீண்டால் லோடு ஆக அதிக நேரம் பிடிக்கும்)

 
At August 16, 2007 8:51 PM, Blogger வவ்வால் said...

ஓகை சார்,

உங்கள் கணக்குகள் தமிழ்பட கதாநாயகனுக்கு நன்றாகப்பொருந்தும் ஒரு மாடு வாஙி பால் கரந்து விற்பார், ஒரு பாடல் ஒலிக்கும் அப்புறம் பார்த்தால் 5 நட்சத்திர விடுதியை வாஙுவார்!

உங்கள் கணக்கு மெய்யாக வேண்டும் அதுவே ஆசை! பகற்கனவாகிடும் மனக்கணக்குகளை தர்க்க ரீதியாக ஏற்கவியலாதே!

ஆயிரத்தில் ஒருவர் கூட நீங்கள் சொன்ன உன்னத நிலை அடைவது சாத்தியமா!
----------------------------

செல்வன்,

நீங்கள் சொன்னது போல அதி்கப்படியான தொழிலாளர் சக்தி வேண்டுமானால் மாற்று துறையில் ஈடுபட வைக்கலாம். ஆனால் அப்படி ஒரு மாற்றுவழியே கானப்படாமல் அவர்களை விவசாயம் விட்டு துறத்த வேண்டும் என நினைக்கலாமா? நகரத்திற்கு போ அங்கே கல் உடை , சாலைப்போடு, கட்டுமான வேலைப்பார், கேபிள் போட பள்ளம் வெட்டு அப்போது தான் நகரத்தில் நாங்கள் சுகமாக இருக்கலாம் என்பது சரியா?

மாற்று தொழில்கள் காணப்பட வேண்டும் அல்லது இருக்கும் தொழில் விவசாயம் மேம்பட வேண்டும். இரண்டும் இல்லாமல் தினக்கூலி ஆக வழி சொல்வது மேம்படுத்துவது அல்ல.

ஒரு தொழிலில் இரண்டு வகையன வளர்ச்சிகள் ஏற்படும் , வெர்டிகல் இன்டெகரேஷன் , ஹரிசான்டல் இன்டெகெரேஷன்.விவசாயத்திலும் இந்த இரண்டும் நடைபெறவேண்டும். நம் நாட்டில் விவசாயிகள் விவசாயம் மட்டுமே தான் பெரும்பாலும் செய்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில்களை, அறுவடைக்கு பிந்தைய மதிப்பு கூட்டும் வேலைகளை செய்வதில்லை. அவற்றிலும் அவர்கள் ஈடுபட்டால் வாழ்வில் மேம்படுவார்கள் , அதற்கு அரசு உதவ வேண்டும்.

 
At August 17, 2007 8:15 AM, Blogger ஓகை said...

//முடிந்தால் பாப் அப் பின்னூட்ட பெட்டியை மாற்றுங்கள்.//

செல்வன்,
கருத்துகளுக்கு நன்றி.

பாப்பப் பெட்டியை மாற்றிவிட்டேன். நன்றி.

 
At August 17, 2007 8:23 AM, Blogger ஓகை said...

// உங்கள் கணக்குகள் தமிழ்பட கதாநாயகனுக்கு நன்றாகப்பொருந்தும்//

வவ்வால் ஐயா, விவசாயத்தை விட்டு வெளியே வந்தவர்கள் முன்னேற முடியாது என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறீர்கள். விவசாயத்தை விட்டு வெளியே வந்தபிறகு அவர்கள் அடையும் மேன்மையும் தாழ்வும் விவசாயம் தொடர்புடையது அல்ல என்று நான் மீண்டும் மீண்டும் கூறினாலும் நான் கூறுவதில் என்ன தவறு என்று நீங்கள் கூறவில்லை.

ஒன்னரை ஏக்கரில் வருடத்துக்கு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்கிற கணக்கைப் பற்றி உங்கள் கணக்கைச் சொல்லுங்கள்

பத்து பேருக்கு ஏழு பேர் சோறு செய்ய வேண்டும் என்கிற கணக்கு சரியா என்று சொல்லுங்கள்.

 
At August 17, 2007 8:33 AM, Blogger ஓகை said...

