Monday, December 18, 2006

கப்பிப்பயல்

(அறிவியல் சார்ந்த சரித்திரச் சிறுகதை)

கதிரவன் தன் தினக் கடமையைத் தொடங்கி கிழக்கை வெளுக்க வைத்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் தஞ்சை மாநகரின் மாளிகைகள் காலை வெயிலின் பொற்கிரணங்களால் ஜொலிக்கத்தொடங்கிவிடும். பெண்கள் சாணம் மெழுகிய தெருக்களில் கோலமிட தொடங்கிவிட்டார்கள். பரத கண்டத்தின் தென் பகுதியை ஒருகுடையின் கீழ் ஆண்ட மும்முடிச் சோழர் இராஜராஜரின் புகழ் உலகம் முழுவதும் பரவி கமழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் தன் வாழ்நாளின் லட்சியமாக பெருவுடையார் கோவிலைக் கட்டிக்கொண்டிருந்தார். ஊரெங்கும் ஒரே பேச்சாக இல்லாமல் உலகமெங்கும் இதே பேச்சாக இருந்தது. முக்கால்வாசி முடிந்திருந்த கோபுரமே விண்ணளாவ நின்றதில் தஞ்சை மக்களே தரைக்கு மேல் ஒரு அடியில் தான் நடந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்தக் கோவில் நிர்மானிப்பதில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நித்த விநோத பெருந்தச்சனுக்கு அந்த காலைப் பொழுது பிரகாசமாய் இல்லை. அவன் மகன் முருகபூபதியால் அவனுக்குத்தான் எவ்வளவு தொல்லை. பத்து வயது பையன்கள் ஒவ்வொரு வீட்டிலும் இவ்வளவு குரும்பா செய்வார்கள்? இவன் ஒரு படை வேறு சேர்த்துக்கொள்கிறான். கல்தச்சன் தெரு பசங்கள் என்றால் தஞ்சையே நடுங்குகிறது.

இளவெயிலும் தொடங்கிவிட்டது. அதிகாலை நகர்வலம் வரும் இராஜராஜர் பெருந்தச்சன் வீட்டு திண்ணையில் ஒரு அரை நாழிகை பெருவுடையார் கோவில் பணிகள் பற்றி விவாதித்துவிட்டு போவது வழக்கம். முக்கால் பகுதி முடிந்திருந்த கோபுர வேலைகளைத் தொடர்வதற்கு பெருந்தடையாக இருப்பது விமானத்தையும் அதைத் தாங்கும் பிரமேந்திரக் கல்லையும் மேலே ஏற்றுவதுதான். கோவில் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் இதற்கு ஒரு வழி கிடைக்காதா என்று தவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விவாதத்திலேயே பல நாட்கள் சென்று விட்டன. ஆனால் நேற்றும் இன்றும் இதைப்பற்றியே யோசிக்க முடியாமல் செய்துவிட்டான் பெருந்தச்சனின் மகன். இன்றைக்கு முருகபூபதி மீது பெருந்தச்சனின் பங்காளி வீரபத்திரனே நேரடியாக புகார் கொடுக்கப்போகிறான். 'எல்லாம் இவள் கொடுக்கிற இடம்தான். கண்டித்து ஒரு வார்த்தை சொல்லமாட்டாள். ஒரே மகன் என்றால் இப்படியா செல்லம் கொடுப்பாள். நானே கண்டிக்க வேண்டுமாம். முடிந்தால் செய்யமாட்டேனா?' என்று தாங்க மாட்டாமல் மனதுக்குள் மனைவியைக் கடிந்து புலம்பிக் கொண்டிருந்தான் பெருந்தச்சன். 'அந்த காளி கோவில் விவகாரத்திலேயே முருகபூபதி பற்றி இராஜராஜருக்குத் தெரியும். இப்போது மேலும் கோபமடையப் போகிறார். முருக பூபதியை சிறைப்பள்ளியில் சேர்க்கப் போகிறார்கள்.'

