Saturday, September 30, 2006

சூக்கும வழி

இம்மாத தேன்கூடு போட்டிக்கான என் சிறுகதை.
ஆசாத் அளித்த விடுதலை என்ற தலைப்பில் எனது படைப்பு முதல் படைப்பாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.


சூக்கும வழி
=======

இத்தனை நாள் தோன்றவில்லை. இன்று தோன்றிவிட்டது. இன்று விடுதலை ஆகிவிட வேண்டும். எப்படியாவது விடுதலை ஆகிவிட வேண்டும். யோசித்தான். அடைபட்டிருந்த அந்த அறையில் கும்மிருட்டாக இருந்தது. எங்கும் வழியிருப்பதாகத் தெரியவில்லை. அவனை அந்த அறையில் ஏதோ ஒரு இடத்தில் கட்டிப்போட்டிருந்தார்கள்.

கட்டப்பட்டிருப்பதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. ஆனால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இங்கு ஏதோ ஒரு வழி கட்டாயம் இருக்கவேண்டும். எங்கே இருக்கிறது அந்த சூக்கும வழி? அந்த தனிச்சிறையில் ஆன மட்டும் தேடிப்பார்த்தான். கைகளால் துழாவினான். கால்களால் நிரடினான். ஊஹ¤ம். ஒரு வழியும் புலப்படவில்லை. என்ன செய்வது? கைகளை பிசைந்து கொண்டான். உடம்பையே பிசைந்து கொண்டால் கூட தேவலாம் போலிருந்தது. செய்தான். பளிச்சென்று ஏதோ ஒன்று மூளையில் உறைத்தது.

ஆ! அங்கே இருக்கிறது அந்த சூக்கும வழி!! சே, இவ்வளவு நேரம் இது தோன்றவில்லையே! எப்படி தோன்றியது நமக்கு இந்த வழி? யாருமே சொல்லாமல்! ஆனால் இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை. உடனடியாகக் காரியத்தில் இறங்க வேண்டும். இறங்கியே ஆக வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத அந்த சூக்கும வழியில் ஆழம் தெரியாமல் காலை விடலாமா? யோசித்தான். அவசரப்படக்கூடாது. முதலில் வழியின் அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். பிறகு முடிவு செய்து கொள்ளலாம்.

மெதுவாக அந்த வழியில் சென்று எட்டிப்பார்த்தான். சுகமான காற்று வீசியது. சுந்தர ஒளிமயமாக இருந்தது. சுகந்தம் நாசியில் உறைத்தது. சூக்கும ஒலிகள் கேட்டன. அவன் முடிவு செய்து விட்டான். முயன்று முயன்று வெளியேறி விட்டான்.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!

இந்த விடுதலையை கொண்டாட விரும்பினான். பெருங்குரலெடுத்துக் கத்தினான்."குவா!.குவாஆ!"

* * * * * * * * *

முத்து-தமிழினியுடன் மூன்று நாட்கள்.

முத்து-தமிழினியுடன் மூன்று நாட்கள்.

_ _ _ _ _ சென்றவாரம் என் தொழில் தொடர்பான பயணமாக மூன்று நாட்கள் மங்களூரில் இருக்க வேண்டிய வாய்ப்பு வந்தது. பயணத்திட்டம் முடிவானவுடன் முத்துவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனடியாக பதில் வந்தது. அதிரடியாக யாரையா நீர் என்று கேட்டு. ஆனால் யாராயிருந்தாலும் சந்திக்கத் தயார் இது உறுதி என்று அவருடைய கைபேசி எண்ணுடன் அந்த மின்னஞ்சல் சொன்னது. ஒரு தன்னிலை விளக்கம் அனுப்பி அவரை கண்டுகொள்ள வைத்தபின் கைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினேன்.

_ _ _ _ _ இவருடைய எல்லா பதிவுகளையும் நான் படித்திருந்தாலும் எதற்கும் பின்னூட்டங்கள் இட்டதில்லை. அவருடைய பல கருத்துகளில் நான் மாறுபடுவதாலும் சில கருத்தாக்கங்களில் பலமாக மாறுபடுவதாலும் - எல்லா பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்துவிடுவேன். முதன்முதலில் அவர் என்னை சந்திக்க நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவுடன் எல்லா ஆண்களையும் சாய்க்கக் கூடிய அம்பொன்றை வீசினேன். அவர் இளமையாக இருப்பதாகக் கூறினேன். நல்லவேளையாக நான் தன்னெஞ்சறிந்து பொய்யற்கவில்லை. உண்மையில் அப்படித்தான் இருந்தார். அன்றிரவு (22-09-2006) ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டோம். மூன்று நாட்களும் இரவு உணவு ஒன்றாகவே சாப்பிட்டோம். மூன்றாம் நாள் மாலை என்னை மங்களூரின் ஒரு கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அன்றிரவு தொடர்வண்டி நிலையம் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

_ _ _ _ _ எங்கள் பேச்சு வார்த்தைகளில் நான் தொடர்ந்து மாற்றுக் கருத்துகளாக கூறியவுடன் அவர் ஒரு அம்பை வீசினார். திரு சோ அவர்களின் இன்னொரு குரல் என்று என்னைக் கூறினார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. இந்த விவரிப்பால் நான் கொஞ்சம் நொந்து போனேன். அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.

1. அறிவுப் பகலை உண்டாக்கித் தரும் ஆதவன் எங்கே,
இரவின் இருட்டில் எப்போதோ ஒளிரும் மின்மினி எங்கே?

2. அவருடைய(சோ) சில கருத்துகளில் முற்றிலும் நேர் எதிரான நிலைப்பாடுகள் கொண்டவனும், அவருடைய பல கருத்துகளில் முற்றிலும் உடன்படாதவனும், அவருடைய சில கருத்துக்களில் தனிப்பட்ட ஐயப்பாடுகளைக் கொண்டவனுமான எனக்கு இந்தப் பட்டம் நீதியாகப் படவில்லை.

3. நான் முத்துவிடம் சொன்ன கருத்துககள் அனைத்தும் என் சிந்தனையில் உதித்ததல்ல என்பதை அந்தப் பட்டம் மறைமுகமாகக் கூறுகிறது. என்னைப் பற்றிய என் சுய பெருமைக்கு இது பெரும் குந்தகமாக இருக்கிறது.

_ _ _ _ _ மிக நீண்ட தன்னிலை விளக்கமும், இது பற்றி என் உணர்வுகளை வெளிப்படையாக கூறவேண்டிய கட்டாயமும் எனக்கு ஏற்பட்டது. அவரும் இதைத் தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். பயண முடிவில் நான் பெரியாரின் பல கூறுகளை ஆதரிப்பதாகக் கூறியது என் தன்னிலை விளக்கத்தின் வெற்றியைக் கூறியது. முத்து பேச்சுக்காக இப்படியெல்லாம் கூறமாட்டர் என்கிற என் நம்பிக்கை எனக்கு ஒரு மகிழ்வைத் தந்தது.

