Sunday, September 17, 2006

மொழிபெயர்ப்பு

தேன்கூடு போட்டிக்கான கதை.

_ _ _ _ _ அசோகன் அவசரமாக வண்டியை நிறுத்தினான். திடீரென பிடித்துக் கொண்ட பெருமழை அவனை தெருவோரம் விரட்டியது. இன்று மழை வருமென அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பார்த்திருந்தால் மழையுடை கொண்டு வந்திருப்பான். இப்படி ஒரு புறநகர்ப் பகுதிக்கு வருவதைக் கூட அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. துனி துவைக்கும் இயந்திரங்கள் பழுதானால் சரி பார்க்கும் சேவைப் பொறியாளன் அவன். அவனுக்கு அழைப்பு எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் வரும். இன்று இன்னொரு நாள். இன்னொரு இடம்.

_ _ _ _ _ இரவு மணி எட்டைத் தாண்டிவிட்டது. மழை கணஜோராகப் பெய்து கொண்டிருந்தது. அந்த இடம் ஒரு புறநகர் பகுதியின் விளிம்பு. சாதாரணமாகவே ஆள் நடமாட்டம் மிகக் குறைவு. இப்போது அடியோடு ஜனசந்தடி இல்லாமல் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மங்கிய ஒளியில் எரிந்து கொண்டிருந்த தெரு விளக்குகள் திடீரென அனணந்தன. இது போன்றதொரு திடீர் மழையைத் தொடர்ந்து இப்படி மின்தடை வருவது வெகு இயல்பான செயலாகப் பட்டது அசோகனுக்கு. தொடர்ந்து கும்மிருட்டு நிலவியது. நள்ளிரவைப் போல். நட்சத்திர நிலவொளிகளைக் கூட கருமேகப் படுதா மறைத்துவிட்டிருந்தது.

_ _ _ _ _ அசோகன் தான் நின்றுகொண்டிருக்கும் சூழலைக் கவனித்தான். கட்டி முடிக்கப் படாத, கட்டுமானம் கைவிடப்பட்ட ஒரு வீட்டின் முகப்பு. பாதி முடிந்த சுற்றுச்சுவரில் ஒரு குப்பைமேடு. லேசான துர்நாற்றத்துடன். சட சடவென்ற மழை சத்தத்துடன் சட்சட்டென்ற சொட்டு ஒலிகளும் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. மெலிதாக ஒரு பூனை கத்தியது.

_ _ _ _ _ மழை விடுவதாக இல்லை. மின்சாரமும் வருவதாக இல்லை. மழை விட்டாலும் அந்த குண்டும் குழியுமான சாலையில் செல்ல ஏற்கனவே தயங்கியவனுக்கு இப்போது வந்த மழையால் ஏற்பட்ட சேறும் சகதியும் புது பயத்தைக் கொடுத்தது. தண்ணீர் நிரம்பிய குழிகளில் முன் சக்கரம் லொடுக்கென்று விழும்போது வரும் தடுக்கிடும் மனவோட்டம் அவனைப் படுத்தியது. மீண்டும் அந்த பூனைக் குரல் வந்தது. இல்லை! அது பூனை இல்லை!! அசோகனுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. சிறிதே இடைவெளிவிட்டு அதேக் குரல் மீண்டும் வந்தபோது அமானுடமாயும் மனிதக் குரலாகவும் ஒரே நேரத்தில் உணர்ந்தான். நல்ல வேளையாக மழை சற்று குறைந்து மின்சாரம் வந்தது. மின் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன.

_ _ _ _ _ அசோகனுக்கு தூரத்து விளக்கொளி சற்று தைரியத்தைத் தந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு அந்த குப்பை மேட்டுக்கு அருகில் சென்றான். மொட்டு விழிகளைக் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு ஒரு பச்சிளம் குழந்தை. இன்று பிறந்திருக்கலாம். ஒரு பழைய சேலையில் தளர்வாக சுற்றப்பட்டு தூக்கி எறியப்பட்ட - இல்லை, பாந்தமாக வைக்கப்பட்ட - அந்தக் குழந்தை நேராக இவனைப் பார்த்தது. சற்று முன்பு கத்தியதெல்லாம் நான்தான் என்பதுபோல மீண்டும் அதே ஓசையில் ஒருமுறை கத்திக் காண்பித்தது.

_ _ _ _ _ அசோகன் உற்றுப் பார்த்தான். அதன் பார்வை அவனுக்கு எதையோ சொல்லியது. ஆனால் புரியவில்லை. ஐயோ யாரேனும் இக்குழந்தையின் பார்வையை மொழிபெயர்ப்பார்களா? அவனுடைய வேண்டுகோள் ஆண்டவனுக்குக் கேட்டுவிட்டது. அவர் மொழிபெயர்த்து அவனுக்க்ச் சொன்னார்,

_ _ _ _ _ "அரசு அனாதைக் குழந்தைகள் காப்பகத்துக்கு எனக்கொரு பயணம் தருவாயா?"

*** *** *** *** *** *** *** *** *** *** ***

6 Comments:

At September 18, 2006 2:51 AM, Blogger ENNAR said...

இக்கால கர்ணனை சைக்கிள் ஓட்டி எடுத்து என்ன செய்தார்.
உண்மையில் இதையெல்லாம் என்னவென்று செல்வது படிக்கவே கஷ்டமாக இருக்கிறதே.
நாட்டில் இப்படியும் உண்டு நிறை பாவிகள்.

 
At September 22, 2006 6:48 PM, Anonymous Anonymous said...

நல்ல கருத்துள்ள கதை. எனக்குப் பிடித்தது...

 
At October 02, 2006 3:08 AM, Blogger ஓகை said...

என்னார், குந்தி கடைசிவரை நன்றாகத்தானே இருந்தாள். அரச போகத்தோடு. கர்ணன் இறந்தபிறகும்.

பாவம் கர்ணன்.

 
At October 02, 2006 9:19 PM, Anonymous Anonymous said...

have no idea what your blog is about. but the script used in your contect is absolutely amazing.

 
At October 03, 2006 10:01 AM, Blogger ஓகை said...

thanks ananai.

please tell me thruogh e-mail about my blog, if you have anything to say.

 
At October 03, 2006 8:30 PM, Blogger ஓகை said...

வைசா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் கருத்தும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகத்தான் இருக்கிறது. நன்றி.

கதை ' ஒரு லிஃப்ட் கிடைக்குமா' என்ற கருத்தில் போட்டிக்காக எழுதப்பட்டது. குழந்தையின் பார்வையை ' எனக்கு ஒரு பயணம் தருவாயா?' என்று மொழி பெயர்த்துச் சொன்ன அருவமாக ஆண்டவனைச் சொல்லிவிட்டேன்.

 

Post a Comment

<< Home