Sunday, May 04, 2008

ரெப்பா கியர்.

மாரியப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறியிருந்தது. டேவிட் இப்படிச் செய்வானென்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இது நம்பிக்கைத் துரோகம். நட்புத் துரோகம். வேகமாக டெவிட் வீட்டுக்கு வாடகைக் காரில் விரைந்து கொண்டிருந்தான். இதுவரை டேவிட் வீட்டுக்குச் சென்றதில்லை. இப்போது அவனை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுவிடுவதற்காகப் போய்க்கொண்டிருந்தான்.

டேவிட் ஏற்கெனவே தமிழ் பேசுவான். இதுவே அவர்கள் நட்புக்குத் தொடக்கமாக இருந்தது. இந்த இரண்டு மாத கால நட்பில் வெகு சகஜமாக தமிழ் பேச தெரிந்துகொண்டுவிட்டான். அலுவலகத்தில் தழைத்த நட்பு ஆழத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நேரத்திலா இப்படி ஒரு சோதனை வரவேண்டும்?

டேவிட்டின் மாமா ஒரு சூப்பர் மார்கெட்டின் ஒரு பகுதி பொறுப்பாளராக இருந்தார். உடல்நலக் குறைவால் அவர் வேலையை விட்டுப் போவதால் அந்த வேலையை தன் தந்தைக்கு சிபாரிசு செய்ய டேவிட்டிடம் கேட்டான் மாரியப்பன். டேவிட்டோ தன் தந்தையே அந்த வேலையை விரும்புவதாகச் சொன்னபின் மாரியப்பன் வற்புறுத்துவதை விட்டுவிட்டான். ஆனால் இன்று யாரொ ஒரு ரெப்பா கியருக்கு அந்த வேலை டேவிட்டால் சிபாரிசு செய்யப்பட்டு தரப்பட்டிருப்பதாக அறிந்த பிறகு மாரியப்பன் கொதித்துப் போய்விட்டான். உடனே டேவிட்டின் வீட்டுக்கு வாடகைக்கார் பிடித்தான்.

மாரியப்பனுக்கு டேவிட் வீட்டில் இருக்கிறானா எனற சந்தேகம் வந்தது. கைபேசியில் அழைத்தான். எதிர்முனையில்,

"ஹலோ, டெவிட் கியர் ஹியர்."

"மாரியப்பன் பேசுறேன். உங்க அப்பா பேரு சார்லஸ் கியர் தானே?

"ஆமாம்"

"இப்ப பேர மாத்தி வச்சுகிட்டாரா?"

"இல்லியே"

"அப்ப யாரு அந்த ரெப்பா கியர். அவுருக்கு ஏன் நீ சிபாரிசு பன்னியிருக்கே?"

"அது வந்து..........."

"இப்ப ஒங்க வீட்டுக்கு வர்ரேன். நீ அங்கேயே இரு."

டேவிட்டின் மறுமொழியைக் கேட்க விருப்பமும் பொறுமையும் இல்லாமல் தொடர்பைத் துண்டித்தான். ஆனால் டேவிட்டின் குரலைக் கேட்டவுடன் கோபம் கொஞ்சம் குறைந்து போனதற்காக வருந்திய மாரியப்பன் ரெப்பா கியரை மனதில் இருத்திக் கொண்டு கோபத்தில் குமுறும் முயற்சியைத் தொடர்ந்தான். அழைப்பு மணி அடித்தவுடன் டேவிட் கதவித் திறந்தான். மாரியப்பன் அவனைப் பேச விடவில்லை.

" அது எப்படி உங்க அப்பாவுக்குன்னு சொல்லிட்டு யாருக்கோ சிபாரிசு பன்னியிருக்க? இத நேரடியா எனக்கு சொல்லிருக்கலாமே..."

டேவிட் சிரித்தான். மாரியப்பனின் கோபம் அவனுக்குப் புதியது. வினோதப் பார்வையோடும் குறும்பு முகத்தோடும் டேவிட் சொன்னான்,

"ஆமாம் அப்டித்தான் செய்வேன். எனக்கு வேண்டியவங்களுக்குத்தான் சிபாரிசு பன்னுவேன். இப்ப என்ன சொல்லப்போற?"

