Monday, July 10, 2006

மரணத்தின் வலி

10-07-2006

தேன்கூடு போட்டிக்கான சிறுகதை.

மரணத்தின் வலி

கி.பி 2030ம் ஆண்டின் ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலை. இளஞ்சூட்டுடன் இருந்த அந்த கரடி பொம்மையை அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள் சுகா. அறைக்கதவை மென்மையாகத் தட்டி மகளை எழுப்ப முயன்ற ராகவன் தன் முயற்சியில் தோற்று தம் அறைக்குச் சென்று கணினித்திரையில் ஏதோ பிம்பத்தைத் தோற்றுவித்து அதை ஆராய ஆரம்பித்தார்.

"அப்பா, என்ன பாக்கிறீங்க, வாங்க டிபன் சாப்பிடலாம். நீங்க காத்துக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்".

"புஜ்ஜு என்னம்மா செய்யுது. நான் இன்னிக்கு அதுக்கு புதுசா ஒன்னு சொல்லிக் குடுக்கிறேன்".

"ஆனா அதோட தும்மலை கொஞ்சம் மென்மையாக்கனும்ப்பா. அப்புறம் ஒருநாள் தலைக்குமேலே தூக்கிப் போட்டு பிடிக்கும்போது கீழே விழுந்துவிட்டது.எழுந்து நடக்கும்போது விந்தி விந்தி நடந்தது ரொம்ப சூப்பர்ப்பா".

ராகவன் மென்மையாகச் சிரித்தார். அந்தக் கரடிக்குட்டி புஜ்ஜு அவர் மகளுக்காக அன்பை சேர்த்து செய்த பொம்மை. சந்தையில் கிடைக்கும் எத்தனையோ பொம்மை வகைகளில் என்னென்னெவோ வசதிகள் உள்ள பொம்மைகள் கிடைத்தாலும் செயற்கைத் தன்மை இல்லாத புஜ்ஜு அவற்றில் எதற்கும் ஈடாகாது. சதர்ன் ரொபாட்டிகஸ் நிறுவனத்தின் ஆர் அண்டு டி மேலாளர் ராகவன் - பேராசிரியர் ராகவன் இந்தத் துறையில் ஒரு ஜாம்பவான். தனது ரோபாட்டிகஸ் அறிவை கற்பனையும் அன்பும் கலந்து புஜ்ஜு என்கிற கரடி பொம்மைக்கு ஊட்டி தன் ஒரே மகளுக்கு அளித்திருந்தார்.

"ஆனா இது ரொம்ப சில்லியா இருக்குப்பா. 22 வயசாச்சு. மென்பொருள் வல்லமையில் முதுகலை பட்டம் வாங்கியாச்சு, இன்னும் கரடி பொம்மையுடன் விளையாடுறதுன்னா என் தோழிகள் ரொம்ப கிண்டல் பண்றாங்கப்பா".

கைபேசி அழைத்தது. ஆதவன் பேசினான். தொலைத்திரையில் வரச் சொன்னார். ஏதோ புராஜக்ட் பற்றி பேசினார்கள். தாமரையாக சுகா ஆதவனை தொலைத்திரையில் பார்த்துக் கொண்டிருந்தாள். பேசி முடித்தபின் ராகவன் சொன்னார்.

"ஆதவனைத் தெரியுமில்லையா? நீ புராஜக்ட் செய்த நிறுவனத்தில் உனக்கு ஆபீசராக இருந்தானே அவன்தான். இப்போது எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து பட்டய கிளப்புறான். MDக்கு அவன்பேர்ல அநியாய சா·ப்ட் கார்னர்".

"அப்பா, அவரு எனக்கு ஒரு நல்ல நெருங்கிய தோழரப்பா. எனக்கு நன்றாகத் தெரியும். அவரைப் பாருங்களேன் எங்கயோ போகப் போறார்".

"உண்மைதான். MD என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? அவனோட துறைத் தலைவர் என்கிற முறையில நான் நல்லா கவனிச்சுக்கனுமாம். அவன் நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்துங்கிறார்".

பாவம் ராகவன்! ஆதவனும் சுகாவும் எவ்வளவு நெருக்கம் என்பதை அவர் அறியமாட்டார். சென்றவாரம் அமெரிக்கா சென்று பெண்டகனிடமிருந்து ஒரு அருமையான ஒப்பந்தத்தை வென்று வந்திருக்கிறான் ஆதவன். இந்தியாவின் பல பெரிய மனிதர்களின் புருவத்தை உயர்த்திய வெற்றி. இதற்கப்பறம் MD ராகவனிடம் சொல்லியிருந்தார், அவனுடைய தனிப்பட்ட தேவைகளைக்கூட கவனிக்கச் சொல்லி. ராகவன் விசாரித்த வகையில் அவனும் அவன் அம்மாவும் மட்டுமே குடும்பம். அம்மா ஒரு அன்புச் சுரங்கம். இவன் ஒரு அறிவுச் சுரங்கம். ராகவன் மனதும் ஒரு கணக்கைப் போட ஆரம்பித்திருந்தது.