_ _ _ _ _ மூன்று நாட்களிலும் சோ, கருணாநிதி, திராவிடக் கருத்தாக்கங்கள், பெரியார், இராமதாசு, வலதுசாரி-இடத்சாரி கொள்கைகள் தொடர்பான விதயங்களை படு காரசாரமாகப் பேசிக் கொண்டோம். ஆனால் இருவரின் முகத்திலும் முறுவல் மாறவில்லை - கடைசி வரை.

_ _ _ _ _ ஜாதி, தலித்து, பிராமணீயம், காதல், சமுதாயம், தமிழ், தமிழர் தொடர்பான விதயங்களை சற்று ஏற்ற இறக்க இணக்கங்களுடன் பேசிக் கொண்டோம்.

_ _ _ _ _ வலைப் பதிவுகள், பதிவர்கள், தமிழ் வலையுலகின் ஈடு இணையற்ற துர்நட்சத்திரம் போலிடோண்டு ஆகிய விதயங்களை மையமாகப் பேசிக் கொண்டோம்.

_ _ _ _ _ இருவருக்கும் கருத்து வேறுபாடே வரமுடியாத எங்கள் குடும்ப விதயங்களை ஆர்வத்துடன் பரிமாறிக் கொண்டோம்.

_ _ _ _ _ ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்த எங்கள் இருவரின் ஒரு அலைவரிசையைப் பற்றிக் கொண்டு நாங்கள் நடத்திய இந்த நீண்ட சந்திப்பு என் நினைவுகளில் நீண்ட நாட்கள் நிற்கும்.

Tuesday, September 26, 2006

மங்களூர்.

சென்ற வாரத்தில் முதன்முறையாக இந்த ஊருக்குச் சென்றிருந்தேன். தொழில் முறையில் அங்கிருக்கும் NIT ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாட்கள் தங்கி இருந்தாலும் மங்களூரின் சிறு பரிச்சயம் ஏற்படும் அளவிற்கே நேரம் கிடைத்தது.

மங்களூரைப் பற்றி நான் அறிந்திருந்த செய்திகள் அங்கு ஒரு NIT இருப்பதும் குதிரமுக் இரும்புத்தாது தொழிலும் வலைப்பதிவர் முத்து தமிழினியும்தான். அவரைச் சந்தித்த விவரம் தனிப் பதிவில் தருகிறேன்.

சென்னையிலிருந்து நேர் மேற்காக பறவைப் பாதையில் செல்லுங்கள். கீழே தெரியும் பங்களூர் நகரைத்தைத் தாண்டி அரபிக் கடலோரத்தில் இறங்கினால் மங்களூருக்கு மிக அருகில் இருப்பீர்கள். (சென்னை 13.04 வ, பங்களூர் 12.58 வ, மங்களூர் 12.54 வ) அதனால் சென்னையைப் போன்ற தட்பவெப்பம்தான். ஆனால் ஏராளமாக மழை பொழியும் போலிருக்கிறது. பலகட்டடங்களின் கூரைகளும் சுற்றுச் சுவர்களும் பாசி படர்ந்திருக்கிறது.

மேற்குக்கரை அரபிக் கடலோர நகரங்களில் நான் திருவனந்தபுரம், ஆலப்புழை, கொச்சி, கள்ளிக்கோட்டை ( காலிகட்), கோவா, மும்பை ஆகிய நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். கேரள நகரங்களையும் கோவாவையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மங்களூர் வருமென்று எதிர்பார்த்திருந்தேன். அது ஓரளவுக்கு சரியாக இருந்தது. எங்கெங்கு காணினும் பசுமையாக இருக்கிறது நகரம். நகரத்துக்குள்ளேயே ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரும் பள்ளத்தாக்கு வருகிறது. ஆ! எங்கேயும் காணமுடியாத காட்சி!! பரந்த விரிந்த அந்த பள்ளாத்தாக்கில் சுமார் ஒரு லட்சம் தென்னை மரங்கள் இருந்தன. விரிந்த கண்கள் விரிந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் நடுவே வெள்ளையர் காலத்தின் ஓர் ஒற்றை பெரிய பங்களாவின் மேற்கூரைகள் தெரிய, சுற்றிலும் கரும்பச்சை தென்னை ஓலைகளாக மனதை கிறங்க அடித்தன. நாசிக்கிலிருந்து எங்கள் கருத்தரங்கிற்கு வந்திருந்த ஒருவர் இதே இடத்தில் மிக வியந்ததை என்னிடம் சொன்னார். மேற்குக்கரைக்குறிய ஏற்ற இறக்கத்துடன் சாலைகள் இருக்கின்றன. ஒரு ஆறு ஏராளமான தண்ணீருடன் கடலில் கலக்கிறது. நகரிலிருந்து பத்து கிலோமீட்டர் கடற்கரைக்கு இணையாகவே வடக்கு நோக்கி சென்ற பிறகுதான் ஒரு சிறிய கடல்மணல் பரப்பு வருகிறது. பீச்சாங்கரை. நான் சென்ற தினம் ஞாயிற்றுக் கிழமையாகையால் மக்கள் ஜேஜே என்று இருந்தார்கள்.

நான் சாப்பிட்ட உணவகத்தில் நல்ல மீன்கறி கிடைத்தது. ஆனால் சாம்பார் சட்டினி அவ்வளவு சரியாக செய்யத் தெரியாது போலிருக்கிறது. இங்குள்ளவர்களுக்கு ரவாகேசரி மிகவும் பிடிக்கும்போல் தெரிகிறது. அதில் ஏராளமாய் முந்திரி போடுகிறார்கள். முந்திரி விளைச்சல் மிக அதிகம். முந்திரிக்கொட்டை எண்ணையை எரிபொருளாக உபயோகிக்கப்ப்டுவதைப் பற்றி எங்கள் கருத்தரங்கில் பேசப் பட்டது. முந்திரி விளைச்சல் அதிகமாக இருந்தும் முந்திரி விலை குறைவாக இல்லை. பாண்டிச்சேரி மற்றும் பன்ருட்டியைவிட மிக அதிகம். பொதுவாகவே இங்கு விலைவாசிகள் சற்று அதிகமாகத்தான் இருக்கும்போல் தெரிகிறது.

மாநகராட்சி அந்தஸ்துள்ள அமைதியான நகரம். போக்குவரத்து மெதுவாக நடக்கிறது. ஆட்டொக்காரர்கள் மீட்டர்படி பணம் வசூலிக்கிறார்கள். ஆங்கிலம், இந்தி, கன்னடம் அல்லது துளு மொழிகளில் ஒன்றைப் பேசி இங்கு சமாளித்துவிடலாம். பாரம்பரிய இசை மற்றும் நாட்டியங்களின் மேல் பற்று வைத்திருக்கிறார்கள்.

தனித்தன்மையுள்ள நகரம்.

Monday, September 18, 2006

தூக்கல் வாழ்க்கை

தேன்கூடு போட்டிக்கான கவிதை.
மரபுக் கவிதை.
நிலைமண்டில ஆசிரியப்பா.

