மதங்களைக் கண்டு பயப்படாதீர்கள்
கத்திகள் கொலைகளைச் செய்கின்றன
ஆனாலும் எனக்கு
கத்திகளைக் கண்டு பயமில்லை.
கொலைகளைக் கண்டு மட்டுமே.
கத்திகள் இல்லாமல் சமையலே இல்லை
ஒவ்வொரு வீட்டிலும்.
சில கத்திகள் தெருக்களில்
கொலைகளை செய்யும் நேரத்தில்
நம் எல்லோருடைய வீட்டிலும்
அவை சமையல் செய்துகொண்டிருக்கின்றன
அமைதியாக
மிக அமைதியாக.
உலகெங்கிலும்!
19 Comments:
அருமையாகச் சொன்னீர்கள் ஓகை ஐயா.
எடுப்பவர் கையைப் பொறுத்தது அது!
ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி சொல்லுவார்கள்.
"துப்பாக்கிகள் கொல்வதில்லை.
அதைப் பிரயோகிப்பவர்களே" என்று.
அது இங்கும் பொருந்தும்!
குமரன்,எஸ்கே, நன்றி
ஓகை, முதல்(?!) வெண்பா இல்லாத கவிதை?
நல்லா வந்திருக்கு;
எளிமையாய் பெரிய விஷயத்தினைச் சொல்லியிருக்கின்றீர்கள்.
மதம் என்பது கத்தியா இல்லை புத்தியைக் கெடுக்கும் மூடத்தனமா என்பது தான் கேள்வி. survival என்பது தான் எல்லா உயிர்களுக்கும் முதன்மையானது அதற்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கும் அரசியல் அமைப்பு தேவையா என்பது தான் கேள்வி. மதம் என்பது இறைவனை விட்டு விலகி இருந்தால் பரவாயில்லை, மனிதத்தை விட்டே விலகி விட்டது.
எங்களுடையது உங்களுடையது நாங்கள் நீங்கள் என்று பிரிவினை பேச வைக்கும் அனைத்துமே எதிர்க்கப் பட வேண்டும். மதமும் அதில் அடக்கம்.
ஜாதி, இனம், நிறம் போன்றவைகளை விட மிகப் பெரிய பிரிவினைவாத அரசியல் அமைப்பு மதம். ஏனைய பிரிவினைகளுக்கும் இதுவே அடிப்படை.
இந்திய சட்ட அமைப்பு குற்றவாளிகளுக்கு மட்டும் அல்ல குற்றம் செய்பவர்களுக்கு தண்டணை புரிபவர்களுக்கும் தண்டணை கொடுக்கச் சொல்கிறது.
பால் தாக்கரே, பின்லேடன் போன்றவர்கள் மட்டும் தான் குற்றவாளிகளா?
சென்ற பின்னூட்டத்தில்
///
இந்திய சட்ட அமைப்பு குற்றவாளிகளுக்கு மட்டும் அல்ல குற்றம் செய்பவர்களுக்கு தண்டணை புரிபவர்களுக்கும் தண்டணை கொடுக்கச் சொல்கிறது.
///
இதற்கு பதிலாக இப்படி இருந்திருக்க வேண்டும்.
இந்திய சட்ட அமைப்பு குற்றவாளிகளுக்கு மட்டும் அல்ல குற்றம் புரிய துணை புரிபவர்களுக்கும், தூண்டுதலாக அமைந்தவர்களுக்கும் தண்டணை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது.
பின் லேடனும் பால் தாக்கரேவும் யார் பின்னால் ஒளிகிறார்களோ அவர்களே முதன்மை குற்றவாளிகள் ஏனெனில் குற்றவாளிகள் உருவாக இவர்களே காரணம்.
மதத்தை கண்டு பயமெல்லாம் ஒன்றும் இல்லை. வர வர அருவருப்பு தான் வருகிறது :-(
// முதல்(?!) வெண்பா இல்லாத கவிதை? //
வாங்க பொன்ஸ்,
"முதல்" மற்றும் "கவிதை" என்பதெல்லாம் ஐயத்திற்கிடமானவை.
எண்ணியதை சில சொற்களே மாற்றி அப்படியே இட்டுவிட்டேன். ஆனாலும் செய்தி சொல்லப்படுகிறது, போய்ச் சேர்கிறது. இனியும் இது போல் முயற்சிக்கலாம்.
நன்றி ஹரிஹரன். புரிய வேண்டியவர்களுக்கு புரியவேண்டுமே!
///
நன்றி ஹரிஹரன். புரிய வேண்டியவர்களுக்கு புரியவேண்டுமே!
///
:-DDDDDD
செந்தில் குமரன், அதுக்குள்ள DDDDயன்னா போட்டுட்டீங்களே! உங்களுக்கு பதில் கொஞ்சம் நீ..ளமா இருக்கு. கொஞ்சம் பொருங்கள்.
