சிதம்பரத்தில் தமிழ்
22-7-07-2006
சிதம்பரத்தில் தமிழ்
. தமிழ் இணையப் பேரம்பலத்தில் இப்போதைய நடுநாயகம் சிதம்பரமும் தமிழும். பலரும் பதிவுகள் போட்டுவிட்டார்கள். KV ராஜாவின் பதிவில் நானும் சில பின்னூட்டங்கள் இட்டிருந்தேன். முகமூடியின் பதிவு மிகவும் புரிந்துணர்வுடனும் தகவல் செரிவுடனும் இருந்தது. இவிஷயம் பற்றிய பல பதிவுகளில் சிறில் அலெக்ஸின் பதிவும் சிறப்பானதாக இருக்கிறது.
. மற்ற பதிவுகளிலிருந்து நான் அறிந்து கொள்வதெல்லாம் என்னவென்றால் எப்படி தமிழின் பெயரைச் சொல்லி தமிழர்களை ஏமாற்றலாம் என்பதே. குறிப்பிட்ட சம்பவம் சிதம்பரம் கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பாடக்கூடாது என்பதை தீக்ஷசதர்கள் வலியுறுத்துவதுதான். தமிழில் என்றில்லை - எந்த மொழி என்பதுமில்லை - அந்த இடத்தில் அவர்களைத் தவிர யாரும் பாடக்கூடாது என்பது நியதியாக இருக்கிறது. இது இடம் பற்றிய பிரச்சனையே தவிர தமிழ் பற்றிய பிரச்சனையே அல்ல. சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடக்கூடாது என்பது போல விஷயத்தை திரித்துவிட்டு தமிழுக்கு அநீதி என்பது போல தகாத தமிழில் நாகரீகமற்ற சொற்களால் வசை பாடி தீர்ப்பது தமிழுக்குச் செய்யப்படும் துரோகம். அந்த இடத்தில் கோவிலில் பாடக்கூடாது என்ற கோவில் நியதி ஏன் மாற்றப்படவேண்டும் என்கிற அடிப்படை வினாவிற்கான பதிலை ஏற்றுக் கோள்ளும் விதமாகக் கொடுக்க யாருமே இல்லை.
. நான் அறிந்தவரை சிவன் கோவில்களில் தமிழ் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு வேறு குலத்தவர்கள் அர்ச்சகர்களாக வந்தபின்னும் கூட, அவர்கள் கடமை செய்யும் இடத்தில் அங்கு உரிமை இல்லாத ஒருவர் - அவர் யாராக இருந்தாலும் - தமிழில் பாடுவது மட்டுமில்லை எதையுமே செய்யமுடியாது என்பது அடிப்படையான விஷயம் இல்லையா? இந்த அடிப்படையை மீறும் விதமாக நடப்பது முறையற்ற செயல் என்று ஆடவல்லானையும் திருவாசகத்தையும் தமிழையும் போற்றும் அனைவரும் கண்டிக்கவேண்டுமில்லையா? அதை விடுத்து திரு இராம.கி ஐயா போன்றவர்களே இதை நியாயப் படுத்த முற்படுவதும் திருகுத் தாளம் என்றெல்லாம் சொற்பிரயோகம் செய்வதும் மனதுக்கு வேதனையாக இருக்கிறது. சிவன் சொத்து குல நாசம். இதை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். இது உண்மையாக நடக்கவேண்டும். சிவன் சொத்தை சூறையாடிய அனைவரும் - அனைவரும் - வேரடி மன்னோடு நாசமாகவேண்டும். அவர்கள் இந்த சிவனுடைய தென்னாட்டிற்கு களங்கம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன்- சிவன் சொத்து குல நாசம். இது உண்மையாக நடக்கவேண்டும். சிவன் சொத்தை சூறையாடிய அனைவரும் வேரடி மன்னோடு நாசமாகவேண்டும். அவர்கள் இந்த சிவனுடைய தென்னாட்டிற்கு களங்கம். மனித குலத்திற்கே களங்கம். இதற்காகவே சாபங்கள் பலிக்கும் நாட்கள் மீண்டும் வரவேண்டும்.
. இறையுணர்வை மதிக்காதவர்களும், இந்து மதத்தை எப்பொழுதும் தூற்றுபவர்களும் இறைவன் தமிழால் போற்றிப் பாடப்படவேண்டுமென்று வசை மொழிகளால் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
. வெல்ல வல்லமையற்ற வாதங்களை, வழக்கு மன்றத்தில் செல்லுபடியாகமுடியாத வாதங்களை வைத்துக் கொண்டு வழுச்சொல் வன்முறையால் வலையுலகில் வல்வழக்கு ஆடுகிறார்கள்.
"வாசி வாசி என்று வாசித்த தமிழின்று
சிவா சிவா என சிந்தைதனில் நின்று...."