தூக்கல் வாழ்க்கை
==========
வெளியுலகு வந்ததும் வனிதையாம் செவிலியர்
களிப்புடன் தூக்கினர் கைப்பிள்ளை நம்மையும்
வாழ்வுநாம் தொடங்க வயிற்றினுள் அதுவரை
ஆழ்வலி பொறுத்துநம் அன்னையும் தூக்கினாள்
மடியில் இடுப்பில் மாசறு பால்தர
வடியும் எச்சில் மைந்தரைத் தூக்கினாள்
நிலவும் குருவியும் பலவும் காட்டி
உலவும் பருவம் வரும்வரை தூக்கினாள்
விந்தை யுலகில் வித்தைகள் பெற்று
முந்திச் செல்லவே தந்தையும் தூக்கினார்
அக்கையும் தூக்கினாள் அண்ணனும் தூக்கினான்
சுற்றமும் நட்பும் சூழ்ந்து தூக்கினார்
வெறுமையைத் தூக்கிய வெரும்பயல் நமக்கு
அறிவுச் சுடரிட்டு ஆன்றோர் தூக்கினார்
கொஞ்சும் குழவியைக் குமரராய் மாற்றி
விஞ்சும் பருவம் விடலையின் தூக்கினார்

நாமும் தூக்க நம்மையும் தூக்க
கணவனாய் மனைவியாய் துணைகள் வந்திடும்
எடைபளு தூக்க பளுஎடை தூக்க
கிடைமேல் நிலைநில்லா துலா முள்போல்
ஏறியும் தாழ்ந்தும் வாழ்வும் நடந்திடும்
மாறிடும் நடப்புகள் மாறிடும் தூக்கல்கள்
இணங்கிப் பெற்ற இத்தனை தூக்கலை
கணக்காய் எண்ணிக் கடன்களாய்த் தீர்க்க
தூக்குவோம் தூக்குவோம் பலரைத் தூக்குவோம்
தூக்கலில் தூக்கலில் வாழ்க்கை நடந்திட
மூக்கினில் சுவாச மூச்சது நிற்கும்
நாளது வந்தபின் நால்வர் வருவரே
நம்முடல் தூக்கிநம் நரவாழ்வு முடிக்கவே!

Sunday, September 17, 2006

மொழிபெயர்ப்பு

தேன்கூடு போட்டிக்கான கதை.

_ _ _ _ _ அசோகன் அவசரமாக வண்டியை நிறுத்தினான். திடீரென பிடித்துக் கொண்ட பெருமழை அவனை தெருவோரம் விரட்டியது. இன்று மழை வருமென அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பார்த்திருந்தால் மழையுடை கொண்டு வந்திருப்பான். இப்படி ஒரு புறநகர்ப் பகுதிக்கு வருவதைக் கூட அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. துனி துவைக்கும் இயந்திரங்கள் பழுதானால் சரி பார்க்கும் சேவைப் பொறியாளன் அவன். அவனுக்கு அழைப்பு எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் வரும். இன்று இன்னொரு நாள். இன்னொரு இடம்.

_ _ _ _ _ இரவு மணி எட்டைத் தாண்டிவிட்டது. மழை கணஜோராகப் பெய்து கொண்டிருந்தது. அந்த இடம் ஒரு புறநகர் பகுதியின் விளிம்பு. சாதாரணமாகவே ஆள் நடமாட்டம் மிகக் குறைவு. இப்போது அடியோடு ஜனசந்தடி இல்லாமல் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மங்கிய ஒளியில் எரிந்து கொண்டிருந்த தெரு விளக்குகள் திடீரென அனணந்தன. இது போன்றதொரு திடீர் மழையைத் தொடர்ந்து இப்படி மின்தடை வருவது வெகு இயல்பான செயலாகப் பட்டது அசோகனுக்கு. தொடர்ந்து கும்மிருட்டு நிலவியது. நள்ளிரவைப் போல். நட்சத்திர நிலவொளிகளைக் கூட கருமேகப் படுதா மறைத்துவிட்டிருந்தது.

_ _ _ _ _ அசோகன் தான் நின்றுகொண்டிருக்கும் சூழலைக் கவனித்தான். கட்டி முடிக்கப் படாத, கட்டுமானம் கைவிடப்பட்ட ஒரு வீட்டின் முகப்பு. பாதி முடிந்த சுற்றுச்சுவரில் ஒரு குப்பைமேடு. லேசான துர்நாற்றத்துடன். சட சடவென்ற மழை சத்தத்துடன் சட்சட்டென்ற சொட்டு ஒலிகளும் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. மெலிதாக ஒரு பூனை கத்தியது.

_ _ _ _ _ மழை விடுவதாக இல்லை. மின்சாரமும் வருவதாக இல்லை. மழை விட்டாலும் அந்த குண்டும் குழியுமான சாலையில் செல்ல ஏற்கனவே தயங்கியவனுக்கு இப்போது வந்த மழையால் ஏற்பட்ட சேறும் சகதியும் புது பயத்தைக் கொடுத்தது. தண்ணீர் நிரம்பிய குழிகளில் முன் சக்கரம் லொடுக்கென்று விழும்போது வரும் தடுக்கிடும் மனவோட்டம் அவனைப் படுத்தியது. மீண்டும் அந்த பூனைக் குரல் வந்தது. இல்லை! அது பூனை இல்லை!! அசோகனுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. சிறிதே இடைவெளிவிட்டு அதேக் குரல் மீண்டும் வந்தபோது அமானுடமாயும் மனிதக் குரலாகவும் ஒரே நேரத்தில் உணர்ந்தான். நல்ல வேளையாக மழை சற்று குறைந்து மின்சாரம் வந்தது. மின் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன.

_ _ _ _ _ அசோகனுக்கு தூரத்து விளக்கொளி சற்று தைரியத்தைத் தந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு அந்த குப்பை மேட்டுக்கு அருகில் சென்றான். மொட்டு விழிகளைக் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு ஒரு பச்சிளம் குழந்தை. இன்று பிறந்திருக்கலாம். ஒரு பழைய சேலையில் தளர்வாக சுற்றப்பட்டு தூக்கி எறியப்பட்ட - இல்லை, பாந்தமாக வைக்கப்பட்ட - அந்தக் குழந்தை நேராக இவனைப் பார்த்தது. சற்று முன்பு கத்தியதெல்லாம் நான்தான் என்பதுபோல மீண்டும் அதே ஓசையில் ஒருமுறை கத்திக் காண்பித்தது.

_ _ _ _ _ அசோகன் உற்றுப் பார்த்தான். அதன் பார்வை அவனுக்கு எதையோ சொல்லியது. ஆனால் புரியவில்லை. ஐயோ யாரேனும் இக்குழந்தையின் பார்வையை மொழிபெயர்ப்பார்களா? அவனுடைய வேண்டுகோள் ஆண்டவனுக்குக் கேட்டுவிட்டது. அவர் மொழிபெயர்த்து அவனுக்க்ச் சொன்னார்,

_ _ _ _ _ "அரசு அனாதைக் குழந்தைகள் காப்பகத்துக்கு எனக்கொரு பயணம் தருவாயா?"