மறுநாள் காலை ஆதவன் புது புராஜக்ட் பற்றிய விரிவுரை ஆற்றிக் கொண்டிருந்தான்.

"அமெரிக்க காலாட் படையினருக்கு முடிதிருத்தும் ஒரு ரோபோ அமைப்பை வடிவமைப்பதுதான் இந்த புராஜக்டின் நோக்கம். அவர்கள் கூறியிருக்கும் சுமார் 30 பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மூன்று மாதக் கெடுவில் சமர்ப்பிக்கவேண்டும். முதல் 20 சோதனைகளுக்குப் பிறகே மனிதர்களிடம் சோதிக்கவேண்டும். க்ரூகட், கிராப் மற்றும் சம்மர் என்னும் மூன்று வகை விருப்பத்தேர்வுகள் இருக்கவேண்டும்...... .............. ................ ..............."

ஆதவன் சொல்லிக் கொண்டே போக அப்போது அங்குவந்த MD ஆதவனை அணைத்துக்கொண்டார்.

"குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நமது நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் இந்த ஒப்பந்தத்தினால் மிகவும் ஏறியிருக்கின்றன..... ........... ............... ஆதவனுக்கு நாம் அதிகபட்ச ஒத்துழைப்பை அளிப்போம் ............ ................ ............".

பேசி முடித்த MD ராகவனைத் தனியாக அழைத்து அவனுக்கு இந்தப் புராஜக்ட்டைப் பொருத்தவரையில் முழுச் சுதந்திரம் கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் அந்த விரிவுரை முடியும்போது வந்த கலந்துரையாடலில் ராகவன் அவனுடன் சற்று உரசலான கருத்து மோதலைச் சந்திக்க வேண்டியிருந்தது. இயந்திரத்துறை அறிவிலும் மென்பொருள் அறிவிலும் தேர்ந்திருந்த ஆதவன் எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் கூறியதோடு யோசனைகளையும் பரிசீலித்து ஏற்றுக்கொண்டான். அவன் ராகவனின் யோசனைகளை நிராகரிக்க நேர்ந்தபோது சற்று பனிவாகவே செய்தாலும் அங்கே அகங்களின் மோதல் வித்திடப்பட்டுவிட்டது. வயதை அனுபவத்திற்கு சமமாக அவர் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது புது சிந்தனைகளை ஊக்குவிப்பதில் குறுகிய உள்ளத்தைக் கொடுத்துவிட்டது. இந்த பனிப் போர் நாளொரு மேனியாய் வளர்ந்து ராகவனின் உள்ளம் விஷமாகிப் போனது.

மற்றொரு ஞாயிற்றுக் கிழமைக் காலை உணவில் ஆதவனைப் பற்றி சுகா தன் மனதை ராகவனுக்கு திறந்தபோது அவர் சீறி விழுந்தார்.

"சுகா, அவனுக்கு அறிவுக்குச் சமமாக ஆணவமும் இருக்கிறது. அதைவிட அதிகமாகவே இருக்கிறது. எல்லோரும் அவனை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு ஆடும்போது அவன் தலைகால் புரியாமல் குதித்துக் கொண்டிருக்கிறான். நீ இதையெல்லாம் யோசித்துக்கொள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்".

சுகா இதை எதிர்பார்க்கவில்லையென்றாலும் அதிர்ச்சியடையவில்லை. அவளுடைய புரிதலில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது.

"அப்பா நாளைக்கு HCR (HAIR CUT ROBOT) புராஜக்ட்ல மனிதப் பரிசோதனை டெமோ இருக்கில்லியா, அதற்கு என்னை அழைத்திருக்கிறார் ஆதவன். நானும் உங்களுடனே வருகிறேன்."

"இல்லை. நீ வரவேண்டாம். நாளை டெமோ சரியாக நடக்குமென நான் நம்பவில்லை. எனக்கு எனக்கே உரிய சந்தேகங்கள் இருக்கின்றன. பெண்டகனிலிருந்து அப்சர்வர் வேறு வருகிறார். நீ வேண்டாம்."

