Wednesday, November 01, 2006

கார்பன் மானாக்ஸைடு - மரண எச்சரிக்கை.

சென்னை நகரில் பெய்த மழையில் 28-10-2006 அன்று தாங்கள் இருந்த சீருந்தில் (CAR) மூவர் மூச்சு திணறி இறந்திருக்கிறார்கள். இவர்கள் மரணத்துக்குக் காரணம் ஏராளமான கார்பன் மானாக்ஸைடை சுவாசித்ததுதான் என்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் தெரிய வருகிறது. இது பற்றிய விரிவான செய்தியை ஹிந்து நாளேடு 31-10-2006 அன்று வெளியிட்டிருக்கிறது.

வழக்கத்தில் மிக அரிதாக நடக்கும் இந்த மரணங்கள் எனக்கு பெரிய அதர்ச்சியை அளித்தது. ஏனென்றால் நான் சீருந்தின் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு ஏசியை ஓட விட்டு நான்கு மணிநேரம் கூட தூங்கியிருக்கிறேன். இதுபோல் பலரும் செய்திருக்கலாம். அல்லது செய்யக்கூடும். அவர்களுக்கான எச்சரிக்கை இந்த மரண எச்சரிக்கை.

ஒரு சீருந்தோ அல்லது அதைப் போன்று அடைக்கப்பட்ட ஓர் இடமோ எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப் படுகிறதோ அதைவிட பன்மடங்கு பாதுகாப்பற்றது என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. விபத்தில் சிக்கிச் சிதைந்த ஒரு சீருந்து உள்ளிருப்பவர்களுக்கு உடனடி நரகத்தை வழங்கிவிடும். குடந்தையில் பள்ளி சிறுவர்களுக்கு ஏற்பட்டதைப் போல வெளியேற முடியாமையால் ஏற்படும் இன்னல்கள் சூழ்ந்துவிடும். நச்சுக்காற்றை சுவாசித்து அரை/முக்கால் மயக்க நிலைக்கு வந்தவர்களால் கதவைத் திறந்து வெளியேற்முடியாமல் போய்விடும்.

கார்பன் மோனாக்ஸைடு என்றால் என்ன?

இது ஒரு நிறமற்ற மணமற்ற சுவையற்ற நச்சு வாயு. மனிதனால் எந்த வகையிலும் இது தம்மை சூழ்ந்திருப்பதை உணரவியலாது.

ஒரு சீருந்தின் எஞ்சின் வெளியேற்றும் வாயுக்களில் மனிதனுக்கு ஒவ்வாத வாயுக்கள் மூன்று பிரிவுகளில் இருக்கின்றன. அவை 1. எரியாத எரிபொருளின் ஆவிகள். (unburned hydrocarbons), 2.கார்பன் மானாக்ஸைடு, 3. நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் (oxides of nitrogen - NOx). இவற்றில் முதலாவதான எரியாத எண்ணெய் ஆவிகள் உருவாதற்கு முக்கிய காரணம் எஞ்சினுக்குள் முழுவதும் எரிவதற்கு போதுமான ஆக்ஸிஜன் அதாவது காற்று இல்லாமல் போவதுதான். இது முற்றிலும் தவிர்க்க இயலாத ஒன்று. ஏனென்றால் எஞ்சின் தொடர்ந்து சரியாக இயங்குவதற்கு சில இயங்குநிலைகளில் காற்று எரிபொருள் விகிதத்தில் எரிபொருள் அளவைக் கூட்ட வேண்டியிருக்கிறது. மூன்றாவதான நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உருவாகக் காரணம் - எஞ்சினுக்குள் இருக்கும் உயர் அழுத்தம் மற்றும் வெப்ப நிலை காரணமாக பல சிக்கலான வேதி வினைகளினால் அங்கு சும்மா இருக்கும் நைட்ரஜனுடன் ஆக்ஸிஜன் சேர்ந்து கொண்டு சில நைட்ரஜன் ஆக்ஸைடுகளை உருவாக்கி விடுகிறது. இவை அமிலத் தன்மை கொண்டவை. இரண்டாவதான கார்பன் மானாக்ஸைடு ஒரு நிறைவுறாத கார்பன் - ஆக்ஸிஜன் கூட்டுப்பொருள். எஞ்சினுக்குள்ளே எரிபொருள் முற்றிலுமாக எரிந்து கார்பன் டை ஆக்ஸைடாகவும் நீராவியாகவும் மாறவேண்டும். ஆனால் பல காரணங்களால் இவ்வினை முழுமையாக நிகழாமல் கார்பன், குறைந்த அளவு ஆக்ஸிஜனுடன் சேர்ந்து இந்த விஷ வாயு உருவாகிவிடுகிறது. இவை மூன்றுமே எரிபொருள் சிக்கனம் மற்றும் உடல்நலத்துக்கு எதிரானவை. இவை எஞ்சினினுள் ஏற்படுவதை ஒழிக்கவும் குறைக்கவும் இடைவிடாத ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

