விடலைப் பருவம் விடைபெறும் தருணம்
விடலைப் பருவம் விடைபெறும் தருணம்
குழந்தைக் குணங்கள் குறைந்து மறைந்து
எழுந்த பெண்மையும் ஆண்மையும் நமக்கு
விடலைப் பருவம் வந்ததைச் சொல்லிடும்.
உடலின் மாற்றம் உளத்தையும் மாற்றிடும்.
பட்டாம் பூச்சிகள் பின்சென்று பிடிக்கும்
சிட்டுமனம் போய் சிலரின் பின்செல்லும்
சில்லரை மனமும் சினமும் வந்திடும்.
தாயின் முந்தானை பின்னின்ற பருவம்
மாயமாய் மாறி துப்பட்டா பின்செல்லும்.
பாயும் வண்டியில் பின்னிருக்கை குந்திடும்.
அகத்தின் உள்ளே இரண்டே நின்றிடும்
முகத்தில் அறையும் கூடாது எதனால்
இன்னும் ஒன்று அதனால் என்ன
எண்ணம் முழுக்க எதற்கும்
கேள்வியும் இவையே பதிலும் இவையே!
சிறிய அகமும் இவையால் நிரம்ப
அறிவும் நுழைய வழியும் குறைவே!
இன்றைய உலகில் இளைஞரின் தேவை
நுன்னிய கல்வியும் நுட்ப மதியும்
அதைப்பெறும் பருவம் அவதிப் பருவமாய்
திசையும் திருப்ப தீக்குழி ஆசைகள்
காதலும் வீரமும் கவர்ந்திடும் கண்ணிகள்
சோதனை செய்திடும் சோகத்தில் வீழ்த்திடும்.
அந்தோ மாந்தருக்கு இப்போது அல்லவா
சொந்தமாகும் எதிர்காலம் எழுதவும் படுகிறது!
நூறாண்டு முன்வரை குமுகாயப் பெரியோர்
மாறுதல், மட்டுறுத்தல், மற்றும் வழிகாட்டல்,
வழிவந்த பரம்பரை வம்ச வழக்கங்கள்,
எழுதாத சட்டங்கள் என்பன பலவைத்து
விடலைப் பருவத்தின் விபரீதம் குறைக்க
தடைபல செய்திருந்தார்.
தடைகளும் உடைய தற்போதின் உலகம்
விடலைகள் ராஜ்ஜியம்!
ஊடகம், விளையாட்டு, உணவகம், வித்தை,
ஏடுகள், கவிதை எதனை எடுத்தாலும்
இளைஞர் இன்று சாதனை இயற்றுகிறார்!
விளையாத சிலர் வீணாய்ப் போகிறார்!!
சிந்தை வளர்ந்தும் சிதைந்தும் மாறிய
விந்தைப் பருவமிதும் விடையும் பெறுகிறது.
முழுதாய் இன்றி மிச்சங்கள் வைத்தே
செழித்த இப்பருவம் செல்வது நடக்கிறது.
வேறாய் மாறும் வாழ்வின் ருசிகளில்
மாறுதல் செய்யும் மிச்சங்கள் இவையே.
விடலை ஏக்கங்களில் வெற்றி பெறாதவை
கடன்போல் மனதின் கருப்பு மூலையில்
தடமற்று ஒளிந்து தருணம் பார்த்திருக்கும்.
ஆயினும் பெரும்பகுதி விடலை பொசுக்கெனப்
போய்விடும் நேரங்கள் பொன்னான தருணங்கள்.
பட்டப் படிப்பு முடித்தால் போய்விடும்.
இஷ்டமான வேலை கிடத்தாலும் போய்விடும்.
காதலில் வெற்றியால் சிலருக்குப் போய்விடும்.
வேலையின் போதையால் சிலருக்குப் போய்விடும்.
