ஓகை - பெயர்க்காரணம்
ஓகை - பெயர்க் காரணம்.
ஓகை என்பது காவிரியின் கடை முக்கோணத்தில் (டெல்ட்டா) இருக்கும் ஒரு சிற்றூரின் பெயர். இப்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறதென நினைக்கிறேன். இந்த சிற்றூரில்தான் மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் என் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள். என் தாத்தா, அப்பா மற்றும் சில நேரங்களில் என்னையும்கூட இந்த ஊரின் பெயரை எங்கள் பெயருடன் சேர்த்து என் உறவினர்கள் அழைப்பார்கள் . என் வாழ்நாளில் நான் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த ஊரில் கழித்திருக்கிறேன். ஆனாலும் அந்த ஊரும் அந்தப் பெயரும் எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. ஓகை என்ற சொல்லைக் கம்பரும் மற்றவர்களும் உவகை என்ற பொருளில் பயன் படுத்தியிருக்கின்றனர்.
என் பத்து வயது வரை என் வாழ்க்கை குடந்தையில்தான் நடந்தது. அதனால் என் நினைவுகளில் நிரந்தரமாய்த் தங்கிவிட்டது தஞ்சைத் தரணி. இப்பகுதியின் ஏதோ ஒரு சிற்றூரின் விவரிப்பு ஓகைக்கும் பொருந்தும். இப்பகுதியின் எந்த ஒரு சிற்றூரையும் இப்படி விவரிக்கலாம்.
வயலும், வைக்கோல்போரும், வாய்க்காலும், வரப்புகளும், வண்டல் மண்ணும், வற்றாத கிணறுகளும், வாழ்வதற்கான அத்தனை வனப்புகளைக் கொண்டதும், மருத நிலத்தின் பண்புகள் மிகுந்து மிளிருவதுமான ஒரு நிலத்துண்டு.
எனக்கு ஓகை என்று சொல்லும்போது தஞ்சைத் தரணியுடன் ஏற்படும் தொடர்பில் ஒரு கற்பனை சுகம் வந்துவிடும். இந்த சுகம் என் எல்லா புலன்களையும் வருடிவிட்டுச் செல்லும்.
வெறுங்காலில் நடக்கும்போது மெத்திடும் மென்மணலின் சுகம், எப்போதோ தட்டுப்படும் நெரிஞ்சிலைத் தூர எறிந்த பின்னும் தொடரும். சுற்றிவரும் காற்றில் ஈரம் உயிர்ப்பாயிருக்கும். அங்கு நான் உண்ட கன்னலும் களியும் இன்னமும் நாவில் ருசிக்கும். ஆறும் சோலையும், மாவும் தெங்கும், ஆலும் அரசும், வாழையும் தாழையும், நாணலும் மூங்கிலும், கோவிலும் குளமும், மடுவும் குட்டையும், தேரும் திருவிழாவும், மீனும், மாடும், ஆடும், ஆனையும், இன்ன பிறவும் கண்களை விட்டகலாமல் இன்றளவும் நிற்கும்.
என் மூக்கு இன்னமும் இழக்காத ஒரு கலவை சுகந்தம் சுவாசத்தில் என்றும் கலக்கும். சாணமும், புழுதிக் காற்றின் மண்மணமும், பச்சை நெடியும், இவற்றை இணைக்கும் ஏதோ ஒன்றும், நீர்நிலைகளின் பாசி மணமும், நெல்வேகும் புழுங்கல் மணமும், வெற்றிலை பாக்கு வாசனையும், பூக்களுக்கு மணமிருப்பதை சிலநேரம் மறந்து போகச் சொல்லும். இந்நிலத்தில் காற்றின் ஈரமும் கடுங்கோடையும் கூட்டணியாகிச் சுரக்கச் செய்யும் வியர்வையின் மணம் கூட வேறானதோ என உணரும் ஒரு பொய்யை என் மனம் பலவேளை படைப்பிக்கும்.
வாகீச கலாநிதிகளின் வளமான தமிழும், வட்டார வழக்காய் வாஞ்சையில் மூழ்கி வடிவிழந்த சொற்களும், பல்லியத்தின் பண்பட்ட பல இசையும், பண்டிதரின் பண்ணிசையும், பாமரரின் நாட்டுப் பாடல்களும், வடமொழி விற்பனரின் வியாக்கியானமும், வேத கோஷமும், நட்பின் நையாண்டியும் நக்கலும், இவையேதும் காதில் விழாதிருக்கும் நேரத்தில் விரிவான ஆலாபனையாய் ஒரு நூறு பறவைகளின் ஓங்காரமும் கேட்கும்.
கங்கைக் கரையை கம்பர் விவரித்தது எனக்கு காவிரிநிலத்தை விவரித்தது போலவே இருக்கிறது. மருதநிலச் சிறப்பைப் பற்றி ஒரு கம்பராமாயணப் பாடல்:
தண்டலை மயில்கள் ஆடத்
....தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
....குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
....தேன் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
....மருதம் வீற்றிருக்கும் மாதோ.
