தூக்கல் வாழ்க்கை
தேன்கூடு போட்டிக்கான கவிதை.
மரபுக் கவிதை.
நிலைமண்டில ஆசிரியப்பா.
தூக்கல் வாழ்க்கை
==========
வெளியுலகு வந்ததும் வனிதையாம் செவிலியர்
களிப்புடன் தூக்கினர் கைப்பிள்ளை நம்மையும்
வாழ்வுநாம் தொடங்க வயிற்றினுள் அதுவரை
ஆழ்வலி பொறுத்துநம் அன்னையும் தூக்கினாள்
மடியில் இடுப்பில் மாசறு பால்தர
வடியும் எச்சில் மைந்தரைத் தூக்கினாள்
நிலவும் குருவியும் பலவும் காட்டி
உலவும் பருவம் வரும்வரை தூக்கினாள்
விந்தை யுலகில் வித்தைகள் பெற்று
முந்திச் செல்லவே தந்தையும் தூக்கினார்
அக்கையும் தூக்கினாள் அண்ணனும் தூக்கினான்
சுற்றமும் நட்பும் சூழ்ந்து தூக்கினார்
வெறுமையைத் தூக்கிய வெரும்பயல் நமக்கு
அறிவுச் சுடரிட்டு ஆன்றோர் தூக்கினார்
கொஞ்சும் குழவியைக் குமரராய் மாற்றி
விஞ்சும் பருவம் விடலையின் தூக்கினார்
நாமும் தூக்க நம்மையும் தூக்க
கணவனாய் மனைவியாய் துணைகள் வந்திடும்
எடைபளு தூக்க பளுஎடை தூக்க
கிடைமேல் நிலைநில்லா துலா முள்போல்
ஏறியும் தாழ்ந்தும் வாழ்வும் நடந்திடும்
மாறிடும் நடப்புகள் மாறிடும் தூக்கல்கள்
இணங்கிப் பெற்ற இத்தனை தூக்கலை
கணக்காய் எண்ணிக் கடன்களாய்த் தீர்க்க
தூக்குவோம் தூக்குவோம் பலரைத் தூக்குவோம்
தூக்கலில் தூக்கலில் வாழ்க்கை நடந்திட
மூக்கினில் சுவாச மூச்சது நிற்கும்
நாளது வந்தபின் நால்வர் வருவரே
நம்முடல் தூக்கிநம் நரவாழ்வு முடிக்கவே!
7 Comments:
நல்ல பாடல்.. வாழ்க்கையைப் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள்...
வசந்த்,
மிகவும் நன்றி.
/நாளது வந்தபின் நால்வர் வருவரே
நம்முடல் தூக்கிநம் நரவாழ்வு முடிக்கவே/
- அருமை. தமிழ்ப்புலமைக்கு வாழ்த்துக்கள்.
நெல்லை சிவா,
மிகவும் நன்றி.
உங்கள் படைப்பை வாசித்ததில் எனக்குப் பிடித்தது...
தூக்குத்தூக்கியாய் நாம் வழவேண்டியதுதான்
பள்ளிச் செல்லும் பொடியன் புத்தகமூட்டையம்
தந்தை குடும்பசுமையும் தாய் மக்களையும்
பேருந்து பயணிகளையும் இத்தமிழ்மணம் தமது ஆக்கத்தையும் தூக்கித்தானே ஆகவேண்டும்
என்னார், நன்றி.
Post a Comment
<< Home