கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?
கொஞ்சம் அங்கே இறக்கி விட்டுவிடுகிறீர்களா?
கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?
___ ஆங்கில சொற்கலப்பு அத்தியாவசியமாகிவிட்ட இந்நாட்களில் இது போன்ற தலைப்புகள் வருவது சிலருக்கே நெருடலாக இருக்கும். இம்மாத தேன்கூடு போட்டிக்கான தலைப்பு நான் யோசித்த அளவில் மொழிமாற்றம் செய்ய இயலாததாய் இருக்கிறது. பினாத்தல் சுரேஷ் வைத்த ஆங்கிலத் தலைப்பு அழகாக 'விடலைப் பருவம் விடைபெறும் தருணம்' என்று மொழிமாற்றம் பெற்றது.
___ பேச்சுத் தமிழிலேயே ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசுவது தவறானது என்றாலும் பல பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாய்ப் போய்விடுகிறது. ஆனால் எழுத்து என்று வரும்போது கட்டுப்படுகளை நாம் விதித்துக் கொள்ளவேண்டும். நான் தனித் தமிழை வலியுறுத்தவில்லை. ஆனால் தவிர்க்க முடியாத சில இடங்களைத் தவிர்த்து மற்றெல்லா இடங்களிலும் தமிழையே பயன் படுத்துதல் எழுதுபவர்களின் கடமை. ஒரு கதையில் நடக்கும் உரையாடலில் "அவன் கராக்டா பத்து மணிக்கு வ்ந்துட்டான்" என்று எழுதுவதை இயல்பு கருதி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் விவரிப்பில் 'அவன் பங்க்சுவலா பத்து மணிக்கே வந்துவிட்டான்' என்று எழுதுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?
___ நல்ல கல்வியறிவு உள்ளவர்களும், குறிப்பாக எழுத்தாளர்களும், மாணவர்களும் தமிழில் ஆங்கிலக் கலப்பை அதிகமாகச் செய்கிறார்கள். பாமரர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும், கிராமத்தாரிடமும் நல்ல தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் அவர்களிடேயும் தமிழ் ஆங்கிலத்தால் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழைக் காத்து முன்னெடுத்துச் செல்லவேண்டிய எழுத்தாளர்களின் செயல்பாடு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.
___ "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்பதை "என்னைக் கொஞ்சம் அங்கே இறக்கி விடுகிறீர்களா?" என்ற முறையிலும் பலர் கேட்பதை நாம் அறிவோம். "இக்கட்டான சூழ்நிலையில் அவர் எனக்கு ஒரு லிஃப்ட் கொடுத்தார்" என்னும் பயன்பாடு "இக்கட்டான சூழ்நிலையில் அவர் என்னை கைதூக்கி விட்டார்" என்றும் பலரால் கூறப்படுவதை நாம் அறிவோம். இவ்வாறு லிஃப்ட் என்ற சொல் குறித்திடும் பயன்பாடு நம்மிடையே வெகு இயல்பாக இருந்தாலும், இதற்கான ஒரு தனிப்பட்ட பெயர்ச்சொல் நான் யோசித்தவரையில் வழக்கில் இல்லை. இருந்தால் அன்பர்கள் அறியத் தரவேண்டுகிறேன்.
___ கூடியவரை ஆங்கிலக் கலப்பைத் தவிர்த்து உரையாடுங்கள். எழுத்தில் மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து முற்றிலும் தமிழிலேயே எழுதுங்கள். லிஃப்ட் என்ற சொல் தமிழ்ப்படுத்தப்பட முடியவில்லை என்கிற காரணத்தாலேயே இந்தத் தலைப்பு தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
___ கொங்குராசாவின் பதிவிலிருந்து ஒரு பகுதி:
////காலையில பத்து மணி சென்னை அண்ணா சாலை ட்ராபிக்ல, என்னோட முதல் வெற்றிகரமான இன்டர்வ்யூக்கு போக தேனாம்பேட்டை சிக்னல்ல இருந்து நந்தனம் வரைக்கும் லிப்ட் குடுத்திருந்தவர் போட்டிருந்த சட்டையோ முகமோ இன்னைக்கு ஞாபகம் இல்லை, ஆனா போன வாரம் கார்ப்பரேஷன் சர்கிள்ல இருந்து ஜங்ஷன் வரைக்கும் நான் லிப்ட் குடுத்தவங்க கிட்ட இருந்து அடுத்த நாள் காலையில வந்த 'thanks e-card'அ பார்த்ததும், அந்த பதட்டமான குரலும் , (குர்லா டைம் சேஞ்ச் பண்ணிட்டாங்களாம்.. ரிசர்வேஷன் டிக்கெட்ல போடவே இல்லை) அந்த சென்ட் வாசமும் (ஆர்ச்சீஸ் டீப் க்ரீன்?) ஞாபகம் வருது. :)
(லிப்ட் குடுத்த கேப்'ல மெயில் ஐடி வரைக்கும் குடுத்திட்டயான்னு எல்லாம் கேட்டு, விவாகரத்தை கிளப்பக்கூடாது, அதெல்லாம் அப்புறம் நம்ம பதிவுல வச்சுக்கலாம், யூ நோ? திஸ் ஈஸ் அஃபீஷியல் ஃபார் தேன்கூடு.. ஓகே?)////
___ இவை போன்றவற்றைப் படிக்கும்போது என் நகைச்சுவை உணர்வும் தமிழ் உணர்வும் போட்டிட்டு தமிழ் உணர்வே வென்று மனதில் ஒரு கைப்பை நிற்கச் செய்யும்.
