Wednesday, March 07, 2007

மகளிர் தின வாழ்த்து

இது என் ஐம்பதாவது பதிவு.
* * *
மகளிர் தின வாழ்த்து
==================

குப்பைத் தொட்டியே குடிகொண்ட தொட்டிலாய்
தப்பிதப் பிறப்பால் தவிக்கும் பெண்சிசுவே,

சேரியின் சகதியில் சிரித்து விளையாடி
காரிருள் மேனியாய் மாறிய பெண்மகவே,

பள்ளிகள் உனக்கே இல்லையென் றெண்ணி
சுள்ளிகள் பொறுக்கும் சுட்டிப் பெண்ணே,

பிஞ்சுவிரல் கொண்டு தீக்குச்சி அடுக்கும்
அஞ்சாம் வகுப்பில் அமரும் வயதின்
கெஞ்சும் கண்கள் கொஞ்சும் பெண்மகளே,

மச்சு வீட்டில் பத்துத் தேய்க்கும்
பத்தே பிராயப் பதுமைப் பெண்பிளாய்,

பட்டாம் பூச்சிபோல் பறந்திடும் பருவத்தில்
கட்டடம் கட்ட கல்தூக்கும் பெண்பிளாய்,

சூட்டுத் தார்சட்டி சாலைப் பணிகளில்
வாட்டும் பேதையாம் தாவணிப் பெண்ணே,

இரவில் இருளில் இன்னொரு நிழல்தர
மரமாய் மாறிய மாமட மடந்தையே,

திருமணம் கொய்த சிறகுகள் இழந்து
பறக்கவும் ஏலா பரிதாபப் பெண்ணே,

உனக்கொரு மகவாய் அதற்கே வாழ்வாய்
மனத்திடம் கொள்ளும் மனிதப் பாவாய்,

ஒளியறு பயணத்தில் ஒயில்ஒளித்த பெண்ணே,

ஓயாமல் உழைத்து ஒயில்ஒழிந்த பெண்ணே,

அச்சறு சக்கரம் ஆடி வீழ்ந்திடும்போல்
மக்கள் வளர்ந்ததும் அவர்வழிப் போக
இதுவரை வாழ்வினை இழந்திட்ட பெண்ணே,

நாட்களும் நீண்டு நலிந்து முதுமை
ஆட்கொண்ட பின்னர் அயலார் தயைக்கு
தாழ்ந்து விரிந்த கையுடை மூதாட்டி,

வாழ்த்தவும் எனக்கு வார்த்தை வரவிலை
மகளிரின் தினமாய் மார்ச்சு எட்டை!

இனிவரும் தலைமுறை இவ்வகை மகளிரை
கனவிலும் நனவிலும் காணுதல் இலமாய்
திண்ணமாய்ச் செய்வோம் தினமும் எண்ணுவோம்,
பெண்களின் கல்வியை பேணுவோம் நாமே!!(நிலை மண்டில ஆசிரியப்பா)

Tuesday, March 06, 2007

சென்னை சங்கமம்.

சென்னை சங்கமம்.

பல நாட்கள் நடந்த சென்னை சங்கமத்தில் திகர் நடேசன் பூங்காவில் (வழக்கமாக வலைப்பதிவர் சந்திப்பு நடக்குமே அதே இடம்தான்) நடந்த ஒரு நிகழச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருதேன். 23ம் தேதி வெள்ளிக்கிழமை. நான் சென்ற போது மாலை ஆறு மணி இருக்கும்.

கிராமிய இசையும் அதற்கேற்ற ஆடலுடனும் கூடிய சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை. செண்டை தாள ஒலி படு அமர்க்களமாக இருந்தது. அம்மாதிரி நிகழ்ச்சிகள் சென்னை மக்களுக்கு மிகவும் புதிது என்றே நினைக்கிறேன். முந்தைய நாட்களில் கிராமங்களில் சிறு நகரங்களில் கோவில் திருவிழா நேரங்களிலும் பெருந்தனக்காரர்களின் வீட்டு வைபவங்களிலும் இவை அதிகமாக நடத்தப்படும். இப்போது மிகவும் அருகி விட்டது. இவற்றை மீட்டெடுத்து நகரங்களிலும் பரப்பவேண்டும் என்ற நோக்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த கிராமிய நிகழ்ச்சிக்குப் பிறகு சௌமியா அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது கிராமிய இசையை ரசித்த மக்களில் பெரும்பான்மையினர் கலைந்து செல்வார்கள் என்று நினைத்தேன். நான் நினத்ததுபோல் நடக்கவில்லை. கூட்டம் அப்படியே இருந்தது. ஏழு மணியிலிருந்து எட்டரை மணிவரை சௌமியா பாடினார். அனைத்தும் தமிழ்ப்பாடல்கள். சில பாரதியார் பாடல்கள். இந்நிகழ்ச்சிக்காகவே சிறப்பாக தயாரித்து வந்திருந்த ஒரு பல்லவியை ராகம் தானம் பல்லவியாகப் பாடினார்.

நான் அறிந்தவரை சௌமியா செய்தது கர்நாடக இசை மரபுக்கு மிகவும் புதியது. "மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே" என்ற பல்லவியை மோகனம், வசந்தா மற்றும் தர்பார் ராகமாளிகையாகப் பாடினார். ராகமும் தானமும் பல்லவியும் பல்லவிக்குப் பிறகு பாடிய சுரவரிசைகளும் இவ்வாறு ராக மாளிகையாகவே அமைத்து பாடினார். மிருதங்கம் வாசித்தவர் மிக அருமையாக வாசித்தார். இந்த ராகம் தானம் பல்லவி சுமார் முக்கால் மணி நேரம் பாடப்பட்டது.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு,
வந்தே மாதரம், வந்தேமாதரம், வந்தே மாதரம்!
என்று பாடி நிகழ்ச்சியை முடித்தார்.

மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே ஒரு இனிமையான மாலைப் பொழுது. வரவேற்கத்தக்க இந்த முயற்சி வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும். அடுத்த முறை பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.