திருவாதிரைத் திருநாள்
அந்த நாளும் வந்திடாதோ!
அந்த சின்னப் பையனுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் விடுமுறை கிடைக்கும். காலையில் சுடச்சுட நெய்மணக்கும் களி கிடைக்கும். இந்தக் களிக்கு தான் எத்தனை ருசி! ஆண்டவன் இந்த களியின் ருசியைப் போல் வேறெங்கும் வைத்ததில்லை. புழுங்கலரிசியை வறுத்து, பொரியரிசி ஆக்கி, சற்றே (மிக முக்கியம்-சற்றேதான்) பொடித்து, வெல்லம் சேர்த்து, நெய்வார்த்து கிண்டியெடுத்த களியின் ருசி, ஆகா! ஒரு வருஷம் வரை அப்படியே நாவில் நிற்கிறதே!! அதனால்தானோ என்னவோ இதை திருவாதிரை அன்று மட்டும் செய்கிறார்கள்! இனி அடுத்த திருவாதிரைக்குதான் களி!
திருவாதிரை என்றால் சிதம்பரம்தான் சிறப்பு. ஆனால் அந்தச் சின்னப் பையன் குடந்தையில் அல்லவா இருந்தான். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பெரியத் தெருவுக்கு போவான். அப்பாவுடன் வெளியில் செல்வதென்றால் அது எப்பவும் லாபம் தான். ஏதாவது ஒன்று நிச்சயம் கிடைக்கும். அன்று அங்கு அத்தனை சிவன் கோயில் சாமிகளும் புறப்பட்டு வந்து வரிசையில் பெரிய கடைத் தெருவில் நிற்கும். அப்பா ஒவ்வொரு சாமியாய் கும்பிட்டு வரும்வரை அந்த கடைத்தெருவின் அத்தனை ஆரவாரத்தையும் ஆசை தீர பருகியனுக்கு அவ்வப்போது அப்பா திருநீறு பூசி விடுவார். சில சாமிகளைப் பார்க்க அவன் இரண்டு கக்கத்து இடுக்கிலும் கை கொடுத்து தூக்கி மேலே காண்பிப்பார். அவனும் கும்பிட்டுவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வான். அவர் இறக்கி விட்டவுடன் மறக்காமல் அப்பா கையைப் பிடித்துக் கொள்வான். அத்தனைக் கூட்டத்தில் அப்பாவை தொலைத்துவிடக் கூடாது அல்லவா!
நான் தாங்க அந்த சின்னப் பையன். ஒவ்வொரு திருவாதிரை அன்றும் மனதில் இந்த படத்தை ஒட்டிப் பார்த்துவிடுவேன். இந்த முறை உங்களோடு சேர்ந்து ஓட்டிப் பார்க்கிறேன்.
திருவாதிரை அன்று சிவன் கோயில் நகையை திருடலாமா? அப்படி ஒரு கதையைப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்களேன். "மாதேவடிகள் ஹாரம்"
20 Comments:
களியை மட்டும் சொல்லிவிட்டு, கூடவே தொட்டுக்கொள்ள கிடைக்கும் அந்த அனைத்துக் காய்களும் போட்டுக் கொதிக்க வைத்த கூட்டின் மகிமையை விட்டு விட்டீர்களே!
சூடான களியுடன் இதனையும் கலந்து சாப்பிட....சாப்பிட....சாப்பிட...சாப்பிட....!!!!!
ம்ம்ம்ம்....அந்த நாளும் வந்திடாதோ!
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
நன்றி ஓகை. திருவாதிரை களியை ஞாபகப்படுத்தியதற்கும், மாதேவடிகள் ஹாரம் கதையின் லின்கிற்காகவும்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
"மூடநெய் பெய்து முழங்கை வழிவார.." என ஆண்டாள் அம்மையார் கூட கோயில் பிரசாதத்தை சிலாகித்து பாடியிருக்கிறார். நீங்கள் திருவாதிர களியை மறக்காததில் வியப்பில்லை.
களியை மட்டும் சொல்லிவிட்டு, கூடவே தொட்டுக்கொள்ள கிடைக்கும் அந்த அனைத்துக் காய்களும் போட்டுக் கொதிக்க வைத்த கூட்டின் மகிமையை விட்டு விட்டீர்களே!
வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நான் பொடியனாக இருந்த போது, ஊரில் ( திருமீயச்சூர் கிராமம் - திருவாரூர் மாவட்டம்) திருவாதிரை சமயம் சாப்பிட்ட கதம்ப கூட்டை/குழம்பை இன்று வரை என்னால் மறக்க முடியாது ! குழம்பிலிருந்த காராக்கருணை கார ஆரம்பித்து நாக்கு முழுவதும் ஒரே அரிப்பு ! ( சாப்பாடு போட்ட குருக்கள் மனைவிக்கு என்ன கோபமோ..? ) வீட்டிற்கு போனவுடன், நாக்கில் புளியையும் உப்பையும் சேர்த்து வைத்து தேய்த்ததில் ஒரு வழியாக அடங்கியது அரிப்பு.. நினைவூட்டியதற்கு நன்றி ;)
இந்த திருவாதிரை தினத்தையும் நன்றாக கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த கதையின் சுட்டிக்கு நன்றி. அதில் பட்டன் என்னவானான் எனச் சொல்லாதது ஒரு குறைதான்.
திருவாதிரைக் களிக்கு நன்றி.
எப்பொழுதையா திருவாதிரை.
எனது நட்சத்திரமும் அதுதான்.
