ஒரு தலைப்புச் செய்தி
தேன்கூடு போட்டிக்கான சிறுகதை:
===================
____________ஒரு தலைப்புச் செய்தி
____________===================
_ _ _ _ _ கிருஷ்ணடு காட்டாங்குளத்தூரில் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டான். மணி மூன்றாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. வண்டலூர் தாண்டியவனுக்கு பொறி தட்டியது. 'இன்று கட்டுக்காவல் பலமாய் இருக்கும் போலிருக்கிறதே!' வண்டலூரில் ஒரு பாய்ந்தோடிய சரக்குந்து வண்டியைக் கவசமாகக் கொண்டு அங்கிருந்த காவல் சாவடியைக் கடந்துவிட்டான்.
_ _ _ _ _ 'இந்த செய்முறை விளக்கப் புத்தகங்களும், வரைபடங்களும் காலையில் ஓங்கோல் போய் சேர்ந்துவிட்டால் அவர்கள் நாளை நடத்தவிருக்கும் செயலுக்குப் பெரும் உதவியாய் இருக்கும். சுப்பக்கா எப்படியும் அந்த எட்டுமாத கர்ப்பினிப் பெண்ணை செண்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துக்கு ஐந்து மணிக்குக் கூட்டி வந்துவிடுவாள். சார்மினார் விரைவு வண்டியில் இந்தப் பெட்டியுடன் அவளைப் பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டுவிட்டால் தீர்ந்தது வேலை. ஆனால் காவல்துறை பலமாக முடுக்கிவிடப் பட்டிருக்கிறதே! எல்லாம் போன வாரம் நிகழ்ந்தவற்றால் வந்த வினை. இல்லாவிட்டால் சென்னையில் நடப்பதை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்?' என்று எண்ணியவாறே வண்டி போய்க் கொண்டிருந்தது.
_ _ _ _ _ எப்படியும் தாம்பரத்தில் பிரச்சனை இருக்கும். வேளச்சேரி சாலையில் திரும்பி விட்டால் சைதாப்பேட்டை வரை கவலை இல்லை, பிறகு அந்த போக்குவரத்து நெரிசலில் நீந்தி செண்ட்ரல் போய் சேர்ந்து விடலாம் என்று எண்ணினான். அப்போது கைபேசி ஒலித்தது. காதில் பொருத்தியிருந்த கைபேசி ஒலிபெருக்கி சொன்னது,
_ _ _ _ _ "வேளச்சேரி, திருநீர்மலை, பம்மல் ரோடுல யெல்லாம் நெறைய பள்ளம் இருக்குன்னு சொல்றாங்க. நேராவே போயிடு." (பள்ளம் = காவல்)
_ _ _ _ _ தொலைபேசியில் சொன்னபடி நேராகவே சென்றான். சரக்குந்தும் பேருந்தும் கேடயமாக அமைய சாலை நடுவனுக்கு அருகிலேயே சென்று கொண்டிருந்தான். ஆனாலும் தாம்பரத்தில் சற்று தடுமாறிவிட்டான். 'சே! இன்று நமக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது.' அப்போது கவனித்தான். பெண்கள் மற்றும் முதியவர்களுடன் செல்லும் இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.
_ _ _ _ _ 'நம்முடனும் யாரவது உடன் வந்தால் நன்றாக இருக்குமே! வலியச் சென்று எப்படி நாமே லிப்ட் தருவதாகச் சொல்வது'. இவ்வாறு யோசித்தவன் சாலையோர பேருந்து நிறுத்தங்களில் பார்வையை ஓட்டியவாறே குரோம்பேட்டை பல்லாவரத்தைக் கடந்துவிட்டான். விமான நிலையத்தைக் கடக்கவேண்டும். வண்டியை மெதுவாக ஓட்டினான். இரண்டு சரக்குந்தும் ஒரு பேருந்தும் சாலையில் ஆயுத எழுத்தப் போல முக்கூட்டாகச் செல்ல, அவற்றின் மத்தியில் தன் வண்டியைச் செலுத்தி பாதுகாப்பாக ஓட்டிச் சென்றான். விமான நிலைய சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்க, அந்த நான்கு வண்டி ஊர்வலம் தடையில்லாமல் கடந்து சென்றது. ஆனால் கடந்தபிறகு பீறிட்டு வந்தது பிகில் சத்தம். இரண்டு அல்லது மூன்று பிகில் சத்தங்கள் சேர்ந்து வந்தன. பிகில் ஏற்படுத்திய திகில் கிருஷ்ணடுவின் இரத்தத்தை உறைய வைத்தது. அவற்றைப் பொருட்படுத்தாமல் இயல்பாக வேகமெடுப்பதைப் போல் வேகமெடுத்து மற்ற உந்துகளை முந்திச் சென்றான். வண்டியை விரட்டி மீனம்பாக்கத்தில் ஒரு பொதுத் தொலைபேசி கூண்டுக்கு அருகில் நிறுத்தினான். தொலைபேசியில் யாரையோ அழைத்தான்.