அவர் குரலில் இருந்த கடுமை புதிதாக இருந்தது. சுகா யோசிக்க ஆரம்பித்தாள். ஆதவனின் துறையில் வேலை செய்யும் அவனது ஒரு சகா தொலைத்திரையில் வந்து அப்பாவிடம் பேச ஆரம்பித்தபோது சுகாவை அவளறைக்குப் போகச்சொன்னார் ராகவன். சுகாவின் யோசனை தீவிரமடைந்தது. ஆதவனுக்குப் பேசி HCR புராஜக்டின் கடவுச் சொற்களை வாங்கினாள். பூனா சென்றிருந்தவன் மறுநாள் காலைதான் வருகிறான். அதுவும் நேராக அலுவலகத்திற்கு வருகிறான். சுகா அந்தப் புராஜக்டின் நிரலிகளை மேய்ந்தாள். குடைந்து குடைந்து பார்த்தாள். நேராக ஆதவனின் துணையாள் ஷாலியின் வீட்டுக்குச் சென்றாள்.

"ஷாலி நாளைக்கு டெமோவின் தகவல்களைச் சொல்வாயா?"

"உனக்கில்லாமலா! நீயே தானே ஆதவன்! இதுவரை ரொம்ப அற்புதமாய் வந்துவிட்டது. நாளைக்கு டெமோவும் 30ல் 23ம் பரிசோதனையும். ஏற்கனவே இரண்டு முறை மனிதர்களுக்கு முடிவெட்டி பார்த்தாகிவிட்டது. நாளைக்கு விருப்பத் தேர்வுகள், க்ரூகட் கிராப் மற்றும் சம்மர் இவை எப்படி வருகின்றன என்று பார்ப்பதுதான் முக்கிய குறிக்கோள்".

"பெண்டகனிலிருந்து பிரதிநிதி வந்திருக்கிறாராமே!"

"ஆமாம் அதற்காகத்தான் முதலில் மூன்று பொய் மனிதர்களுக்கு முடி வெட்டியபின் நமது நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேர் முடிவெட்டிக் கொள்ளப் போகிறார்கள். ஆதவனே முடிவெட்டிக் கொள்ளப்போகிறார். அந்த விருப்பத்தேர்வை நீதான் செய்யப் போகிறாய். அதற்குத் தான் உன்னை வரச்சொன்னார்".

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வந்தவள் அப்பாவை அவருடைய தனி பரிசோதனை அறையில் பார்த்தாள். HCRன் ஒரு மாதிரிப் பிரதி அவரிடம் இருந்தது. அதில் ஏதோ சோதித்துக்கொண்டிருந்தார்.

"கடைசி நேர சோதனைகளை செய்து கொண்டிருக்கிறேன் சுகா. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நீ சாப்பிட்டாயா? மதிய உணவு நான் சாப்பிட்டு விட்டேனம்மா" என்றார்.

"நானும் ஷாலியுடன் சாப்பிட்டுவிட்டேன் அப்பா. எனக்கு உங்கள் கணிணியில் செய்ய வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கிறதப்பா. எப்போது உங்கள் வேலை முடியும்?"

"இதோ முடிந்துவிட்டது. நீ வேலை செய்" என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். சுகா கணிணியை நோண்ட ஆரம்பித்தாள். HCR புராஜக்ட்டில் இன்று புதிய நிரலி ஒன்று சேர்ந்திருந்தது. இல்லை, பழைய நிரலி மாற்றப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தது. என்ன மாற்றம் என்று குடைந்தாள். இடையில் இரண்டு வரிகள் சேர்ந்திருந்தன.

T@227 X= 0, Y= -300, Z= Z_CHINT (-) 50
Y==>0 SP= SP_MAX

அவள் இதற்குப் பொருளை யோசிக்க ஆரம்பித்தாள். T@227 உடனே புரிந்துவிட்டது. 227வது விநாடியில். 227வது வினாடியில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது? ஆதவனை அழைத்தாள். இவள் இரண்டாவது முறையாக இன்று அழைத்ததில் ஆதவன் உச்சத்தில் இருந்தான். உச்சஸ்தாயி உற்சாகத்தில் பேசினான். சற்று ஓய்வாக இருந்தான் போலிருக்கிறது.

"சுக், நாளைக்குப்பார். என் சுருட்டை முடியை என் புராஜக்ட்டுக்கு பலியாகப் கொடுக்கப்போகிறேன். உனக்கு என்ன வேண்டும் க்ரூகட், கிராப், சம்மர்.........".

"எதுவானாலும் முடிவெட்டும்போது அந்த வழியிற முகத்தைப் பார்க்கணும். நான் கண்ண மூடிக்கிட்டு ஏதோ ஒரு தேர்வைச் செய்கிறேன்".