செல்வன் has left a new comment on your post "கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!":

ஓகை ஐயா

பாப்-அப் பெட்டியை மாற்றியதற்கு நன்றி

வவ்வால்,

ஓகை தெரிவித்த கருத்துக்களில் எந்த தவறும் இல்லை.அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என்று வைத்திருந்து நஷ்டப்பட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதை விட, நிலத்தை விற்றுவிட்டு நகருக்கு சென்று வேலை பார்ப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. வேலை செய்ய வேண்டும் என்பது கூட இல்லை. நிலத்தை விற்ற காசில் மளிகை கடை, சிறு ஓட்டல் என வியாபாரம் கூட செய்யலாம். விவசாயம் சார்ந்த பழக்கடை, காய்கறிக்கடை என்றும் செய்யலாம்.

சில கூலி வேலைகளில் ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கும். மாட்டு வண்டியில் லோடு ஏற்றுவது, மூட்டை தூக்குவது போன்றவை.வயல்களில் கூலி வேலை பார்ப்போர் நகருக்கு வந்தால் இந்த வேலைகளில் தான் முதலில் ஈடுபடுவர்.

எல்லோரும் கண்டிப்பாக இப்படி செய்ய வேண்டும் என்பதில்லை.இப்படியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதையே ஓகை கூறியுள்ளார்.

வெர்டிகல் இன்டெக்ரேஷன்,ஹரிசாண்டல் இன்டெக்ரேஷன் ஆகியவற்ரை விவசாயிகள் தமது சக்திக்கு உட்பட்டு செய்துகொண்டுதான் உள்ளனர்.உழவர் சந்தை, சண்டே மார்க்கட் என்று விவசாயிகள் தமது பொருட்களை விற்கும் விற்பனையாளராக மாறுவதும் நடக்கத்தான் செய்கிறது.ஆனால் நீங்கள் சொல்வது போல் இவை அதிக அளவில் நடைபெறுவதில்லை.அப்படி நடைபெற்றால் விவசாயம் ஓரளவு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக மாறும்.

 
At August 17, 2007 8:51 AM, Blogger வவ்வால் said...

ஓகை சார்,

//விவசாயத்தை விட்டு வெளியே வந்தபிறகு அவர்கள் அடையும் மேன்மையும் தாழ்வும் விவசாயம் தொடர்புடையது அல்ல என்று நான் மீண்டும் மீண்டும் கூறினாலும் நான் கூறுவதில் என்ன தவறு என்று நீங்கள் கூறவில்லை.//

அது எப்படி நீங்களாகவே முன்கூட்டிய தனி நபர் தீர்மானம் போட்டுக்கொள்கிரீர்கள் , விவசாயம் விட்டு வெளிவந்த பின் ஏற்படும் ஏற்ற தாழ்வுக்கு அது காரணம் இல்லை என்பது புரியவில்லை. மேம்பாடு அடைந்தால் பரவாயில்லை, நிலமை மோசம் அடைந்தால் என்ன நினைப்பான் ஒருவன் ச்சே அத விட்டு வந்து இருக்க கூடாது இப்போ உள்ளதும் போச்சுனு வருத்தப்படுவானா மாட்டானா, அப்படி எனில் இங்கே அது நேரடியாக செயல்பட வில்லை எனினும் விலகுதல் என்ற தீர்மானம் அதன் சார்புடையது தானே!

//ஒன்னரை ஏக்கரில் வருடத்துக்கு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்கிற கணக்கைப் பற்றி உங்கள் கணக்கைச் சொல்லுங்கள்

பத்து பேருக்கு ஏழு பேர் சோறு செய்ய வேண்டும் என்கிற கணக்கு சரியா என்று சொல்லுங்கள்.//

இந்த இரண்டுக்கும் மிக தெளிவாக விளக்கம் சொல்லியுள்ளேன். உற்பத்தி அதன் மீதான மதிப்பு கூட்டுதல் என செயல்பட வேண்டும் என்று! அதே போல அதிக்கபடியான விவசாய தொழிலாளர்கலுக்கு ஒரு மாற்று ஏற்பாடு காட்ட வேண்டும் , கல் உடைப்பது சாலை போடும் வேலை இருக்கு என்பது மாற்று ஏற்பாடு அல்ல என்றும் சொல்லியுள்ளேன்.

சரி நீங்களே சொல்லுங்கள் உங்கள் கூற்றுபடி விவசாய தொழிலை விட்டு நகரத்தில் ஏதோ வேலைக்கு வருபவனுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்க உத்திரவாதம் இருக்கிறதா? ஒருவன் தின கூலி வேலை மட்டும் செய்தால் ஒராண்டில் எவ்வளவு பொருள் ஈட்ட முடியும்!

