பதிப்பறியேன் பார்வை
'நாடு கட்டிய நாயகன்' புத்தகம் முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் வலையுலகில் இவ்விஷயம் பற்றிய பரபரப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது. இவ்விஷயத்தில் பதிப்புலகைப் பற்றி அதிகம் அறியாத என் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பதிப்புலகம் பற்றி அதிகம் அறியாவிடினும் சொந்தத்தில் தொழில் செய்பவன் என்கிற முறையிலும் அதே நேரம் எழுத்துலகில் ஏதோ செய்ய முயற்சிப்பவனாகவும் எனது கருத்துக்களை முன் வைக்கிறேன். சில நாட்களுக்கு முன் இதே போன்று அமெரிக்காவில் காவ்யா விஸ்வநாதன் என்ற பெண் செய்த செயல் எனக்கு அதர்ச்சியளிக்கவில்லை. மாறாக அந்தப் பெண் மாட்டிக் கொள்ளும்படியாக அதைச் செய்ததே எனக்கு ஆச்சரியமளித்தது. வேறொருவரின் எழுத்தை எடுத்து உபயோகிக்கும் எண்ணம் இருப்பவர் அதை எழுதியவரே அறியா வண்ணம் திறமையாக எடுத்து வைத்துவிட முடியும்.
தென்கச்சி சாமிநாதன் தன்னைப் பற்றி கூறிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவருடைய புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு இராமகிருஷ்ண தபோவனம் வெளியிடும் ஒரு புத்தகத்தில்ருந்து தகவல்களை எடுத்துக் கொள்வாராம். ஒரு முறை அந்தத் தபோவனப் புத்தகத்தின் ஆசிரியர் இவரைக் கூப்பிட்டனுப்பினார். தம் சாயம் வெளுத்துவிட்டது என்று அஞ்சியபடியே அவரைக் காணச் சென்ற தென்கச்சியிடம் அவர், 'எங்கள் புத்தகத்தில் போடுவதற்கு நீங்கள் வானொலியில் கூறுவது போன்ற தகவல்கள் வேண்டும், நீங்கள் எங்கிருந்து தகவல்களை எடுக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டாராம்! புனைவுகள் மட்டுமல்லாமல் தகவல் சார்ந்த படைப்புகளிலும் இவ்வாறு மற்றவர்களின் அறிவும் உழைப்பும் சார்ந்த முயற்சிகளை தனதாக்கிக் கொள்ளும் போக்கும் தன்னுடைய படப்பாற்றலையும் சேர்த்து வேறொன்றுபோலத் தருவதும் சாதாரணமாக நடப்பவை என்று கருதுகிறேன். இவையெல்லாம் திருட்டு எனும் எல்லைக்குள் வருமா என்பது பெரும் சர்ச்சைக்குரியது.
ஆனால் தன் விஷயத்தில் நடந்திருப்பதாக திரு குமார் அவர்கள் சொல்வது அப்படிப் பட்டதுதான் என்று உறுதிப் படுத்துவதில் சர்ச்சைக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. தன் எழுத்தைப் புத்தகமாக்க முயன்று வரும் ஒரு வலைப் பதிவருக்கு நான் சற்று அறிந்த வட்டத்தில் இப்படி நிகழ்வது தனிப்பட்ட முறையில் எனக்கு துயரத்தைக் கொடுத்த செய்தி. அவர் துணிந்து அதை வலையில் பதித்து தன் மனக்குமுறலைப் பகிர்ந்து கொண்டது மிகவும் பாராட்டக் கூடிய செயல். அவர் அந்தப் பதிவில் கையாண்டிருந்த மொழியை சிலர் ஆட்சேபித்தாலும் எனக்கு அவ்வாறெல்லாம் தோன்றவில்லை. மிக நாகரீகமான முறையிலேயே அவர் தன் உணர்வுகளை வெளியிட்டிருந்தார்.
இந்த நிகழ்வில் நான் கவனித்த அம்சங்கள்:
* இது வெளிச்சத்துக்கு வராமல் திரை மறைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தன் படைப்புகளை புத்தகமாகப் போடும் எண்ணத்தை தீவிரமாகக் கொண்ட எழுத்தாளர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் எச்சரிக்கை கிடைக்காமல் போயிருக்கும்.
* தன் உழைப்பையும் ஆர்வத்தையும் கொட்டி உருவாக்கிய படைப்பை பறிகொடுக்கும்போது ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மிக அருகில் பார்க்கும் நிலை நமக்கு ஏற்பட்டு விட்டது.
*இனையம், வலையுலகம் என்ற மிகக் குறுகியதும் நெருங்கியதுமான வட்டத்தில் இவ்வாறு நடப்பது இதன் அடுத்தடுத்த வட்டங்களில் மிக எளிதாக நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளைப் புலப்படுத்துகிறது.
*மிகுந்த சோதனையான காலகட்டத்தில் இந்த சூழலின் மிகப் பெரிய செயலாகப் புத்தகத்தை முடக்கி தொழில் தர்மத்தைக் காட்டியிருக்கிறார் பத்ரி.
*தமிழ் வலையுலகத்திற்கு மிக நெருங்கியவரான பத்ரி இது பற்றிய அறிக்கையோ அல்லது குறைந்தபட்சமாக வருத்தமோ நான் அறிந்தவரையில் தெரிவிக்காதது ஒரு நெருடலாக இருக்கிறது.
நாம் அறிந்த வலையுலக இருவர் - ஒரு எழுத்தாளர், ஒரு பதிப்பாளர் இருவரும் சிலவற்றை இழந்து கஷ்டத்தில் இருக்கிறார்கள். இதற்கு பொறுப்பானவர்கள் இதை உணரவேண்டும்.
.
2 Comments:
//இவ்வாறு மற்றவர்களின் அறிவும் உழைப்பும் சார்ந்த முயற்சிகளை தனதாக்கிக் கொள்ளும் போக்கும் தன்னுடைய படப்பாற்றலையும் சேர்த்து வேறொன்றுபோலத் தருவதும் சாதாரணமாக நடப்பவை என்று கருதுகிறேன். இவையெல்லாம் திருட்டு எனும் எல்லைக்குள் வருமா என்பது பெரும் சர்ச்சைக்குரியது.//
புத்திசாலித்தனமா தப்பு செஞ்சா அது தப்பில்லை என்கிறீர்களா சார்? :))
//இவையெல்லாம் திருட்டு எனும் எல்லைக்குள் வருமா என்பது பெரும் சர்ச்சைக்குரியது//
பெரும் சர்ச்சைக்குரியது. எந்த அளவுக்கு வித்தியாசப் படுத்த வேலை செய்கிறார்களோ அந்த அளவுக்கு பலனும் கிடைக்கிறதே!
Post a Comment
<< Home