Sunday, November 19, 2006

தூண்டில்

ஒரு முற்றுப் பெறாத தூக்குக் கயிற்றைப் போல தொங்கிக் கொண்டிருந்தது அந்த தூண்டில் முள். உள்ளிருந்த கொக்கியை அழகாய் முழுதும் மறைத்திருந்தது முள்ளில் நுழைத்திருந்த மண்புழு. திருப்தியுடன் ஏரியினுள் இறக்கினான் அந்த மீன்பிடிப்போன்.

கடிப்பதற்கு வாகாய் கட்டித் தொங்கவிடப்பட்ட இந்த தின்பண்டத்தின் மணத்தால் ஈர்க்கப்பட்டது ஒரு சிறுகெண்டை. தின்று பார்க்கலாம் என்று அதன் அருகே சென்றபோது எங்கிருந்தோ பாய்ந்து வந்தது ஒரு பெருங்கெண்டை. தன்னை உண்ண வருகிறதோ எனெ தப்பியோடிய சிறுகெண்டை திரும்பிப் பார்த்தது. அகலத் திறந்த வாயால் அப்படியே அத்தின்பண்டத்தைக் கவ்விய அப்பெருங்கெண்டை அலறித் துடித்தது. ஓ! அந்த புது உணவில் ஏதோ கோளாறு!! மேலே நீர்மட்டத்தில் ஒரு பெரும்பரப்பு மிதந்து கொண்டிருந்தது. அதிலிருந்து பெரும் கயிறும் அதன் நுனியில் பெரும்பெரும் கொக்கிகளுமாய் அந்த பெரிய ஏரியின் அடிவரை வந்து ஒரு பெரிய கொடிப்பின்னலில் மாட்டிக் கொண்டிருந்தது. சிறுகெண்டை அடங்கமாட்டாத ஆர்வத்தினால் பெருங்கெண்டை அருகில் சென்றது. இப்போது துடிதுடித்த பெருங்கெண்டை அதிவிரைவில் மேலே சென்றது. எதனாலோ இழுக்கப்பட்டதுபோல. அந்த விரைவுக்கு மேல்நோக்கி நீந்த முடியவில்லை. மேலே நீர்மட்டத்திற்கு அருகே சென்றபோது - பெருங்கெண்டையைக் காணவில்லை! சிறுகெண்டையின் சிறிய மூளை குழம்பித் தவித்தது.

ஒரு சிற்றுலா நீந்தலும் தன் சக்கக்களுடன் சல்லாபமும் முடித்து திரும்பி அவ்விடத்திற்கு வந்தபோது சிறுகெண்டைக்கு ஆச்சர்யம்! மீண்டும் அந்த வினோத உணவு அங்கே தொங்கிக் கொண்டிருந்தது!! ஆடாமல் அசையாமல். அருகே சென்று பார்த்தது. இது வினோதம்! அற்புதம் இதன் மணம்!! ஆனால் ஆபத்து ஏதோ இருக்கிறது. தயங்கித் தயங்கி நாலைந்து சுற்று சுற்றிவந்து அந்த மணத்தையும் அதன் அருகாமையையும் முழுதும் அனுபவித்தபின் மெள்ள மெல்ல மெல்ல அருகில் சென்று மென்மையாக வாயால் கவ்வி அக்கொக்கிப் புழுவின் சிறுவிள்ளலை உண்டபோது, ஆகா! இன்னொரு விள்ளல்!! ஆகா!!! யாருக்கோ தோன்றியிருக்கிறது. இப்படி ஒரு சுவைமிகு உணவை இலவசமாய்த் தரவேண்டுமென்று. அதுவும் இப்படி சாப்பிட வசதியாய் கட்டித் தொங்க விட வேண்டுமென்று. மூன்றாவது விள்ளலுக்கு தயாரான போது சிறுகெண்டடைக்கு முக்கால் வயிறு நிறைந்துவிட்டிருந்தது. இலவச உணவு. இனிய உணவு. இந்த உணவு கிடைக்கும் நாட்கள் இனியநாட்கள்தாம் இனிமேல். கடித்த இடத்திலேயே மூன்றாவது கடியை அழுந்தக் கடித்தபோது, நளுங் என்று பல பற்கள் சுளுக்கிக் கொண்டன. தாங்க முடியாத வலி. ஆ! இதுதானா வில்லங்கம். இனிய இவ்வுணவிற்குள் இப்படியொரு கடும்பொருள். மூன்றாவது கடி வாய்க்குள்ளேயே மெல்லப்படாமல் இருந்தது. பல்வலியின் தீவிரம் குறைந்தபிறகு மெதுவாக ஞமஞமவென்று அதை மென்று உள்ளே தள்ளியதுபோது அந்த சின்ன மூளைக்குள் பல புது சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த இலவச படையலை விட முடியாது. மெல்லவே கடிக்க வேண்டும். புதுப்புது இடங்களில் கடிக்கவேண்டும். இந்த உத்தி பலித்தது. இது தொடர்ந்தது. சில விள்ளல்களில் தன் முழு வயிறும் நிறைக்கும் நாட்கள் அடிக்கடி வந்தன.