என்று அவ்வை திருவிளையாடல் திரைப்படத்தில் பாடினார். ஆனால் வாசிக்க முடியாத தமிழினால் வசையே தமிழாய் ஒலிக்கும் வலைபூக்கள் எத்தனை? ஒரு அச்சு ஊடகத்தில் இன்னதுதான் எழுதலாம் என்ற வரைமுறை வழக்கத்தில் இருக்கிறது. அது இணையத்துக்கு இல்லயா? இறை நம்பிக்கை பற்றிய தமிழைப் பற்றிய ஒரு பதிவை எழுதுகிறோம் என்கிற உள்ளுணர்வு இருந்தால் எப்படி இவ்விதமான மொழியில் பதிவிடுவார்கள்? கல்வியறிவும் கணினி அறிவும் உள்ளவர்கள் கையாளும் தமிழ் கனிச்சாறுபோல் இனிக்க வேண்டாமா? பல சமயங்களில் கைத்துப் போயிருக்கிறதே?
. வசைமொழி அற்றதொரு வலையுலகும் வந்திடாதோ?
. இசைமொழி என்தமிழில் இறைஞ்சினேன் தில்லையரனே!
. திசையெட்டும் தமிழ்பரப்பும் வலையறிஞர் மனம்திறக்கும்
. விசையறியாப் பேதையிச் சிறுவன் ஓகை நடராசனே!
*** *** *** *** ***
35 Comments:
தில்லை நடராசருக்கு தமிழ் புரியாது என்பதை உலகுக்கு உணர்த்தும் தீட்சிதர்களுக்கு நன்றி .
இனியாவது தமிழில் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தாம் வேண்டி கொள்வதை மொழி பிரச்சனையால்
தில்லை நடராசருக்கு புரிய இயலாது என்பதைப புரிந்து கொள்ளட்டும்.
மேலும் இயக்குநர் ஷங்கர் படபிடிப்பெடுத்த புண்ணிய தலத்தை அசிங்க படுத்த நடந்த முயற்சிகளை முறியடித்த
தீட்சிதர்களுக்கு நன்றி
//
அந்த இடத்தில் கோவிலில் பாடக்கூடாது என்ற கோவில் நியதி ஏன் மாற்றப்படவேண்டும் என்கிற அடிப்படை வினாவிற்கான பதிலை ஏற்றுக் கோள்ளும் விதமாகக் கொடுக்க யாருமே இல்லை.
//
மீண்டும் மீண்டும் எத்தனையோ பேர் விளக்கம்
கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நீங்களோ,
உங்களைப் போன்ற கருத்துடையாரோ தயாரில்லை.
முயலுக்கு மூனே கால் என்று நிலையெடுத்துப்
பிறர் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்
என்று கருதுகிறீர்களே தவிர, அறிஞர் இராம.கி போன்றோரே சொல்கிறார்களே,
கொஞ்சம் சிந்தித்துத்தான் பார்ப்போமே
என்று சிந்திப்பதில்லை. மாறாக, அவரையும் தவறாக சொல்வதாகக் கருத்து வெளிப்படுத்துகிறீர்கள்.
நாக.இளங்கோவன்
நன்றாக உள்ளது
எனது பிளாக் இங்கு திறக்க முடியவில்லை சென்னையில் செயல் படுகிறதா?
ஓகை நடராஜன் ஐயா. நீங்கள் எல்லாவற்றையும் தெளிவாகத் எழுதியிருக்கிறீர்கள். சிதம்பரத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது, நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் வலைப்பதிவுகளைப் படித்ததில் நானும் உங்களைப்போன்ற புரிதலில் தான் வந்து நிற்கிறேன். ஒரே ஒரு விதயத்தில் மட்டும் மாற்றுக் கருத்து உள்ளது. மற்றவர்கள் நுழையக்கூடாது என்ற நியதி இருக்கிறது சரி. ஆனால் அந்த நியதி நடுவில் வந்தது தானே. வேறேதோ நியதி போய் தானே இந்தப் புதிய நியதி வந்தது. கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த நியதியும் மாறி எல்லோரும் ஆடலரசனின் அருகில் சென்று பாடலாம் என்ற புதிய நியதி வரலாமே?! சிதம்பரம் மட்டுமின்றி எல்லாக் கோவில்களிலும் அது வரவேண்டும். தூய்மை, சாந்நித்யம் போன்றவை அதனால் கெடும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாராயிருந்தாலும் (அர்ச்சகரோ மற்றவரோ) மனம், சொல், உடல் போன்றவற்றால் தூய்மையின்றி இறைவன் அருகில் சென்றால் சாந்நித்யம் கெடும். இதில் பிறப்பால் வந்த தூய்மை எதுவும் இல்லை. ஒரு கண்ணப்பன் கதை போதாதா?
சதுக்கபூதம் அவர்களே,
இந்தப் பிரச்சனை தில்லையில் தமிழில் பாடக்கூடாது என்பதுதான் என என்னால் கருத முடியவில்லை.
தில்லை நடராஜனா அல்லது தமிழா என்று என்னிடம் கேட்டால் எனக்கு நடராஜன் வேண்டாம் நற்றமிழே வேண்டும் என்றே கூறுவேன்.
