நனவிடை தோய்தல்
பினாத்தல் சுரேஷின் இந்தப் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.
சுரேஷ்,
நீங்கள் குறிப்பிடும் 1950-70 - இந்த காலத்தில்தான் நான் பிறந்தேன். 70ல் நான் எட்டாம்ப்பு. கணக்கை போட்டுக்கொள்ளுங்கள்.
நனவிடை தோய்தல் - அருமையான தமிழ்ச்சொல். இந்த சொல் என்னை ஒரு கவிதை உலகத்திற்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. கொசுவர்த்தி என்ற சொல் கருப்பு வெள்ளையும், வியர்வையின் கசகசப்பும், படத்தில் மௌனம் வரும்போது மேலே ஓடிக்கொண்டிருக்கும் முப்பத்தி சொச்சம் மின்விசிறிகளின் கொரகொர டொரடொரப்பும் - இவ்வாறு நனவிடை தோய்ந்துவிடுகிறேன்.
தமிழகத்தில் 19ம் நூற்றாண்டுவரை இருந்த ஒவ்வொரு நூற்றாண்டு வாழ்க்கைகளுக்குமிடையே இருக்கும் வேறுபாடுகளுடன் 20 நூற்றாண்டு வாழ்க்கைக்கு இருக்கும் வேறுபாட்டை ஒப்பிடவே முடியாத அளவுக்கு அந்த நூற்றாண்டில் மாறுதல்கள் நடந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளின் இந்திய முகலாய ஆட்சி தமிழகத்தின் வாழ்க்கை முறைகளில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியதா என்று என்னால் ஊகிக்கக்கூட முடியவில்லை. ஆனால் ஆங்கிலேய ஆட்சி பல மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது. அச்சு ஊடகமும், அயல்மொழியை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையும், புதிய வாகனங்களால் பல நில மக்களின் போகுவரத்து அதிகமானதும், அதனால் ஏற்பட்ட கலச்சார பரிமாற்றங்களும், விஞ்ஞான வளர்ச்சிகளும், சென்ற நூற்றாண்டை மிகவும் மாற்றியமைத்திருக்கின்றன. இந்த மாற்றங்களை அகில உலகமும் ஏறக்குறைய அதே நேரத்தில் சந்தித்திருந்தாலும், ஆஙகிலேயரிடம் நாடு அடிமைப் பட்டிருந்த நாட்களில் நாம் அடைய நேர்ந்தது, வரலாறு நமக்கிழைத்த கொடுமை. நான் நீட்டி முழக்கி சொல்ல வருவது என்னவென்றால் இவ்வளவு மாற்றங்கள் ஒரு நூற்றாண்டில் நடந்திருக்கிறபடியால் ஒவ்வொரு ஆண்டுமே ஒரு நூற்றண்டின் மாற்றங்களை சந்திதிருக்கிறது. அதிலும் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறது. சில செய்திகளைச் சொல்கிறேன். 1967ல் ஐந்தாம் வகுப்பு சிறுவனாக நான் குடந்தை நகரில் ஒரு பெண் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு தெருவில் சென்றதைப் பார்த்து வியந்து ஓடிப்போய் என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமை மதியம் இரண்டு மணிக்கு ஒலிபரப்பாகும் பாப்பா மலர் என்ற சிறுவர் வானொலி நிகழ்ச்சி கேட்பதற்காக அடுத்தத் தெருவில் இருக்கும் வானொலிப் பெட்டியுடைய என் நண்பன் வீட்டிற்கு வாராவாரம் சென்றிருக்கிறேன். அப்போது என் வீட்டில் வானொலிபெட்டி இல்லை. இங்கே ஒரு கூடுதல் செய்தி. அந்த நண்பன் அந்தன வகுப்பைச் சேர்ந்தவன். என் வீட்டில் அன்று அசைவம் சமைத்திருந்தால் என் தாயார் என் உதட்டிலும் புறங்கையிலும் தேங்காய் எண்ணெய் தடவி அனுப்பி வைப்பார். ஒவ்வொருவரும் என்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லாருக்குமே தெளிவாக தெரிந்திருந்த அந்த நாட்களில், முகமதிய மற்றும் கிருத்துவ மத மக்களை நாங்கள் இந்து மதத்தின் மிகவும் வேறுபாடுகளுடைய மற்றுமிரண்டு ஜாதிகளாகவே சிறுவயதில் உணர்ந்து இருக்கிறோம்.
இந்தத் தலைப்பில் ஒரு தனிப்பதிவில் எழுதவேண்டியதையும் விட அதிகமான செய்திகள் இருக்கின்றன.
நீங்கள் துக்ளக் வாசகர் என்கிற உண்மையை போட்டு உடைத்துவிட்டீர்களே பரவாயில்லையா?
துர்வாசர் எழுதுவதில் பெரும்பகுதி சரியாகவே இருக்கிறது என்பது என் எண்ணம்.
இதை என் வலைப்பூவில் ஒரு பதிவாகவே ஆக்கியிருக்கிறேன். நன்றி.
4 Comments:
உங்கள் பதிவிற்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஓகை நடராஜன்.
இங்கேயே விரிவாக பதிலளித்துவிட்டேன். வெட்டி ஒட்டலாம், ஆனால் கொஞ்சம் நேரப்பற்றாக்குரை, மன்னியுங்கள்.
இனிய நடராஜன் அய்யா,
67இல் ஐந்தாம் வகுப்பு, 70இல் எட்டாம் வகுப்பு :) எனக்கு மூன்றைக் கழித்துக்கொள்ளுங்கள் :)
திருவல்லிக்கேணியில் பெரியவர்கள் பலர் நான் சிறுவனாக இருந்தபோதும் 'சாயபு' என்றே அழைத்தார்கள். அண்ணன்களுக்கும் நான் 'பாய்', தம்பிகளுக்கும் நான் 'பாய்'. வித்தியாசங்களெல்லாம் பார்க்காமல் வளர்ந்த நாள்கள்.
அன்புடன்
ஆசாத்
சுரேஷ்,
சாக்ரட்டீசை துணைக்கு அழைத்தபின் நான் என்ன செய்ய முடியும்? இளைஞரைப் பற்றிய முதியோரின் கண்ணோட்டமான மனித குலத்தின் நிரந்தர நோய் மட்டுமே இதற்கு காரணமல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
ஆசாத் பாய்,
வருகைக்கு நன்றி. ஆசாத்தின் அகவை நான் அறியாததா?
காலை பத்து மணிமுதல் மாலை நான்கு மணிவரை மட்டுமே பள்ளிக்கூடம். வீட்டுப் பாடம் என்று பெரிதாய் செய்த நினைவில்லை. ஒரு சிலேட்டுப் பலகை மற்றும் இரண்டு புத்தகங்களுடன் ஆரம்பப் பள்ளி சென்ற நாட்கள் என் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
அந்த நாட்கள் இனியவை இல்லையா பாய்?
Post a Comment
<< Home