"முகத்தில் தாடைவரைக்கும் பாலிகார்பனேட் மாஸ்க் இருக்கும். அதுவே எண்ணெய் கலர்லதான் இருக்கும். கழுத்துவரைக்கும் ராணுவ டிசைனில் செயற்கைப் பட்டுத்துணி போர்த்தியிருப்பேன். உனக்கு வேடிக்கை விநோத நிகழ்ச்சிதான் நாளைக்கு".

"பொய் மனித முடிவெட்டுக்கப்புறம் முதல் மனித முடி வெட்டு உனக்குதானா ஆதவ்?"

"உங்கப்பாதான் பொய் மனிதன் அப்படின்னு ரொம்ப பாதுகாப்பு ரவுஸ் பண்றார். நாளைக்கு பார். பொய் மனிதர்களெல்லாம் இல்லை. நேராக நான்தான் முதலில் முடிவெட்டிக்கொள்ளப் போகிறேன்."..... ....... ......"சுக், என்னை அவசரமாக அழைக்கிறார்கள் இனி இரவு வரை என்னைப் பிடிக்க முடியாது. அதிகாலை விமானம் பிடித்து நேராக அலுவலகம் வந்து விடுவேன். அங்கு சந்திப்போம்".

ஆதவன் தொடர்பைத் துண்டித்தான். 'நாளைக்கு அந்த பெண்டகன் ஆளை மனோதிடம் காட்டியே அசத்தப்போகிறான் ஆதவன்' என்று நினைத்துக் கொண்டே நிரலியை பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். Z_CHINT என்று வேறு எங்குமே வரவில்லை. பிறகு ஏன் புதிதாக? இந்த X Y Z எல்லா இடத்திலும் விரவிக்கிடக்க இது அவளை உறுத்தியது. ஷாலியைக் கூப்பிட்டாள்.

"ஹே ஷாலி, உன் பாஸ் ஆதவன் தொலைத்திரையில் வந்தான். ரொம்ப குஷியாய் இருக்கிறான். உங்க டீமுக்கு நாளைக்கு கொண்டாட்டம்தான் போலிருக்கு".

"நீ வருவதையே எங்களுக்கு இன்னொரு கவுரவமாய் அவன் செய்திருக்கிறான். ஜமாய்".

"இப்ப உங்க பாஷையில ஒரு கவிதை சொல்லப்போகிறேன்".

"ம், சொல்லு".

"என் கண்கள் மேயும் வழியில்
Z_CHINT(-) 50 ல் குத்திட்டு நிற்கிறது
X Y எல்லாம் ஏதோ இருக்கட்டும்
அடுத்த SP, SP max தான்".

"வாவ். பின்னிட்டே போ. ஆனா உனக்கு இந்த கோடெல்லாம் எப்படித் தெரியும். ரொம்ப ரகசியமாச்சே? அப்புறம் ஒரு தப்பு. Z_CHINT (-)50 ன்னா தாவங்கட்டைக்குக் கீழே 5 செமீ. Z_CHINT(+) 50 ன்னு நீ சொல்லனும். அங்கதான் உதடுகள் இருக்கு".

"ஹே ஷாலி, நான் சும்மா அடிச்சுவுட்டேன். பிளஸ் மைனஸ் எல்லாம் எனக்கென்னதெரியும்".

"அப்படியா. கவிதைன்னா எப்படி வேணா அர்த்தம் சொல்லிடலாம். எங்க ரோபாட்டிக்ஸ்ல உச்சந்தலைதான் ஆரம்பப்புள்ளி. Z ன்னா செங்குத்து அச்சு. CHINT ன்னா தாவங்கட்டை முனை 5 செமீ மைனஸ்னா குரல்வளை, 5 செமீ பிளஸ்ஸுன்னாதான் உதடுகள்"

ஒரு கணம் சுகாவின் இதயம் நின்று பிறகு பயணித்தது. 'ஓ என் தெய்வமே!'

"SPன்னா ஸ்பீடு, வேகம் அதானே".

"ஆதவனுக்கு ஏத்த ஜோடிதான் நீ".

"சரி ஷாலி, நான் அப்புறம் பேசறேன்".

சுகா வியர்த்திருந்தாள். நிரலியை மீண்டும் படித்தாள்.
T@227 - 227 வது விநாடியில்
அதாவது தொடங்கி கிட்டத்தட்ட மூன்றரை நிமிடத்தில்
X = 0 இது சரி
Y = 300 - உச்சந்தலை ஆரம்பப்புள்ளியென்றால் முகத்துக்கு நேரே 30செமீயில் ,
Z_CHINT(-)50 - தாவங்கட்டை முனைக்கு 5செமீ கீழே
அதாவது குரல்வளைக்கு நேரே
Y==>0 SP=SP_Max -முகத்தை நோக்கிச் சென்று அதிக பட்ச வேகத்தில் இயங்கவேண்டும்
- எது?
ஐயோ! முடிவெட்டும் கத்திரிகள்!

