இதுவேறுலகம்
தேன்கூடு போட்டிக்கான கதை.
__________________________ இதுவேறுலகம்
====================================
_____ செல்வம் சந்தோஷத்தில் குளிர்ந்து போயிருந்தான். அவன் மனைவி ருக்கு அந்த செராக்ஸ் மற்றும் பொதுத்தொலைபேசி மற்றும் குளிர்பானக் கடையில் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தாள். செல்வத்தின் சந்தோஷத்துக்கு காரணம் சற்று முன் வந்த தொலைபேசி அழைப்பு. அவன் நண்பன் மணிக்கு திருமணம் முடிவாகியிருந்தது. மணியை உடனே சந்திக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இவனைப்பார்க்க அவனே காரில் வந்து விடுவான். அவனைச் சந்தித்த முதல் நாளும் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திய வார்த்தைகளும் அவனுக்குள் நிழலாடின.
_____ மைலாப்பூரில் ஒரு பொதுத்தொலைபேசி கூண்டில் தான் செல்வத்தின் வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருந்தது. அவனும் அவன் மனைவி ருக்குவும் காலை முதல் மாலை வரை அந்த கூண்டில் தான் வாசம் செய்தார்கள். அப்புறம் அவர்கள் வீடு என்கிற இன்னொரு கூண்டு. திருச்சியில் அவன் படித்த விழியிழந்தோர் பள்ளியில் ஒரு விழா. இவனை அழைத்திருந்தார்கள். இவனுக்கு அங்கு சென்றுவர அடக்கமாட்டாத ஆசை. ருக்கு வந்து தொடர்வண்டியில் ஏற்றிவிட திருச்சியில் அவன் அக்கா வந்து அழைத்துச் சென்றாள். விழா முடிந்ததும் அவளே மீண்டும் வண்டி ஏற்றிவிட்டாள். பாவம் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து இட்டிலி சுட்டு பொட்டலம் கட்டிக் கொடுத்து பல்லவனில் ஆறரை மணிக்கு ஏற்றிவிட்டாள். வண்டி அன்றைக்குக் கொஞ்சம் தாமதமாய் பண்ணிரண்டே காலுக்கு எழும்பூர் வந்தது. யாரோ வழிகாட்ட ருக்கு சொன்ன இருக்கையில் வந்து அமர்ந்தான். ருக்கு வரவில்லை.
_____ செல்வம் அங்கு நிலவிய ஆரவாரங்களை அமைதியாகக் கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். மணி ஒன்றுக்கு மேலாகியிருக்கும், இன்னும் ருக்கு வரவில்லை. தொலைபேசியில் தன் கூண்டை அழைத்துப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவனருகே பேச்சுக் குரல் கேட்டது.
_____ "மணி, கொஞ்சநேரம் அவர் பக்கத்துல உட்கார்ந்துக்கோ, கூட்டம் எவ்வளவு இருக்குன்னு பாத்துட்டு வந்திடுறேன்".
_____ "சரி, சீக்கிரம் வாங்கப்பா".
_____ செல்வத்தின் தொடை மேல் உரசிக்கொண்டு அவன் அமர்ந்தான். பொதுவாக செல்வத்தின் அருகே யாரும் அமர்வதில்லை. செல்வத்துக்கு யாரோ தன்னருகில் நெருக்கமாக அமர்வது ஆச்சர்யமாக இருந்தது. வந்து அமர்ந்தவன் இப்போது சற்று தள்ளி உட்கார்ந்து கொண்டான். அமைதியாக சில நிமிடங்கள் கழிந்தன. அவனிடமிருந்து ஒரு சுகந்தம் மிதந்து வந்தது. ஏதோ வாசனை திரவியம் போட்டிருக்கவேண்டும். அவன் ஆடையிலிருந்து கூட ஏதோ ஒரு நல்ல துணி சோப்பின் மணம் வந்தது. வழக்கமாக ஆண்களின்மேல் வரும் வியர்வைவாடை வரவில்லை. ஆண்வியர்வை வாடைக்கும் பெண் வியர்வை வாடைக்கும் அவனுக்கு வேறுபாடு தெரியும். இதை வைத்தே பலவற்றை அவன் கண்டு பிடிப்பான். இப்போதுதான் குளித்துவிட்டு வந்தானா? இருக்க முடியாது. குளித்தவுடன் வரும் குளியல் சோப்பின் மணம் வரவில்லை. ருக்குவிடம் தினமும் அவன் அனுபவிப்பான். ருக்கு நினைவு வந்தது. ஏன் அவள் இன்னும் வரவில்லை. தொலைபேசியில் அழைக்க இவன் உதவுவானா? அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. இல்லை. இவனால் உதவ முடியாது. வேறு யாரையாவது கேட்க வேண்டும். நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பசிவேறு வயிற்றைக்கிள்ளியது. ஒரு தின்பண்ட வாசனை வந்தது.