*** *** *** *** *** *** *** *** *** *** ***

Saturday, September 16, 2006

ஒரு தலைப்புச் செய்தி

தேன்கூடு போட்டிக்கான சிறுகதை:
===================

____________ஒரு தலைப்புச் செய்தி
____________===================


_ _ _ _ _ கிருஷ்ணடு காட்டாங்குளத்தூரில் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டான். மணி மூன்றாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. வண்டலூர் தாண்டியவனுக்கு பொறி தட்டியது. 'இன்று கட்டுக்காவல் பலமாய் இருக்கும் போலிருக்கிறதே!' வண்டலூரில் ஒரு பாய்ந்தோடிய சரக்குந்து வண்டியைக் கவசமாகக் கொண்டு அங்கிருந்த காவல் சாவடியைக் கடந்துவிட்டான்.

_ _ _ _ _ 'இந்த செய்முறை விளக்கப் புத்தகங்களும், வரைபடங்களும் காலையில் ஓங்கோல் போய் சேர்ந்துவிட்டால் அவர்கள் நாளை நடத்தவிருக்கும் செயலுக்குப் பெரும் உதவியாய் இருக்கும். சுப்பக்கா எப்படியும் அந்த எட்டுமாத கர்ப்பினிப் பெண்ணை செண்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துக்கு ஐந்து மணிக்குக் கூட்டி வந்துவிடுவாள். சார்மினார் விரைவு வண்டியில் இந்தப் பெட்டியுடன் அவளைப் பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டுவிட்டால் தீர்ந்தது வேலை. ஆனால் காவல்துறை பலமாக முடுக்கிவிடப் பட்டிருக்கிறதே! எல்லாம் போன வாரம் நிகழ்ந்தவற்றால் வந்த வினை. இல்லாவிட்டால் சென்னையில் நடப்பதை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்?' என்று எண்ணியவாறே வண்டி போய்க் கொண்டிருந்தது.

_ _ _ _ _ எப்படியும் தாம்பரத்தில் பிரச்சனை இருக்கும். வேளச்சேரி சாலையில் திரும்பி விட்டால் சைதாப்பேட்டை வரை கவலை இல்லை, பிறகு அந்த போக்குவரத்து நெரிசலில் நீந்தி செண்ட்ரல் போய் சேர்ந்து விடலாம் என்று எண்ணினான். அப்போது கைபேசி ஒலித்தது. காதில் பொருத்தியிருந்த கைபேசி ஒலிபெருக்கி சொன்னது,

_ _ _ _ _ "வேளச்சேரி, திருநீர்மலை, பம்மல் ரோடுல யெல்லாம் நெறைய பள்ளம் இருக்குன்னு சொல்றாங்க. நேராவே போயிடு." (பள்ளம் = காவல்)

_ _ _ _ _ தொலைபேசியில் சொன்னபடி நேராகவே சென்றான். சரக்குந்தும் பேருந்தும் கேடயமாக அமைய சாலை நடுவனுக்கு அருகிலேயே சென்று கொண்டிருந்தான். ஆனாலும் தாம்பரத்தில் சற்று தடுமாறிவிட்டான். 'சே! இன்று நமக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது.' அப்போது கவனித்தான். பெண்கள் மற்றும் முதியவர்களுடன் செல்லும் இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

_ _ _ _ _ 'நம்முடனும் யாரவது உடன் வந்தால் நன்றாக இருக்குமே! வலியச் சென்று எப்படி நாமே லிப்ட் தருவதாகச் சொல்வது'. இவ்வாறு யோசித்தவன் சாலையோர பேருந்து நிறுத்தங்களில் பார்வையை ஓட்டியவாறே குரோம்பேட்டை பல்லாவரத்தைக் கடந்துவிட்டான். விமான நிலையத்தைக் கடக்கவேண்டும். வண்டியை மெதுவாக ஓட்டினான். இரண்டு சரக்குந்தும் ஒரு பேருந்தும் சாலையில் ஆயுத எழுத்தப் போல முக்கூட்டாகச் செல்ல, அவற்றின் மத்தியில் தன் வண்டியைச் செலுத்தி பாதுகாப்பாக ஓட்டிச் சென்றான். விமான நிலைய சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்க, அந்த நான்கு வண்டி ஊர்வலம் தடையில்லாமல் கடந்து சென்றது. ஆனால் கடந்தபிறகு பீறிட்டு வந்தது பிகில் சத்தம். இரண்டு அல்லது மூன்று பிகில் சத்தங்கள் சேர்ந்து வந்தன. பிகில் ஏற்படுத்திய திகில் கிருஷ்ணடுவின் இரத்தத்தை உறைய வைத்தது. அவற்றைப் பொருட்படுத்தாமல் இயல்பாக வேகமெடுப்பதைப் போல் வேகமெடுத்து மற்ற உந்துகளை முந்திச் சென்றான். வண்டியை விரட்டி மீனம்பாக்கத்தில் ஒரு பொதுத் தொலைபேசி கூண்டுக்கு அருகில் நிறுத்தினான். தொலைபேசியில் யாரையோ அழைத்தான்.

_ _ _ _ _ "பஸ்ஸில் போயிடறேன்."
_ _ _ _ _ "எல்லா பஸ் ஸ்டாப்பிலேயும் பள்ளம்."
_ _ _ _ _ "ஒரு லிப்ட் வேணும்."
_ _ _ _ _ "ரொம்பத் தப்பு".
_ _ _ _ _ "நான் போறத்துக்கு இல்லை. என்னோட வர்ரதுக்கு."
_ _ _ _ _ "யார் வேணும்?"
_ _ _ _ _ "ஒரு பொம்பளை இல்லாட்டி ஒரு கிழவி அல்லது கிழவன் இப்படி யாராவது."
_ _ _ _ _ "நந்தனம் வரைக்கும் போயிடு. நந்தனம் பஸ் ஸ்டாப்பில ஒரு கிழவன் லிப்ட் கேப்பான்."
_ _ _ _ _ "கோடு"
_ _ _ _ _ "சார்மினாருக்குப் போகனும்"
_ _ _ _ _ "நான்"
_ _ _ _ _ "சுப்பக்கா வந்தாச்சா ன்னு சொல்லு. இன்னிக்கி பள்ளம் ஜாஸ்தி. பாத்துப் போ."

_ _ _ _ _ கொஞ்சம் நிம்மதியான கிருஷ்ணடு சரக்குந்து மற்றும் பேருந்து கவசங்களின் ஊடே தன் பயணத்தை நிதானமாகத் தொடர்ந்தான்.