தெய்வமே! சுகாவின் முகம் வெளிறியது. பிரேதக்களைக்கு வந்துவிட்டது. 'ஐயோ இப்போது என்ன செய்யப் போகிறேன். இவ்வளவு மோசமானவரா அப்பா? என்னதான் பொய் மனிதர் கழுத்துக்கு கத்தி வைத்து ஆதவனின் புகழைக் கெடுக்க நினைத்தாலும், இப்போது ஆதவனின் கழுத்துக்கே கத்தி வருகிறது போலிருக்கிறதே'. வியர்வை ஆறாகப் பெருகி ஓடி அவள் உடைகளை நனைத்திருந்தது. ஷாலியிடம் சொல்லலாமா? அவளை வைத்துக் கொண்டு நிரலியையே மாற்றிவிடலாமா? அல்லது நாமே இந்த இரண்டு வரிகளை அழித்து விடலாமா? வேறு ஏதாவது கோளாறு வந்துவிட்டால்? அப்பாவைக் காட்டிக் கொடுக்க முடியுமா? பலவிதமாக பதற்றத்துடன் யோசித்தாள். அப்பாவின் அறையில் அரவம் கேட்டது. ஓய்வெடுத்து எழுந்துவிட்டார் போலிருக்கிறது. அவர் வருவதற்குள் ஏதாவது செய்யவேண்டுமே? பளிச்சென்று மூளைக்குள் மின்னலடித்தது. நிரலியின் ஆரம்பத்தில் ஏதோ அவசரமாக தட்டச்சினாள். சேமித்து மூடினாள். தனக்குப் பிடித்த கரடி விளையாட்டை கணினியில் தொடங்கினாள்.

"என்னாம்மா இது? விளயாடுவதற்கா என் கணினியைக் கேட்டாய்? இதை உன்னுடையதிலேயே விளையாடலாமே?"

"இல்லையப்பா, இதை என் தோழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். விரைவாக அனுப்ப வேண்டும் அதான் உங்களுடயைதைக் கேட்டேன். முடிந்து விட்டது. நீங்கள் வேலை செய்யலாம்."

எழுந்து தன் அறைக்குச் சென்றவள் மெதுவாகத் திரும்பி வந்து அப்பா என்ன செய்கிறார் என்று பார்த்தாள். அவள் நினைத்தது சரியாகப் போயிற்று. அந்த T@227 இருக்கிறதா என்று ராகவன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்ன நிரலியப்பா இது?"

"நாளைக்கு டெமோ இருக்கில்லியா அதற்கானதுதான் இது"

"யாரெல்லாம் இதை ஆக்ஸஸ் செய்யலாமப்பா?"

"நானும் ஆதவனும் மட்டுமே ஆக்ஸஸ் செய்ய முடியும். எல்லாம் சரியாக இருக்கிறதம்மா"

மனதுக்குள் குமுறிய சுகா தன் அறைக்குச் சென்று தன் கணினியில் சிறிதாக ஒரு நிரலி எழுதி சோதித்துப் பார்த்தாள். திருப்தியாக இரவு உணவு உண்டு தூங்கப் போனாள். காலையில் மிகவும் பிடிவாதம் பிடித்து ராகவனுடன் அலுவலகம் வந்தாள்.

அங்கு டெமோவிற்கான இடம் களைகட்டியிருந்தது. ஆதவன் வந்துவிட்டான். அறிவிக்கத் தொடங்கினான்,

"முன்னமே தீர்மானித்ததில் ஒரு மாற்றம் செய்திருக்கிறேன். முதலில் பொய் மனிதர்களை வைத்து முடிவெட்ட வேண்டாம். நானே முதலில் முடிவெட்டிக் கொள்கிறேன். என் தோழியும் ராகவன் சாரின் பெண்ணுமான சுகா தன் விருப்பத்தேர்வை தேர்வு செய்வார்."

துள்ளி எழுந்த சுகாவை துடித்துத் தடுத்தார், ராகவன். சுகா எதிர்பார்த்ததுதான்.

"ஆதவன், இதை நான் அனுமதிப்பதற்கில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்படி நீங்கள் தன்னிச்சையாக மீறுகிறீர்கள்? முதலில் பொய் மனிதர்களை வைத்துதான் முடிவெட்ட வேண்டும்."