_____ "கொஞ்சம் சாப்பிட்றீங்களா?" செல்வத்தின் கையைப் பிடித்து வந்தவன் கேட்டான். அந்த பொட்டலத்திலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டான்.
_____ "லேய்ஸ் சிப்ஸ் ரொம்ப நல்லாயிருக்கும்". என்றான் செல்வம்
_____ செல்வத்துக்கு அதன் விலையைத்தவிர லேய்ஸ் சிப்ஸ் ரொம்ப பிடிக்கும். அதன் பொட்டலக் காகிதம் போடும் அந்த கரகரவென்ற ஒலி அவனுக்கு ஒரு குழந்தை உள்ளத்தைக் கொடுத்துவிடும். தடவியபடி அந்த பையோடு வாங்கிக்கொண்டான்.
_____ "அவர் உங்க அப்பாவா?"
_____ "ம்"
_____ "எனக்கு ஒரு உதவி வேணும். என்னை கூப்ட்டு போக என் வீட்டுக்காரி வரவேண்டும், வரவில்லை. ஒரு போன் செய்ய பூத் எங்கிருக்குன்னு சொல்லணும்".
_____ "எங்கிட்ட செல்போன் இருக்கு. நம்பர் சொல்லுங்க" ஆச்சர்யத்துடன் அவன் தன் கூண்டு எண்ணைச் சொன்னான்.
_____ "பெல் அடிச்சிட்டே இருக்கு யாரும் எடுக்கல" ருக்கு கூண்டைப் பூட்டிவிட்டு இங்கு வந்து கொண்டிருப்பாளோ?
_____ "பக்கத்து கடை நம்பர் சொல்றேன்...." பக்கத்து கடையில் பேசிய போதுதான் அவனுக்கு சேதி தெரிந்தது. ருக்குவின் அம்மாவுக்கு ரொம்பவும் உடம்பு முடியாமல்ப் போக அவள் இன்று காலை மரக்காணம் போவிட்டாள். இவனை ஆட்டோவில் வரச்சொல்லிவிட்டு போயிருக்கிறாள். ஆட்டோவுக்கு பணமும் கொடுத்துவிட்டு போயிருக்கிறாள். அவனுக்கு அலுப்பாக இருந்தது. 'யாரவது மைலப்பூரில் கொண்டுவிட்டால் தேவலை' என்று நினைத்துக் கொண்டான்.
_____ சற்று நேரம் சென்று அவனுடைய அப்பா வந்தார்.
_____"மணி ரொம்ப கூட்டமா இருக்கு, அரைமணிக்கு மேல ஆகும் போலிருக்கு, என்ன செய்யலாம்?"
_____ மணி செல்வத்தின் கையைப் பிடித்துக் கேட்டான்.
_____ "சார், கொஞ்ச நேரம் நீங்க இருப்பீங்களா?"
_____ செல்வத்துக்கு அந்த சூழல் பிடித்திருந்தது. இவர்கள் கொண்டுவிட்டாலும் விடுவார்கள் என்று நினைத்தான்.
_____ "சரி இருக்கேன்".
_____ "அப்பா நீங்க போய் பார்சலையெல்லாம் வெளியே எடுக்க ஏற்பாடு பண்ணிட்டே வாங்க. நான் இவரோட இருக்கேன். அப்பா இவரு ஏதும் சாப்பிடல போலருக்கு".