_ _ _ _ _ "பஸ்ஸில் போயிடறேன்."
_ _ _ _ _ "எல்லா பஸ் ஸ்டாப்பிலேயும் பள்ளம்."
_ _ _ _ _ "ஒரு லிப்ட் வேணும்."
_ _ _ _ _ "ரொம்பத் தப்பு".
_ _ _ _ _ "நான் போறத்துக்கு இல்லை. என்னோட வர்ரதுக்கு."
_ _ _ _ _ "யார் வேணும்?"
_ _ _ _ _ "ஒரு பொம்பளை இல்லாட்டி ஒரு கிழவி அல்லது கிழவன் இப்படி யாராவது."
_ _ _ _ _ "நந்தனம் வரைக்கும் போயிடு. நந்தனம் பஸ் ஸ்டாப்பில ஒரு கிழவன் லிப்ட் கேப்பான்."
_ _ _ _ _ "கோடு"
_ _ _ _ _ "சார்மினாருக்குப் போகனும்"
_ _ _ _ _ "நான்"
_ _ _ _ _ "சுப்பக்கா வந்தாச்சா ன்னு சொல்லு. இன்னிக்கி பள்ளம் ஜாஸ்தி. பாத்துப் போ."
_ _ _ _ _ கொஞ்சம் நிம்மதியான கிருஷ்ணடு சரக்குந்து மற்றும் பேருந்து கவசங்களின் ஊடே தன் பயணத்தை நிதானமாகத் தொடர்ந்தான்.
*** *** *** ***
_ _ _ _ _ மூன்றரை மணிக்கு நந்தனம் அரசப்பரில் ஆட்டுக்கறி பிரியானியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு வெளியே வந்தான் முகுந்தன். வெண்சுருட்டு பிடிப்பதற்குத் தடையாக சுற்றுமுற்றும் யாராவது காவலர்கள் இருக்கின்றனரா என்று பார்த்தான். இப்படி பராக்காகப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விலகுமாறு அவனை உரசியபடி ஒரு சீருந்து (கார்) வந்து நின்றது. இவ்வளவு விலை உயர்ந்த சீருந்தை இப்படி காட்டுத்தனமாக ஓட்டும் அந்தத் துரவரைப் (ட்ரைவர்) பார்க்க எத்தனித்தான் முகுந்தன். அதற்குள் சீருந்து சீறுந்தாக மாறி நந்தனம் சிக்னலை நோக்கி சீறிப் பறந்தது. முகுந்தன் தனக்குத் தெரிந்த பெரிய வசவுகளை மனத்துக்குள் கரித்துக் கொண்டு பவ்வியமாக ஒரு வெண்சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு நந்தனம் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அவனுக்கு முன்னால் அந்தப் பெரியவர் போய் கொண்டிருந்தார்.
*** *** *** ***
_ _ _ _ _ காவல் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அலறியது. சார்மினார் என்ற சொல் ஒரு பொதுத் தொலைபேசியில் பேசப்பட்டு, பதிவாகி அலாரத்தை இயக்கியது. அந்த உரையாடலின் அந்நியத் தன்மை உடனடியாக நான்கு காவலர்களை மீனம்பாக்கத்துக்கு விரட்டியது.
*** *** *** ***
_ _ _ _ _ ஆழ்வார்பேட்டைப் போகவேண்டி தனக்கு வரவேண்டிய 45A எண்ணுள்ள பேருந்து வராததால் வெறுப்புற்ற முகுந்தன் இன்னொரு வெண்சுருட்டை யோசித்தான். அந்த முதியவரும் தன்னுடைய பேருந்துக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது என்று எண்ணினான். அந்த வழியில் வரும் மற்றெல்லா வண்டிகளும் வந்து போய்விட்டன. அவ்வழியே மெதுவாக வந்த ஒரு மோட்டர்சைக்கிளை நிறுத்தினார் அந்த முதியவர்.
_ _ _ _ _ "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"
_ _ _ _ _ "எங்கே"
_ _ _ _ _ "சார்மினார் போகனும்."
_ _ _ _ _ இதைக் கேட்ட மோட்டார்சைக்கிள்காரன் சற்று பேந்த விழித்துவிட்டு போய்விட்டான். வித்தியாசமாக உணர்ந்த முகுந்தன் சற்று அப்பால் சென்று கைபேசியில் தன் காவலர் நண்பனை அழைத்து நிகழ்ந்ததை விவரித்தான். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறை ஜீப் முதியவரை அள்ளிச் சென்றது. சற்று நேரத்தில் மிடுக்கான முதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவ்வழியே மெதுவாக வந்த ஒரு மோட்டர்சைக்கிளை நிறுத்தினார் அந்த முதியவர்.
_ _ _ _ _ "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"
_ _ _ _ _ "எங்கே"
_ _ _ _ _ "சார்மினார் போகனும்."