10 Comments:
சரியா சொன்னிங்க! ஆனா எல்லாரும் இதைப் போல பேச முன் வரணும்.
ஓகை
நீண்டநாட்களாக காணவில்லையே
தம்பி, கருத்துக்கு நன்றி. ஆசிப் மீரான் ஒரு பதிவு போட்டிருக்கிறார் பாருங்கள். அது தான் இன்றைய நிலை. நாம் எண்,கிழமை போன்றவற்றை தமிழில் கூறினாலே நான் மிகவும் மகிழ்வேன்.
என்னார், சற்று அலுவலகம் மற்றும் சொந்த வேலைகள் அதிகமாய் போய்விட்டது. உங்கள் தேவர் பதிவுகளையெல்லம் படித்தேன். நன்று.
நல்ல கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை
எளிய தமிழில் சொல்லல் வேண்டும்.
அதோடு, முதலில் அது அவர்களையே
மன நிறைவு கொள்ளச் செய்யவேண்டும்.
ஒரு படைப்பின் உயர்வுக்கு, சொல்லப்படும்
கருத்தோடு, நடையும், மொழியும் அவசியம்.
இதையும் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, ஆனால் இன்றைய நவீன உலகில் இந்த பயன்பாடு எந்தளவு சாத்தியம்? அதற்கான வரை முறை என்ன?
பாபு
இளங்கோவன் ஐயா,
கருத்துக்குக்கு மிகவும் நன்றி.
ஆங்கில சொற்கலப்பை படைப்பாளிகள் அங்கீகரிக்காதது மட்ட்மல்லாமல் கலப்பில்லாத நல்ல தமிழுக்கு அவர்களே ஆரம்பமாகவும் காப்பாளர்களாகவும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
பாபு,
இதற்கான சாத்தியக் கூறு எல்லையற்றது. இது ஒரு நோன்புபோல் கடைபிடிக்கப்பட்டால் தனித்தமிழில் போய் முடியலாம்.
முதலில் எண் பெயர்களையும் கிழமைப் பெயர்களையும் தமிழில் கூறுவோம். ஒரு உரையாடலில் நம்முடன் பேசுபவர் ஃபிரைடே மார்னிங் வருகிறேன் என்று சொன்னாலும் நாம் வெள்ளிக் கிழமை காலையில் வாருங்கள் என்று சொல்லலாம். பயன்படுத்தலாம். பஸ் என்பதை பேருந்து என்று சொல்வது இப்போதைக்கு கொச்சையாகத் தொன்றினால் பஸ் என்றே சொல்லலாம். ஆனால் வெள்ளிக் கிழமை அப்படி இல்லையே!
நான் பிசியாக இருக்கிறேன் என்பதை நான் சற்று வேலையாக இருக்கிறேன் என்று சொல்லலாம்.
கொஞ்சம் லிஃட் கிடைக்குமா என்பதையே என்னை அங்கே இறக்கி விட முடியுமா என்று சொல்லலாமே! சொல்லுகிறார்களே!!
இவாறெல்லாம் விருப்பங்கள் எனக்கு இருந்தாலும் என் உரையாடலில் இயல்பாக வரும் ஆங்கில சொற்களை களைய நான் முயன்றுகொண்டே இருக்கிறேன்.
தனித்தமிழில் உரையாடும் ஒரு நண்பருடன் ஏறக்குறைய தனித்தமிழிலேயே என்னால் உரையாட முடிகிறது என்பதே இதன் சாத்தியக் கூறுக்கு சான்று.
தங்களின் கருத்து தான் எனதும்..
எனது சில படைப்புக்களில் இதைத்தான் நான் வலியுறுத்தி வந்தேன். பேச்சுத் தமிழ் என்பது வேறு.எழுத்து தமிழ் என்பது வேறு.
"என்ந்துப்பா" "எம்படது" "என்ட்றது" "என் ஊட்டுது" "எங்களது" என வேறாய் பலதாய் பலரும் பேசினாலும் "எனது " "எங்களுடையது" இது வரை எழுதி வந்துள்ளோம்.இந்த எழுத்து நடை பல காலமாய் "கடிதம்" என்ற ஒன்றால் காக்கப் பட்டு வந்தது. ஆனால், எப்போது அது இ-மைலாய் ஆனாதோ அப்பொழுதே தங்கீலீசாய் போனது.. இன்னும் வாய்ஸ் மெய்லாகி.. வீடியோ மெய்லாக வாழ்த்துவோமே!
தமிழ் அக்கறை எல்லாருக்கும் வர வேண்டும். தமிழ் வெல்ல வேண்டும்.
தமிழி, லொடுக்கு பாண்டி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment
<< Home