_____ "சரி மணி" என்று சொல்லிவிட்டு போனவர் ஒரு உணவுப் பொட்டலத்துடன் வந்தார். செல்வம் மகிழ்ந்து போனான்.
_____ செல்வத்துக்கு உதவிகளை தயங்காமல் ஏற்றுக் கொள்வதும், அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதும், உதாசீனங்களை உதாசீனப்படுத்துவதுமான ஒரு குணம் இருந்தது. அது அவனை மகிழ்ச்சியாக எப்போதும் வைத்திருந்தது. அவன் வாழ்வில் மகிழாத கணங்கள் குறைவு.
_____ "நீங்க கொஞ்சம் பணக்காரவுங்க போலிருக்கு"
_____ "கொஞ்சம் இல்ல, ரொம்ப"
_____ "நல்லதுங்க, எம்பேர் செல்வம்".
_____ "நான் மணி, என்ன தொழில் செய்றீங்க?"
_____ "பிசிவோ வச்சிருக்கேன்."
_____ "வருமானம் பரவாயில்லிங்களா?"
_____ "எங்கங்க வருமானம். முன்னெ மாறி இல்லீங்க. இப்ப பாருங்க நீங்க செல்போன் வெச்சிருக்கீங்க. உக்காந்த இடத்திலேர்ந்து போன் பண்ணிடுறீங்க. பூத்துக்கு ரொம்பப் பேரு வர்ரதில்லீங்க."
_____ "உங்களுக்கு குழந்தைங்க இருக்கா?"
_____ "இன்னும் இல்லீங்க"
_____ "உங்க வீட்டுக்காரங்க?"
_____ "அவதான் எனக்கு எல்லாம். துணி போட்டு உடறதிலேர்ந்து, பூத்துக்கு கூட்டி வர்றது வரை. இன்னிக்கு அவ அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லேன்னு மரக்காணம் போயிட்டா. பாருங்க ஆட்டோக்கு பக்கத்துக் கடையில் காசெல்லாம் குடுத்துட்டு போயிருக்கா. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
_____ "இல்ல செல்வம்"
_____ "வயசு"
_____ "இருபத்தெட்டாகுது. ஆனா வர்ர இடமெல்லாம் அப்பா அம்மாவுக்கு பிடிக்கல". அவன் குரலில் அவன் உணர்வு கலந்திருந்தது. செல்வம் புரிந்து கொண்டான். செல்வத்துக்கும் இருபத்தெட்டு வயதுதான்.
_____ "உங்களுக்கு எந்த ஏரியா?"
_____ "பூந்தமல்லிக்கப்புறம் ஒரு சின்ன ஊர்".
_____ அவனுக்கு சப்பென்றாகிவிட்டது. சென்னைக்குள் என்றால் அவர்களையே மைலாப்பூரில் தன் கூண்டுக்கருகே இறக்கி விடச் சொல்லலாமென்று எண்ணியிருந்தான்.
_____ "என்ன செல்வம் அமைதியாயிட்டீங்க? உங்க மனைவிகிட்ட பேசனுமா, ஏதாவது நம்பர் இருக்கா?"
_____ "ஆமாம் நீங்க எப்படி நம்பர்லாம் போடுறீங்க?"
_____ "ஒரு பழக்கந்தான்".
_____ செல்வம் மரக்காணத்தில் ஒரு வீட்டின் எண்ணைச் சொன்னான். ருக்கு வந்து பேசினாள். நாளைக்கு வருவதாகச் சொன்னாள். உணவுக்கு வீட்டில் ஏற்பாடு செய்து விட்டதைச் சொன்னாள். உதவிக்கு பக்கத்துவீட்டு பையனிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னாள்.
