Tuesday, November 07, 2006

எதிர்காலம் என்று ஒன்று - ஒரு கேள்வி.

திண்ணை-மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் பங்கு பெற்ற கதைகளில் சிலவற்றுடன் மேலும் சில கதைகளையும் சேர்த்து எனி இந்தியன் பதிப்பகம் 'எதிர் காலம் என்று ஒன்று' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இதில் என்னுடைய 'மரக்கலாஞ்சி மாஞ்சிளா' என்ற கதையும் உண்டு. இந்த ,சுட்டியில் கதையைப் படிக்கலாம்.

இந்த வார திண்ணை இதழில் வெங்கட் சாமிநாதன் இப்புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கிறார். சுட்டி. அதில் அவர் என் கதையைப் பற்றி கேள்வி ஒன்றை வைத்திருக்கிறார். ஒரு நிழ்கால நிகழ்வைச் சொல்லும் கதையை எப்படி அறிவியல் புனைகதையாகக் கொள்ள முடியும் என்பதே அந்தக் கேள்வி. கதையில் வரும் கற்பனை செடியான மஞ்சுளாவின் அதீத அறிவியல் சார்ந்த தன்மைகள் மட்டுமே இக்கதையை அறிவியல் புனை கதையாக சேர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இது பற்றி எனக்கு தோன்றியவற்றைக் கூற விரும்புகிறேன்.

அறிவியல் புனைகதைகளுக்கான விவரிப்பும் வரையரைகளும் திட்டவட்டமானதாக இல்லை என்று நான் கருதுகிறேன். அறிவியல் புனைகதை பற்றி சுஜாதாவின் கருத்துக்கள். இது அறிவியல் புனைகதை பற்றிய மாலனின் கருத்துக்கள். இது அறிவியல் புனைகதை பற்றிய ஜெயமோகனின் கருத்துக்கள். எதிர்காலத்தில் நடப்பதாயும், வேற்று கிரகங்கள் வினோத விலங்குகள் தொடர்புடையதாயும், இன்னும் இது போன்ற கற்பனைகள் கொண்டதாயும் இருப்பவை அறிவியல் புனைகதைகள் என்று ஒரு பொது கருத்து இருக்கிறது. புதுமைப் பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதை ஒரு அறிவியல் புனைகதை என வகைப்படுத்த முடியும் எனக் கருதப் படுகிறது. இது சமகாலத்தில் நிகழ்வதான கதைதான். என்னுடைய கதை சமகாலத்தில் நிகழ்வதாய் இருந்தாலும் இக்கதையில் ஒரு அறிவியல் சாத்தியக்கூறும் அரிய பல மூலிகைகள் முறையான அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சம காலத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படும் அறிவியல் சார்ந்த கதைகள் ஒரு சவாலான செயலாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் சமகாலத்தில் நடக்கும் அறிவியல் சார்ந்த கதைகளை அறிவியல் புனைகதையாக ஏற்றுக் கொள்வதில் இருக்கும் தயக்கம் எனக்குப் புரியவில்லை.

இன்னொரு கோணத்திலும் இக்கதையை அறிவியல் புனைகதையாக வகைப் படுத்த இடமுண்டு. சிறுகதைப் பிரிவுகளில் எதேனும் ஒன்றில் இக்கதையை வகைப்படுத்த முயலும்போது என்னைப் பொருத்தவரையில் அறிவியல் புனைகதையே முதன்மை தேர்வாக வருகிறது. சமகாலத்தில் நிகழ்வதாகவே விவரிக்கப்படும் என்னுடைய மற்றொரு கதையான 'விடுதலைப் பட்டறை' யைக் கூட அறிவியல் புனைகதையாகவே வகைப் படுத்த விரும்புகிறேன்.

இது தொடர்பான கருத்துகளை அறிய விரும்புகிறேன்.

இப்புத்தகத்திற்கும், என் கதைக்கும் விமர்சனம் அளித்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் திண்ணைக்கும் நன்றி.

இப்புத்தக விமர்சனம் பற்றி மீனாக்ஸின் பதிவு.

6 Comments:

At November 07, 2006 9:44 PM, Blogger ஆசிப் மீரான் said...