சென்ற மாதத்தில் ஒரு நாள் கல்தச்சன் தெரு காளி கோவிலில் இரவில் மூல விக்கிரகத்தின் முகத்தில் சிவப்பு ஒளி வீசியது. பூசாரி பயந்து போய் ஏதோ தெய்வ குற்றமென்று சொல்லி பலி பூஜைக்கும் யாகத்திற்கும் ஏற்பாடு செய்யப்போக இராஜராஜரே நேரில் வந்து பார்த்து அந்த ஒளி மேலே ஒரு விளக்கிலிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முருகபூபதிதான் ஒரு உடைந்த சிவப்புக் கண்ணாடி சில்லை அவ்விளக்கில் பொருத்தி காளியின் செம்முகத்தை அழகு பார்த்திருக்கிறான். பிறகு அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டான். அதைப் பார்த்து பூசாரி கலவரமடைந்து களேபாரம் செய்துவிட்டான். நல்ல வேளையாக பெருந்தச்சனுக்கு தண்டனையோ அபராதமோ இல்லாமல் எச்சரிக்கையோடு விட்டுவிட்டார் இராஜராஜர். ஆனால் இப்போது என்ன செய்யப்போகிராரோ என்ற கவலையில் பெருந்தச்சன் உழன்று கொண்டிருந்தான். அதோ முன்புரவி காவல் வீரர்கள் ஆடி அசைந்து வந்து கொண்டிருகிறார்கள்! பின்னால் ஒரு கருஞ்சிவப்பு அரபுக்குதிரையில் ஆரோகனித்து வந்து கொண்டிருக்கிறார் இராஜராஜர்.

வேறுபுறமிருந்து பவ்வியமாக வந்த வீரபத்திரன் பெருந்தச்சனுக்கு வணக்கம் சொன்னான். கொடுக்கப்போவது அவன் மகன் மீது புகார் என்றாலும் பணிவில் குறைவைக்கவில்லை. பெருந்தச்சனும் தலையை ஆட்டிவைத்தான். இராஜராஜர் திண்ணையில் அமர்ந்ததுமே பெருங்கற்களை மேலே ஏற்றுவதைப் பற்றித்தான் விசாரித்தார்.

"என்ன பெருந்தச்சரே, ஏதாவது வழி தோன்றியதா?"

"ஐயனே, வழி கிடைக்காமல் போகாது. ஆனால் இன்னும் ஏதும் கிடைக்கவில்லை".

"அது யார் வீரபத்திரரா? இவர் உனது பங்காளி அல்லவா, உங்கள் கோவில் திருப்பணி எந்த அளவில் இருக்கிறது வீரபத்திரரே, குடமுழுக்குக்கு நாள் குறித்துவிடலாமா?"

"அப்படியே செய்யலாம் ஐயனே. எல்லா பணிகளும் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. அப்புறம் ஐயனே, எனக்கொரு புகார் இருக்கிறது. சிரமம் பாராது இப்பவே விசாரிக்க வேணும்".

"யார் மீது புகார் வீரபத்திரரே?"

"பெருந்தச்சனின் அருமை மகன் முருகபூபதி மேல் தான் ஐயனே. காளி கோயிலில் அவன் செய்ததுதான் உங்களுக்குத் தெரியுமே".

"அப்போது மன்னித்து விட்டுவிட்டேனே! இப்போது என்ன செய்தான்?"

"கல்தச்சன் தெருவிலிருக்கும் அத்தனை கிணற்றுக் கப்பிகளையும் எடுத்து வந்துவிட்டான். என் மனையாளோ நேராக குடந்தைவிட்டு கிணற்றில் தண்ணீர் மோந்ததில் குடத்தை நசுங்கிவிட்டாள். என் தாயார் அவளைப் போட்டு வறுத்தெடுக்கிறாள். எல்லாவற்றுக்கும் இந்த சிறுவனும் அவன் கூட்டாளிகளும் தான் காரணம். அதில் என் மகனும் உண்டு ஐயனே!"

"தச்சரே, மகனைக் கண்டிக்க மாட்டீரா?"

"ஒரே மகன். அதான் அவன் தாய் ரொம்ப செல்லம் கொடுத்துவிட்டாள்."

"நீர் கண்டிக்க வேண்டியதுதானே!"

"ஐயனே, நீங்கள்தான் அவனைக் கேட்க வேண்டும்."

"அவன் பாடசாலை ஆசிரியர்களிடம் சொல்லிவிடுங்கள்."

"பயனில்லை ஐயனே! அவன் பாடசாலையில் பரம சாது. படிப்பில் படு சுட்டி. எல்லா ஆசிரியர்களும் அவன் பக்கம்."