//சிதம்பரம் கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பாடக்கூடாது என்பதை தீக்ஷசதர்கள் வலியுறுத்துவதுதான். தமிழில் என்றில்லை //
இது தெரியாமல் அவர்கள் சொல்ல வில்லை எதையாவது பேசி சும்மா இருந்தால் யாருக்கும் அடையாளம் தெரியாமல் போகும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். எதை எடுத்தாலும் அதற்கு ஒரு போராட்டம் செய்வதே இன்றைய வழக்கமாக போய்விட்டது.
குமரன்
//ஆனால் அந்த நியதி நடுவில் வந்தது தானே//
நடுவில் வந்தது என எப்படிச் சொல்கிறீர்கள் மரபப்படித்தானே நடக்கம்
This comment has been removed by a blog administrator.
திரு நாக இளங்கோவன் அவர்களே!
வருகைக்கு மிகவும் நன்றி. மாற்றுக் கருத்துடன் என் பதிவில் முதன்முதலாக உங்களைச் சந்திப்பதில் எனக்கு வருத்தமிருக்கிறது.
கோடிக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்து வந்ததை மாற்றக் கூடிய அளவுக்கு எனக்கு காரணங்கள் புரியவில்லை. மேலும் இவ்வித நியதி மாற்றங்களினால் மக்களுக்கு ஏற்படப் போகும் இறையருள் என்னவென்றும் எனக்குப் புரியவில்லை ஐயா. சிவபக்தர்களில் எத்தனைபேர் இந்தவித மாற்றங்களை வேண்டுகிறார்களென்பதும் இறை நம்பிக்கை உள்ள இந்து மத அன்பர்களில் எத்தனை பேர் இந்தவித மாற்றங்களை வேண்டுகிறார்களென்பதும் என்னை பலமுறை யோசிக்க வைத்த கேள்விகள்.
இது இறையருள் தொடர்பானது என்பதால் என்னால் அந்த கோணத்தில்தான் யோசிக்க முடிகிறது. என்னை பொறுத்துக் கொள்ளூங்கள்.
//
இறை நம்பிக்கை உள்ள இந்து மத அன்பர்களில் எத்தனை பேர் இந்தவித மாற்றங்களை வேண்டுகிறார்களென்பதும் என்னை பலமுறை யோசிக்க வைத்த கேள்விகள்.//
நான் ஒரு பதிவு எழுதலாம் என்பதை மாற்ற வைத்த பதிவு என்ற வகையில் உங்களுக்கு என் மனமார்ந்க் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறென்!
இதை விடச் சிரப்பாக என்னால் முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்!
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்
எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இந்த வெளி வேடம் போடுபவர்களை நன்கு தோலுரித்துக் காட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
பொய்யான வாதங்களைத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலமே மெய்யாக்கிட முடியும் எனும் கோயபல்ஸின் தத்துவத்தை மெய்ப்பிக்க முனையும் அனைவரையும் ஒரு கணமாவது சிந்திக்க வைக்க விழையும் பதிவு!
சிந்திப்பார்களா என்பது வேறு நிகழ்வு!
நன்றி!
முதலில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 'தேர்தல்' நடைபெற்று (?!) தேர்ந்தெடுக்கப்படும் தி.மு.க. தலைவராக கருணாநிதிக்கு பதில் வேறொருவர் தேர்ந்தெடுக்கச் செய்யட்டும். பிறகு இந்த பல நூற்றாண்டு கால பழக்க வழக்கத்தை மாற்றுவது குறித்து பேச வரலாம்.
அதிலேயே சுதந்திரத்தை விட மறுப்பவர்கள், தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற விவகாரத்தில் 'மூக்கை' நுழைப்பது வேடிக்கை தான்.
மற்றபடி வசைச் சொற்கள் குறித்து நீங்கள் எழுதியிருப்பது 'செவிடன் காதில் ஊதும் சங்கு' தான். அவர்களுடைய வேஷம் கலைந்து சுயரூபம் வெளிப்பட்டு விட்டது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு கற்றறிந்த பெரியோர் எந்நிலையிலும் தகாத வார்த்தைகளையோ, இழி சொற்களையோ வெளி விடுவதில்லை என்று படித்ததெல்லாம் நியாபகத்து வந்து தொலைக்கவில்லை போலும். வெள்ளத்தணையது தான் மலர் நீட்டம்.
என்னார் ஐயா. தற்போது இருக்கும் மரபுப்படி தான் நடக்கிறது. இல்லை எனவில்லை. ஆனால் அந்த மரபிற்கும் ஏதோ தொடக்கம் இருக்குமே? அதற்கு முன்னர்? சிவவேதியர்கள் தான் சிவன் கோவிலில் பூஜிக்கவேண்டும் என்பது மரபு. சிவவேதியர்கள் பிராமணர்கள் அல்லர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க சைவர்களால் 'கோவில்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் தில்லையம்பதியில் பிராமணர்களான தீட்சிதர்கள் எப்படி அர்ச்சகர்களாகவும் நிர்வாகிகளாகவும் ஆனார்கள். ஏதோ ஒரு அரசன் தந்த பட்டயத்தால் தானே. அதற்கு முன் யார் அர்ச்சகர்களாக இருந்தார்களோ?