நகரம் vs கிராமம் வாழ்கை குறித்து இங்கே மேலும் எனது பார்வைகளை சொல்ல வேண்டும் பெரிதாக போகுமே என பார்க்கிறேன் அல்லது தனியே பதிவிடுகிறேன்!

 
At August 17, 2007 8:59 AM, Blogger வவ்வால் said...

செல்வன்,

//ஓகை தெரிவித்த கருத்துக்களில் எந்த தவறும் இல்லை.அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என்று வைத்திருந்து நஷ்டப்பட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதை விட, நிலத்தை விற்றுவிட்டு நகருக்கு சென்று வேலை பார்ப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை//

தவறு என்று சொல்லவில்லை சரியான தீர்வன்று எனத்தான் சொல்கிறேன். நகரத்தில் ஆண்டு முழுவதும் வேறு வேலைக்கு உத்திரவாதம் இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும். உண்மையில் அப்படி வேலைக்கு வருவோர் பாடு ... மிக பரிதாபம். ஒரே ஒரு உதாரணம் எப்படி அவர்கள் வேலை குறித்தான பயத்தில் நகரத்தில் இருக்கிறார்கள் என்பதை சொல்லும்.

இன்னைக்கு மழை வராம இருக்கனும் அப்போ தான் வேலை நடக்கும் , கைல காசு வரும் என்று பேசும் கட்டிட தொழிலாளி, சாலைப்பணியாளர்களைப்பார்த்துள்ளேன். கிரமாத்தில் மழை வந்த ஏர் ஓட்டலாம் என மழையை ஒரு காலத்தில் எதிர்பார்த்த விவசாயி ஆக கூட அவன் இருக்க கூடும்!

விவசாயத்தை விட ஒரு நிச்சமற்றத்தன்மை கொண்டது நகர தினக்கூலிகளின் வாழ்கை!

உங்களுக்கே தெரிகிறது சில பல மாற்றங்கள் செய்தால் விவசாயம் லாபம் தரும் என, ஒன்றில் இருக்கும் பிரச்சினையை தீர்க்காமல் அதை விட்டு தப்பித்து போகிறேன் என புதிய பிரச்சினையை வாங்கலாமா?

 
At August 19, 2007 11:12 PM, Blogger வவ்வால் said...

ஓகை அவர்களுக்கு,

நீங்கள் தொட்டுகாட்டியது ஒரு முக்கியமான , வளர்ந்து வரும் பிரச்சினை அதற்கு விளக்கம் அளிப்பது அத்தனை சுலபம் அல்ல மேலும் பின்னூட்டத்தில் ஓரளவு தான் சொல்ல முடிகிறது எனவே தனியாக ஒரு பதிவு இட்டுள்ளேன்.சிரமம் பார்க்காமல் ஒரு முறை படிக்கவும். நன்றி!


உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!

 
At August 26, 2007 8:13 AM, Blogger ஓகை said...

வவ்வால் ஐயா,

மன்னிக்க வேண்டும். மிகுந்த வேலை பளு காரணமாக பதிவுகள் பக்கம் வர முடியவில்ல. உங்கள் பதிவைப் படித்துவிட்டேன். அங்கே பதில் போடுகிறேன். நீங்கள் இதில் காட்டும் ஆர்வத்துக்கும் அக்கறைக்கும் நன்றி.

உங்களை மிகவும் தொல்லை படுத்திய செல்லமுத்து கார் அவாங்கிய விஷயத்தை மாற்றிருக்கிறேன். அதாவது வாடகைக் கார் வாங்கியதாக மாற்றியிருக்கிறேன். இப்படி முன்னுக்கு வந்த சிலரை எனக்குத் தெரியும்.

 
At August 26, 2007 9:24 AM, Blogger ஜாலிஜம்பர் said...

//தன் சொந்த வாடகைக் காரில் போனான். //

ஓகையண்ணே,நீங்களுமா?:))

 
At August 26, 2007 10:50 AM, Blogger ஓகை said...

//ஓகையண்ணே,நீங்களுமா?:)) //

வாங்க மகிழெம்பரே,

ஆனா என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலையே?

 
At August 26, 2007 12:19 PM, Blogger வவ்வால் said...

ஓகை சார்,

நன்றி!

இதில் நான் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று, அடிப்படையாக விவசாய குடும்பம் தானே நானும்.