"விநோதமான பிள்ளையைத்தான் பெற்றுவைத்திருக்கிறீர். நித்த விநோத பட்டத்தை அவனுக்குத்தான் தரவேண்டும். சரி அவனை கூப்பிடுங்கள். நான் விசாரிக்கிறேன்." தந்தை அழைத்ததும் தயங்கித் தயங்கி அங்கு வந்தான் முருக பூபதி. இராஜராஜர் விசாரித்தார்.

"உன் தந்தையின் நற்பெயரைக் கெடுத்துவிடுவாய் போலிருக்கிறதே! இந்தப் புகாருக்கு என்ன சொல்கிறாய்?"

"............."

"பேசாமல் நிற்கிறாயே...... முருகபூபதி அழகான பெயர். அந்த முருகன் செய்த குறும்பெல்லாம் எல்லாரையும் மகிழ்வித்தன. நீ ஏன் எல்லோருக்கும் தொல்லை கொடுக்கிறாய்? பயப்படாமல் பதில் சொல்."

"கல்யாணத்துக்கு முன் வள்ளியைக் கேட்டிருந்தால் முருகனைப் பற்றி அப்படி சொல்லியிருக்கமாட்டள் ஐயனே! எங்கள் குலதெய்வம் திருவேரகத்து (சுவாமிமலை) சாமிநாதன். அதனால் தான் முருகன் என்று என் பெற்றோர் பெயரிட்டனர்."

"அப்படியானால் அந்தப் பெயரிலா கோளாறு?"

"நீங்கள் வேண்டுமானால் தச்சேந்திரன் என்று அழைக்கலாம் ஐயனே!"

"ஏன் அந்தப் பெயர்."

"என் தந்தையை நீங்கள் தச்சராஜன் என்று அழைப்பதுண்டு அல்லவா?"

"ஆஹா! இராஜராஜனின் மகன் இராஜேந்திரன் என்றால் தச்சராஜனின் மகன் தச்சேந்திரன்! பயலே, நான் உன்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறேன். அரட்டை அல்ல. உனக்கு எதற்கு அத்தனை கப்பிகள்?"

"பிரம்மேந்திரக் கல்லையும் விமானக் கல்லையும் மேலே தூக்க ஒரு வழி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன், ஐயனே!"

"தம்பி, பிரமேந்திரக் கல் ஒவ்வொன்றையும் அசைப்பதற்கே ஐம்பது பேர் வேண்டும். தெரியுமில்லையா உனக்கு. விமானக் கல் பகுதிகளும் ஒவ்வொன்றும் அதைப்போலத்தான். அது தெரியுமா உனக்கு. கப்பிகளெல்லாம் சிறு கற்களுக்குத்தான். நீ சிறு பையனாய் லட்சணமாய் கிட்டிப் புள்ளோ சடுகுடுவோ விளையாடு. அல்லது மல்யுத்தம் கற்றுக் கொள். உன் உடம்புக்குத் தோதாக இருக்கும்."

"ஐயனே அரண்மனைக் கிணற்றுக் கப்பிகளைப் போல் பெரிய கப்பிகள் ஒரு ஐம்பது வேண்டும். நான் இவர்களை தொந்தரவு செய்யமாட்டேன்."

"அத்துடன் பெரிய வடங்களும் உனக்குத் தேவைப் படுமே! செயல்தலைவரே, இந்தப் பையனுக்கு ஐம்பது பெருங்கப்பிகளும் வேண்டுமளவுக்கு வடங்களும் கொடுங்கள். வார்ப்பு சாலைக்கு அவனை அழைத்து செல்லுங்கள். அவனே தேர்தெடுக்கட்டும். அதன் விலையை பெருந்தச்சனின் ஊதியத்தில் பிடித்தம் செய்து விடுங்கள்."

"ஐயனே!" என்று அலறினான் பெருந்தச்சன்.

"சரி, பெருந்தச்சன் நமக்கு நெருங்கியவர். அதனால் பாதிவிலையில் கொடுங்கள். தச்சரே, நேரமாகிவிட்டது முற்பகலில் பெருவுடையார் ஆலயத்தில் சந்திப்போம்." என்று சொல்லி அந்த திண்ணைக் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் இராஜராஜர். அவர்கள் சென்றபின் தன் பிள்ளையிடம் கேட்டான் பெருந்தச்சன்,

"முருகா, என்னாடா என் மூன்று மாத ஊதியத்திற்கே உலை வைத்துவிட்டாய்? செயல்தலைவரிடம் கப்பிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மல்யுத்த பயிற்சியில் சேர்ந்துவிடு."