செந்தில், நீங்கள் எல்லா மதத்தையும் எதிர்க்கிறீர்களா அல்லது வலையுலகில் பலரும் செய்வது போல் இந்து மதத்தை மட்டுமா என்பது எனக்கு தெரியவில்லை. முதலாவதாக இருந்தால் மட்டுமே என் இந்த பதிவுடன் தொடர்புடையவர்கள் ஆகிறீர்கள். நீங்கள் முதலாவதாக இருக்கும் பட்சத்தில் நான் உங்களிடமிருந்து அறிந்து கொள்ளவே விரும்புவேன்.
1. survival என்பது எல்லா நாட்டிலும் சட்டங்களால் உறுதி செய்யப்படுகிறது. சட்டங்கள் மதக் கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டவை. இன்றும் சட்டம் தீர்வு சொல்லாத நிலையில் நீதிமான்கள் தர்ம நியாங்களின் அடிப்படையிலே நீதியை நிலை நாட்டுகிறார்கள். மதங்களே தர்ம நியாயங்களை நமக்கு போதித்தவை. இன்றும் போதித்துக் கொண்டிருப்பவை.
2. பிரிக்கும் காரணிகள் நிறம், மதம், இனம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமா? இவற்றில் மொழியும் சேரும். உங்களுக்கு அதில் உடன்பாடு உண்டா? ஆண், பெண் வேறுபாடு கூட சேர்ந்துவிடும். பரவாயில்லையா?
ஆன்களால் பெண்களுக்கு எவ்வளவு கொடுமைகள்! ஆண்களை ஒழித்துவிடலாமா? பெண்கள் அழகாக இருக்கும் வரை ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று பெண்களின் அழகை ஒழித்து விடலாமா?
நன்மைகளைக் கருதாமல் தீமைகளுக்காக ஒழிக்கத்தான் வேண்டுமென்றால் உலகில் எது மிஞ்சும்? உலகே மிஞ்சுமா?
3. நீங்கள் சொல்லும் சட்ட நுணுக்கம் சட்டப்படி செல்லுபடியானால் சட்டம் தன் கடமையைச் செய்யாமலா இருக்கும்?
//வர வர அருவருப்பு தான் வருகிறது :-(//
வாங்க லக்கி.
எனக்கு தீப்பாய்ந்த மங்கம்மாளைப் படித்தபோது ஆனந்தமாகத்தான் இருந்தது. இறந்துபோன தந்தை பெரியார் அவர்கள் படித்திருந்தாரானால் ரொம்பவும் அருவருப்பாக உணர்ந்திருப்பார். அதுவும் தம் கொள்கைகளின்மேல் அபார பிடிப்பு கொண்ட ஒருவர் இப்படி எழுதி இருப்பதைப் படிக்க நேர்ந்தால் அவர் அருவருப்பின் எல்லைக்கே போய்விடுவார். இறந்தவர் இதைப் படிப்பார் என்ற நம்பிக்கையெல்லாம் உங்களுக்கு இல்லையே!
உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் மங்கம்மாளின் பக்தர்களுக்கு கருணை செய்திருக்கிறீர்கள். அருவருப்புடன் செய்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
உண்மை தான் மதம் என்பது
அழகான தோட்டம்.
அதனுள் வன்முறை என்னும்
களைகள் எனரினாலோ
விதைக்கப் படுகின,
அதை அவதானித்து அவை,
அகற்றப் பட்டால் மதமென்பது சத்திய, தர்மத்தோட்டம்.
ஆண்டவன் அருளினால், எமது தோட்டதில்,
மீண்டும் அன்பும், அருளும் நிறையட்டும்.
வாழ்க! வளர்க!!
ஓகை சார் நான் எல்லா மதங்களையும் எதிர்ப்பவன் தான்.
என்னுடைய இந்தப் பதிவைப் படித்தால் உங்களுக்குத் தெரியும்.
http://kathalregai.blogspot.com/2006/11/blog-post.html
நான் DDD என்று போட்டது எனக்கு அது நகைச்சுவையாகத் தோன்றியதால். ஏன் நகைச்சுவையாகத் தோன்றியது என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல மதம் என்பது தீமையானது என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியாமலேயே இருக்கிறது என்பது என் கருத்து என்பதால் தான்.
இரு வேறு துருவங்கள் அளவுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இந்த சிந்தனை இருவருக்கும் இருப்பதால் தான் DDD.
///
பிரிக்கும் காரணிகள் நிறம், மதம், இனம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமா? இவற்றில் மொழியும் சேரும். உங்களுக்கு அதில் உடன்பாடு உண்டா?
///
உண்டு.