திருவாதிரைத் திருநாள் சிவன் தாள் தொழுது,
களிப்புடன் களிகூட்டு
உண்டு,
கூட்டுக்களி செய்ய தமிழ்மணம் உண்டு. அப்பாக்கள் இவ்வளவு அன்புடன் இருந்தால் பிற்பாடு மனசு நொந்து போய்விடுகிறது.
ஆனால் நமக்குத்தான் பெரிய அப்பன் தில்லையில் இருக்கிறானே.
எஸ்கே,
// அனைத்துக் காய்களும் போட்டுக் கொதிக்க வைத்த கூட்டின் மகிமையை விட்டு விட்டீர்களே! //
அப்படியெல்லாம் விட்டுவிடக் கூடிய மகிமையா அது? ஆனால் எங்கள் வீட்டில் பொங்கலுக்கும் அதை செய்வார்கள்.
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்றும் எல்லா காய்கறிகளையும் போட்டு சமைப்பார்கள். ஆக மார்கழியில் இரண்டு நாட்களும் மார்கழி முடிந்தமே பொங்கலன்றும் எல்லா காய்கற்களின் சமையல் கிடைத்துவிடும்.
அடடா. இதுவரை நான் திருவாதிரைக்களி தின்றதில்லையே. யாராவது பார்சல் அனுப்புங்களேன். :-(
மாதேவடிகள் ஹாரத்தை போன மாசமே படிச்சாச்சு ஓகை ஐயா. :-)
வாங்க முரளிதரன்.
மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
செல்வன்,
திருப்பாவைப் பாடல்:
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 27
சுவையான விளக்கத்தை இங்கே பார்த்தேன்.
முழங்கை வரை நெய்வடியும் அக்கார வடிசிலா? நினைத்தாலே இனிக்கும்.
வாசன், இந்த கூட்டுக்கறியில் அந்தக் கருணைகிழ்ங்கு வந்தே தீரும்!
// குழம்பிலிருந்த காராக்கருணை கார ஆரம்பித்து நாக்கு முழுவதும் ஒரே அரிப்பு ! //
நீங்கள் சொல்வது காராகருணையாக இருக்க முடியாது. சேனைக்கிழங்கைத்தான் காராகருணை என்று சொல்வார்கள். பிடிகருணை என்றொரு கிழங்கு இருக்கிறது. அதுதான் அப்படி அரிப்பு ஏற்படுத்தும். ஆனால் கூட்டுக்கறியில் அதை சாஸ்திரத்துக்காவது ஒரு சிறு துண்டு போடாமல் விடமாட்டார்கள் அம்மாக்கள்.
இகொ, கவலைப் படாதீர்கள் பட்டன் பத்திரமாக பாதாளச் சிறைக்கு அனுப்பப் படுவான். அவனுக்கு அதிர்ஸ்டமிருந்தால் அவன் பக்கத்து அறையில் அந்த அமத்தியை அடைப்பார்கள்!
அனானி,
// திருவாதிரைக் களிக்கு நன்றி.
எப்பொழுதையா திருவாதிரை.
எனது நட்சத்திரமும் அதுதான்.//
இன்றுதான் திருவாதிரை. காலையில் களியுண்டேன். களிப்புண்டேன்.
வாங்க வல்லிசிம்ஹன்.
// அப்பாக்கள் இவ்வளவு அன்புடன் இருந்தால் பிற்பாடு மனசு நொந்து போய்விடுகிறது.//
கொஞ்ச நாள் கழித்து பாருங்களேன், கூடவே இருப்பார்கள். என் அனுபவம் அப்படித்தான்.
குமரன்,
// அடடா. இதுவரை நான் திருவாதிரைக்களி தின்றதில்லையே. யாராவது பார்சல் அனுப்புங்களேன்.
:-( //
ஐயோ பாவம். அப்படியா சொக்கி போய்விட்டார் சொக்கநாதர்? திருவாதிரை களி நைவேத்தியம் வேண்டாத அளவுக்கு. என்னையா மதுரைக்கு வந்த சோதனை? மதுரை ஆட்சியைப் பற்றி மற்றவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் போலிருக்கிறது!
இந்த களி ருசிக்காக புலம் பெயர்வதில் கூட தவறில்லை. அடுத்தவருடம் திருவாதிரைக்கு சிதம்பரத்துக்கோ அல்லது வேறு ஒரு சிவத்தலத்துக்கோ தற்காலிகமாக புலம் பெயர்ந்து விடுங்கள். அல்லது என் வீட்டுக்கு வாருங்கள்.
பதிவிற்கு நன்றியய்யா.....
திருவாதிரைக்கு உருகாதார் உண்டோ?...
மதுரையில் என்னப்பன் சுந்தரனுக்கு அன்னாபிஷேகமும், புடலங்காய் மாலையும் இன்று அலங்காரம்.....
//எங்கள் வீட்டில் பொங்கலுக்கும் அதை செய்வார்கள்//
ஓகை ஐயா!
இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கலுக்கு அனைத்துக் காய்களும் போட்டுக் கொதிக்க வைத்த கூட்டு செய்தார்களா? சாப்பிட்டீர்களா? அதில் வள்ளிக்கிழங்கும் காராமணியும் இருந்ததா? :-))
மதுரையம்பதி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் ஊரை நீங்கள் விட்டுக் கொடுக்க வில்லை.
ரவி சங்கர், திவ்வியமாய் சாப்பிட்டேன். அந்தக் கூட்டுக்கறியில் கேரட் பொன்ர வெள்நாட்டுக் காய்கறிகள் சேர்க்கப்பட மாட்டாது. கட்டாயம் இருக்கவேண்டிய காய்களில் நெல்லிக்காயும், பிடிகருணையும், உண்டு.
Post a Comment
<< Home