"அப்பா, காளி கோயில் தேரை இந்த கிணற்றுக் கப்பிகளின் உதவியால் நான் ஒருவனாகவே அசைத்துப் பார்த்தேன். அதை அசைக்கப் பத்துப்பேராவது வேண்டுமல்லவா? என்னிடம் ஒரு வழி இருக்கிறது. முயற்சிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். ஊதியம் பறிபோகாது. வெகுமதி விரைந்தோடிவரும்".

"ஏண்டா நீ பாட்டுக்கு ஏதேதோ செய்கிறாய். தலையாரி யாரும் கேட்பதில்லையா?"

"உங்களிடம் சொல்லி அரசரிடம் சொல்லிவிடுவேன் என்றால் எந்த தலையாரி என்னைக் கேட்பான்? அப்பா உங்களுக்கு இதெல்லாம் புரியாதப்பா?"

"அடேய்" என்று கத்திய தந்தை சொல்லைக் கேட்க ஆளில்லாமல் துள்ளி ஓடி வெளியேறினான் முருகபூபதி. இரண்டு நட்களுக்கு அவனைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.


* * * * * *

பெருவுடையாரின் ஆலயத்தை கல்லுளிகளின் சப்த ஜாலம் நிறைத்திருந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இளங்காலை வெயிலும் கருணைக்காட்டாமல் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. கிழக்குச் சுற்றுச் சுவரின் ஓரத்தில் ஒரு வெண்துகில் பந்தலுக்கடியில் ஒரு இராஜமாது வீற்றிருந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளுடையும் முகப்பிரகாசமும் அந்த பகுதியையே ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தது. பணிப்பெண்கள் பின்புறமும் வேலையாட்கள் முன்னே பணிந்தும் அவள் கட்டளைகளைக் கேட்கத் தயாராக இருந்தார்கள். அவர்தான் சோழ நாட்டு மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் மாதரசி, இராஜராஜனின் அருமைத் தமக்கை குந்தவை நாச்சியார். கண்டவர் எவரும் அனிச்சையாய் கையெடுத்து கும்பிட்டுவிடும் அறிவுக்களை சொட்டும் முகவிலாசம் பொருந்திய குந்தவை நாச்சியாரிடம் சற்று பதட்டத்துடன் வந்து நின்றார் ஒரு பகுதியின் தலைமை தச்சர்.

"மாண்புமிகு பேரரசி, என்னை மன்னிக்கவேண்டும். ஒரு தவறு நடந்திருக்கிறது".

"கந்தமூர்த்தித் தச்சரே என்ன கலக்கம் உங்களுக்கு?"

"முன்மண்டப தெற்கு வாயிலின் முகப்புத் தூண்களுக்கான ஒரு பெரிய கல் காணவில்லை. அதிலிருந்து நான்கு தூண்கள் செய்யத் திட்டமிட்டிருந்தேன். நேற்று அதில் குறியீடெல்லாம் செதுக்கி வைத்துவிட்டுத்தான் போனேன். இன்று காலையில் மாயமாய் மறைந்திருக்கிறது. இரவுக் காவலுக்கு இருந்தவன் ஏதும் சொல்லாமல் காலையில் வீடு சென்றுவிட்டான். அவனுக்குத்தான் ஆள் அனுப்பியிருக்கிறேன்".

"என்ன சொல்கிறீர்கள் கந்தமூர்த்தி, கொடும்பாளூரிலிருந்து இரண்டு யானைகள் இழுத்து வந்த அத்தனை பெரிய கல்லுக்கு எந்த கள்வன் தஞ்சைக் கோயிலுக்குள் வரப் போகிறான்?"

"பேரரசி, அக்கல்லை அசைக்கவே இருபது வேலையாட்கள் வேண்டும். ஆனால் மாயமாய் மறைந்துவிட்டது".

"எங்கே, இராக்காவலில் இருந்த யாருமே இப்போது இல்லையா?"

"அனைவரும் மாலையில்தான் வருவார்கள். வளர்பிறை முழு ஒளியில் பாட்டும் கூத்துமாகத் தான் நேற்றும் இராக்காவலர்கள் இருந்திருக்க வேண்டும். அரை நாழிகையில் உங்களிடம் மீண்டும் வந்து தகவல் சொல்கிறேன். குஞ்சர மல்லரிடமும் சொல்லியிருக்கிறேன். பெருந்தச்சர் இன்னும் ஆலயத்திற்கு வரவில்லை".