(நான் புரிந்து கொண்ட) பொருள்: சோலையில் மயில்கள் ஆட விளக்குகளாக தாமரை மலர்கள் தயார். ஆனால் மேகங்களோ முரசொலிக்கு ஏங்கிநிற்க, கண் விழித்துப் பார்க்கின்றனவே குவளை மலர்கள். தெள்ளிய நீர்நிலைகளின் சிற்றலைகள் திரைச்சீலையாய் நெளிய, தேனிசை பிழியும் மகர யாழையும் மிஞ்சும்படிக்கு வண்டினங்கள் இனிதாய்ப் பாடிகொண்டிருக்கின்றன. இந்த நாடகாமாய் வீற்றிருக்கிறாளே மருத நில மங்கை!
23 Comments:
நடராஜன்,
ஓகைக்குப் பொருள் என்னவென்று நானும் பல நாள் நினைத்ததுண்டு.. பாடலும் விளக்கமும் அருமை..
என் அப்பாவுக்குக் கூட தஞ்சாவூர்ப் பக்கம் ஒரு கிராமம் தான் சொந்த ஊர் :)
பொன்ஸ், நன்றி
ஓகை,
நல்ல பதிவு.
அந்த இனிய நினைவுகள் தொடரவிரும்பினால்
இப்பொழுது
ஊர்ப்பக்கம் வந்துவிடாதீர்கள்
யாவும் பொய்யாய்...பழங்கனவாய்...
புகை படிந்த ஓவியமாய்ப் போயினவே
உண்மைதான். கண்முன்னே நம் கலாச்சார மாற்றம் நடந்து கொண்டிருக்க்கிறது. ஆனாலும் மாற்றம் என்பதை மறுதலிக்கும் சக்தியற்ற மானிடர் நாம். புகை படிந்த ஓவியத்தை புகை நீக்கிப் பார்க்க முயல வேண்டும். அல்லது புகையினூடாகப் பார்க்க வேண்டும். அல்லது அப்படியே புகைமூட்டத்துடனே பார்க்கவேண்டும். பார்த்தாக வேண்டுமே! உங்கள் கருத்துக்கு நன்றி சிவஞானம்ஜி.
வெற்றி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சரி நான் கொடுத்து பின்னூட்டம் என்ன ஆச்சு
நான் ஓகே கொடுக்கவில்லையா?
சரிநல்ல பதிவு எந்த ஊர் என்றவனே என்ற கண்ணதாசனின் படல் தான் நினைவுக்கு வருகிறது.
உங்கள் பின்னூட்டம் எதுவும் வரவில்லயே. இந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி என்னார்.
வணக்கம் நடராஜ்
வலைப்பதிவு உலகில் உங்கள் கால் தடம் பதிந்துள்ளது. உங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆரம்பமே அதை யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என காட்டுகிறது. மரத்தடியிலும் உங்களை படித்திருக்கிறேன்.
அதுவும் தமிழ்த்தாய் - பாரதியாரின் பாடல் -மெல்ல தமிழினி சாகும் - மடல் அருமையான ஆழ்ந்த கருத்தைக்கொண்ட மடல்.
ஓகை கிராமத்தில் 20 நிமிடங்கள் தான் இருந்திருக்கிறேன் என்று சொல்கிறீகள். ஆனால் அங்கு பல காலம் இருந்ததை போன்று அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள். அடிக்கடி போவீர்களா?
ஜெயலலிதாவுக்கு பாதிக்கு மேல் சென்னையில் வெற்றி கிட்டியிருக்கிறது. மேலும் பல இடங்களில் குறைந்த அளவு ஓட்டு வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கிறார்கள். அதனால் அம்மையாருக்கு மக்கள் ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
வலைப்பதிவுலகில் ஆரோக்கியமான முறையில் பல கட்டுரைகளும், ஆக்கங்களும் அளித்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
நன்றி.
மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz
தண்டலை மயில்கள் ஆடத்
....தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
....குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
....தேன் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
....மருதம் வீற்றிருக்கும் மாதோ.
இந்த கம்பராமாயணப் பாடலை பள்ளியில் படித்தப்பொழுது கம்பரின் கற்பனையை எண்ணி பலமுறை வியந்ததுண்டு. இப்பொழுது எத்தனையோ கவிஞர்கள், பாடலாசிரியர்கள் வந்தாலும் கம்பரின் இந்த க் கற்பனக்கு ஈடாகுமா? இப்பாடலிலிருந்து சுமார் ஆயிரம் பாடல்களுக்கு மேல் மாற்றி மாற்றி எழுதலாம். அதைத்தான் தற்கால சினிமா பாடல் ஆசிரியர்களும் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் இல்லாததா?
சரியான சமயத்தில் மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.
மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz
மஞ்சூர் ராசா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
அன்பின் நடராஜன்,
ஓகை என்னும் சொல்லுக்கு மகிழ்வு என்னும் பொருள் உண்டு என கம்பராமாயணத்தில் படித்திருக்கிறேன். அந்தப் பாடல் தெரியாமல் திண்டாடி ( பின்னே 10368 பாடல்களில் தேடுவதை என்னென்பதாம்?) , இன்று யதேச்சையாக பாலகாண்டத்¨¾ô ÒÃð¼ கார்முகப்படலத்தில் ,
இதோ அப்பாடல்
தோகைய ரின்னை சொல்லிட நல்லோர்
ஓகை விளம்பிட வும்பருவப்ப
மாக மடங்கலு மால்விடை யும்பொன்
¿¡கமு நாகமு நாண நடந்தான்
எனக்கிடைத்தது. இராமன் தசரதனது வில்லைநோக்கி நடக்கும் அழகு குறித்த அற்புதமான பாடல் இது.
" மயில்சாடையுடைய ( மிதிலாபுரி) மகளிர் பலதும் சொல்லி தசரதனையும் , விச்வாமித்திர முனியையும் குறித்துச் சொல்ல, நல்லவர்கள் மகிழ்ச்சியுடைய வார்த்தைகளைச் சொல்லிட ( ஒகை), வானவர்கள் மகிழ, நந்திக் காளையும், பொன் மேருமலையும், யானையும் வெட்கும் படியான கம்பீரமான நடை நடந்து இராமன் வில்லினை நோக்கி நடந்தான்" எனப் பொருள்படுகிறது.
ஓகை - உவகையாகிற்றோ?
உங்களது ஓகை அனைவருக்கும் ஓகையே தரட்டும்!
அன்புடன்
க.சுதாகர்
என்ன அருமையான மனங்கவரும் எழுத்து நடை!
கதை வண்ணம் அங்கு கண்டேன்
கவிதை வண்ணம் இங்கு கண்டேன்!
மெத்த மகிழ்ந்தேன்!
அன்பின் சுதாகர், உங்கள் மடலுக்கு எப்படி நன்றி சொல்வேன்?
கம்பராமாயணத்தின் 6108 வது பாடல் சொல்கிறது.
// ஒருவர் கைக் கொள்ளும் தேனை
ஒருவர் கொண்டு ஓடிப் போவார்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர், விழுவர், ஓடி
ஒருவர் மேல் ஒருவர் ஏறி, 'ஓகை' என்று உவகைகூர்வார். //
இந்தத் தளம் உங்களுக்குத் தெரியுமா? சொல் கொடுத்து இலக்கியங்களில் தேட பெரிதும் துணையாக இருக்கும். மேற்கண்ட வரிகள் இதன் உதவி கொண்டு எடுக்கப்பட்டதுதான்.
http://www.ee.vt.edu/~anbumani/tamiltext/
// உங்களது ஓகை அனைவருக்கும் ஓகையே தரட்டும்! //
எனது நோக்கமும் விருப்பமும் அதுவேதான்.
வருகைக்கு மிக நன்றி. அடிக்கடி வாருங்கள்.
எஸ்கே,
மிக மிக நன்றி.
ஓகை என்பது உங்கள் ஊர் பெயர் என நினைத்திருந்தேன். கணிப்பு சரியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
அருமையான இலக்கிய நடை. பாராட்டுக்கள்
கணியன் செல்வன் அவர்களே நன்றி.
சங்க காலத்தில் இவ்வாறு கணிப்பவர்களுக்கு அதாவது கணக்கிட்டு ஜோதிடம் கூறுபவர்களுக்கு கணியன் என்று பட்டம் தருவார்களாம். "யாதும் ஊரே..." எழுதியவர் கணியன் பூங்குன்றனார்.
GOT IT.
THANKS.
Presently unable to type in tamil.
நல்ல விளக்கம்!!
எனக்கும் இந்த பெயர் பிடித்திருக்கிறது..
நல்ல பதிவு!
நன்றி
//இவையேதும் காதில் விழாதிருக்கும் நேரத்தில் விரிவான ஆலாபனையாய் ஒரு நூறு பறவைகளின் ஓங்காரமும் கேட்கும்//
இது மிகவும் அருமை ஓகை ஐயா!
ஓகை என்பதற்கு மகிழ்ச்சியால் ஏற்படும் ஆரவாரம் என்ற பொருளும் உண்டு! அப்படிப் பார்த்தால் இந்த ஓங்காரமும் ஒகை தான்!
கம்ப ராமாயணப் பாடலில், ஒரு நாடகத்தில் நடிக்கும் தலைவியாகவே மருத நிலத்தைக் காட்டுவது மிகவும் சிறப்பு! நல்ல கவிதை கொடுத்தீர்கள்! நன்றி!
தருமி, சிவபாலன், கண்ணபிரான்,
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
ரொம்ப அழகான நடை உங்களுடையது ஓகையார் அவர்களே!..வர்ணனையில் சமயத்தில் என்னையும் விஞ்சி நிற்கிறீர்களே!(?)
மகிழ்வுடன் உம் பணி தொடர்வீராகுக!யாவும் சித்தர் அருளே!
யோகியார் வேதம்27-09-09
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி யோகியார் அவர்களே!
Post a Comment
<< Home