Sunday, July 22, 2007

புதிய குடியரசுத் தலைவர்

புதிய குடியரசுத் தலைவர்


குடியரசு ஆட்சிமுறையின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து அனுபவிக்கும் எனக்கு இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் சற்று கசப்பின் ருசியைக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு கேலிக்கூத்தாக இந்தத் தேர்தல் அரங்கேறியிருக்கிறது. விநோதமான இந்தத் தேர்தல் தோற்றவருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் சொல்லவேண்டிய வகையில் அமைந்து விட்டிருக்கிறது. நாட்டுக்கு ஒரு நல்ல மனிதர் குடியரசுத் தலவராக வரும் வாய்ப்பு நழுவிப் போனதோடு தகுதிகளில் சர்ச்சைக்குறியவர் ஒருவர் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அப்துல் கலாம்:

தான் வகித்த பதவிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தனது பதவிக் காலத்தை முடித்திருக்கிறார் நமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அப்துல் கலாம் அவர்கள். அலங்காரமான, அதிகாரங்கள் அற்ற ஒரு பதவியானாலும் நாட்டின் மிகப்பெரிய கௌரவத்தோடு குடியரசின் அடையாளமாகவும் விளங்கும் பதவிக்கு மேலும் கண்ணியம் சேரும் வகையில் அவர் பணி அமைந்திருந்தது. நமது இளைஞர்களுக்கு அவர் முன் மாதிரியாகவும் எவரும் பின்பற்றக்கூடியவராகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் இளைஞர் மனதில் இடம் பிடித்தது எப்படி என ஞானி ஆனந்தவிகடனில் வினாவொன்றை எழுப்பியிருக்கிறார். சொல்லிலும் செயலிலும் தன் உயர்வுள்ளலை வெளிப்படுத்தும் அவர் இந்திய இளைஞர்களின் இதயத்தில் ஒரு பெரிய இடம் பிடித்தது எப்படி புதிராக இருக்க முடியும்? இப்படி ஒரு தலைவருக்காக ஏங்கிய ஏராளமான மனங்களின் வெற்றிடத்தை நிரப்பியதோடு இந்திய உணர்வற்றிருந்தவர்களின் மத்தியிலும் அவ்வுணர்வையும் கூடவே தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி தன் பணியை செவ்வனே முடித்திருக்கிறார். இவரை இவருக்குப் பின் இப்பதவியை வகிக்க இருப்பவரோடு நம்மால் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒப்பிட்டதால் வரும் ஏமாற்றத்தையும் தவிர்க்கவும் முடியவில்லை.

ஷெகாவத்:

குடியரசு துணைத் தலவராக இருந்தபோதும் அதற்கு முன்னும் சிறந்த முறையில் பணியாற்றியவர். இவரைப் பற்றிய இந்த சுட்டி நாம் நல்ல ஒரு வாய்ப்பை இழந்துவிட்டோம் என்பதை பறைசாற்றுகிறது. அவர் தோற்றவுடன் தன் பதவி துறந்ததிலும் அதன் பின்னரான நடைமுறையிலும் கண்ணியம் பளிச்சிடுகிறது.

இப்போது குடியரசுத் தலைவராகத் தேர்வாகி யிருப்பவர்:

இத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகக் கூட இவர்மீது ஒரு புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டது. குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரான பின்னர் இவர் கூறிய பர்தா பற்றிய கருத்து கருத்துப்பிழை மட்டுமில்லாமல் தேவையற்றதுமாகும். மேலும் ஆவியோடு பேசுவது போன்ற கருத்துகளோ மிகுந்த அவநம்பிக்கையைத் தோற்றுவித்தது. சென்னையிலிருந்து தமது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய இவர் சென்னை வருவ்தே இதுவே முதல்முறையோ என்ற ஐயம் எனக்கு வருமளவுக்கே இவர் வெளியில் தெரிந்தவராக இருந்திருக்கிறார். ஷெகாவத் என்ற பெயருடையவரைக் கணவராக அடைந்ததும் பெண்ணாக இருப்பதுமே இவருக்கு வேட்பாளாராகும் தகுதியைக் கொடுத்திருக்கிறது. தன் களங்கத்தைத் துடைப்பதும், இப்பதவிக்குத் தகுதியானவர்தான் என்று நினைக்க வைப்பதும் இவருக்கு உடனடி கடமைகளாகின்றன.