கந்தமூர்த்தி சென்று விட்ட சற்று நேரத்தில் அங்கு வந்தார் இராஜராஜர். கூடவே பட்டொளி வீசும் புத்தம் புதுமலராக ஒரு கரும் புரவியிலிருந்து குதித்து இறங்கினாள் இராஜராஜனின் அருமைப்புதல்வி சின்ன குந்தவை. பதினாறு பிராயத்திலிருந்த கட்டிளங்குமரி அங்கு வந்து அப்பகுதியை ஒரு மாயாலோகமாக் மாற்றிவிட்டாள். ஓடிச் சென்று தன் அத்தை குந்தவை நாச்சியாரிடம் அடைக்கலமானாள். இராஜராஜரும் அந்தப் பந்தலிலேயே இன்னொரு இருக்கையில் அமர்ந்தார். கந்தமூர்த்தி தச்சன் மீண்டும் வந்து கல் இன்னும் கிடைக்கவில்லை என்று சேதி சொன்னான். இராஜராஜன் அவனைக் கேட்டார்,

"தச்சரே, இராக்கவலரை அனைத்துவர ஆளனுப்பினீர் அல்லவா, யார் வந்தாலும் என்னிடம் உடனே அழைத்து வாருங்கள்". என்று கூறிய போது அங்கு வந்தான் பெருந்தச்சன்.

"ஐயனே, தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். என் அருமை மகன் இரவு வீட்டுக்கே வரவில்லை. அதான் தேடிக்கொண்டிருந்தேன், சற்று தாமதமாகிவிட்டது".

"கந்தமூர்த்தி தச்சரே, சற்று நில்லும். நீங்கள் தேடும் கல் இருக்குமிடம் எனக்குத் தெரிந்துவிட்டது. பெருந்தச்சரே மகன் வந்துவிட்டானா, இல்லையா? காலையில் உங்கள் இல்லத்துக்கு வந்த போதுகூட இது பற்றி சொல்லவே இல்லையே!"

"இல்லை ஐயனே, இன்னும் வரவில்லை. நேற்று தட்டாங்குடி கோயிலில் கூத்துப் பார்க்க போகிறேன், நள்ளிரவு அல்லது வெள்ளென வருவேன் என்று சொல்லிவிட்டு போனான். அவனும் வரவில்லை. அவன் கூட்டாளிகளும் வரவில்லை. அதான் ஊர் பூராவும் தேடிக்களைத்து இங்கு வந்தேன்".

"பெருவுடையார் கோவிலில் தேடினார்களா?"

"இல்லை ஐயனே".

"கந்தமூர்த்தி தச்சரே, அந்த பெருங்கல்லை தரையில் தேடி பயனில்லை. ஆகாசத்தில் தேடுங்கள். உடனே கிடைக்கும். பெருந்தச்சரே கோவிலை ஒரு வலம் வாருங்கள். உங்கள் மகனுடன் வருவீர்கள்". பெருந்தச்சன் உடனே வெளியேறினான். கந்தமூர்த்தி கேட்டான்,

"ஐயனே ஆகாசமென்றால்...."

"அட, சற்று அண்ணாந்துதான் பாருங்கள் தச்சரே, அதோ பாருங்கள் கோபுரத்தின் பின்புறத்தில் ஒரு கயறு தொங்குவதை. அதன் மறு நுனியில் பாருங்கள்".

"ஆம் ஐயனே கல்லை நகர்த்தி இழுத்துச் சென்ற தடம் மேற்கு நோக்கி சென்றிருக்கிறதை நான் கண்டேன். இதோ போகிறேன்".

குந்தவை நாச்சியார் தம்பியிடம் கேட்டார்,

"தம்பி நீ சொன்னாயே அந்த பையனா செய்திருக்கிறான்".

"அவன் , அவன் தெருவில் உள்ள காளி கோயில் தேரை கிணற்றுக் கப்பிகளால் சற்று நகர்த்தியதை காவலர்கள் ஊர்க்காவல் தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அப்போதிருந்தே கண்காணிக்கச் சொன்னேன். நேற்றைய தகவல் மட்டும் இன்னும் எனக்கு வரவில்லை".