_____ "மணி, இன்னிக்கு எனக்கு வேலை இல்லை. நீங்க புறப்படறப்ப நானும் கிளம்பறேன்" அப்போது கேட்கலாமா என்று நினைத்தான். மணியின் அப்பா வந்து இவர்கள் பக்கத்தில் அமர்ந்தார்.
_____ "இன்னும் பத்தே நிமிஷம், உன் பியானோவை வெளியே கொண்டுவந்துடுவேன் மணி. அந்தப் பக்கம் வேன் தயாரா இருக்கு. ஏத்திவிட்டு நாம் கார்ல போயிடலாம்".
_____ இதைகேட்டதும் செல்வத்துக்கு நப்பாசை வந்தது. அவன் காரில் வெகு அபூர்வமாகவே போயிருக்கிறான். கேட்கத் துணிந்தான்.
_____ "மணி ஒரு சின்ன ஹெல்ப்"
_____ "சொல்லுங்க செல்வம், வேற யார் கூடயாவது பேசனுமா?" செல்வத்துக்கு இப்போது தயக்கமாக இருந்தது.
_____ "அப்புறம் சொல்றேன். சார் உங்க பையனுக்கு எப்ப கல்யாணம்?"
_____ "அவனுக்கு பொருத்தமா ஒரு பொண்ணு வரலியே தம்பி. வந்தவுடன் கல்யாணந்தான்".
_____ "என் ருக்கு மாதிரி ஒரு பொண்ணைக் கண்டு பிடிங்க" என்றான். மணியின் அப்பா அசவுகரியமாக உணர்ந்தார். யாரோ ஒருவன் தன் வீட்டுத் திருமணத்தைப் பற்றி பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அவரே தன் ஒரே மகனின் திருமணம் இவ்வளவு நாள் தள்ளுவதைப் பற்றி கவலையோடிருந்தார். அவரின் அசவுரியத்துக்கு ஏதோ வாசனை இருந்திருக்க வேண்டும். இடைப்பட்ட மவுனத்தில் அதை உணர்ந்த செலவம் உடனே சொன்னான்.
_____ "சார் கோச்சிக்காதீங்க, சும்மா யதார்த்தமாதான் சொன்னேன்". கொஞ்சம் தணிந்தவர் அமைதியாக இருந்தார். அவர்களது கொஞ்சநேர சல்லாபத்தில் விளைந்த நெருக்கம் அவருக்கு வியப்பாக இருந்தது. பொதுவாக மணி யாருடனும் அதிகமாக பேசுவதில்லை. அந்நியர்களுடன் சுலபத்தில் கலந்துவிடாத மணியின் சுபாவம் செலவத்திடம் வேறுபட்டிருப்பதை கவனித்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவர் செல்வத்திடம் கேட்டார்.
_____ "தம்பி நீ நெனைக்கறத சொல்லுப்பா. அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கணும்".
_____ "சார், நேத்து எங்க ஸ்கூல் ஆண்டு விழாவில ஒரு கவிதை சொன்னாங்க.... படிக்கட்டுமா"
_____ "படிங்க செல்வம்" என்றான் மணி.
_____ செல்வம் தன் பையிலிருந்து ஒரு பிரைலி தாளை உருவிப் படித்தான்.
_ _ _ _ _ _ நாசியும்என் இருசெவியும் மெய்யுமே
_ _ _ _ _ _ ___ நயனங்கள் என்றான யாக்கையில்
_ _ _ _ _ _ வாசனைகள் சுரங்களொடு சொற்களே
_ _ _ _ _ _ ___ வண்ணங்கள் என்றான வாழ்க்கையில்
_ _ _ _ _ _ யோசனையில் எவ்வுருவும் யாண்டுமே
_ _ _ _ _ _ ___ உருவாகா சிந்தைக்குள் வெளிச்சமாய்!
_ _ _ _ _ _ ஆசிகளை மெய்பிக்க வந்தனள்
_ _ _ _ _ _ ___ அக்கிழத்தி ஒளிக்கற்றை வடிவமாய்!!