பெண் குடியரசுத் தலைவர்:


நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை மிகப் பெருமையாகப் பேசப்படுகிறது. சர்வ வல்லமை படைத்த பிரதமர் பதவியை இந்திராகாந்தி வகித்த பிறகும் இப்போதும் ராஜஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் பெண்களே முதல்வராக இருக்கும்போது கூட, இது எப்படி ஒரு பெரிய விஷயமாக இருக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. நம் நாட்டில் விடுதலப் போராட்ட காலத்திலும் அதற்கு முன்பான சரித்திர காலத்திலும் புராண காலத்திலும் கூட பெண்கள் பொது வாழ்விலும் அரசியலிலும் ஈடுபடுவது மற்றும் பெரும் பதவிகளை வகிப்பது அரிதான விஷயமல்ல. ஆயினும் இப்போது இந்த அளவில் கொண்டாடப் படுவது எனக்கு பெரிய வியப்பாக இருக்கிறது.


இந்து பத்திரிக்கை தலையங்கம்:

இன்றைய இந்து பத்திரிக்கையின் இவ்விஷயம் பற்றிய தலையங்கம் மிகப் பெரிய ஏமாற்றம். குடியரசுத்தலைவர் பதவியைப் பற்றிய சில சட்ட நுனுக்கங்களும் எதிர்கட்சிகள் நடந்து கொண்ட முறைக்கு பெரும் கண்டனங்களுமாக அத்தலையங்கம் இருக்கிறது. தனது பிஜேபி எதிர்ப்பு நிலையை பட்டவர்த்தனமாக எப்போதும் பறைசாற்றும் இந்து இப்போதும் அதை குறைவற செய்து முடித்திருக்கிறது.

முடிவாக:

நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி சுயநலமே முதல் முன்னுரிமையாகக் கொண்டு எல்லா கட்சிகளும் நடந்து கொள்வது ஏறக்குறைய நடைமுறை ஆகிவிட்டது. எந்த ஒரு பெரிய ஊழல் செய்தியோ அல்லது அரசியல்வவதிகளின் முறையற்ற செயலோ அராஜகமோ நமக்கு அதர்ச்சி ஏற்படுத்துவதில்லை. இந்தக் குடியரசுத் தலவர் தேர்தலையும் அவ்வாறே எடுத்துக் கொள்வோம். நமது அரசியலமைப்பு இதையெல்லலம் மீறி நம்மை ஒரு சிறந்த குடியரசாக வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாமும் பொருளாதாரத்தில் வலுவாக முன்னேறிக் கொண்டிருகிறோம். செல்வோம். மேலும் செல்வோம்.

********
நடராஜன்

********

5 Comments:

At July 22, 2007 7:36 PM, Blogger ஓகை said...

சோதனைப் பின்னூட்டம்

 
At July 22, 2007 7:45 PM, Blogger துளசி கோபால் said...

இதுலே நம்ம கையில் ஒண்ணுமில்லை.

பொறுத்திருந்து பார்க்கலாம், தலைவி என்ன செய்யப்போறாங்கன்னு.

 
At July 22, 2007 9:01 PM, Blogger SurveySan said...

நமது பதிவர்களின் வட்டத்தில், அதிகம் பேருக்கு ப்ரதீபா பாட்டீலை பிடிக்கலையே, என்ன காரணமா இருக்கும்?

http://surveysan.blogspot.com/2007/07/blog-post_21.html

 
At July 23, 2007 11:43 AM, Blogger ஓகை said...

//பொறுத்திருந்து பார்க்கலாம், தலைவி என்ன செய்யப்போறாங்கன்னு. //

வாங்க துளசி அக்கா,
நடப்புகளைப் பார்த்தால்
பார்த்திருந்து பொறுத்துக்கொள்ளும் நிலை வராமல் இருந்தால் சரி என்றல்லவா தொன்றுகிறது.

 
At July 23, 2007 11:47 AM, Blogger ஓகை said...

//நமது பதிவர்களின் வட்டத்தில், அதிகம் பேருக்கு ப்ரதீபா பாட்டீலை பிடிக்கலையே, என்ன காரணமா இருக்கும்?//

சர்வேசன், நிச்சயமா நம்ம பிரதமர் ஒரு காரணம். பிரதமரே குடியரசு தலைவர் மாதிரிதானே இருக்கார், உண்மையான குடியரசுத் தலைவர் எப்படி இருப்பாரோ என்ற கவலை ஒரு காரணமா இருக்கும்.

 

Post a Comment

<< Home