"தம்பி இந்த தச்சேந்திரன் இராஜேந்திரனுக்கும் ஒரு பெரிய கோவிலைக் கட்டித்தருவான் பாரேன்". என்று சொன்ன குந்தவை நாச்சியாரிடம் சின்ன குந்தவை சொன்னாள்,

"அத்தை அந்த பையனை உடனே பார்க்கவேண்டும். அரண்மனைக்குக் கூட்டிப்போகவேண்டும்."

"பொறு குந்தவை, பெருந்தச்சன் அவனைக் கண்டுபிடித்து அழைத்து வரட்டும். உன்னப்பன் அவனை விசாரிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்".

* * * * * *

கந்தமூர்த்தி கோபுரத்தின் மேற்கில் நின்று அண்ணாந்து பார்த்தான். உச்சியில் கழிகளும் கயிறுகளும் பலகை சாரங்களுமாய் இருந்தது. 200 அடி உயரத்தில் சிறியதாய் ஒரு கல் தொங்கலிடப்பட்டு கோபுரப் பக்கத்தினுடன் அணைத்துக் கட்டப்பட்டிருந்தது. ஆகா! அதே கல்தான்! எத்தனை சிறிதாக தெரிகிறது! எப்படி மேலே போயிற்று? ஆட்களை மேலே ஏறச் சொல்லி உறுதிப் படுத்தச் சொன்னான். அவர்கள் சொன்ன செய்தி அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஏராளமான் கப்பிகள் கோத்து வாங்கப்பட்டு கயிற்று வடங்களின் பின்னலில் குழப்பக் காடாக இந்தக்கல்லும் பிணைக்கப்பட்டிருந்தது. அதை அவிழ்ப்பதற்குக் கூட இதைப் பின்னியவன்தான் வரவேண்டும். இதைக் கேட்டதும் கந்தமூர்த்தி தச்சன் ஓட்டமும் நடையுமாக அரசரிடம் விரைந்தான்.

கோவிலின் வடபுற மண்டபமொன்றில் படுத்து தூங்கிய மூன்று சிறுவர்களையும் தன் மகனையும் அசைத்து எழுப்பிய பெருந்தச்சன் தன் மகனிடம் கேட்டான்.

" கூத்துக்குப் போகிறேன் என்று சொல்லி இங்கே ஏன் வந்தீர்கள். அங்கே உங்கள் ஆயிகள் காளி ஆட்டம் ஆடுகிறார்கள், பெற்றவர்கள் உயிரை ஏனடா இப்படி எடுக்கிறீர்கள்?"

"அப்பா முன் மண்டபத்தின் தெற்கில் இருந்த ஒரு பெரிய கல்லை பல கப்பிகளை இணைத்து நாங்களே கோபுரத்தின் மேலே ஏற்றிவிட்டோம். இராக் காவலர்கள் எல்லோரும் உதவினார்கள். மேற்கே போய் பாருங்களேன்", என்றான் படு ஆர்வத்துடன். பெருந்தச்சனுக்கு கண்கள் சிவந்தன.

"அடேய், என்ன காரியம் செய்தாய். எத்தனை பேர் உயிருக்கு உலை வைக்கப்பார்த்தாய்? கோபுரத்தில் கல் விழுந்து சேதமானால் அபசகுனமடா படுபாவி". கோபத்தின் குன்றேறி நின்றான் பெருந்தச்சன். மீண்டும் அவனே பொறுமினான்,

"வா வா, அரசரிடம் சொல்லி உடனே சிறைப்பள்ளிக்கு உன்னை அனுப்பிவிடுகிறேன். நீங்களும் வாங்கடா." என்று சொல்லி அவன் புஜத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு இராஜராஜன் இருக்கும் பந்தலுக்கு வந்தான். அங்கு முன்பே கந்தமூர்த்தி வந்து விவரத்தைச் சொல்லியிருந்தான்.

"பெருந்தச்சரே அவனை விடுங்கள்", கர்ஜித்தார் இராஜராஜர்.