"கடசிலே ஒன் திமுறக் காட்டிட்டடா! இந்த வேல செய்துதான் நாங்க பொழைக்கனும்னு இல்லடா.............. எதோ ஃபிரண்டாச்சேன்னு கேட்டேன். நீ மாட்டேன்னு சொல்லியிருக்கலாம். பொய் சொல்லி ஏமாத்திட்டியேடா! உங்க புத்தியக் காட்டிட்டீங்கடா!!"

" மாரியப்பன், புத்தி கித்தின்னெல்லாம் எங்களப் பத்தி பேசாதே. அப்பறம் நானும் உங்களப் பத்திப் பேசுவேன்."

சிரித்துக் கொண்டே இதைச் சொன்ன டேவிட்டின் முககுறிப்பைக் கவனிக்கத் தவறிய மாரியப்பன் சரமாரியாக வார்த்தைகளை விட்டான். டேவிட்டும் துடுக்காக மறுமொழி அளித்துக்கொண்டிருந்தான். கோபம் எல்லை மீறிய மாரியப்பன் டேவிட்டின் சட்டையைப் பிடித்தான். அரசம்பட்டி ஆலப்பட்டி இருக்கம்பட்டி ஈஞ்சம்பட்டி என்று எல்லா பட்டி தொட்டியிலும் உச்சபட்ச வசவான அந்த வார்த்தைகளை எடுத்துவிட்டான் மாரியப்பன். அந்த வார்த்தைகளுக்கு மறுமொழி அடிதடியைத் தவிர வேறில்லை.

"ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா ஒண்டிக்கி ஒண்டி வாடா!"

டேவிட்டுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதற்குமேல் அவனால் நடிக்க முடியவில்லை. அகில உலகத்திலும் அந்த வார்த்தைகளுக்கு அடிதடி மட்டுமே மறுமொழி என்றே அறிந்திருந்த மாரியப்பனுக்கு அவனுடைய சிரிப்பு ஒரு அசட்டுக்கோபத்தைக் கொண்டு வந்தது. கேட்டான்,

"ஏண்டா உனக்கு சூடு சொரணையே கெடையாதா?"

சட்டையப் பிடித்திருந்த மாரியப்பனின் கைகள் தன் மார்பில் அழுந்தப் புதையுமாறு அணைத்துக் கொண்டு சொன்னான் டேவிட்,

"நான் ரெண்டு அப்பனுக்குப் பொறந்தவன்தான் மாரியப்பன்."

மாரியப்பனுக்கு இப்போது அசட்டுக்கொபம் மறைந்து குழப்பக் கோபம் வந்தது.

"நான் சிபாரிசு செய்த ரெப்பா கியர் என்னோட ரெண்டாவது அப்பா. அவருக்கும் நான் பிறந்திருக்கிறேன்."

மாரியப்பனின் மூளை வேலை செய்வதாக இல்லை.

"பத்தாண்டுகளுக்கு முன் ஆபரேஷன் செய்து ஆணாக மாறிய என் அம்மா ரெஜினா கியர்தான் இப்போது ரெப்பா கியர். அரசாங்க கெஜட்டில் அவர் ஆண் என்றுதான் இருக்கும். இதை நாங்கள் அநாவசியமாக வெளியில் சொல்வதில்லை. உன்னிடம் சொல்லாதது தப்புதான்."

விளக்கெண்ணையில் ஊறவைத்த ஒரு கிலோ இஞ்சியை ஒரேயடியாகத் தின்ற குரங்கின் நிலையில் இருந்தான் மாரியப்பன். கண்களை சிமிட்டியபடியே டேவிட் சொன்னான்.

" ரெப்பான்னா ரெண்டாவது அப்பான்னு அர்த்தம்."

**************
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை - ரெப்பா கியர்.