*** *** *** ***

_ _ _ _ _ மூன்றரை மணிக்கு நந்தனம் அரசப்பரில் ஆட்டுக்கறி பிரியானியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு வெளியே வந்தான் முகுந்தன். வெண்சுருட்டு பிடிப்பதற்குத் தடையாக சுற்றுமுற்றும் யாராவது காவலர்கள் இருக்கின்றனரா என்று பார்த்தான். இப்படி பராக்காகப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விலகுமாறு அவனை உரசியபடி ஒரு சீருந்து (கார்) வந்து நின்றது. இவ்வளவு விலை உயர்ந்த சீருந்தை இப்படி காட்டுத்தனமாக ஓட்டும் அந்தத் துரவரைப் (ட்ரைவர்) பார்க்க எத்தனித்தான் முகுந்தன். அதற்குள் சீருந்து சீறுந்தாக மாறி நந்தனம் சிக்னலை நோக்கி சீறிப் பறந்தது. முகுந்தன் தனக்குத் தெரிந்த பெரிய வசவுகளை மனத்துக்குள் கரித்துக் கொண்டு பவ்வியமாக ஒரு வெண்சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு நந்தனம் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அவனுக்கு முன்னால் அந்தப் பெரியவர் போய் கொண்டிருந்தார்.

*** *** *** ***

_ _ _ _ _ காவல் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அலறியது. சார்மினார் என்ற சொல் ஒரு பொதுத் தொலைபேசியில் பேசப்பட்டு, பதிவாகி அலாரத்தை இயக்கியது. அந்த உரையாடலின் அந்நியத் தன்மை உடனடியாக நான்கு காவலர்களை மீனம்பாக்கத்துக்கு விரட்டியது.

*** *** *** ***

_ _ _ _ _ ஆழ்வார்பேட்டைப் போகவேண்டி தனக்கு வரவேண்டிய 45A எண்ணுள்ள பேருந்து வராததால் வெறுப்புற்ற முகுந்தன் இன்னொரு வெண்சுருட்டை யோசித்தான். அந்த முதியவரும் தன்னுடைய பேருந்துக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது என்று எண்ணினான். அந்த வழியில் வரும் மற்றெல்லா வண்டிகளும் வந்து போய்விட்டன. அவ்வழியே மெதுவாக வந்த ஒரு மோட்டர்சைக்கிளை நிறுத்தினார் அந்த முதியவர்.

_ _ _ _ _ "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"
_ _ _ _ _ "எங்கே"
_ _ _ _ _ "சார்மினார் போகனும்."

_ _ _ _ _ இதைக் கேட்ட மோட்டார்சைக்கிள்காரன் சற்று பேந்த விழித்துவிட்டு போய்விட்டான். வித்தியாசமாக உணர்ந்த முகுந்தன் சற்று அப்பால் சென்று கைபேசியில் தன் காவலர் நண்பனை அழைத்து நிகழ்ந்ததை விவரித்தான். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறை ஜீப் முதியவரை அள்ளிச் சென்றது. சற்று நேரத்தில் மிடுக்கான முதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவ்வழியே மெதுவாக வந்த ஒரு மோட்டர்சைக்கிளை நிறுத்தினார் அந்த முதியவர்.

_ _ _ _ _ "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"
_ _ _ _ _ "எங்கே"
_ _ _ _ _ "சார்மினார் போகனும்."
_ _ _ _ _ "சுப்பக்கா வந்தாச்சா?"

_ _ _ _ _ அவன் ஏற்றிக் கொண்டான். அவர் ஏறிக் கொண்டார். தேனாம்பேட்டை சிக்னல் தாண்டியவுடன் ஒரு சிறு காவல்படை அவர்களை வளைத்தது. கோழி அமுக்காக இருவரையும் அமுக்கியது. முதியவர் காவலர்களுடன் சேர்ந்து கொண்டார்.

*** *** *** ***

_ _ _ _ _ முகுந்தனின் கைபேசி அழைத்துச் சொன்னது, "முகுந்தா ரிவாடு நிச்சயம்."


*** *** *** ***

_ _ _ _ _ மறுநாள் காலை தலைப்புச் செய்தி:
_ _ _ _ _ "முக்கிய ஆவணங்களுடன் நக்சல் தீவிரவாதி பிடிபட்டான்."

_ _ _ _ _ கிருஷ்ணடு முட்டி வலியில் புலம்பிக் கொண்டிருந்தான்.

_ _ _ _ _ 'சரியான லிப்ட் கிடத்திருந்தால் நாளைக் காலை தலைப்புச் செய்தி வேறொன்றாக இருந்திருக்கும்.'

****** ****** ****** ******

Wednesday, September 06, 2006

இதுவேறுலகம்

தேன்கூடு போட்டிக்கான கதை.

__________________________ இதுவேறுலகம்
====================================

_____ செல்வம் சந்தோஷத்தில் குளிர்ந்து போயிருந்தான். அவன் மனைவி ருக்கு அந்த செராக்ஸ் மற்றும் பொதுத்தொலைபேசி மற்றும் குளிர்பானக் கடையில் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தாள். செல்வத்தின் சந்தோஷத்துக்கு காரணம் சற்று முன் வந்த தொலைபேசி அழைப்பு. அவன் நண்பன் மணிக்கு திருமணம் முடிவாகியிருந்தது. மணியை உடனே சந்திக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இவனைப்பார்க்க அவனே காரில் வந்து விடுவான். அவனைச் சந்தித்த முதல் நாளும் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திய வார்த்தைகளும் அவனுக்குள் நிழலாடின.

_____ மைலாப்பூரில் ஒரு பொதுத்தொலைபேசி கூண்டில் தான் செல்வத்தின் வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருந்தது. அவனும் அவன் மனைவி ருக்குவும் காலை முதல் மாலை வரை அந்த கூண்டில் தான் வாசம் செய்தார்கள். அப்புறம் அவர்கள் வீடு என்கிற இன்னொரு கூண்டு. திருச்சியில் அவன் படித்த விழியிழந்தோர் பள்ளியில் ஒரு விழா. இவனை அழைத்திருந்தார்கள். இவனுக்கு அங்கு சென்றுவர அடக்கமாட்டாத ஆசை. ருக்கு வந்து தொடர்வண்டியில் ஏற்றிவிட திருச்சியில் அவன் அக்கா வந்து அழைத்துச் சென்றாள். விழா முடிந்ததும் அவளே மீண்டும் வண்டி ஏற்றிவிட்டாள். பாவம் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து இட்டிலி சுட்டு பொட்டலம் கட்டிக் கொடுத்து பல்லவனில் ஆறரை மணிக்கு ஏற்றிவிட்டாள். வண்டி அன்றைக்குக் கொஞ்சம் தாமதமாய் பண்ணிரண்டே காலுக்கு எழும்பூர் வந்தது. யாரோ வழிகாட்ட ருக்கு சொன்ன இருக்கையில் வந்து அமர்ந்தான். ருக்கு வரவில்லை.

_____ செல்வம் அங்கு நிலவிய ஆரவாரங்களை அமைதியாகக் கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். மணி ஒன்றுக்கு மேலாகியிருக்கும், இன்னும் ருக்கு வரவில்லை. தொலைபேசியில் தன் கூண்டை அழைத்துப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவனருகே பேச்சுக் குரல் கேட்டது.

