Wednesday, August 15, 2007

கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!

சுதந்திர தின சிறப்புச் சிறுகதை!

தெக்கிக்காட்டான், வவ்வால், செல்வன் மூவருக்கும் இந்தக் கதையை சமர்பிக்கிறேன்.

கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!

செல்லமுத்து தன் விருப்ப நடிகரின் படத்தை மூன்றாவது முறையாகப் பார்த்துவிட்டு மாலைக்காட்சி முடிந்து வெளியே வந்தான். மணி ஒன்பது ஆகியிருந்தது. ஊருக்குப் போக பத்து மணிக்கு கடைசி பஸ். பையில் இருபத்தி ஆறு ரூபாயும் சொச்சமும் இருந்தது. ஊருக்குப் போக ஆறு ரூபாய் போய்விட்டல் மீதி இருபத்தி ரூபாய் சொச்சம் இருக்கும். இப்போது அவனது மொத்த சொத்தே அவ்வளவுதான். கும்பகோணம் பஸ் நிலையம் பக்கமாக வந்தான். ஊருக்குப் போய் என்ன செய்யப் போகிறான்? அம்மா வைத்திருக்கும் மோர் சொற்றை தின்றுவிட்டு, திண்ணையில் படுத்துத் தூங்கிவிட்டு காலையில் எழ வேண்டும். அப்பறம் கார்காரர் வயல் பம்புசெட்டில் குளித்துவிட்டு கொஞ்சம் பழையது சாப்பிட்டுவிட்டால் அவ்வளவுதான். வேறு வேலை கிடையாது. யாராவது எங்காவது கூப்பிட்டால்தான் உண்டு. கார்காரர் வயலுக்கு அடுத்த திங்கட் கிழமைதான் போகவேண்டும். அப்பறம் தான் வேறு காசை கண்ணால் பார்க்க முடியும்.

பஸ் நிலையத்துக்கு போகும் வழியில் புதிதாக ஒரு இட்லிகடை வந்திருந்தது. இட்லிப்பானையில் ஆவி பறந்து வந்துகொண்டிருந்தது. ஒருத்தன் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தான். 4 இட்லி ரூ.ஐந்து என்று ஒரு பலகையில் சாக் பீசால் எழுதியிருந்தது அவனை ஈர்த்தது. கணக்கு போட்டு பார்த்தான். 6 இட்லி சாப்பிட்டுவிட்டு இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு காலையில் முதல் பஸ்ஸுக்கு போய்விடலாமென்று முடிவு செய்தான். உள்ளே போய் ஒரு நோட்டம் விட்டபோது இரண்டாவது பெஞ்சில் வாசு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாசு இவனோடு பத்தாவது வரை படித்து இவனோடேயே ஃபெயிலானவன். அதன்பிறகு கொல்லத்து வேலை செய்யப்ப் போகிறேன் என்று சொல்லி போனவனை இப்போதுதான் நாலு வருஷம் கழித்து பார்க்கிறான். பக்கத்தில் போய் அமர்ந்தான்.

- லே வாசு, எப்பிர்ரா இருக்க?
- அட செல்லமுத்து, இங்க எங்கடா வந்த? ஊர விட்டு நவுர மாட்டியே, என்னா தலைவர் படமா?
- வேற எதுக்குடா நான் வரப்போறேன்?
- என்னடா செல்லா செய்யிற?
- கார்காரர் வயல்லதான் வேலை.
- அப்பாவுக்கு எங்கடா வேலை?
- ரெண்டு வருஷத்துக்கு முன்னால தவறிப் போய்ட்டார்டா.
- அடடா, செல்லா, கடசி பஸ் போயிருக்குமேடா?
- பத்து மணிக்கு ஒன்னு உண்டுடா, ஆனா ரெண்டாவுது ஆட்டம் இன்னோரு படம் பாத்துட்டு காலைல தாண்டா போறென்.
- எங்கடா படுக்க போறே?
- பஸ் ஸ்டாண்டுல படுத்துட்டு மொத ப்ஸ்ஸுல போயிருவேன்.
- நாளக்கி வேல இருக்கா அதான் கருக்கல்ல போறியா?
- அடுத்த வாரந்தாண்டா வேல. அதுவரைக்கும் சும்மாதான் இருப்பேன். நீ என்னாடா செய்யிற?
- ஒரு காண்ட்ராய்ட்டர்கிட்ட வேல செய்யிறண்டா. லே, சித்தாள் வேலைக்கு நாளைக்கு மட்டும் வர்ரியாடா? எங்க காண்ட்ராய்ட்டருக்கு கொஞ்சாம் ஆளு கொறயுதுன்னாரு. கொறைஞ்சது அம்பது ரூவா வாங்கித் தாரென்.
- அம்மா தேடுமேடா!
- கார்காரர் வூட்டுக்கு போன் போட்டு சொல்லு.
- நம்ம்பரெல்லாம் தெரியாதுடா
- நான் புடிச்சி தாரென். வா. நானும் படத்துக்கு வாரேன். என் கொட்டாயிலேயே படுத்துக்க.