சின்ன குந்தவையின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்து போயிருந்தன. முருகபூபதியை கண்களால் அளந்தாள். நான்கடி உயரம். சற்றே பருத்த தேகம். சுருட்டைத் தலையில் ஒரு பின் கொண்டை. குருவிக்கூட்டைப் போல் தொங்கியது. உடல் முழுதும் கேசத்திலும் மண்ணும் புழுதியும். அவனுடைய இளங்கருப்பு மேனியில் அங்கங்கே காயங்கள் அடைக்கலமாயிருந்தன. இடையில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்தான். உயரம் குறைந்த அந்த பழுப்பு நிறத் துண்டை இடுப்பில் கட்டி இருகாலுக்கும் இடையில் இட்டு பின்புறம் சொருகியிருந்தான். வலதுகால் பெருவிரலில் நகம் பெயர்ந்து இரத்தம் உறைந்திருந்தது. தூங்கி எழுந்து வந்த நிலையிலும் அவன் கண்கள் துறுதுறுவென அலைந்து கொண்டிருந்தது. அலைந்த கண்களில் சின்ன குந்தவை பட்டபோது அவள் முறுவலித்தாள். முருக பூபதிக்கு சூழலின் கணத்தை அந்த முறுவல் நீக்கியது. சற்று தயங்கிய முருகபூபதி தன் மண்டை மண்டையான வெண்பற்கள் தெரிய பளீரென சிரித்தான்.

இராஜராஜர் பொய்யான கடுங்குரலில் கூறத் தொடங்கினார்.

"முருக பூபதி, நீ செய்தது உனக்கு சரியெனப்படுகிறதா? உனக்கு கப்பிகள் கொடுத்தது எவ்வளவு தவறு, ஏகப்பட்ட நாசத்தை விளைவித்திருப்பாய் போலிருக்கிறதே. நல்லவேளையாக பெருவுடையான் அருளால் ஒன்றும் அசம்பாவிதம் நிகழவில்லை. உன்னை சிறைக்கு அனுப்புவதாக முடிவு செய்திருக்கிறேன்".

"ஐயனே, என் பாக்கியம். அங்கேயும் எனக்கு நான் வேண்டியதைத் தந்து அருளவேண்டும்".

"வழக்கம்போல் உன் தந்தையின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவேண்டும்", என்றார் இராஜராஜர்.

"ஐயனே!" என்று அலறிய பெருந்தச்சன் "இவனை பாதாளச் சிறைக்கே அனுப்பிவிடுங்கள்" என்று கூவினான்.

"தம்பி முருக பூபதி, இதை எப்படி சாதித்தாய்?" என அன்பொழுக வினவினார் குந்தவை நாச்சியார்.

"அம்மையே, பீமனுக்கு சாதாரணமாகவே பத்து ஆள் பலம். அதாவது ஒரு ஆளுக்குள் பத்து ஆட்கள் ஒளிந்து கொண்டிருப்பதைப் போல. ஆளுக்குள் ஆட்கள். அது போல கப்பிக்குள் கப்பிகள் என்று யோசித்தேன். பரிசோதிதேன். "

"அபசகுனமாய் ஏதாவது நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?"

"அம்மையே, ஆறு வடங்கள் அந்தக் கல்லை தரைக்குமேல் தூக்கிவிட்ட பிறகு மேலும் ஆறு வடங்களை சேர்த்துவிட்டேன். அத்தனை இராக் காவலர்களியும் உயிர்காத்து ஓடும் வழியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். மேலே வடங்களை எந்த முளையிலும் கட்டாமல் கோபுரம் முழுவதையும் சுற்றிக் கட்டிவிட்டேன். ஆறு வடங்கள் போதுமான எடைக்கு பன்னிரெண்டு வடங்களால் படிமுடிச்சு போட்டார்கள் இராக்காவலர்கள். கல், கயிறு அறுந்தோ அல்லது முடிச்சு அவிழ்ந்தோ விழ வாய்ப்பில்லை. கல்லின் எடை சாய்க்க வேண்டுமானால் கோபுரத்தையே சாய்க்கவேண்டும். அது இந்த யுகத்தில் நிகழப் போவதில்லை. அப்புறம் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கவே இருக்கிறான் என்னப்பன் திருவேரகத்து சாமிநாதன். அம்மையே நான் ஏதும் தவறு செய்திருக்கிறேனா?"

"இராஜராஜா, குஞ்சர மல்லரே, பெருந்தச்சரே, என்ன சொல்கிறீர்கள்? பையனுக்கு பாதாள சிறையா அல்லது பதக்கமும் பட்டமுமா?" என்று கேட்டார் குந்தவை நாச்சியார்.

"பட்டம் கொடுத்துவிடலாம்", கத்தினாள் சின்ன குந்தவை, " அப்பா, அவன் 'கப்பிப்பயல்!'"