அதிகாரமாய் கூறி அமர்ந்தார் ராகவன்.

"சார் ஏற்கனவே இரண்டுமுறை மனிதர்களை வைத்து பரிசோதித்து விட்டோம். இனி அடுத்த படியில் பின்னேறுவது எனக்கு சரியாகப் படவில்லை. முதலில் சே·ப்டி மாஸ்க் கூட போட வேண்டாமென்று நினைத்தேன். இப்போது மாஸ்க் போட்டுக் கொள்கிறேன். முதலில் நானே வெட்டிக் கொள்கிறேன்." என்றான் ஆதவன்.

MD குறுக்கிட்டார். " இரண்டு முறை நாம் மனிதர்களை வைத்து பரிசோதித்தபின் எதற்கு பொய் மனிதர்களெல்லாம். நேரடியாகவே செய்யலாம். அப்சர்வரும் மகிழ்வார்."

ராகவன் வெளிறிய முகத்தோடு பதற்றமான குரலில் பேச ஆரம்பித்தார். மிக உயர்ந்த குரலில்,

"நான் சொல்வதை மீறிச் செய்யும் எந்த செயலுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன். ஆதவன் மற்றும் MDயின் சொந்தப் பொறுப்பில் இந்த டெமோவை நடத்துங்கள்."

சுகா அதிர்ந்து போனாள். எப்படியாவது தடுத்துவிடுவார் என்று நினைத்த அப்பா எப்போது இவ்வளவு கொடுமைக்காரராக ஆனார்? என்னதான் பிடிக்காதவனாக இருந்தாலும் கொலையா செய்வார்? அவரின் நிரலியின் படி ஆதவன் கழுத்து அறுபடுவதை எப்படியாவது நிறுத்தியிருக்க வேண்டாமா?

"ராகவன் சார், இதை என் சொந்தப் பொறுப்பிலேயே நடத்தி விடுகிறேன். எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் கவலையே பட வேண்டாம். தங்கள் கோரிக்கையை மீறுவதற்கு என்னை மன்னியுங்கள்." என்ற ஆதவனைப் பார்த்து ராகவனின் முகம் இறுகியது. ஒன்றும் சொல்லாமல் தன் அறை நோக்கி நடந்தார். சுகா தன் அப்பாவின் மீது வெருப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டாள். அவ்வலுவலகத்தை விட்டு வெளியேறினாள். ஆதவனுக்கு ஒன்றும் நேராதபடி நிரலியை மாற்றியிருந்தது அப்பாவுக்கு தெரியாத நிலையில், அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை தன் அப்பா ஒரு கொலை செய்கிறார். அதும் தன் அன்புக்கு மிகவும் பாத்திரமானவனை. கொலைக்கு திட்டமிடவில்லையென்றாலும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்கிறார். அவ்வலுவலகத்தைவிட்டு அவசரமாக வெளியேறினாள். தவிர்க்க முடியாத காரணத்தினால் உடனே வெளியேறுவதாக ஷாலியிடம் சொல்லிவிட்டு வீடு நோக்கி விரைந்தாள்.

நடுங்கியபடி தன் அறையில் அமர்ந்திருந்தார் ராகவன். இந்நிகழ்வுக்குப் பிறகு என்ன செய்வது என்று யோசிப்பதில் அவர் மனம் மூழ்கியிருந்தது. ஒரு மணி நேரம் கழித்து அவருக்கு தகவல் வந்தது. பரிசோதனை பூரண வெற்றி. ஆதவன் அவர் அறைக்கு வந்தான். புதிதாக முடிவெட்டப்பட்ட தலையுடன். 16 டிகிரி செண்டிகிரேடு குளிரில் அறை இருந்தாலும் வேர்த்திருந்த ராகவன் குற்ற உணர்வுடன் அவனைப் பார்த்தார். நெற்றிக்கு மேலே ஒரு சிறு பரப்பில் முடி வெட்டப்படாமல் இருந்தது. அதை சுட்டிக் காட்டி கேட்டார், "ஏன் இப்படி?"

"சார் நிரலியில் ஏதோ ஒரு சின்ன பக்(BUG) இருக்கு. சரி பண்ணிடலாம். மற்றபடிக்கு எல்லாமே பக்காவாக வேலை செய்கிறது. முடி வெட்டிக் கொண்ட மூன்று பேரிடமும் அந்த முன்னெற்றில் வெட்டப்படாத முடி இருக்கிறது. என்னவென்று பார்த்துவிடுகிறேன் சார்." என்றான் ஆதவன்.

