சூக்கும வழி
இம்மாத தேன்கூடு போட்டிக்கான என் சிறுகதை.
ஆசாத் அளித்த விடுதலை என்ற தலைப்பில் எனது படைப்பு முதல் படைப்பாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
சூக்கும வழி
=======
இத்தனை நாள் தோன்றவில்லை. இன்று தோன்றிவிட்டது. இன்று விடுதலை ஆகிவிட வேண்டும். எப்படியாவது விடுதலை ஆகிவிட வேண்டும். யோசித்தான். அடைபட்டிருந்த அந்த அறையில் கும்மிருட்டாக இருந்தது. எங்கும் வழியிருப்பதாகத் தெரியவில்லை. அவனை அந்த அறையில் ஏதோ ஒரு இடத்தில் கட்டிப்போட்டிருந்தார்கள்.
கட்டப்பட்டிருப்பதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. ஆனால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இங்கு ஏதோ ஒரு வழி கட்டாயம் இருக்கவேண்டும். எங்கே இருக்கிறது அந்த சூக்கும வழி? அந்த தனிச்சிறையில் ஆன மட்டும் தேடிப்பார்த்தான். கைகளால் துழாவினான். கால்களால் நிரடினான். ஊஹ¤ம். ஒரு வழியும் புலப்படவில்லை. என்ன செய்வது? கைகளை பிசைந்து கொண்டான். உடம்பையே பிசைந்து கொண்டால் கூட தேவலாம் போலிருந்தது. செய்தான். பளிச்சென்று ஏதோ ஒன்று மூளையில் உறைத்தது.
ஆ! அங்கே இருக்கிறது அந்த சூக்கும வழி!! சே, இவ்வளவு நேரம் இது தோன்றவில்லையே! எப்படி தோன்றியது நமக்கு இந்த வழி? யாருமே சொல்லாமல்! ஆனால் இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை. உடனடியாகக் காரியத்தில் இறங்க வேண்டும். இறங்கியே ஆக வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத அந்த சூக்கும வழியில் ஆழம் தெரியாமல் காலை விடலாமா? யோசித்தான். அவசரப்படக்கூடாது. முதலில் வழியின் அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். பிறகு முடிவு செய்து கொள்ளலாம்.
மெதுவாக அந்த வழியில் சென்று எட்டிப்பார்த்தான். சுகமான காற்று வீசியது. சுந்தர ஒளிமயமாக இருந்தது. சுகந்தம் நாசியில் உறைத்தது. சூக்கும ஒலிகள் கேட்டன. அவன் முடிவு செய்து விட்டான். முயன்று முயன்று வெளியேறி விட்டான்.
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!
இந்த விடுதலையை கொண்டாட விரும்பினான். பெருங்குரலெடுத்துக் கத்தினான்."குவா!.குவாஆ!"
* * * * * * * * *
16 Comments:
அவன் கயிற்றால் கட்டப்பட்டிருப்பானென்றல்லவ நினைத்தேன் கொடியில் அல்லவா கட்டப்பட்டிருந்தான் அவன் அவளாக இருந்தால் நெல் மணி எருக்கம்பால் கிடைத்திருக்கும் நல்ல கதை நம்கதை
ஆமாம். நம் கதை ஒரு பெரும் விடுதலையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இரட்டை விடுதலை. தாய்க்கும் சேய்க்கும்.
வைசா, நன்றி.
நடராஜன் அய்யா,
கதைக் கரு நன்றாக இருக்கிறது.
அன்புடன்
ஆசாத்
ஆசாத் வருகைக்கு நன்றி.
நீங்கள் தலைப்பிட்ட போட்டியில் முதல் தலைப்பு என்னுடையதாக இருக்கவேண்டும் என்று ஒன்னாம் தேதி காலையிலேயே பதிவிட்டேன். ஆனாலும் நிர்மல் என்கிற நண்பர் 31ம் தேதியே அனுப்பி அந்தப் பெருமையை வென்றுவிட்டார்.
சார், ஏற்கனவே இந்த மாதிரி கதை ஒன்றை படித்துவிட்டேனே. எங்கே எனத் தேடிப் பார்த்து சொல்கிறேன்.
வைசா, தவறுதான். 30ம் தேதி தான்.
நன்றி.
இகொ,
இது படி எடுத்ததில்லை. சொந்தக் கற்பனைதான். ஆனாலும் இதன் கரு ஒன்றும் புதியது இல்லையே! சொல்லும் முறையில் இருக்கும் வேறுபாடே படைப்பு என்று கொள்ளலாம் அல்லவா?
அது எந்தக் கதை என்று அறிய ஆவலாக இருக்கிறேன். தேடிப் பார்த்து சொல்லுங்கள்.
short and sweet
ஓகையாரே,
இதுதான் நான் சொன்ன கதை . (http://www.desikan.com/blogcms/?item=103) உங்களைத் தப்பா சொல்லலை. ஆனா இதைப் படித்த பின் உங்களுக்கு நான் ஏன் சொன்னேன் எனத் தெரியவரும். நீங்கள் படி எடுத்ததாக நான் சொல்ல நினைக்கவில்லை. அப்படி நீங்கள் எண்ண நேர்தமைக்கு வருந்துகிறேன்.
இ.கொத்தனாரரே,
நல்ல கதை. அதே கரு. அவரும் கிரேட் எஸ்கேப்என்று பெயர் வைத்திருக்கிறார். விடுதலை என்றவுடன் இது பலருக்கும் உதித்துவிடும் போலிருக்கிறது.
ஒரு விஷயம். கதையில் மேலும் விறுவிறுப்பு சேர்க்க வேண்டி கதை எழுதும்போது ஒரு இரட்டயரை நானும் யோசித்தேன். நல்லவேளை. அப்படிச் செய்யவில்லை. அப்படி எழுதியிருந்தால் நான் படி எடுக்கவில்லை என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.
இகொ, தேடிப் பிடித்து கதையை போட்டதற்கு மிகவும் நன்றி
//அப்படி நீங்கள் எண்ண நேர்தமைக்கு வருந்துகிறேன்//
ஐயையோ, நான் என்ன தவறாகச் சொல்லிவிட்டேன், நீங்கள் வருந்தும் அளவிற்கு? நீங்கள் வருந்தியதற்காக நானும் வருந்துகிறேன்.
//விடுதலை என்றவுடன் இது பலருக்கும் உதித்துவிடும் போலிருக்கிறது.//
இது அவர் இந்த போட்டிக்காக எழுதிய கதை இல்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பே எழுதி இருக்கிறார்.
//நீங்கள் வருந்தியதற்காக நானும் வருந்துகிறேன்.//
நான் வருந்தியதற்காக நீங்கள் வருந்தியதற்கு நான் வருந்துகிறேன்!!!
ஹாஹாஹா! போதும் சார். :)
வித்தியாசமான சிந்தனை.
குமரன் எண்ணம்,
மிக நன்றி.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் (வெட்டிப்பயல் பதிவில் சுட்டி கிடைத்து வந்தேன் :-))
Post a Comment
<< Home