ஓகை அவர்களுக்கு, சிறில் அலெக்ஸ் பதிவைத்தொடர்ந்து உங்கள் பதிவை படித்தும், அதை தொடர்ந்த வாதங்களையும் கவனித்து வருகின்றேன், நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என புரியவில்லை, நாம் மீண்டும் காலத்தால் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என கருதுகிறேன், உங்களின் பதிவு மட்டுமல்லாமல் மற்றும் பலரும் மீறக்கூடாத மரபுகள் என பேசுவது எனக்கு உண்மையிலேயே கடும் அதிர்ச்சியாக உள்ளது....
சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் தமிழில்(Hindu on net ல் தெளிவாக சிற்றம்பலத்தில் தமிழுக்கு அனுமதியில்லை, சமஸ்கிரதம் மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது) பாடக்கூடாது என்பது விதியாம் இது தொடர்பான மேல் விபரங்களுக்கு சிதம்பரத்தில் இருப்பவர்களை அணுகியுள்ளேன், இதில் என்ன வேடிக்கையென்றால் சிதம்பரத்திலேயே பிறந்து வளர்ந்த அவர்களுக்கு சிற்றம்பலத்தில் என்ன தமிழ் அனுமதிக்கப்படுமா என்று தெரியவில்லை, விசாரித்து சொல்கிறேன் என்றார்கள்....
விதிகள் பொதுப்படையாக இருக்க வேண்டும், மரபுகள் மதிக்கப்படவையாக இருக்க வேண்டுமெனில் அவைகள் எல்லோருக்கும் பொதுவானால் மட்டுமே, சிலரை பெருமை படுத்தவும், சிலரை சிறுமை படுத்தவும் இருக்கும் மரபுகளை உடைத்தெறிய வேண்டும்.
சிதம்பரம் கோவிலின் மரபுகள் காக்கபடவேண்டும், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி,எதை காப்பதற்கு இந்த விதி,
பெரியார் பாடுபட்டு உருவாக்கிய கருத்தாக்கங்கள், உடைத்த விதிகளை மீண்டும் பிராமணியம் முழுங்குவதை கண்டு வேதனையடைகிறேன்.
//பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவீட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.
''சிதம்பர ரகசயம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''
//
மிகச்சரி.....நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக இப்போது மாறவில்லை, அது எப்போதும் அப்படித்தான் இருக்கின்றது,
இது தொடர்பாக முத்துகுமரனின் பதிவை காணுங்கள்
http://eenpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post.html
சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம்.
தீஷிதர் சமூகம் பட்டயங்கள், கல்வெட்டுகளெல்லாம் காண்பித்து நீதி(?!)மன்றத்தில் தங்கள் பாத்யதையை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு அறியாமை(?!) ஆட்கொண்டுள்ளது.
சரி பாத்யதை பட்டதையாவது ஒழுங்காக வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை,
நடராசர் யாருக்கு ஜீவனமளிக்கிறாரோ இல்லையோ சில குடும்பங்கள் நோகாமல் நோம்பு கும்பிட சிதம்பரத்தில் வழிசெய்கிறார்.
குமரன் ,
தில்லை மூவாயிரத்தார் ஆடலரசனுடன் சேர்ந்தே இங்கு வந்ததாக ஐதீகம்.
அப்படி அவர்கள் ஒருசேர வந்திறங்கியதாகக் கூறப்படும் ஒரு இரதமும் இன்னும் கோயிலில் இருக்கிறது.
அறிவியற்படி இதை நம்பவில்லையெனினும், இதன் மூலமே அவர்கள் சுப்ரீம் கோர்ட் வரை சென்று உரிமம் வாங்கியது!
எனவே சிதம்பரத்தைப் பொருத்த வரையில் தீக்ஷிதர்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகாராய் இருந்ததில்லை!
சமயக்குரவர்கள் அனைவரும் போற்றிப் பாடிய "தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியேன்" என்ர வரிகள் இதற்குச் சான்று.
கருத்துகளுக்கு நன்றி குமரன்.
//இதில் பிறப்பால் வந்த தூய்மை எதுவும் இல்லை. ஒரு கண்ணப்பன் கதை போதாதா?//
கண்ணப்பனைச் சொன்னீர்கள். மேலும் பல நாயன்மார்களும் இருக்கின்றனரே! பிறப்பால் வந்த தூய்மை என்று எதுவும் இல்லை என்பதில் உங்களைப் போல் நானும் தெளிவாக இருக்கிறேன். பல கோடி பக்த கோடிகளும் அவ்வாறே எண்ணுகிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். பக்தர்கள் அந்தனர்களை தங்களைவிட உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ எண்ணுவார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.