"வாழ்த்துக்கள் ஆதவன். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது, உங்களை அப்பறம் பார்க்கிறேன்."

நிம்மதிப் பெருமூச்சு விட்டவர் அந்த நிரலியைக் கணினியில் திறந்தார். Z_CHINT(-)50 அங்கேயே இருந்தது. பிறகெப்படி? பாப்மெயிலில் ஒரு மின்னஞ்சல் துள்ளியது. சுகா அனுப்பியிருந்தாள்..

"கொலைகார அப்பாவுக்கு, நீங்கள் எப்படியும் தடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். T@227ல் ஆதவனின் கழுத்து வெட்டப் படுவதைக் காணச் சகியாமல் அறைக்குள் ஒளிந்துகொண்டீர்கள். நான் அவரைக் காப்பாற்றிவிட்டேன். நிரலியில் மூன்றாவது வரியைப் பாருங்கள்."

பார்த்தார். புதிதாக ஒரு வரி சேர்ந்திருந்தது.

T@220 T=230.

அவருக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது. அதாவது 220 வது விநாடியிலிருந்து 230வது வினாடியில் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும். அந்த பத்து வினாடிகளை பைபாஸ் செய்து விட்டாள். 'என்னை பெரும் பழியிலிருந்து காப்பாற்றி விட்டாய் மகளே! ' ஆனால் அந்த பத்து வினாடிகளைச் சாப்பிட்டவள் ஜீரணித்துவிடவில்லை. மேலும் படிக்கலானார்.

"யார் பெற்ற பிள்ளையோ மரித்தால் உங்களுக்கென்னப்பா? அவரை பெற்ற வயிறு எப்படி எரிந்தால் உங்களுக்கு என்ன? உங்கள் மகளின் மனம் கவர்ந்தவனேயானாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அவன் உயிரை விட வேண்டும். அப்படித்தானே? எவ்வளவு கல்மனம் உங்களுக்கு. ஆனால் உங்களை நான் விடப்போவதில்லை. அந்த மரண வலியை நீங்கள் உணர வேண்டுமப்பா! அதை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்."

செத்துகொண்டிருந்த ராகவன் பரபரப்பானார்.

"உங்கள் பரிசோதனைச் சாலையில் HCRன் இன்னொரு பிரதி இருக்கிறது. அதில் என்னால் மாற்றப்படத, நீங்கள் ஆதவனுக்கு அளிக்க விரும்பிய நிரலி அப்படியே இருக்கிறது. உங்கள் ஆசை மகள் அங்கு முடிவெட்டிக் கொள்ளப் போகிறாள். கழுத்து அறுபட்டு நீங்கள் காண விரும்பிய ஆதவனின் கோலத்தில் என்னைப்பார்க்கலாம் வாருங்கள். கதவை உள்தாழ்ப்பாள் போட்டிருக்கிறேன். என் கை கால்களை அந்த நாற்காலியில் நானே கட்டிக் கொண்டுவிடுவேன். இங்கு என் கதறலுக்கு ஒடி வர யாருமே இல்லை. உங்களிடம் மட்டுமே மாற்றுச்சாவி இருக்கிறது. இந்த உலகித்திட மிருந்து விடை பெறுகிறேன்."

"சுகா" என்று அவர் அலறியதில் அலுவலகமே குலுங்கியது. உணர்ச்சிகளின் செம்பிழம்பாய் ஓடோடி வந்து பரிசோதனைச் சாலையைத் திறந்தார். அங்கே குற்றுயிரும் குலையுயிருமாய் பாதி முடியும் கழுத்தும் வெட்டப்பட்ட புஜ்ஜூ கரடி பொம்மை இருந்தது. அன்பின் மரணத்தை ஒரு குரூர அழகாய்ச் சொல்லிவிட்டு சுகா ஆதவனுடன் எங்கோ ஏகியிருந்தாள்.

********** ************* **************

17 Comments:

At July 11, 2006 12:48 AM, Blogger KVR said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க நடராஜன். ஒரு முழுமையான அறிவியல் புனைகதை.

 
At July 11, 2006 1:33 AM, Blogger ஓகை said...

நன்றி KVR. உடனே பின்னூட்டம் எழுதியதற்கு மிகவும் நன்றி.

படிப்பவர்களுக்கு புரியாமல் போய்விடுமோ என்கிற பயம் எனக்கிருக்கிறது.

அந்த bug எது என்று யாராவது சொன்னால் மிகவும் மகிழ்வேன்

 
At July 11, 2006 2:33 AM, Blogger KVR said...