_ _ _ _ _ "சுப்பக்கா வந்தாச்சா?"
_ _ _ _ _ அவன் ஏற்றிக் கொண்டான். அவர் ஏறிக் கொண்டார். தேனாம்பேட்டை சிக்னல் தாண்டியவுடன் ஒரு சிறு காவல்படை அவர்களை வளைத்தது. கோழி அமுக்காக இருவரையும் அமுக்கியது. முதியவர் காவலர்களுடன் சேர்ந்து கொண்டார்.
*** *** *** ***
_ _ _ _ _ முகுந்தனின் கைபேசி அழைத்துச் சொன்னது, "முகுந்தா ரிவாடு நிச்சயம்."
*** *** *** ***
_ _ _ _ _ மறுநாள் காலை தலைப்புச் செய்தி:
_ _ _ _ _ "முக்கிய ஆவணங்களுடன் நக்சல் தீவிரவாதி பிடிபட்டான்."
_ _ _ _ _ கிருஷ்ணடு முட்டி வலியில் புலம்பிக் கொண்டிருந்தான்.
_ _ _ _ _ 'சரியான லிப்ட் கிடத்திருந்தால் நாளைக் காலை தலைப்புச் செய்தி வேறொன்றாக இருந்திருக்கும்.'
****** ****** ****** ******
13 Comments:
அய்யா,
கலக்குறீங்க.
21ந்தேதி சென்னைக்கு வந்து வாக்காளர் அட்டையக் காட்டிட்டு ஓட்டு போடுறேன் :)
என்னா ஒழுங்கு. காட்டாங்கொளத்தூரு, தாம்பரம், வேளச்சேரி ரோடு, சைதாப்பேட்ட, நந்தனம் - எங்கியாவது பாதை தவறியிருக்கான்னு பாத்தேன் - அட்டகாசமான ஒழுங்கு. 45ஏ - வேளச்சேரி - திருவல்லிக்கேணி - ஆழ்வார்ப்பேட்டை வழி...கலக்கல்.
அய்யா, சென்னைக்காரன் நானு ரசிச்சுப் படிச்சேன்.
வெற்றி கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
as(k)_at - சும்மா பரிபாஷதான் :)
மிக விறுவிறுப்பான கதை!
ஒரு இடத்திலும் தொய்வில்லை!
ஒவ்வொரு நிமிடமும் பர பர வென இருந்தது1
பக் பக் என மனம் அடித்துக் கொன்டது!
அட்டகாசமான கற்ர்பனை!
இதற்கு முதல் பரிசு கிடைக்கவில்லையெனில்....
போட்டி நடுவர்களைச் சந்தேகிப்பதைத் தவிர வேறு வழியில்லை!
என் வோட்டு நிச்சயம்!
வாழ்த்துகள்!
ஓகை
நன்றாக உள்ளது தங்கள் நடை எல்லாம்
பாய், பாராட்டியதற்கு நன்றி. தங்கள் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறான் இந்த சென்னை மைந்தன்.
SK, மிகத் தாராளமாக பாராட்டி இருக்கிறீர்கள். நன்றி.
நடுவர்களை சந்தேகப் படாதீர்கள். நாம்தானே நடுவர்கள். ஓட்டெடுப்பு முறையில்தானே முதல் பரிசு தேர்ந்தெடுக்கப் படுகிறது.
மீண்டும் நன்றி.
என்னார், நன்றி.
நடை நன்றாக இருக்கிறது என்கிறீர்கள். நன்றி. தவிர்க்க முடியாத இடங்களைத் தவிர மற்றெல்லா இடங்களிலும் ஆங்கில சொற்களைத் பயன்படுத்தாமல் எழுதுகிறேன். எல்லோரும் அப்படி எழுதுவதையே விரும்புகிறேன்.
துரவர் என்ற சொல்லை இராம.கி ஐயா அவர்களின் பதிவிலிருந்து அறிந்து கொண்டேன்.
சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் விரைவில் பூரண நலமடைய வேண்டுகிறேன்.
ஓகை ஐயா
அருமையான விறுவிறுப்பான கதை.
வாழ்த்துக்கள்!
கப்பி அவர்களே,
மிகவும் நன்றி.
அன்பின் ஓகை, அருமையான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அருமையான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அருமையான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
REGRET THAT IT DIDNT RECEIVE THE SELECTION. PLEASE READ MY EARLIER COMMENT!
உங்கள் அன்புக்கு மிக மிக நன்றி எஸ்கே.
இந்த படைப்பிற்கு இருபது வாக்குகள் கிடைத்துள்ளது. போட்டி முறைகளில் பல ஓட்டைகள் இருக்கின்றன. இப்போது அவற்றை விவாதித்து சரி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாதம் முயற்சி செய்வோம்.
புது கதை சூக்கும வழி படித்தீர்களா?
Post a Comment
<< Home