இருபத்தி ஆறு ரூபாய் சொச்சம் அப்படியே இருந்தது. சாப்பாட்டுக்கும் சினிமாவுக்கும் வாசுவே பார்த்துக் கொண்டான். மறுநாள் மாலை அது நூறு ரூபாய் மேல் ஆனது. அந்த வாரம் பூராவும் சித்தாள் வேலை இருந்தது. சனிக்கிழமை மாலை செல்லமுத்துவிடம் ஐநூறு ரூபாய்க்கு பக்கம் பணம் இருந்தது. சனிக்கிழமை டாஸ்மார்க்கில் சரக்கடித்துவிட்டு வாசு கொட்டகையிலேயே படுத்து உருண்டான் செல்லமுத்து. காலையில் எழுந்தவுடன் ஊர் ஞாபகம் பலமாக பிடித்துக் கொண்டுவிட்டது. திடீரென பணம் சம்பாதிப்பது எளிதாகத் தோன்றியது அவனுக்கு. அவ்வளவு பணம் அவன் மொத்தமாக ஒரு வாரத்துக்குள்ளாகச் சம்பாதித்ததில்லை. அடுத்த வாரமும் ஊரில் வேலை இல்லை என்றால் வாசு கும்பகோணம் வந்துவிடச் சொன்னான். 'பார்ப்போம், கார்காரரு மேல கீல பாத்தார்னா பேசாமா வாசுகிட்ட வந்துட வேண்டியதுதான்'. செல்லமுத்து இப்போது ஆளே கொஞ்சம் பூரிப்பாகத் தெரிந்தான். 'அம்மாவும் லச்சுமியும் அசந்துபோவப் போவுதுங்க'. 'ஆத்துல குளிச்சிட்டு பத்து மணி பஸ்ஸை பிடிக்கலாமெ'ன்று முடிவுசெய்தான்.

ஒரு வாரமாக போட்டிருந்த சட்டையையும் கைலியையும் ஆற்றில் தோண்டியிருந்த ஊற்றில் ஒரு கட்டி துனி சோப் வாங்கித் துவைத்து படித்துறையில் காயவைத்தான். குளித்து முடித்து லேசாகக் காய்ந்திருந்த துனிகளை உடுத்திக் கொண்டு படித்துறையை விட்டு வெளியே வந்தான். சிலு சிலு வெனக் காற்று புது உடம்பில் பாதி ஈர உடைகளினூடே பட்டு ரொம்பவும் புத்துணர்வாக இருந்தான். பஸ் நிலையத்துக்கு போகும் வழியில் ஒரு பெரிய சைவ உணவகத்தின் வாசலில் நின்றான். வெங்காய சாம்பாரின் மணம் மூக்கைத் துளைத்து அவனை உள்ளே இழுத்தது. ஊரில் சட்டியில் இருக்கும் பழைய சாதத்தை நினைத்தான். உடனே உள்ளே நுழைந்தான். 'பதினொன்ர பஸ்ஸுக்கு போவுலாம்'.

-ஒரு ரோஸ்ட் அப்பறம் ஒரு ரவா.

தோசைக்கு சொல்லிவிட்டு சுற்றி ஒரு நோட்டம் விட்டான். ஏசி அறையிலிந்து வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தான். கிருஷ்ணமூர்த்தி செல்லமுத்துவின் பெரியப்பா பையன்.

-மூர்த்திண்ணே..