நட்டநடு நகரத்தில் மிக முக்கிய சாலையொன்றில் மூடியிருக்கும் சீருந்தில் எவ்வாறு இந்த கொல்லும் வாயுக்கள் உருவாக முடியும்? ஹிந்து செய்தி என்ன நடந்திருக்கலாம் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீருந்தின் அடியில் தேங்கிய மழைநீரால் நீர்மட்டம் உயர்ந்து வெளியேற்றும் குழாய் (Exhaust pipe or tail pipe) வரை வந்தபின் எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுக்களின் கசிவு வளிக்காற்றில் கலக்க முடியாமல் சீருந்தினுள் சென்று அடைந்திருக்கிறது. இது சீருந்தின் உள்ளிருக்கும் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கார்பன் மானாக்ஸிடின் அளவை அதிகரித்திருக்கிறது. நமது இரத்தத்தில் ஆக்ஸிஜன் ஏற்பிகளாக செயல்படும் ஹீமோகுளோபினுக்கு இந்த வாயுவின் மீது அதீத ஈர்ப்பு உள்ளதால் இரத்தம் இவ்வாயுவை அதிகம் உட்கொண்டு உடலுக்குக் கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் அளவை வெகுவாகக் குறைத்துவிட்டிருகிறது. இதன் இறுதி விளைவாக மரணம் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு சீருந்தின் எஞ்சின் குறைந்த அளவில் அதாவது எஞ்சின் இயங்கவும் ஏசி இயங்கவும் தேவையான சக்தியை உண்டாக்கும் நிலையில் (idling conditions) ஓடினால அது மிகக் குறைந்த வேலைத்திறனில் வேலை செய்யும். இந்நிலையில் எரியாத எண்ணெய் வாயுக்களும் கார்பன் மானாக்ஸைடும் அதிக அளவில் உருவாகும். இது பெட்ரோல் வண்டிகளுக்கு மிகவும் பொருந்தும். உயர்ந்த விலையுள்ள வண்டிகளில் கிரியா ஊக்கி மாசு மாற்றி (catalystic converter) என்ற கருவியை வாயு வெளியேறும் வழியில் எஞ்சினுக்கு அருகில் பொருத்தி இருப்பார்கள். மேலை நாடுகளில் இது எல்லா சீருந்துகளுக்கும் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது எனறு நினைக்கிறேன். இந்த மாசுமாற்றி எஞ்சினுள் உருவாகும் மூன்று அபாய வாயுக்களையும் அபாயமற்ற கார்பன் டை ஆக்ஸைடாகவும் நீராவியாகவும் மாற்றி வெளியே நமது வளிக்கு அனுப்புகிறது.

நாம் என்ன செய்யலாம்:

1. சீருந்துகளை அதிக நேரம் சும்மா நிலைகளில் (idling condition) ஓட விடுவது பெரும் தவறு.

2. ஏசியை தேவையான சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் மறுசுழற்சி நிலையில் வைக்காமல் (recirculation mode) காற்று உள்வரும் நிலையில் (ventilaating mode) வைக்க வேண்டும். இது மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலோனோர் அவ்வாறு செய்வதில்லை.

3. அடைக்கப்பட்ட சீருந்து எந்த அடைக்கப்பட்ட இடத்தையும் விட ஆபத்தானது. எஞ்சின் ஓடிக்கொண்டிருந்தால் இந்த ஆபத்து பன்மடங்காகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் இதை உணர்ந்திருக்க வேண்டும்.

4. நின்று கொண்டிருக்கும் சீருந்தை ஒரு ஏசி அறையாக பயன்படுத்தும் சபலத்தை அடியோடு நீக்குவது நலம்.

5. ஆனால் தற்போதைய கலாச்சாரத்தில் சீருந்தை ஒரு ஏசி அறையாக நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. தவிர்க்க முடியாத நேரங்களில் ஏசியை காற்று உள்வரும் நிலையில் வைத்து மிகக் குறைந்த நேரத்துக்கு அவ்வாறு பயன்படுத்தலாம்.

6. மாசுமாற்றி பொருத்தப்பட்ட சீருந்துகளை வாங்குவது நலம்.

12 Comments:

At November 01, 2006 9:52 PM, Blogger BadNewsIndia said...