///
ஆண், பெண் வேறுபாடு கூட சேர்ந்துவிடும். பரவாயில்லையா?
ஆன்களால் பெண்களுக்கு எவ்வளவு கொடுமைகள்! ஆண்களை ஒழித்துவிடலாமா? பெண்கள் அழகாக இருக்கும் வரை ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று பெண்களின் அழகை ஒழித்து விடலாமா?
///
மதமும் இயற்கையாகவே உருவானதா? ஆண் பெண் என்பது இயற்கை பிரிவினை அல்ல இயற்கை. மதம், ஜாதி, இனம் போன்றவை பாகுபாடுகள் மனிதனால் ஏற்படுத்தப் பட்டவை. அவை ஒழிக்கப் பட வேண்டும்.
///
1. survival என்பது எல்லா நாட்டிலும் சட்டங்களால் உறுதி செய்யப்படுகிறது. சட்டங்கள் மதக் கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டவை. இன்றும் சட்டம் தீர்வு சொல்லாத நிலையில் நீதிமான்கள் தர்ம நியாங்களின் அடிப்படையிலே நீதியை நிலை நாட்டுகிறார்கள். மதங்களே தர்ம நியாயங்களை நமக்கு போதித்தவை. இன்றும் போதித்துக் கொண்டிருப்பவை.
///
சட்ட திட்டங்கள் மதங்களால் உருவாகவில்லை. மதங்கள் 4000 வருடங்கள் பழமையானவை. மனிதனின் வயது 1,00,000 வயது. மனிதனின் பல சட்ட திட்டங்களை உள்ளிழித்துக் கொண்டது. என்னமோ மதம் வந்த பிறகு தான் நாகரீகம் தோன்றியது எனபதை எல்லாம் நான் நம்பவில்லை.
செந்தில், நீங்கள் சொல்லியிருக்கும் பதிவில் நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். அங்கே நண்பன் அருமையான கருத்துகளைப் பதிந்திருக்கிறார்.
//-///
பிரிக்கும் காரணிகள் நிறம், மதம், இனம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமா? இவற்றில் மொழியும் சேரும். உங்களுக்கு அதில் உடன்பாடு உண்டா?
///
உண்டு. -//
மொழியை ஒழித்துவிட்டு என்ன செய்யலாம்? உலகமெங்கும் ஒரே மொழியா? சாத்தியமா?
ஆமென்றால்,
எல்லாப் பூக்களும் ஒரே நிறமாயிருக்கும் உலகப் பூங்காவும் சலிப்பாகி போய்விடாதா?
//என்னமோ மதம் வந்த பிறகு தான் நாகரீகம் தோன்றியது எனபதை எல்லாம் நான் நம்பவில்லை.//
ஏனென்று புரியவில்லை.
விலங்காண்டியான மனிதன் பயங்களுக்கு வடிகாலாய் இறைவனைப் படைத்தான். இறைவனுக்குப் பயப்படுவதை பொதுமைப் படுத்தியபோது சட்டங்களும் மதமும் ஒருங்கே உதித்தன. நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்களூம் நானும் இணையத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
இது என் புரிதல்.
முடிவில்லாத விவாதங்கள் எனக்கு மிக அயர்ச்சியைத் தருகிறது. ஆகவே தான் நண்பன் அவர்களுக்கு பதில் அளிக்கவில்லை. இங்கும் இதுவே கடைசி.
ஆண் பெண் என்றீர்கள் இப்பொழுது மொழி என்றிருக்கிறீர்கள். அத்தியாவசியம், இயற்கை போன்றவற்றுக்கும் தேவை இல்லை என்று ஒதுக்கி விடக் கூடியதற்கும் வித்தியாசம் இல்லையா?
மொழி இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது ஆகவே மொழியால் ஏற்படும் பிரிவினைகளை எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
மறுபடியும் நாகரீகங்கள் மதங்களால் தோன்றியது என்பது போல குறிப்பிட்டிருக்கிறீர்கள் அதைப் பற்றி என்னிடம் கருத்தில்லை.
தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு கூட அதனை ஆதரிக்கும் வாதங்கள் இருக்கும். மதவாதிகளுக்கும் இருக்கிறது. உங்களின் நியாயம் உங்களுக்கு போவது வேறு யாருடைய உயிர்தானே?
அயற்சி ஏற்படுவது உண்மைதான். நாம் நேரில் சந்திக்கும்போது இது பற்றி நிச்சயம் விவாதிப்போம். என் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.
//போவது வேறு யாருடைய உயிர்தானே?//
எப்படி? எந்த மதத்தீவிரவாதியும் என்னைக் கொல்லமுடியாது என்ற வரம் வாங்கி வந்திருக்கிறேனா?
Post a Comment
<< Home