சற்று உரக்கக் கூப்பிட்டவன் அவன் இருந்த தோரணையைப் பார்த்து கூப்பிட்டிருக்க வேண்டாமோ எனத் தயங்கினான். ஆனால் கிருஷ்ணமூர்த்திக்குக் கேட்டுவிட்டது. இவனருகே வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

- சின்னம்மா, லச்சுமியெல்லாம் எப்பிர்ரா இருக்காங்க?
- நல்லா இருக்காங்கண்ணே.
- எதுக்குடா கும்மோணம் வந்த? ஊர வுட்டு நவுர மாட்டியே!
- தலைவர் படம் பாக்குலாமுன்னு திங்க கிலமை வந்தேன். இங்க என் பெரண்டு காண்ட்ராய்ட்டர்கிட்ட வேல இருக்குன்னான். ஒரு வாரம் செஞ்சுட்டு இப்ப ஊருக்கு போய்கிட்டு இருக்கேண்ணே. பதினொன்ர ப்ஸ்ஸ¤க்கு போறன்.
- ஏண்டா சித்தாள் வேலையா செய்த?
- ஆமாண்ணே.
- எவளவுடா சம்பாரிச்ச?
- ஐநூறு கெடச்சுதுண்ணே.
- அடி சக்க, ஒரு வாரத்துல ஐநூறா?
- ஆமாண்ணே, இந்த வேல தேவலாம்ணே. ஏண்ணே, காரா வாங்கியிருக்கீங்க?
- ஆமாண்டா. யார்ரா சொன்னா?
- அம்மா சொல்லிச்சி.
- மாமன் ஊட்ட்ல எல்லாம் எப்பீர்ரா இருக்காங்க?
- அதான் செத்தா வாழ்ந்தா இல்லன்னு ஆயிருச்சேண்ணே. அப்பறம் ஏண்ணே எங்கிட்ட கேக்குறீங்க?
- மூனாம் வூட்ல இருக்கீங்க, அதாண்டா கேக்குறேன்.
- நீங்க பொண்ணு கட்ட போற வூடு. அந்த அக்கறையில கேக்குறீங்க. எனக்கு ஒன்னும் தெரியாதுண்ணே.
- ஊர்ல என்னடா பண்ணுற? கார்காரரு வயல்லதான் வேலையா? என்னா தாராரு?
- மாசம் ஆயிரம் தராரு. கொஞ்சம் நெல்லு தருவாரு. பொங்கல் தீவாலிக்கி எதுனாச்சும் கொடுப்பாரு.
- எப்பீர்ரா காசு சேத்து லச்சுமிய கரையேத்த போற?
- சேர வேண்டிய ஒன்ர ஏக்கரத் தான் மாமங்காரன் கேஸ் போட்டு புடுங்கிட்டான். நீங்க பொண்ணு எடுக்கப் போற வூட்டச் சொல்றனேன்னு வித்தியாசமா நெனைக்காதீங்கண்ணே. உங்களுக்கே தெரியுமில்ல.....

- செல்லமுத்து காப்பி வாங்கிக்கடா.
- வேணாண்ணே.
- லே பாதி காப்பி குடி...... ஒரு காப்பி குடுப்பா. பில்ல ஏங்கிட்ட குடு.
- அண்ணே நான் தர்ர்ண்ணே.
- நீ குடுக்குறப்ப மவராசனா குடு. இப்ப நான் தார்ரென். ஏண்டா செல்லமுத்து ராத்திரி கடசி ப்ஸ்ஸுல ஊருக்கு போடா. எனக்கு முக்கியமா ஒரு வேல இருக்கு. மெட்ராசுலேர்ந்து ஒருத்தர் வர்ராரு. ராத்திரி ட்ரெய்ன்ல அவரு கெளம்புராரு. கொஞ்சம் கூடமாட இர்ரா.
- அம்மா தேடும்ணே. ஊரவுட்டு வந்து ஒருவாரம் ஆச்சி.
- மாமா வூட்டுக்கு போன் போட்டு நான் சொல்றண்டா. நடுவூட்டு பொடியன் போய் சொல்லிருவான். என் கூட வா. சாமிமல போகனும்.

கிருஷ்ணமூர்த்தி தன் கைபேசியில் யாரிடமோ பேசி அவன் அம்மாவுக்கு தகவல் சொல்லச் சொன்னான். இருவரும் சுவாமிமலை சென்று அங்கு ஓரிடத்தில் ஒரு புத்தம்புது ஐம்பொன் சிலை வாங்கினார்கள். அழகாக கள்ளிப் பெட்டியில் வைத்து மூடி ஆனி அடித்து டிக்கியில் ஏற்றிவைத்தான் செல்லமுத்து. வரும்போது கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.