_____ "மணி, கொஞ்சநேரம் அவர் பக்கத்துல உட்கார்ந்துக்கோ, கூட்டம் எவ்வளவு இருக்குன்னு பாத்துட்டு வந்திடுறேன்".

_____ "சரி, சீக்கிரம் வாங்கப்பா".

_____ செல்வத்தின் தொடை மேல் உரசிக்கொண்டு அவன் அமர்ந்தான். பொதுவாக செல்வத்தின் அருகே யாரும் அமர்வதில்லை. செல்வத்துக்கு யாரோ தன்னருகில் நெருக்கமாக அமர்வது ஆச்சர்யமாக இருந்தது. வந்து அமர்ந்தவன் இப்போது சற்று தள்ளி உட்கார்ந்து கொண்டான். அமைதியாக சில நிமிடங்கள் கழிந்தன. அவனிடமிருந்து ஒரு சுகந்தம் மிதந்து வந்தது. ஏதோ வாசனை திரவியம் போட்டிருக்கவேண்டும். அவன் ஆடையிலிருந்து கூட ஏதோ ஒரு நல்ல துணி சோப்பின் மணம் வந்தது. வழக்கமாக ஆண்களின்மேல் வரும் வியர்வைவாடை வரவில்லை. ஆண்வியர்வை வாடைக்கும் பெண் வியர்வை வாடைக்கும் அவனுக்கு வேறுபாடு தெரியும். இதை வைத்தே பலவற்றை அவன் கண்டு பிடிப்பான். இப்போதுதான் குளித்துவிட்டு வந்தானா? இருக்க முடியாது. குளித்தவுடன் வரும் குளியல் சோப்பின் மணம் வரவில்லை. ருக்குவிடம் தினமும் அவன் அனுபவிப்பான். ருக்கு நினைவு வந்தது. ஏன் அவள் இன்னும் வரவில்லை. தொலைபேசியில் அழைக்க இவன் உதவுவானா? அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. இல்லை. இவனால் உதவ முடியாது. வேறு யாரையாவது கேட்க வேண்டும். நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பசிவேறு வயிற்றைக்கிள்ளியது. ஒரு தின்பண்ட வாசனை வந்தது.

_____ "கொஞ்சம் சாப்பிட்றீங்களா?" செல்வத்தின் கையைப் பிடித்து வந்தவன் கேட்டான். அந்த பொட்டலத்திலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டான்.

_____ "லேய்ஸ் சிப்ஸ் ரொம்ப நல்லாயிருக்கும்". என்றான் செல்வம்

_____ செல்வத்துக்கு அதன் விலையைத்தவிர லேய்ஸ் சிப்ஸ் ரொம்ப பிடிக்கும். அதன் பொட்டலக் காகிதம் போடும் அந்த கரகரவென்ற ஒலி அவனுக்கு ஒரு குழந்தை உள்ளத்தைக் கொடுத்துவிடும். தடவியபடி அந்த பையோடு வாங்கிக்கொண்டான்.

_____ "அவர் உங்க அப்பாவா?"

_____ "ம்"

_____ "எனக்கு ஒரு உதவி வேணும். என்னை கூப்ட்டு போக என் வீட்டுக்காரி வரவேண்டும், வரவில்லை. ஒரு போன் செய்ய பூத் எங்கிருக்குன்னு சொல்லணும்".

_____ "எங்கிட்ட செல்போன் இருக்கு. நம்பர் சொல்லுங்க" ஆச்சர்யத்துடன் அவன் தன் கூண்டு எண்ணைச் சொன்னான்.

_____ "பெல் அடிச்சிட்டே இருக்கு யாரும் எடுக்கல" ருக்கு கூண்டைப் பூட்டிவிட்டு இங்கு வந்து கொண்டிருப்பாளோ?

_____ "பக்கத்து கடை நம்பர் சொல்றேன்...." பக்கத்து கடையில் பேசிய போதுதான் அவனுக்கு சேதி தெரிந்தது. ருக்குவின் அம்மாவுக்கு ரொம்பவும் உடம்பு முடியாமல்ப் போக அவள் இன்று காலை மரக்காணம் போவிட்டாள். இவனை ஆட்டோவில் வரச்சொல்லிவிட்டு போயிருக்கிறாள். ஆட்டோவுக்கு பணமும் கொடுத்துவிட்டு போயிருக்கிறாள். அவனுக்கு அலுப்பாக இருந்தது. 'யாரவது மைலப்பூரில் கொண்டுவிட்டால் தேவலை' என்று நினைத்துக் கொண்டான்.

_____ சற்று நேரம் சென்று அவனுடைய அப்பா வந்தார்.

_____"மணி ரொம்ப கூட்டமா இருக்கு, அரைமணிக்கு மேல ஆகும் போலிருக்கு, என்ன செய்யலாம்?"

_____ மணி செல்வத்தின் கையைப் பிடித்துக் கேட்டான்.

_____ "சார், கொஞ்ச நேரம் நீங்க இருப்பீங்களா?"

_____ செல்வத்துக்கு அந்த சூழல் பிடித்திருந்தது. இவர்கள் கொண்டுவிட்டாலும் விடுவார்கள் என்று நினைத்தான்.

_____ "சரி இருக்கேன்".

_____ "அப்பா நீங்க போய் பார்சலையெல்லாம் வெளியே எடுக்க ஏற்பாடு பண்ணிட்டே வாங்க. நான் இவரோட இருக்கேன். அப்பா இவரு ஏதும் சாப்பிடல போலருக்கு".

_____ "சரி மணி" என்று சொல்லிவிட்டு போனவர் ஒரு உணவுப் பொட்டலத்துடன் வந்தார். செல்வம் மகிழ்ந்து போனான்.

_____ செல்வத்துக்கு உதவிகளை தயங்காமல் ஏற்றுக் கொள்வதும், அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதும், உதாசீனங்களை உதாசீனப்படுத்துவதுமான ஒரு குணம் இருந்தது. அது அவனை மகிழ்ச்சியாக எப்போதும் வைத்திருந்தது. அவன் வாழ்வில் மகிழாத கணங்கள் குறைவு.

_____ "நீங்க கொஞ்சம் பணக்காரவுங்க போலிருக்கு"

_____ "கொஞ்சம் இல்ல, ரொம்ப"

_____ "நல்லதுங்க, எம்பேர் செல்வம்".

_____ "நான் மணி, என்ன தொழில் செய்றீங்க?"

_____ "பிசிவோ வச்சிருக்கேன்."

_____ "வருமானம் பரவாயில்லிங்களா?"

_____ "எங்கங்க வருமானம். முன்னெ மாறி இல்லீங்க. இப்ப பாருங்க நீங்க செல்போன் வெச்சிருக்கீங்க. உக்காந்த இடத்திலேர்ந்து போன் பண்ணிடுறீங்க. பூத்துக்கு ரொம்பப் பேரு வர்ரதில்லீங்க."