புதிதாய் பொறுப்புகள், சுயமாய் சம்பளம்,
அதிகரிக்கும் மரியாதை மற்றும் அதிகாரம்
இவற்றால் போய்விடும்; இன்னும் இருக்குமானால்
அவைநின்று ஒருதுணை அகத்திற்கு அழைக்கும்
திருமணம் வந்திடும் திசையெலாம் மாறிடும்.
விடலைக் குணங்கள் இதன்பின்னும் தொடர்ந்தால்
விரைவில் வந்திடும் விவாகரத்தும்தான்.
ஒருவர் பொறையும் நட்பைக் காப்பதுபோல்
ஒருவரின் முயற்சி மணமுறிவைத் தடுக்கலாம்.
இப்போது வந்திடும் இறுதிக் கட்டம்
அப்பாவோ அம்மாவோ ஆனதின் பின்னாலே
கட்டாயம் போய்விடும் கடிதான குணமெலாம்
கட்டியம் கூறுவேன் கனிவாய் நானே!
**** **** **** **** **** **** ****
குறிப்புகள்:
கூடாது எதனால் = why not
அதனால் என்ன = so what
போதையால் = by involvement
இந்த மரபுக் கவிதை இனைக்குறள் ஆசிரியப்பா வகைச் சேர்ந்தது.
**** **** **** **** **** **** ****
10 Comments:
Vazhthkkal!
Can you brief abt structure of "Innaikurall Aashiriyappa"?
I'm not used to type in Tamizh.
நன்றி சுதர்சன்.
இணைக்குறள் ஆசிரியப்பா வின் இலக்கணத்தை ஒரு தனி பதிவாக போடுகிறேன்.
ஹேய் நடராஜன் நீங்கத்தானே, மரத்தடி நிழல் சூட்டைக் குறைக்கும் அப்படின்னு ஷார்ட் ஸ்டோரி எழுதினது. ஒரு வருஷம் இருக்குமுல்ல அதெல்லாம் நடந்து. ஆச்சர்யமாயிருக்கு உலகம் ரொம்பவே வேகமாச் சுத்துதுன்னு நினைக்கிறேன்.
அந்தக் காலமெல்லாம் இன்னைக்கு நினைச்சா ஆச்சர்யமா இருக்கு.
அதே பழைய தாச மோகன். :-)
மோகன்தாஸ், அதே மரத்தடி மனிதன்தான். வருகைக்கு நன்றி.
பழைய தாச மோகன்? மாற்றம் என்பது நிரந்தரமல்லவா? ஒரு வருட நிகழ்வுகள் உங்களுள் பதிந்திருக்குமே!
ராமானுஜன் பதிவு எப்போது?
நடராஜன் ஐயா,
//சிட்டுமனம் போய் சிலரின் பின்செல்லும்//
இங்கே எதோ கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கே? ஓரசை வருமா?
KVR,
ஆசிரியப்பா அடிப்படையில் ஈரசையைக் கொண்டது. மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே அரிதாய் வரும். ஓரசைச் சீர் வராது. ஆனால் சுலபமாகப் படிப்பதற்கு ஏதுவாக பதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்.
சிட்டும னம்போய் சிலரின் பின்செலும்
என்பதையே அவ்வாறு கொடுத்திருக்கிறேன். இதற்கு வகையுளி என்று பெயர். மூவசைச் சீர்களில் காய்ச்சீர் வரலாமென்பதால் பின்செலும் என்பதை எளிதாக்கி பின்செல்லும் என்று கொடுத்திருக்கிறேன்.
வேறு பிழைகள் இருந்தால் சுட்டவும். நன்றி.
நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..
உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....
யாத்ரீகன், தமிழா தமிழா,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Sorry for the English - I couldn't make my computer type Thamizh. However I didn't want to miss leaving my comments. Thank you for opening up a new world to me. I feel as if I traveled back in time. Thank you for nurturing our language. Hats off!
Saravanan
Thank you Saravanan.
To make your computer type Thamizh, please istall 'ekalappai'.
Try this link:
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
Post a Comment
<< Home