தூண்டிலின் தன்மையை ஒருபாதி அறிந்திருந்த அந்த வினோத சிறுகெண்டை இப்போது தினமும் தூண்டில்களை தேட ஆரம்பித்தது. ஆனால் ஒருநாள் தூண்டிலின் முனைப்புழு சதைக்கு ஆசைப்பட்டு அதை மெதுவாகக் கடித்தபோதும், அப்போது எதனாலோ ஏற்பட்ட நீரசைவில் முனைமுள்ளில் மாட்டிக் கொண்டது அந்த சிறுகெண்டை. துள்ளிய துள்ளலில் முள் மேலும் ஆழமாகப் பதிந்ததே தவிர விடுபட முடியவில்லை. தக்கையின் தவிப்பைப் பார்த்த மீன்பிடிப்போன் தூண்டிலை மேலே இழுத்தான். சின்னஞ்சிறுகெண்டையைப் பார்த்து ஏமாற்றமும் கோபமும் அடைந்தவன் அதன் வாயைப் பிளந்து முள்ளை விடுவித்து மீனைத் தூர எறிந்தான்.

உயிர் போகும் வலி. ஆனால் உயிர் போகவில்லை. வாய் கிழிந்து ரத்தம் வழிந்தது. பிழைத்துவிட்டோம் என்ற எண்ணமே வலியின் பெருமளவைக் குறைத்தது. சிறுகெண்டைக்கு முழுதும் சரியாக சில நாட்கள் ஆயின. இப்போது வாழும் வாழ்க்கை இலவமாகக் கிடைத்த இன்னொரு வாழ்க்கை. ஆனால் இப்பவும் தூண்டில் புழுவை சுவைக்காமல் விடுவதில்லை. இலவசம் எப்போதுமே கவர்ச்சியானதுதான். ஆனால் என்ன, அந்த முள்முனைப் புழுச்சதைக்கு ஆசைப்படுவதில்லை!

*********************

9 Comments:

At November 19, 2006 8:16 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//ஒரு முற்றுப் பெறாத தூக்குக் கயிற்றைப் போல தொங்கிக் கொண்டிருந்தது அந்த தூண்டில் முள். //

ரெண்டுக்கும் அதே வேலைதானே. நல்ல கதைங்க.

 
At November 19, 2006 8:27 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

மிகவும் அருமையான பதிவுங்க ஓகை..

 
At November 19, 2006 9:22 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான கதை ஓகை சார்!
சிறு கெண்டைக்குத் தான் எத்தனை இலவசங்கள்!
பெரிய கெண்டையின் அனுபவம் இலவசம்!
பாடம், படிப்பினை இலவசம்!
மாட்டிப் பிழைத்து வாழ்க்கை இலவசம்!

ஆனால் இந்தப் படிப்பினைக்கும், மறுவாழ்வுக்கும் ஒரு சிறு விலை கொடுத்ததே!
விலை கொடுத்து வாங்கிய இலவசம்!!
இதை ஒரு சிறு கவிதையா ஆக்கினீங்கனா, ஒரு அருமையான தத்துவப் பாடல் கிடைக்கும்!

 
At November 20, 2006 1:01 AM, Blogger ஓகை said...

//ரெண்டுக்கும் அதே வேலைதானே//

இகொ, சரிதான். மீனும் மனுசனும் தானாவே மாட்டிகிறதுதான்.

 
At November 20, 2006 1:02 AM, Blogger ஓகை said...

மு.கார்த்திகேயன், நன்றி.

 
At November 20, 2006 1:03 AM, Blogger ஓகை said...

மிக்க நன்றி, ரவிசங்கர். இதை கவிதையாக்கும் எண்ணம் எனக்கு ஏற்கனவே வந்துவிட்டது. எழுதி வெளியிடுகிறேன்.

 
At November 22, 2006 6:20 AM, Anonymous Anonymous said...

Arumaiyana kathai, continue ;)

 
At November 23, 2006 7:10 AM, Blogger ரவி said...

கதை நன்று !!!!

 
At November 23, 2006 8:29 AM, Blogger ஓகை said...

ஹனிஃப், ரவி, நன்றி.

 

Post a Comment

<< Home