_____ "உங்களுக்கு குழந்தைங்க இருக்கா?"

_____ "இன்னும் இல்லீங்க"

_____ "உங்க வீட்டுக்காரங்க?"

_____ "அவதான் எனக்கு எல்லாம். துணி போட்டு உடறதிலேர்ந்து, பூத்துக்கு கூட்டி வர்றது வரை. இன்னிக்கு அவ அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லேன்னு மரக்காணம் போயிட்டா. பாருங்க ஆட்டோக்கு பக்கத்துக் கடையில் காசெல்லாம் குடுத்துட்டு போயிருக்கா. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

_____ "இல்ல செல்வம்"

_____ "வயசு"

_____ "இருபத்தெட்டாகுது. ஆனா வர்ர இடமெல்லாம் அப்பா அம்மாவுக்கு பிடிக்கல". அவன் குரலில் அவன் உணர்வு கலந்திருந்தது. செல்வம் புரிந்து கொண்டான். செல்வத்துக்கும் இருபத்தெட்டு வயதுதான்.

_____ "உங்களுக்கு எந்த ஏரியா?"

_____ "பூந்தமல்லிக்கப்புறம் ஒரு சின்ன ஊர்".

_____ அவனுக்கு சப்பென்றாகிவிட்டது. சென்னைக்குள் என்றால் அவர்களையே மைலாப்பூரில் தன் கூண்டுக்கருகே இறக்கி விடச் சொல்லலாமென்று எண்ணியிருந்தான்.

_____ "என்ன செல்வம் அமைதியாயிட்டீங்க? உங்க மனைவிகிட்ட பேசனுமா, ஏதாவது நம்பர் இருக்கா?"

_____ "ஆமாம் நீங்க எப்படி நம்பர்லாம் போடுறீங்க?"

_____ "ஒரு பழக்கந்தான்".

_____ செல்வம் மரக்காணத்தில் ஒரு வீட்டின் எண்ணைச் சொன்னான். ருக்கு வந்து பேசினாள். நாளைக்கு வருவதாகச் சொன்னாள். உணவுக்கு வீட்டில் ஏற்பாடு செய்து விட்டதைச் சொன்னாள். உதவிக்கு பக்கத்துவீட்டு பையனிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னாள்.

_____ "மணி, இன்னிக்கு எனக்கு வேலை இல்லை. நீங்க புறப்படறப்ப நானும் கிளம்பறேன்" அப்போது கேட்கலாமா என்று நினைத்தான். மணியின் அப்பா வந்து இவர்கள் பக்கத்தில் அமர்ந்தார்.

_____ "இன்னும் பத்தே நிமிஷம், உன் பியானோவை வெளியே கொண்டுவந்துடுவேன் மணி. அந்தப் பக்கம் வேன் தயாரா இருக்கு. ஏத்திவிட்டு நாம் கார்ல போயிடலாம்".

_____ இதைகேட்டதும் செல்வத்துக்கு நப்பாசை வந்தது. அவன் காரில் வெகு அபூர்வமாகவே போயிருக்கிறான். கேட்கத் துணிந்தான்.

_____ "மணி ஒரு சின்ன ஹெல்ப்"

_____ "சொல்லுங்க செல்வம், வேற யார் கூடயாவது பேசனுமா?" செல்வத்துக்கு இப்போது தயக்கமாக இருந்தது.

_____ "அப்புறம் சொல்றேன். சார் உங்க பையனுக்கு எப்ப கல்யாணம்?"

_____ "அவனுக்கு பொருத்தமா ஒரு பொண்ணு வரலியே தம்பி. வந்தவுடன் கல்யாணந்தான்".

_____ "என் ருக்கு மாதிரி ஒரு பொண்ணைக் கண்டு பிடிங்க" என்றான். மணியின் அப்பா அசவுகரியமாக உணர்ந்தார். யாரோ ஒருவன் தன் வீட்டுத் திருமணத்தைப் பற்றி பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அவரே தன் ஒரே மகனின் திருமணம் இவ்வளவு நாள் தள்ளுவதைப் பற்றி கவலையோடிருந்தார். அவரின் அசவுரியத்துக்கு ஏதோ வாசனை இருந்திருக்க வேண்டும். இடைப்பட்ட மவுனத்தில் அதை உணர்ந்த செலவம் உடனே சொன்னான்.

_____ "சார் கோச்சிக்காதீங்க, சும்மா யதார்த்தமாதான் சொன்னேன்". கொஞ்சம் தணிந்தவர் அமைதியாக இருந்தார். அவர்களது கொஞ்சநேர சல்லாபத்தில் விளைந்த நெருக்கம் அவருக்கு வியப்பாக இருந்தது. பொதுவாக மணி யாருடனும் அதிகமாக பேசுவதில்லை. அந்நியர்களுடன் சுலபத்தில் கலந்துவிடாத மணியின் சுபாவம் செலவத்திடம் வேறுபட்டிருப்பதை கவனித்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவர் செல்வத்திடம் கேட்டார்.

_____ "தம்பி நீ நெனைக்கறத சொல்லுப்பா. அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கணும்".

_____ "சார், நேத்து எங்க ஸ்கூல் ஆண்டு விழாவில ஒரு கவிதை சொன்னாங்க.... படிக்கட்டுமா"

_____ "படிங்க செல்வம்" என்றான் மணி.

_____ செல்வம் தன் பையிலிருந்து ஒரு பிரைலி தாளை உருவிப் படித்தான்.

_ _ _ _ _ _ நாசியும்என் இருசெவியும் மெய்யுமே
_ _ _ _ _ _ ___ நயனங்கள் என்றான யாக்கையில்
_ _ _ _ _ _ வாசனைகள் சுரங்களொடு சொற்களே
_ _ _ _ _ _ ___ வண்ணங்கள் என்றான வாழ்க்கையில்
_ _ _ _ _ _ யோசனையில் எவ்வுருவும் யாண்டுமே
_ _ _ _ _ _ ___ உருவாகா சிந்தைக்குள் வெளிச்சமாய்!
_ _ _ _ _ _ ஆசிகளை மெய்பிக்க வந்தனள்
_ _ _ _ _ _ ___ அக்கிழத்தி ஒளிக்கற்றை வடிவமாய்!!


(நாசி-மூக்கு, நயனங்கள்-கண்கள், யாக்கை-உடம்பு, யாண்டும்-எப்பொழுதும், அகக்கிழத்தி-மனைவி)

_____ கவிதையைத் தொடர்ந்த மவுனத்தைக் கலைத்து செல்வம் மேலும் சொன்னான்.

_____ " சார், ருக்கு இல்லாத நேரங்கள்ள கூட எனக்கு அவளப் பத்திதான் சிந்தனை. எனக்கு ருக்கு வரலன்னா யாரு வந்திருப்பா? ருக்குதான் வந்திருப்பா. ருக்குவத் தவிர யார் வர முடியும்? யார் வந்திருந்தாலும் அவதான் ருக்கு. எப்படி யோசிச்சாலும் எனக்கு இப்படிதான் சிந்தனை வருது. அந்த கவிதயக் கேட்டப்ப கூட அது ருக்குவுக்காக எழுதுன மாறிதான் எனக்கு தோனிச்சு."