//அந்த நியதி நடுவில் வந்தது தானே//
எப்போது வந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் ஏன் வந்தது, ஏன் மாறவேண்டும் என்று யோசிக்கலாம். நடராஜர் சந்நிதியில் சட்டையைக் கழற்றிவிட்டு, நின்று, அங்குள்ள தற்போதய நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, ஆடவல்லானின் அழகை அருந்திவிட்டு, அருளைப் பெற்று வந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. என்னைப் போலவே எண்ணற்ற பக்தர்களுக்கும் அதுவே திருப்தி. திருப்பதியில் அந்த அரை வினாடி தரிசனத்தில் ஜரகண்டி தள்ளலின் அவதியெல்லாம் பொசுங்கிப் போய் திருப்தியுடன் வெளியேறும் பக்தி நிலையை உங்களால் ஊகிக்க முடியும்.
ஆனால் ஆண்டவனுக்கு உங்கள் கைகளால் ஆராதனை செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா? அதற்கு நீங்கள் வேறு கோயில்களுக்குப் போக வேண்டும். அல்லது காசிக்குப் போகவேண்டும்.
இல்லை தில்லை நடராசனுக்கு அப்படிச் செய்யவேண்டுமென்று எண்ணுகிறீர்களா? சரி. இதைப் போல் எத்தனை பக்தர்கள் அவ்வாறு எண்ணுகிறார்கள்? அப்படி எல்லோரும் போகலாமென்றால் நடைமுறையில் அது சாத்தியமா? அப்பொழுது புதுப்புது நியதிகள் வரவேண்டியிருக்குமே! அவை இப்போதிருப்பதை விட நல்ல சூழ்நிலையை உண்டாக்குமா?
சட்டம் என்று ஒன்று இருக்கிறதே அது ஒரு சாராருக்கு சார்பாய் இருப்பதை நீதி மன்றங்களும், நீதிமான்களும், சட்டசபைகளும, ஆன்மீகவாதிகளும் அறியாமல் இருக்கின்றார்களா? அவர்கள் அறியாமல் இருந்தால் உங்களைப் போல் பொதுவாழ்வில் பக்தியில் அக்கரை கொண்ட பலர் சுட்டிக் காட்டினால் நியதிகள் மாறலாம்.
( கண்ணப்பன் வரலாறு நடந்த ஸ்ரீ காளஹஸ்தி கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா? அருமையான கோவில்.)
//வசைமொழி அற்றதொரு வலையுலகும் வந்திடாதோ?
. இசைமொழி என்தமிழில் இறைஞ்சினேன் தில்லையரனே!
. திசையெட்டும் தமிழ்பரப்பும் வலையறிஞர் மனம்திறக்கும்
. விசையறியாப் பேதையிச் சிறுவன் ஓகை நடராசனே!//
வசையின்றி வலையுலகம் வாழ சிவனே அவதாரம் எடுத்தால் மட்டுமே முடியும் போல் உள்ளது நடராசன் ஐயா.
சிவன் சொத்தை கவர்ந்தோரை சபியாதிர்.அவர்கள் தப்பு செய்தால் அவர்கள் குலம் ஏன் பாதிக்கப்படவேண்டும்?திருடனுக்கும் உணவளிப்பவன் தான் சர்வேசன்.அவன் அனைவரையும் மன்னிக்க மட்டுமே தெரிந்தவன்.
இந்த விவாதத்தில் ஈடுபடுகின்ற அனைவரும் சில கருத்துகளைக் கவனியாது விடுகிறார்கள்.
ஆறுமுகசாமி தமிழ் மட்டுமல்ல வடமொழியிலும் பாட முடியாது என்று சொல்கின்றவர்களுக்கு இந்தக் கேள்வி.
ஆக....ஆறுமுகசாமியின் மொழி இங்கு பெரிதல்ல....வேறு ஏதோ ஒன்று பெரிதாகத் தெரிகின்றது. அது களையப்பட வேண்டியதுதானே. இன்றைக்கு வியாபாரத் தலங்களாக மாறிப் போயிருக்கும் திருக்கோயில்களை மீண்டும் திருக்கோயில்களாக்க அது உதவலாம். அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை மிகவும் எச்சரிக்கையாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும்.
உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று வாதம் வைப்பர்களுக்கு ஒரு செய்தி. பல திருக்கோயில்களில் இந்த உரிமைப் பிரச்சனை மாறியே வந்திருக்கிறது. ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் பழநி கோயிலைச் சொல்லலாம். புலிப்பாணிச் சித்தர்களின் பராமரிப்பில் இருந்த கோயில் இது. அவர்கள்தான் பூசிப்பது. ஆனால் இன்று? புலிப்பாணிச் சித்தர்கள் கோர்ட்டுக்குப் போயும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. இந்தக் கொடுமையை என்ன செய்வது?
