மங்களூர்.
சென்ற வாரத்தில் முதன்முறையாக இந்த ஊருக்குச் சென்றிருந்தேன். தொழில் முறையில் அங்கிருக்கும் NIT ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாட்கள் தங்கி இருந்தாலும் மங்களூரின் சிறு பரிச்சயம் ஏற்படும் அளவிற்கே நேரம் கிடைத்தது.
மங்களூரைப் பற்றி நான் அறிந்திருந்த செய்திகள் அங்கு ஒரு NIT இருப்பதும் குதிரமுக் இரும்புத்தாது தொழிலும் வலைப்பதிவர் முத்து தமிழினியும்தான். அவரைச் சந்தித்த விவரம் தனிப் பதிவில் தருகிறேன்.
சென்னையிலிருந்து நேர் மேற்காக பறவைப் பாதையில் செல்லுங்கள். கீழே தெரியும் பங்களூர் நகரைத்தைத் தாண்டி அரபிக் கடலோரத்தில் இறங்கினால் மங்களூருக்கு மிக அருகில் இருப்பீர்கள். (சென்னை 13.04 வ, பங்களூர் 12.58 வ, மங்களூர் 12.54 வ) அதனால் சென்னையைப் போன்ற தட்பவெப்பம்தான். ஆனால் ஏராளமாக மழை பொழியும் போலிருக்கிறது. பலகட்டடங்களின் கூரைகளும் சுற்றுச் சுவர்களும் பாசி படர்ந்திருக்கிறது.
மேற்குக்கரை அரபிக் கடலோர நகரங்களில் நான் திருவனந்தபுரம், ஆலப்புழை, கொச்சி, கள்ளிக்கோட்டை ( காலிகட்), கோவா, மும்பை ஆகிய நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். கேரள நகரங்களையும் கோவாவையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மங்களூர் வருமென்று எதிர்பார்த்திருந்தேன். அது ஓரளவுக்கு சரியாக இருந்தது. எங்கெங்கு காணினும் பசுமையாக இருக்கிறது நகரம். நகரத்துக்குள்ளேயே ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரும் பள்ளத்தாக்கு வருகிறது. ஆ! எங்கேயும் காணமுடியாத காட்சி!! பரந்த விரிந்த அந்த பள்ளாத்தாக்கில் சுமார் ஒரு லட்சம் தென்னை மரங்கள் இருந்தன. விரிந்த கண்கள் விரிந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் நடுவே வெள்ளையர் காலத்தின் ஓர் ஒற்றை பெரிய பங்களாவின் மேற்கூரைகள் தெரிய, சுற்றிலும் கரும்பச்சை தென்னை ஓலைகளாக மனதை கிறங்க அடித்தன. நாசிக்கிலிருந்து எங்கள் கருத்தரங்கிற்கு வந்திருந்த ஒருவர் இதே இடத்தில் மிக வியந்ததை என்னிடம் சொன்னார். மேற்குக்கரைக்குறிய ஏற்ற இறக்கத்துடன் சாலைகள் இருக்கின்றன. ஒரு ஆறு ஏராளமான தண்ணீருடன் கடலில் கலக்கிறது. நகரிலிருந்து பத்து கிலோமீட்டர் கடற்கரைக்கு இணையாகவே வடக்கு நோக்கி சென்ற பிறகுதான் ஒரு சிறிய கடல்மணல் பரப்பு வருகிறது. பீச்சாங்கரை. நான் சென்ற தினம் ஞாயிற்றுக் கிழமையாகையால் மக்கள் ஜேஜே என்று இருந்தார்கள்.
நான் சாப்பிட்ட உணவகத்தில் நல்ல மீன்கறி கிடைத்தது. ஆனால் சாம்பார் சட்டினி அவ்வளவு சரியாக செய்யத் தெரியாது போலிருக்கிறது. இங்குள்ளவர்களுக்கு ரவாகேசரி மிகவும் பிடிக்கும்போல் தெரிகிறது. அதில் ஏராளமாய் முந்திரி போடுகிறார்கள். முந்திரி விளைச்சல் மிக அதிகம். முந்திரிக்கொட்டை எண்ணையை எரிபொருளாக உபயோகிக்கப்ப்டுவதைப் பற்றி எங்கள் கருத்தரங்கில் பேசப் பட்டது. முந்திரி விளைச்சல் அதிகமாக இருந்தும் முந்திரி விலை குறைவாக இல்லை. பாண்டிச்சேரி மற்றும் பன்ருட்டியைவிட மிக அதிகம். பொதுவாகவே இங்கு விலைவாசிகள் சற்று அதிகமாகத்தான் இருக்கும்போல் தெரிகிறது.
மாநகராட்சி அந்தஸ்துள்ள அமைதியான நகரம். போக்குவரத்து மெதுவாக நடக்கிறது. ஆட்டொக்காரர்கள் மீட்டர்படி பணம் வசூலிக்கிறார்கள். ஆங்கிலம், இந்தி, கன்னடம் அல்லது துளு மொழிகளில் ஒன்றைப் பேசி இங்கு சமாளித்துவிடலாம். பாரம்பரிய இசை மற்றும் நாட்டியங்களின் மேல் பற்று வைத்திருக்கிறார்கள்.
தனித்தன்மையுள்ள நகரம்.
8 Comments:
என்ன ஓகை நீங்கள் மட்டும் பார்த்தால் போதுமா ஒரு போட்டோ எடுத்துப் போட கூடாதா?
நான் உங்கள் 'டு'
நானே பார்க்காத இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை அருமையாக விவரித்துள்ளீர்கள்.நன்றி.
என்னார், முத்து(தமிழினி),
நன்றி.
//நகரத்துக்குள்ளேயே ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரும் பள்ளத்தாக்கு வருகிறது. //
அது எந்த சாலை என்று பெயர் சொல்லியிருக்கலாமே! புதிதாக மங்களுரு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
//அது எந்த சாலை என்று பெயர் சொல்லியிருக்கலாமே! //
..கலாம்தான். நான் விசாரித்து சொல்கிறேன்.
வைசா, சென்று வாருங்கள்.
பல நாட்களுக்குப் பின் ஒரு வெண்பா பதிவு . கட்டாயம் வாங்க. :)
இகொ, அங்கு சென்றேன். பதித்தேன்.
Post a Comment
<< Home