மேலும் யதார்த்தம் மீறி இருப்பதால் தான் சித்தாள் வேலைப்பார்த்து கார் வாங்கியதை சுட்டிக்காட்டினேன்!
மற்றபடி அது என்னை தொல்லைப்படுத்தவில்லை!

வெறும் நேரடி விவசாயம் என்பது கடினம் , அதிக வருவாய் தர கொஞ்சம் வித்தியாசமாக செயல் பட வேண்டும் என்பதை தான் நான் சொல்லி வருகிறேன்.

ஒரு நெசவு ஆலை எப்படி வெறும் வேட்டி சட்டைக்கு வெள்ளை துணி மட்டும் நெய்தால் வியாபாரம் ஆகாது என பல வகை , பல வண்ணத்துணி நெய்ய ஆரம்ப்பித்தார்களோ அப்படி தான் விவசாயமும் மாற வேண்டும் அதைத்தான் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்!

எவ்வகை தொழிலானாலும் ஒரு மாறுபட்ட அனுகு முறை தேவை என்பது தான் நான் சொல்ல வருவது!

 
At August 27, 2007 1:06 AM, Blogger ஜாலிஜம்பர் said...

//வாங்க மகிழெம்பரே,

ஆனா என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலையே?//

ஓகை அவர்களே,டோண்டு அய்யாவைக் கலாய்க்கும் இயக்கத்தில் நீங்களும் இணைந்து விட்டீர்களோ என்று நினைத்து விட்டேன்.

 
At August 30, 2007 10:58 AM, Blogger ஜயராமன் said...

அய்யா,

மிகவும் சுவாரசியமாகவும், அழகாகவும் இருக்கிறது. ஆர்வமாய் படித்தேன். எனக்கென்னவோ ஒரு வாரம் கழித்து ஊருக்கு போகும்போது அவன் அம்மாவுக்கு ஏதோ ஆகியிருக்கும் என்று பயந்துகொண்டே படித்தேன். ஆனால், சுபமாகத்தான் இருக்கிறது. ரொம்பவும் சுபமாக, உழைப்பே வெற்றி போல அதிகமாக உபதேசம் போல பட்டதால் கொஞ்சம் அம்புலிமாமா வாசனை அடிக்கிறது.

நன்றி

 
At September 01, 2007 7:34 AM, Blogger cherankrish said...

மொத்தத்தில் நன்றாக இருந்தது :)

 
At September 01, 2007 9:05 AM, Blogger ஜாலிஜம்பர் said...

//மகிழெம்பர்//

jolly jumper க்கு அருமையானதொரு தமிழாக்கம்.மிக்க நன்றி அண்ணா.

 
At September 11, 2007 11:32 AM, Blogger ஆழியூரான். said...

மிகச்சிறந்த பதிவு. வருமானம், லாபம் என்ற அடிப்படையில், எங்கு லாபம் வருகிறதோ அங்கு போ என்று உபதேசிக்கிறது கதை. இதே கதையில் வருமானம் குறைவாக இருக்கும்போது கட்டுக்குள் இருக்கும் செல்லமுத்துவின் செலவுகள், வருமானம் பெருகியபின் சரசரவென உயர்வதை நீங்களே சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அதுதான் நகரம்.. கொடுப்பதுபோல் கொடுத்துப் பிடுங்கிக்கொள்ளும் நுகர்வு பிசாசு.

ஒன்று சரியில்லை என்று விட்டுவிலகி ஓடும்போது அதைவிட நல்லது நோக்கி ஓடினால் சரிதான். ஆனால், விவசாயக் கூலிகளின் இடப்பெயர்வு, அவர்களை நகரங்களில் தினக்கூலிகளென்ற நிலையிலிருந்து உயர்த்தவில்லை.(செல்லமுத்துகள் விதிவிலக்கானவர்கள். இப்படியான எண்ண ஓட்டம் கொண்டவர்கள், விவசாயக் கூலியாக இருந்தாலும், நகரத்தில் தினக்கூலியாக இருந்தாலும் நிச்சயம் முன்னேறித்தானிருப்பார்கள். அது தன் முனைப்பு).

ஆனாலும் நீங்கள் முன் வைக்கும் தீர்வு சரியானதாக தோன்றவில்லை. எல்லா இடங்களிலும்/எல்லா தொழில்களிலும் அததற்கே உரிய பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்வதை விடுத்து விலகுவது சரியல்ல.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home