பொதுவாகவே சாதிக் கோயில்கள் என்று தமிழகத்தில் உண்டு. அந்தந்த சாதிக்காரர்களால் நிருவகிக்கப்படுவது. அப்படி ஒரு கோயிலா தில்லை? சாதிக் கோயில்களுக்கு அந்தச் சாதிக்காரர்களைத் தவிர யாரும் போக மாட்டார்கள். ஆனால் தில்லையில் என்ன நடக்கிறது? அப்படியா நடக்கிறது?
எல்லாரும் இறைவனைத் தொட்டு அணைத்து ஆராதித்துதான் வணங்க வேண்டும் என்று இல்லை. பிரச்சனையின் அடிநாதம், பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான். பழைய நியதி என்றெல்லாம் கதை சொல்லக் கூடாது. முடியாது. எல்லா நியதிகளுமா மீறப்படாமலும் மாற்றப்படாமலும் இருக்கின்றன? விதிமுறைகள் சீர்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. மிகக் கடினமான செயல் அது. ஆனால் கண்டிப்பாகச் செய்ய வேண்டியது அது.
This comment has been removed by a blog administrator.
SK,
தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும் விஷயங்களைக் கூட ஏதோ நோக்கங்களுக்காக திசை திருப்பி பலரையும் தூண்டி விடுகிறார்கள். கோவில்களின் அடிப்படை நோக்கம் இறையருள் பெறுவதே என்பதை அடியோடு மறைத்து செய்யாப்படும் விவாதங்களை எந்த வகையில் சேர்க்கமுடியும்? கருத்துகளுக்கு மிக நன்றி
பேரா முக்கியம் அவர்களே,
கருத்துக்களுக்கு நன்றி.
ஆரூரன்,
வேறு ஒரு பதிவில் உங்களுடைய இதே பின்னூட்டத்தைப் பார்த்தேன். உங்கள் கருத்துகள் பலவற்றிலும், சில வரிகளில் உள்ள உங்கள் மொழியிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குத் தெரிந்த பதில்களை இங்கு பல பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறேன்.
குழலி அவர்களே,
என் பதிவில் இந்த வரிகளைப் படிக்காமல் விட்டுவிடீர்களா?
//சமஸ்கிருதம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு வேறு குலத்தவர்கள் அர்ச்சகர்களாக வந்தபின்னும் கூட, அவர்கள் கடமை செய்யும் இடத்தில் அங்கு உரிமை இல்லாத ஒருவர் - அவர் யாராக இருந்தாலும் - தமிழில் பாடுவது மட்டுமில்லை எதையுமே செய்யமுடியாது என்பது அடிப்படையான விஷயம் இல்லையா? இந்த அடிப்படையை மீறும் விதமாக நடப்பது முறையற்ற செயல் என்று ஆடவல்லானையும் திருவாசகத்தையும் தமிழையும் போற்றும் அனைவரும் கண்டிக்கவேண்டுமில்லையா?//
எந்தெந்த மரபுகள் மாற்றப்படலாம் எந்தெந்த மரபுகள் மாற்றப் படக் கூடாது என்று நான் நினைப்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட மரபுகளை மாற்றக்கூடாது என்று நான் கருதுவதாக நீங்கள் சொன்னதில் எனக்கு வருத்தம்தான்.
செல்வன், கருத்துகளுக்கு நன்றி.
//சிவன் சொத்தை கவர்ந்தோரை சபியாதிர்.அவர்கள் தப்பு செய்தால் அவர்கள் குலம் ஏன் பாதிக்கப்படவேண்டும்?திருடனுக்கும் உணவளிப்பவன் தான் சர்வேசன்.அவன் அனைவரையும் மன்னிக்க மட்டுமே தெரிந்தவன்//
உண்மைதான். அந்த எச்சரிக்கை நடக்கவேண்டும் என்று நான் ஆசைப் பட்டிருக்க வேண்டாம்தான். அரசும் தெய்வமும் பார்த்துக் கொள்ளட்டும்.
செல்வன், கருத்துகளுக்கு நன்றி.
//சிவன் சொத்தை கவர்ந்தோரை சபியாதிர்.அவர்கள் தப்பு செய்தால் அவர்கள் குலம் ஏன் பாதிக்கப்படவேண்டும்?திருடனுக்கும் உணவளிப்பவன் தான் சர்வேசன்.அவன் அனைவரையும் மன்னிக்க மட்டுமே தெரிந்தவன்//
உண்மைதான். அந்த எச்சரிக்கை நடக்கவேண்டும் என்று நான் ஆசைப் பட்டிருக்க வேண்டாம்தான். அரசும் தெய்வமும் பார்த்துக் கொள்ளட்டும்.
புரிதலுக்கு மிக்க நன்றி, திரு. ஓகை.
இந்த இடத்திலும் வெகு சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு, வாயால் மட்டும் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு எதுவும் புரியப் போவதில்லை.
அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆனாலும் உள்ளே செல்ல ஒரு சிலருக்குத்தான் உரிமம் வழங்கப் படும் எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இதுவும் ஒதுக்கப்படும், வெகு வசதியாக!