நடராஜன், 220வது நொடியில் 230வது நொடிக்கான வேலையைச் செய்ய வேண்டும் என்று நிரலி மாற்றப்பட்டதால் அது முன் நெற்றி முடியை வெட்டவில்லை, சரி தானே?

 
At July 11, 2006 2:36 AM, Blogger KVR said...

T@220 T=230.


புள்ளி வச்சு கோலம் போட்டதாலே பக் வந்துடுச்சா?

 
At July 11, 2006 2:52 AM, Blogger ஓகை said...

KVR,
220 இலிருந்து 230 வரை வெட்டப்பட வேண்டிய முடிதான் வெட்டப்படவில்லை. மிகச்சரியாக நான் நினைத்ததை சொல்லிவிட்டீர்கள். புரியும்படியாக எழுதியிருக்கிறேன் என்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக நன்றி.

அந்த புள்ளிக்கோலம் தட்ட்ச்சும்போது நான் செய்த அலங்கோலம். மென்பொருளாளர் அல்லவா! ட்க்ட்க்கென்று பிடிக்கிறீர்கள்.

 
At July 11, 2006 5:57 AM, Anonymous Dubukku said...

மிக நன்றாக் எழுதியிருக்கிறீர்கள். விறுவிறுப்பக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

 
At July 11, 2006 9:53 PM, Blogger ஓகை said...

டுபுக்கு, வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி

 
At July 21, 2006 10:24 PM, Blogger Manki said...

விறுவிறுப்பாக இருந்தது.

ராகவன் செய்த code மாற்றங்களைப் பார்த்து விட்டு ஆதவனைத் தொலைபேசியில் அழைக்கும் சுகா, அதைப்பற்றி ஒன்றுமே பேசாமல், காதல் வசனம் பேசுவது உறுத்துகிறது ("எதுவானாலும் முடிவெட்டும்போது அந்த வழியிற முகத்தைப் பார்க்கணும்").

மற்றபடி நன்றாகவே இருந்தது.

 
At July 21, 2006 11:26 PM, Blogger ஓகை said...

நன்றி மன்கி.

அவள் இரண்டாம் முறை அழைத்த குஷியில் ஆதவன் அவளைப் பேசவே விடவில்லை. அவள் பேசுவதற்குமுன் அவசர வேலையாக அவனே தொடர்பைத் துண்டிக்கிறான்.

இவ்விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது உண்மை.

 
At July 22, 2006 12:19 AM, Blogger நாமக்கல் சிபி said...

கதை மிகவும் நன்றாக இருக்கிறது.
பத்திரிகைகளுக்கு அனுப்பலாமே!

 
At July 22, 2006 2:55 AM, Blogger கார்த்திக் பிரபு said...

sir kalakal sir ..miga nandraga yosithu eludhi irukireergal

climax-il andha iyandhirathinaal karadi pommai kolla padum andha idam soopero super.

neengal software engineera ..kalkal ponga..

sujatha sir stylil iruku..ennakennavo parisu ungaluku than kidaikum nu thonudhu..ean idha neengal anandha vikatankkun anuppa kudathu?

ungal padhillkaga aavala kathrukirane.

pls use one clk to reply or pls put ur comments in my blog..thanks sir

 
At July 22, 2006 9:12 AM, Blogger ஓகை said...

நன்றி சிபி, முயன்று பர்க்கிறேன்.

 
At July 22, 2006 9:14 AM, Blogger ஓகை said...

Dear Karthic,

thank you for your liberal comments. I am not a sw engineer. But I am a mechanical engineer.

 
At July 22, 2006 7:12 PM, Blogger ENNAR said...

நடராஜ்
நல்ல புதுமையான அறிவியல் கதை நன்றாகவே உள்ளது

 
At July 22, 2006 10:33 PM, Anonymous Anonymous said...

இது ஒரு நல்ல முயற்சி. தமிழில் அறிவியல் கதைகள் மிகக்குறைவு. இத்தகைய முயற்சிகள் பல தேவை. வாழ்த்துக்கள்

சந்தர்

 
At July 23, 2006 9:16 AM, Blogger நாமக்கல் சிபி said...

//But I am a mechanical engineer//

அதான் CNC புரோகிராமிங்க்ல கலக்குறீங்க!

 
At July 23, 2006 9:04 PM, Blogger ஓகை said...

என்னார், மிக நன்றி.

சந்தர், உங்கள் ஆதரவுக்கு நன்றி.

சிபி, இப்படி உள் ரகசியத்தையெல்லாம் போட்டு உடைக்கிறீங்களே! அப்ப நீங்க நம்ம ஜாதியா? இயந்திரவியல் பொறியியல் ஜாதியைச் சொன்னேன்.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home