* * * * * * * * * * * * * * * * *

பி.கு:
1. கப்பி (pully) - கிணறுகளில் உபயோகப் படுவது நிலைக்கப்பி. பளு தூக்கிகளில் பயன்படுவது இயங்கு கப்பி . இக்கதையில் இயங்கு கப்பியின் பயன்பாடு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டதைப் போல் எழுதியிருக்கிறேன்.

2. இத்தனை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆறே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. பெரிய கோவிலைப் பற்றிய எல்லா ஆச்சரியங்களையும் விட இது பெரிய ஆச்சரியம்.

3. பெரிய கோவிலைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் இருக்கின்றன. நாம் அறிந்த மூவரின் சுட்டிகள்.

தேசிகன்
பவித்ரா ஸ்ரீனிவாசன்
லலிதாராம்

Sunday, December 03, 2006

மதயானை

மதயானை



ஒரு மத யானை மிக வேகத்தில் ஓடியதை எனக்கு படம் பிடித்துக் காட்டியவர் அமரர் கல்கி. அதற்குப் பின் வலைப்பதிவர் பொன்ஸ். அவருடைய ஓடும் யானைப் படத்தை பாராட்டி எழுத வேண்டுமென்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அவருடைய நட்சத்திர வாரம் நிறைவடையும் நேரத்தில் எழுதி விடுகிறேன்.

பொன்னியின் செல்வன் ஒரு மிகப் பிரமாண்டமான புதினம்.அது சொல்லும் செய்திகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் ஏராளம் ஏராளம். நான்காண்டுகளுக்கு முன் ஒரு மதன் பதிலில் உலகின் மிகச் சிறந்த நாவலென்று அதைச் சொல்ல, கமலஹாசனும் அதையே சொல்ல, நான் மதிக்கும் இரண்டு பெரிய ரசிக மணிகள் இவ்வாறு சொல்லவே, அதைத்தேடிப் பிடித்து ஒரே மூச்சில் அத்தனை பாகங்களையும் படித்து, வெகுவாய் லயித்து போய் மீண்டும் மீண்டும் நான்கு முறைக்கு மேல அத்தனை பாகங்களையும் படித்து படித்து, அதன் பிறகு கூகிளில் தேடி பொன்னியின் செல்வன் இணைய மடற்குழுவில் இணைந்து, கிருபா சங்கர் கொடுத்த ஒரு சுட்டியினால் மீனாக்ஸ் எழுதிய பொன்னியின் செல்வன் தீம் பார்க் பற்றிய ஒரு அறிவியல் புனை கதையைப் படித்து, மரத்தடியில் சேர்ந்து, எழுத்து வாசனை பெற்று, இன்று நானும் ஒரு வலைப்பதிவர் என்பதில் அந்த மதயானைக்கு ஒரு பங்கு இருக்கிறது.

புதினத்தில் இரண்டு முறை கல்கி மதயானை ஓட்டத்தை விவரித்திருப்பார். யானைமொழி தெரிந்த அருமொழிவர்மன் யானையை மதம் பிடித்தது போல் நடிக்கச் சொல்லி அதிவேக யானையோட்ட உதவியால் தப்பிச் செல்வார். இதில் முதல் ஓட்டம் மிக சுவராஸ்யமானது. பூங்குழலியுடன் வட இலங்கையில் யானை இறவுத் துறைவரை அவர்கள் செய்யும் பயணம் என் மனதில் படம் போல் பதிந்திருக்கிறது.

பொன்ஸின் படம் எனக்கு இக்காட்சியை மீண்டும் மீண்டும் புதிது படுத்துகிறது.

படத்தில் யானை ஒரு இளநகையின் தொடக்கத்திலிருக்கிறது.
தொடக்கத்துடன் அது உறைந்து போயிருக்கிறது.
கண்களில் மின்னிடும் குறும்பு அதை உறுதி செய்கிறது.
மதம் பிடித்தது போல நடிக்கும் யானைக்கு மட்டும்தானே இவை இருக்கும்?
முதன் முறை மேடையேறும் சிலர் சிரித்துக் கொண்டே இருப்பதைப் போல! வனமேடையில் நடிக்கும் யானையின் மனமேடைச் சிரிப்பு.
சோர்வின் சுமைகூட அல்ல, சுமையின் வலிதெரியா உற்சாக ஓட்டம்.

பொன்னியின் செல்வன் பொம்மை படமாவது யாராவது எடுக்கும் வரை பொன்ஸின் செல்வம் என் நினைவிலிருக்கும்.

மிக நன்றி பொன்ஸ்.