நல்ல புத்திமதி!
கேட்டு நடந்தால் நல்லது தான்.

 
At November 01, 2006 10:49 PM, Anonymous Anonymous said...

தில்லியில் இதுபோன்று இரு சம்பங்களில் ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் இரு இளைஞர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.
அந்த குடும்பத்தினர் மழை காரணமாக வீடு செல்ல முடியாமல் அதில் தூங்கி விட்டிருந்தார்கள்.இளைஞர்கள் தங்களை ஒரு கார் வைக்கும் காரேஜ்ஜில் வைத்து பூட்டி கொண்டதால் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து போயிருக்கிறார்கள். இரண்டிலும் ஏசி தான் காரணம்.
ஆனாலும் இன்னும் விழிப்புணர்ச்சி வரவில்லை..வாகனங்கள் பெருகிய அளவு அதன் உபயோகிக்கும் முறை மற்றும் ஆபத்துகள் முழுமையாக அறியப் படவில்லை.

 
At November 02, 2006 5:08 AM, Blogger murali said...

மிக உபயோகமான பகுதி. எளிமையான மொழியாக்கம்.நன்றிகள்.நானும் சீருந்தை
குளிர்சாதன அறையாக உபயோகிக்கும் பழக்கம் உள்ளவன்தான்,இனி எச்சரிக்கையாக இருப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

 
At November 02, 2006 9:58 AM, Anonymous Anonymous said...

Excellent info. Thank you for your post. We can all learn from this.

 
At November 02, 2006 10:56 AM, Blogger Nakkiran said...

நன்றாக புரியும்படி உள்ளது.. நன்றி

 
At November 02, 2006 6:16 PM, Blogger PRABHU RAJADURAI said...

கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில், ஜன்னல்களை அடைத்து குளீருக்கு நெருப்பு மூட்டுப்வரகளுக்கும் இந்த ஆபத்து உள்ளது....அங்கு பல சம்யம் நடந்துள்ளது

 
At November 02, 2006 6:21 PM, Blogger High Power Rocketry said...

: )

 
At November 02, 2006 8:48 PM, Blogger ஓகை said...

வைசா,

கார்பன் மானாக்ஸைடின் இயல்பு என்னவென்றால் அதை நாம் உணரவே முடியாது. மௌனமாக கொன்றுவிடும். சீருந்தின் மற்ற இரண்டு மாசு வாயுக்களின் அளவு அதிகமானல் அவை தம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்.

 
At November 02, 2006 8:57 PM, Blogger ஓகை said...

பிரபு, வருகைக்கு நன்றி.
விறகு எரிவதால் அடைக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஆக்சிஜனை முழுமையாக எடுத்துக்கொள்ளும். அங்கு ஆக்சிஜன் இல்லாததால் ஆபத்து ஏற்படுகிறது. விறகு தவிர மற்ற எரிபொருள்களும் நிதானமாக எரியும்போது போது கார்பன் மானாக்சிடு உருவாதில்லை. ஆனால் ஒரு சீருந்து எஞ்சினுக்குள் இருக்கும் அதீத சூழல்கள் இந்த கொலை வாயுவை உருவாக்குகின்றன. சீருந்தில் இரட்டை ஆபத்து வருகிறது. ஒன்று ஆக்சிஜன் குறைவதால் மற்றொன்று இந்த கொலை வாயுவினால்.

 
At November 03, 2006 6:36 AM, Blogger ஓகை said...

BNIndia, மாதினி, முரளி, அனானி, நக்கீரன் - அனைவருக்கும் நன்றி.

 
At November 07, 2006 8:15 AM, Blogger Mohan Madwachar said...

அன்புடையீர்,

என்னுடயை வலைப்பூவிற்கு வருகை தந்து குறிப்பு விட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி. தங்களிடம் உள்ள மயிலை சீனி அவர்களின் புத்தகம் மின்புத்தகவடிவில் உள்ளதா.

உங்கள் வலைப்பூவும் நன்றாக இருக்கிறது. படித்துவிட்டு என் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

மோகன்
http://tamilamudhu.blogspot.com

 
At November 08, 2006 1:09 AM, Blogger We The People said...

இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

//கார்பன் மானாக்ஸைடின் இயல்பு என்னவென்றால் அதை நாம் உணரவே முடியாது. மௌனமாக கொன்றுவிடும்.//

அதனால் தான் கார்பன் மானாக்ஸைடை Silent Killer என்று சொல்லுவார்கள். அவசியமான பதிவு.

நன்றி,

ஜெய்

 

Post a Comment

<< Home