(நாசி-மூக்கு, நயனங்கள்-கண்கள், யாக்கை-உடம்பு, யாண்டும்-எப்பொழுதும், அகக்கிழத்தி-மனைவி)
_____ கவிதையைத் தொடர்ந்த மவுனத்தைக் கலைத்து செல்வம் மேலும் சொன்னான்.
_____ " சார், ருக்கு இல்லாத நேரங்கள்ள கூட எனக்கு அவளப் பத்திதான் சிந்தனை. எனக்கு ருக்கு வரலன்னா யாரு வந்திருப்பா? ருக்குதான் வந்திருப்பா. ருக்குவத் தவிர யார் வர முடியும்? யார் வந்திருந்தாலும் அவதான் ருக்கு. எப்படி யோசிச்சாலும் எனக்கு இப்படிதான் சிந்தனை வருது. அந்த கவிதயக் கேட்டப்ப கூட அது ருக்குவுக்காக எழுதுன மாறிதான் எனக்கு தோனிச்சு."
_____ மீண்டும் மவுனம் நிரப்பிய அந்த நுன்னிய இடைவெளிக்குப் பிறகு அவனே தொடர்ந்தான்.
_____ "சார், மணிய யாருக்கு புடிக்குதோ அந்தப் பொண்ணப் பாத்து முடிச்சிடுங்க."
_____ இந்த வார்த்தைகள் மணியின் அப்பாவை சென்று அடைந்தது. மணி செல்வத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டான். மணியின் உலகம் சற்று வேறானது என்பதை உணர்ந்திருந்தாலும், அவ்வுலகின் ஒரு புதிய பரிமாணம் புலப்படுவதுபோல் தோன்றியது. அந்தப் பெரியவர் தன் விழிக்கடை நீர் துடைத்ததை இருவரும் அறியவில்லை. ஏதோ பல சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. மணியை யாருக்குப் பிடிக்கிறதோ அவளைத் தேடுவது அவருக்கு இடப்பட்ட உடனடி வேலையாக உணர்ந்தார். அவர் தன் அலுவலைப் பார்க்கச் சென்ற போது செல்வம் தயக்கத்தை விட்டுவிட்டு கேட்டேவிட்டான்.
_____ "மணி என்னை மைலாப்பூரில் என் பூத்தில் இறக்கிவிட முடியுமா?"
_____ மணி செல்வத்தை அணைத்துக் கொண்டான். அந்த அரவணைப்பை இன்று வரை நீக்கவில்லை. மைலாப்பூரில் இறக்கிவிட்டு வாழ்க்கையிலே ஏற்றிவிட்டான்.
_____ மணியின் கார் செல்வத்தின் கடை வாசலில் நின்று செல்வத்தின் சிந்தனையைக் கலைத்தது.
***** ***** *****
5 Comments:
முதல் பின்னூட்டம் இடுவதில் மகிழ்ச்சி...... நல்ல கதை...... உணர்வுப்பூர்வமான கதை..... லிப்ட்ன்ற தலைப்புக்காக இப்படிலாம் கூட யோசிக்கலாமானு தோனுச்சு.... நட்பு+காதல்+அன்பு எல்லமே இருந்தது கதைல..... வெற்றி பெற வாழ்த்துக்கள்.....
நன்றி அமுதன்.
முதல் பின்னூட்டத்திற்கு ஒரு சிறப்பு நன்றி.
வித்தியாசமான சில வர்ணனைகள் ரசிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள் !!
***
சில வரிகள் பார்வையற்றவர்களின் உலகத்திற்கு நம்மையும் இட்டுச் செல்கின்றன. அகக்கிழத்தி, நயனம், யாக்கை என்று புதிய(?) சொற்கள் பிடித்தன !
***
போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே பாருங்கள் !!
சோ.பை.,
கதையைப் படித்து பாராட்டியதற்கு நன்றி.
நல்ல வேலை செய்கிறீர்கள். அனைத்து படைப்புகளையும் படித்து மதிப்பெண்கள் கொடுத்து நீங்கள் கொடுக்கும் ஊக்கம் மிகவும் பயனுள்ளது.
This comment has been removed by a blog administrator.
Post a Comment
<< Home