அன்பின் நடராஜன்,

அறிவியல் புனைகதைகளுக்கான வரையறை எது என்பதைத் தீர்மானிப்பதில் வெசா வுக்கு இருக்கும் குழப்பத்தை
எண்ணி நீங்கள் குழம்பிவிடாமல் இருங்கள். நிகழ்கால சம்பவங்களைப் பற்றிப் பேசுவதாலேயே உங்களது கதை
அறிவியல் புனைகதையாக ஆகிவிடமுடியாதென்பது நகைப்புக்குரியதாகத்தான் இருக்கிறது. அடுத்த நூற்றாண்டுக்கான
கதையைப் பற்றி புனைவாக எழுதினால்தான் அறிவியல் கதையா என்ன? அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எத்தனையோ
விசயங்களில் விஞ்ஞானத் தொடர்பை நம்மால் உணரமுடியும்.(அதற்காக 'பல்பு'மாற்றுவதையெல்லாம் அறிவியல் புனைவாகச்
சொல்லி விட முடியாதுதான்:-)

ஆனால் உங்கள் கதையில், //ஒரு அறிவியல் சாத்தியக்கூறும் அரிய பல மூலிகைகள் முறையான அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமும் சொல்லப்பட்டிருக்கிறது// என்று நீங்கள் கூறியிருப்பதை ஒப்புக் கொள்ள முடிகிறது.
எனவே, இந்தக் கதை அறிவியல் புனைகதையாக வகைப்படுத்தப்பட்டிருப்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை - என்னைப் பொறுத்தவரை

அன்புடன்
ஆசிப் மீரான்

 
At November 08, 2006 12:26 AM, Blogger முத்து(தமிழினி) said...

தலைவரே,

அறிவியல் புனைகதைகளில் கண்டிப்பாக உங்களுடையது வரும் என்பது தான் என் கருத்தும்.வெசா எதிர்ப்பார்ப்பது மிகைபுனைவு என்பதாக இருக்கும் என்று எனக்கு படுகிறது.

அந்த ஜெயமோகன் சமாச்சாரத்தை நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.(நேரில் விளக்குகிறேன்)

 
At November 08, 2006 12:43 AM, Blogger ஓகை said...

ஆசிப், உங்கள் கருத்துக்கு மிக நன்றி.

 
At November 08, 2006 12:46 AM, Blogger ஓகை said...

முத்து, கருத்துக்கு நன்றி.

ஜெயமோகன் விஷயத்தில் நீங்கள் சொல்வது எனக்கு புரிந்துவிட்டது. நன்றி சொல்லவில்லை அவ்வளவுதான்.

இருந்தாலும் நேரில் விளக்குங்கள். அதையும் கேட்கிறேன்.

 
At November 08, 2006 3:47 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

ஓகை,

உங்கள் கதையை படித்தேன். அதை அறிவியல் புனைக்கதையாக வரையறை செய்ய எந்த குழப்பமும் இல்லை என்றே நினைக்கிறேன்.

அப்படி வரையறுக்கப்பட்ட கதைகள் வேற்று கிரகவாசிகளைப் பற்றியோ, பல நூற்றாண்டுகளுக்கு பின் இருக்கும் உலகை கதைக் களனாக இருக்கு வேண்டும் என்றோ அவசியம் இல்லை.

அறிவியல் தொடர்புடைய புனைதலாக இருக்க வேண்டும். இன்று நடக்கும் சம்பவமாகவும் இருக்கலாம் அல்லது கடந்த காலத்தில் நிகழ்ந்ததாகவும் சொல்லலாம்.

ஆகையால் இந்த கதை அப்பிரிவுக்குள் சேர்க்கப்படலாம் என்றே எண்ணுகிறேன்.

அதே சமயம் கதை பற்றி எனது கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், கொஞ்சம் கனமில்லாத கதை என்றே தோன்றுகிறது. ஒரு மேலோட்டமாகச் சொன்ன கதை என எண்ணத் தோன்றுகிறது.

ஒரு அபூர்வமான செடியின் அருமையை அந்த பசவப்பாவும் சரி,நாயகனின் தாத்தாவும் சரி, யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால் அருமை பெருமை தெரியாமல் அதனை அழித்துவிட்டார்கள். இது போன்று நாம் தொலைத்த தொலைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. சிறுகதை என்பதால் தேவை இல்லாத கேரக்டர்கள் வராமலிருத்தல் நலம்.

என் கருத்தை சொன்னேன். மனம் வருந்தாதீர்கள். நல்ல முயற்சி. சித்திரமும் கைப்பழக்கம்.

 
At November 08, 2006 7:16 PM, Blogger ஷைலஜா said...

அறிவியல் புனைகதை என்பது என் அறிவிற்கெல்லாம் எட்டாத ஒன்று. உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.
ஷைலஜா

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home