செல்வன் சொல்வது நடப்பின் எனக்கும் சம்மதமே!
ஆனால், அது நாளையே ஒரு சட்டத்தினால் மற்றப்படக் கூடியதல்ல.
அதற்கு முதல்படியாக என்ன செய்ய வேண்டும் என விவாதிப்பதே நடைமுறைக்கு ஒவ்வும் என நான் நம்புகிறேன்.
நன்றி.
இராகவனின் கருத்தே என் கருத்தும்.
/சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடக்கூடாது என்பது போல விஷயத்தை திரித்துவிட்டு தமிழுக்கு அநீதி என்பது போல /
ஐயா தமிழுக்கு தில்லையாண்டானின் இடத்தில் இடமில்லை. பார்க்க
http://www.hindu.com/2006/07/11/stories/2006071109120300.htm
Inside the Thiruchitrambalam premises only qualified persons would be permitted to recite the Vedas and mantras in SANSKRIT, and no outsider or recitation in ANY OTHER language would be entertained.
இது கொடுமையில்லையோ? கோயில் என்றால் அது சிதம்பரம் இது உணர்த்துமே தமிழுக்கும் சைவத்துக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பை. தமிழுக்கு ஏன் சிற்றம்பலத்தில் இடமில்லை என்று நீங்கள் கேட்கவேண்டாமா?
ஆறுமுக சாமியால் அல்லவா சிற்றம்பலத்தில் தமிழுக்கு இடமில்லை என்பது என்னைப் போன்ற பலருக்கு தெரியவந்துள்ளது.
பிரச்சனையை தமிழ் சார்பாக சிலர் சேர்ந்து போராடுவதால் அப்பிரச்சனையே இல்லை என்று கூறலாமா?
இல்ல மரபுப்படி/ நியதிப்படி சிற்றம்பலத்தில் தமிழுக்கு இடமில்லை எனில் விட்டுவிட வேண்டியது தானே என்கிறீர்களா?
திருச்சிற்றம்பலம்.
If you go to Chidambaram,the way thiruneeru is delivered is bad.They will throw it in to your hand harshly.Even Vatican itself decided to remove the Latin as religious language, these people are forcing other language to temple.Da vinci code ku thadai podum pagutharivu pagalavarkal,Tamil kuvulla thadai yai neeka mun varuvarkala?
Evarkal thavaru seiiyum "Poosari" yi thakkuvarkala thavira, theetchitahrkali kandu kolla mattarkal. Enaendral, theetchithar gal 2000 varudangalukku mun nammai adimai padutha vanyhevarkal endral, evarkal 400 andukalukku mun, nammai adiamai padutha vanthavarkal
வணக்கம் ஓகை,
பிரச்சினையின் அடினாதம் என்னவென்று புரிந்துக்கொள்ளாமல் பதிவிட்டு விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். இன்றும் சிறப்பு தரிசனத்திற்கு கட்டணம் செலுத்தினால் மேலே உள்ள கருவறை மண்டபம் எனப்படும் பொன்னம்பலத்தில் ஏற்றி வழிபடவிடுவார்கள் சிதம்பரத்தில் அப்போது எந்த தெய்வக்குற்றமும் வராதா என்ன? பிரச்சினை தமிழில் பாட விடக்கூடாது என்பது தான்!
ராகவன், வருகைக்கு நன்றி.
எந்த ஒரு பொது அமைப்பிலும் நியதிகள் வேண்டும். இது அடிப்படை. அவ்வாறிருந்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த நியதிகள் இடையூறாக இருந்தால் மாற்றப்படவேண்டும். பிரச்சனை என்ன என்பதிலேயே பலருக்கு குழப்பமாகருக்கிறது. நான் புரிந்துகொண்டதையே எழுதியிருக்கிறேன்.
//ஆக....ஆறுமுகசாமியின் மொழி இங்கு பெரிதல்ல....வேறு ஏதோ ஒன்று பெரிதாகத் தெரிகின்றது. அது களையப்பட வேண்டியதுதானே.//
என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர் சட்டத்துக்கு புறம்பானதாக ஏதும் செய்யவில்லை என்றால் தமிழுக்கு மிக ஆதரவாக இருப்பதாகக் கருதப் படும் அரசு காவலர்களே அவரை ஏன் கைது செய்யவேண்டும்?
//புலிப்பாணிச் சித்தர்கள் கோர்ட்டுக்குப் போயும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. இந்தக் கொடுமையை என்ன செய்வது?//
சட்டத்துக்கும் நீதி மன்றங்களுக்கும் உங்கள் மரியாதைதான் என்ன?
//சாதிக் கோயில்களுக்கு அந்தச் சாதிக்காரர்களைத் தவிர யாரும் போக மாட்டார்கள். ஆனால் தில்லையில் என்ன நடக்கிறது? அப்படியா நடக்கிறது?//
தில்லை கோவிலுக்குள் எந்த ஜாதி மட்டும் போகிறார்கள்?