- அந்த ஒன்ர ஏக்கர் நெலம் கெடைச்சிருந்தா என்னடா செய்வ?
- அது இருந்தா நாங்க ஏண்ணே இப்பிடி இருக்கோம்?
- லே, அதுலேர்ந்து எவளவுடா வந்துடும்?
- ஒருத்தருக்கு கைகட்டி நிக்க வேணாண்ணே. யார் கையும் எதிர்பாக்க வேணாம்.
- அதெல்லாம் சரிடா. எவளவு வந்துடும், அதச் சொல்லு.
- எவ்ளவு வந்தா என்னாண்ணே. நம்ம வய. நம்ம ஒழப்பு. நம்ம சோறு.
- சித்தாளு வேல செஞ்சு வாரம் ஐநூறு கெடச்சுதே, அத அம்பதால பெருக்கு. வருசத்துக்கு இருவத்தி அஞ்சாயரம் ரூவா. அது வயல்ல கெடைக்குமாடா?
- நல்லா பாடுபட்டா கெடைக்கும்ணே.
- ஆத்துல தண்ணி வர்லன்னா, வயல்ல பூச்சிபொட்டு புடிச்சுதுன்னா, மழையே பேயலன்னாலும் இல்ல கொட்டுகொட்டுன்னு கொட்டிச்சின்னாலும் நீ சொல்றது நடக்குமாடா?
- சில வருசம் நட்டம் வருண்ணே
- டேய் சில வருசம் இல்லடா. பத்து வருசத்துல ஒரு வருசம் ரெண்டு வருசந்தாண்டா லாவம் வரும். அப்பிடி வர்ர லாவம் கொஞ்சம். ஆனா நட்டம் வந்தா பெருசா வரும்டா. அப்பறம் ஒரு வருசத்துல எல்லாருக்கும் நல்லா விளஞ்சா அந்த வருசம் நல்ல வெல கெடைக்காதுடா.
- அண்ணே, நீங்க பதினஞ்சி ஏக்கர் வச்சிருக்கீங்க உங்களூக்கு எப்புடிண்ணே லாவம் வருது? நட்டம் வராம இருக்கு?
- இப்பதாண்டா நீ பாயிண்டுக்கு வர்ர செல்லமுத்து. லாவ நட்டக் கணக்கு இத்தன ஏக்கருக்கு இத்தனன்னு தோதா மாறிக்கும்டா. அப்பறம் நான் விவசாயியா இருந்து வியாபாரியா மாறிட்டேன். என்னோட லாவநட்டக் கணக்கே வேற.
- புரியலேண்ணே.
- சித்தாளு வேல செஞ்சியே அத வேலைன்னு நெனைக்காம யாவாரமா யோசிச்சிப் பாரு. ஒன்னோட உழைப்ப கொடுத்து அதுக்கு வெல கிடைச்சிருக்குன்னு நெனைச்சுப் பாரு. கூலின்னு நெனைக்காதே. கார்காரருக்கு நீ என்னா தர்ர, அவுரு உனக்கு என்னா தர்ராரு, யோசிச்சுப் பாரு.
- அவரு என்ன்ண்ணே செய்வாரு..........
- லே செல்லமுத்து, அவருக்காக நீ யோசிக்காத. ஒனக்காக யோசிச்சி என்னா பதில் வருதுன்னு சொல்லு.

செல்லமுத்து குழம்பிப் போனான். வாரம் ஐநூறு ரூபாயும் மாதம் ஆயிரம் ரூவாயும் நிச்சயம் ஒன்றல்ல. மாமனிடமிருந்து போனல் போகுதுன்னு அந்த ஒன்னரை ஏக்கர் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி வாங்கிக் கொடுத்தாலும் நிலைமை எப்படி மேம்பட்டதாக இருக்கும் என்று புரியவில்லை. நம்முடைய நிலம், நம் உழைப்பு, நமது சோறு என்கிற எண்ணம் தரும் திருப்தியை பணமாக மாற்றினால் ஒன்றும் தேறுவதாக இல்லை. கிருஷ்ணமூர்த்தியை சின்ன வயசிலேர்ந்து தெரியும் நல்ல மனசுக்க் காரன். பங்காளி மாதிரியே நடந்த்துக்க மாட்டான். நிச்சமாக மனசைக் கலைப்பதற்காக சொல்லவில்லை என்ற நம்பிக்கை செல்லமுத்துவுக்கு இருந்தது. பத்து வயதில் பம்பரம் விடச் சொல்லிகொடுத்த கிருஷ்ணமூர்த்தி இப்போது பணம் செய்யச் சொல்லிக் கொடுக்கிறான்.

ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ஒரு பெரிய ஓட்டலில் அறை எடுத்திருந்தான் கிருஷ்ணமூர்த்தி. மெட்ராஸ் காரர் வருவதற்காக காத்திருந்தார்கள். அடிக்கடி கிருஷ்ணமூர்த்தி தன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். நன்றாக மதிய உணவு சாப்பட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டான் செல்லமுத்து. மெட்ராஸ்காரர் வந்துவிட்டர் போலிருக்கிறது. பேச்சரவத்தில் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டான்.

- தீபக் சார், அடுத்த ஆர்டர் எப்ப தர்ரீங்க? நெறைய குடுத்தீங்கன்னா தொழிலையே மாத்திடுவேன்.
- ஆமாம் கிருஷ்ணமூர்த்தி. நூறு கோடி பேருக்கு சாப்பாடு போட முப்பது கோடிப் பேர் விவசாயத்துல இருந்தா போரும்னு எனக்குத் தோனுது. இப்ப எழுபது கோடிப்பேர் இருக்கீங்களே!
- ஆமாம் ப்ஃபே சாப்பாடு மாதிரி எவளவு இருந்தாலும் வயிறு கொள்ற அளவுக்குத்தான சாப்பிட முடியும்? ஆனா தீபக் சார், ரொம்பப் பேருக்கு வேற தொழிலே தெரியாதே?
- அங்க கூட்டம் ஜாஸ்தி. அதுனாலத் தான் அங்க லாபம் கம்மியா இருக்கு. டெக்னாலஜி முன்னேற முன்னேற நெலம இன்னும் மோசமாத் தான் போகும். அதான் கணக்க பாக்கணும். உழுதவன் கணக்குப் பாத்து எத்தன உழக்கு மிஞ்சுதுன்னு பாக்கணும். நீங்கதான் அதுல கில்லாடியாச்சே ! இந்தப் பையன் யாரு கிருஷ்ணமூர்த்தி?
- அது என் சித்தப்பா பையன். அவனுக்கும் தொழில் விவசாயம்தான்.. போனவாரம் வரைக்கும்.
- இந்த வாரம் வேற வேலையா, வெரி குட். தம்பி நீ பொழைச்சுகுவ. உங்க அண்ணன் சொல்றதக் கேளு.
- செல்லமுத்து, அவுரு என்னா புது வேலைன்னு கூட கேக்குல பாரு.

செல்லமுத்து தீவிர சிந்தனை வயப்பட்டான். ரயிலடியில் அவரை வண்டியேற்றிவிட்டு கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.
- இந்தா செல்லமுத்து நூறு ரூவா வச்சுக்க. அம்மா லச்சுமிக்கு எதுனாச்சும் வாங்கிட்டுப்
போ. பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுமா?
- அண்ணே, மூனாம் வூட்டுக்கு போன் போட்டு அந்தப் பொடியன கூப்புடுங்கண்ணே.
- ஏண்டா.
- நான் வாசுவைப் பாக்க போறேண்ணே
- அடி சக்க. மாறிட்ட போலருக்கு. லே, மேல மேலப் போறதுக்கு கும்மோணத்து வுட்டு வெளியப் போய் பாக்கணுண்டா. நீ இப்ப வாசுக்கிட்ட போ. புதன்கிழமை என்ன வந்து பாரு.
-சரிண்ணே

செல்லமுத்து அதன் பிறகு லச்சுமி கல்யாணத்துக்கு கார்காரர் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கத்தான் தன் ஊருக்குப் போனான். தன் சொந்த வாடகைக் காரில் போனான். பொகும் போதும் வரும்போதும் தன் மாமா வீட்டைக் கடக்கும் போது தானாக அவன் கை ஹாரன் ஒலி எழுப்பியது. அது சொன்னது,

-ஜே கிருஷ்ணமூர்த்தி மாதிரி எனக்கு போதனை பண்ணின இந்த வீட்டு மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!

* * * * * * * * * * * * * *

ஓகை நடராஜன்
15-08-2007
*****************

Thursday, August 02, 2007

காலம் சரி செய்யட்டும்



இந்த இடம்விட்டு நகர்ந்ததும்
என் கண்ணீர் நின்றுவிடும்
அந்த கரையும் பறவையின் கண்ணீரை
காலம் விரைந்து சரி செய்யட்டும்.