_____ மீண்டும் மவுனம் நிரப்பிய அந்த நுன்னிய இடைவெளிக்குப் பிறகு அவனே தொடர்ந்தான்.

_____ "சார், மணிய யாருக்கு புடிக்குதோ அந்தப் பொண்ணப் பாத்து முடிச்சிடுங்க."

_____ இந்த வார்த்தைகள் மணியின் அப்பாவை சென்று அடைந்தது. மணி செல்வத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டான். மணியின் உலகம் சற்று வேறானது என்பதை உணர்ந்திருந்தாலும், அவ்வுலகின் ஒரு புதிய பரிமாணம் புலப்படுவதுபோல் தோன்றியது. அந்தப் பெரியவர் தன் விழிக்கடை நீர் துடைத்ததை இருவரும் அறியவில்லை. ஏதோ பல சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. மணியை யாருக்குப் பிடிக்கிறதோ அவளைத் தேடுவது அவருக்கு இடப்பட்ட உடனடி வேலையாக உணர்ந்தார். அவர் தன் அலுவலைப் பார்க்கச் சென்ற போது செல்வம் தயக்கத்தை விட்டுவிட்டு கேட்டேவிட்டான்.

_____ "மணி என்னை மைலாப்பூரில் என் பூத்தில் இறக்கிவிட முடியுமா?"

_____ மணி செல்வத்தை அணைத்துக் கொண்டான். அந்த அரவணைப்பை இன்று வரை நீக்கவில்லை. மைலாப்பூரில் இறக்கிவிட்டு வாழ்க்கையிலே ஏற்றிவிட்டான்.

_____ மணியின் கார் செல்வத்தின் கடை வாசலில் நின்று செல்வத்தின் சிந்தனையைக் கலைத்தது.


***** ***** *****

Sunday, September 03, 2006

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?

கொஞ்சம் அங்கே இறக்கி விட்டுவிடுகிறீர்களா?
கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?

___ ஆங்கில சொற்கலப்பு அத்தியாவசியமாகிவிட்ட இந்நாட்களில் இது போன்ற தலைப்புகள் வருவது சிலருக்கே நெருடலாக இருக்கும். இம்மாத தேன்கூடு போட்டிக்கான தலைப்பு நான் யோசித்த அளவில் மொழிமாற்றம் செய்ய இயலாததாய் இருக்கிறது. பினாத்தல் சுரேஷ் வைத்த ஆங்கிலத் தலைப்பு அழகாக 'விடலைப் பருவம் விடைபெறும் தருணம்' என்று மொழிமாற்றம் பெற்றது.

___ பேச்சுத் தமிழிலேயே ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசுவது தவறானது என்றாலும் பல பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாய்ப் போய்விடுகிறது. ஆனால் எழுத்து என்று வரும்போது கட்டுப்படுகளை நாம் விதித்துக் கொள்ளவேண்டும். நான் தனித் தமிழை வலியுறுத்தவில்லை. ஆனால் தவிர்க்க முடியாத சில இடங்களைத் தவிர்த்து மற்றெல்லா இடங்களிலும் தமிழையே பயன் படுத்துதல் எழுதுபவர்களின் கடமை. ஒரு கதையில் நடக்கும் உரையாடலில் "அவன் கராக்டா பத்து மணிக்கு வ்ந்துட்டான்" என்று எழுதுவதை இயல்பு கருதி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் விவரிப்பில் 'அவன் பங்க்சுவலா பத்து மணிக்கே வந்துவிட்டான்' என்று எழுதுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?

___ நல்ல கல்வியறிவு உள்ளவர்களும், குறிப்பாக எழுத்தாளர்களும், மாணவர்களும் தமிழில் ஆங்கிலக் கலப்பை அதிகமாகச் செய்கிறார்கள். பாமரர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும், கிராமத்தாரிடமும் நல்ல தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் அவர்களிடேயும் தமிழ் ஆங்கிலத்தால் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழைக் காத்து முன்னெடுத்துச் செல்லவேண்டிய எழுத்தாளர்களின் செயல்பாடு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.

___ "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்பதை "என்னைக் கொஞ்சம் அங்கே இறக்கி விடுகிறீர்களா?" என்ற முறையிலும் பலர் கேட்பதை நாம் அறிவோம். "இக்கட்டான சூழ்நிலையில் அவர் எனக்கு ஒரு லிஃப்ட் கொடுத்தார்" என்னும் பயன்பாடு "இக்கட்டான சூழ்நிலையில் அவர் என்னை கைதூக்கி விட்டார்" என்றும் பலரால் கூறப்படுவதை நாம் அறிவோம். இவ்வாறு லிஃப்ட் என்ற சொல் குறித்திடும் பயன்பாடு நம்மிடையே வெகு இயல்பாக இருந்தாலும், இதற்கான ஒரு தனிப்பட்ட பெயர்ச்சொல் நான் யோசித்தவரையில் வழக்கில் இல்லை. இருந்தால் அன்பர்கள் அறியத் தரவேண்டுகிறேன்.

___ கூடியவரை ஆங்கிலக் கலப்பைத் தவிர்த்து உரையாடுங்கள். எழுத்தில் மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து முற்றிலும் தமிழிலேயே எழுதுங்கள். லிஃப்ட் என்ற சொல் தமிழ்ப்படுத்தப்பட முடியவில்லை என்கிற காரணத்தாலேயே இந்தத் தலைப்பு தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

___ கொங்குராசாவின் பதிவிலிருந்து ஒரு பகுதி:

////காலையில பத்து மணி சென்னை அண்ணா சாலை ட்ராபிக்ல, என்னோட முதல் வெற்றிகரமான இன்டர்வ்யூக்கு போக தேனாம்பேட்டை சிக்னல்ல இருந்து நந்தனம் வரைக்கும் லிப்ட் குடுத்திருந்தவர் போட்டிருந்த சட்டையோ முகமோ இன்னைக்கு ஞாபகம் இல்லை, ஆனா போன வாரம் கார்ப்பரேஷன் சர்கிள்ல இருந்து ஜங்ஷன் வரைக்கும் நான் லிப்ட் குடுத்தவங்க கிட்ட இருந்து அடுத்த நாள் காலையில வந்த 'thanks e-card'அ பார்த்ததும், அந்த பதட்டமான குரலும் , (குர்லா டைம் சேஞ்ச் பண்ணிட்டாங்களாம்.. ரிசர்வேஷன் டிக்கெட்ல போடவே இல்லை) அந்த சென்ட் வாசமும் (ஆர்ச்சீஸ் டீப் க்ரீன்?) ஞாபகம் வருது. :)
(லிப்ட் குடுத்த கேப்'ல மெயில் ஐடி வரைக்கும் குடுத்திட்டயான்னு எல்லாம் கேட்டு, விவாகரத்தை கிளப்பக்கூடாது, அதெல்லாம் அப்புறம் நம்ம பதிவுல வச்சுக்கலாம், யூ நோ? திஸ் ஈஸ் அஃபீஷியல் ஃபார் தேன்கூடு.. ஓகே?)////

___ இவை போன்றவற்றைப் படிக்கும்போது என் நகைச்சுவை உணர்வும் தமிழ் உணர்வும் போட்டிட்டு தமிழ் உணர்வே வென்று மனதில் ஒரு கைப்பை நிற்கச் செய்யும்.