//விதிமுறைகள் சீர்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. மிகக் கடினமான செயல் அது. ஆனால் கண்டிப்பாகச் செய்ய வேண்டியது அது.//
எப்படி? ஆறுமுகசாமி வழியிலா?
ராகவன், சொற்குவையும் பொற்குவையும் என்றொரு அருமையான சரித்திரக் கதை எழுதி எங்களை மகிழ்வித்தீர்கள். நன்றி.
குறும்பன், வருகைக்கு நன்றி.
இந்து பத்திரிக்கை செய்தியைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தினமணி, ஜூ.வி, மற்றும் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் செய்திகளையும் கணக்கில் கொண்டு பார்த்தால் பிரச்சனை தெளிவாக இல்லை. குழலி செய்திகள சேகரிப்பதாக சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
//
தில்லை மூவாயிரத்தார் ஆடலரசனுடன் சேர்ந்தே இங்கு வந்ததாக ஐதீகம்.
அப்படி அவர்கள் ஒருசேர வந்திறங்கியதாகக் கூறப்படும் ஒரு இரதமும் இன்னும் கோயிலில் இருக்கிறது.
அறிவியற்படி இதை நம்பவில்லையெனினும், இதன் மூலமே அவர்கள் சுப்ரீம் கோர்ட் வரை சென்று உரிமம் வாங்கியது!
எனவே சிதம்பரத்தைப் பொருத்த வரையில் தீக்ஷிதர்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகாராய் இருந்ததில்லை!
//
அப்படியானால் தீர்ப்பை ஆடலரசன் மீண்டும் வந்து சொல்லலாமே. ஏன்
சுப்ரீம் கோர்ட்டுக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்?
அந்த காலத்திலேயே இந்த கோவில் தான கல்வெட்டுகளை
நம் முன்னோர்கள் அடித்து நொறுக்கிய கதைகள் உள்ளன.
ஒரு காலத்தில் முன்னாள் ராஜாக்களுக்கு வெட்டி அரசு மானியம்
கொடுத்தார்கள். இந்திரா காந்தி வந்து இந்த சோம்பேறி
மானியத்தை ஒழித்தார். ராஜாவே கூஜாவனப்புறம் அவர்கள்
எழுதிக் கொடுத்த சாசனங்களை ஒரு ஜனநாயக அரசு ஏன் மதிக்க வேண்டும்?
வவ்வால், வருகைக்கு நன்றி.
//எனப்படும் பொன்னம்பலத்தில் ஏற்றி வழிபடவிடுவார்கள் சிதம்பரத்தில் அப்போது எந்த தெய்வக்குற்றமும் வராதா என்ன?//
அரசு அதிகாரமும், பணமும் யாரையும் ஆண்டவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றவை. ஆனால் அருளளிப்பது ஆண்டவன்தான். இதில் தெய்வகுற்றத்துக்கு என்ன தொடர்பு?
//பிரச்சினை தமிழில் பாட விடக்கூடாது என்பது தான்!//
அப்படி இல்லை என்று நான் உளமார நம்புகிறேன். அப்படி இருந்தால் அது களையப் படவேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அப்பொழுதும் கூட எப்படிக் களையப் படவேண்டுமென்றால் - நிச்சயமாக இப்படி இல்லை என்பதே என் எண்ணம்.
இணைய நன்பர்களின் இவ்வளவு வாதங்களும் நீதிமன்றத்தில் செல்லுபடியாகவேண்டும்.
//ராஜாவே கூஜாவனப்புறம் அவர்கள்
எழுதிக் கொடுத்த சாசனங்களை ஒரு ஜனநாயக அரசு ஏன் மதிக்க வேண்டும்?//
அனானி, இந்தக் கேள்வியை வழக்கு மன்றத்தில் கேளுங்கள்.
//அப்படியானால் தீர்ப்பை ஆடலரசன் மீண்டும் வந்து சொல்லலாமே. ஏன்
சுப்ரீம் கோர்ட்டுக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்?//
வாதத்திற்கு பதில் சொல்லலாம்.
விதண்டாவாதத்தை ஒதுக்குகிறேன்!
ஓகை நடராஜன்,
அருமையான பார்ப்பன ஜல்லியடிப்பு.
என் கட்டுரை குறித்து எதுவே நீங்கள் சொல்ல வில்லையே? அதனை நான் கீற்று-வில் இட்டு ஏகப்பட்ட பாராட்டுக் கடிதங்கள்.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? மரத்தடி, ராயர் என அய்யர் பசங்கள் உள்ள இடங்களில் உலவிய உம்மால் நியாயமான கட்டுரை எழுத வியலாது!
வி.க. அவர்களே வருக.
//அருமையான பார்ப்பன ஜல்லியடிப்பு.//
என் தன்மானத்திற்கு இழுக்கான செயலை ஒருபோதும் நான் செய்யமாட்டேன்.
Post a Comment
<< Home