Saturday, February 17, 2007

மூவருக்கு தூக்கு.

தூக்கு தண்டனையை ஆதரித்து எழுதும் துர்பாக்கிய நிலை வந்துகொண்டே இருக்கிறது.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குதண்டனை நீதி நிலைநாட்டப்பட்டதற்கான நல்லதொரு அறிகுறி. அநீதி ஏற்றுக் கொள்ளப்படுவதற்கில்லை என்ற அரசின் நிலைப்பாடு பொதுமக்களுக்குத் தரும் பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணை இல்லை.

தனிமனித விரோதத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காக தனிமனிதருக்கு இழைக்கப்படும் கொடூர செயல்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை. இங்கெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் தூக்கு தண்டனை வேண்டாம் என்று பரிந்துரை கூட செய்யலாம். ஆனால் பொது வாழ்வின் நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த குற்றத்துக்கும் உயர்ந்தபட்ச தண்டனையே வழங்கப் பட வேண்டும்.

அப்சலுக்கும் அப்படியே அதிமுகவுக்கும் அப்படியே.

Tuesday, February 13, 2007

துயர சாகரம்.

துயர சாகரம்.

தேன்கூட்டை நடத்துவது சாகரன் என்பவர் என்று சில மாதங்கள் முன்புதான் தெரியும். சென்ற மாத வலைப்பதிவர் சந்திப்பில் இனிப்புகளுடன் எல்லோருடனும் அறிமுகப் படுத்திக் கொண்ட சிரித்த முகம் கொண்ட அந்த இளைஞர் இன்று இல்லை என்பதை என்னால் இன்னும் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன் எனக்கு அவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்கு நான் இன்னும் பதிலிடாமலே இருக்கிறேன். சென்ற ஞாயிறு அன்று காலை என்னுடன் அங்கிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏன் பதில் போடவில்லை என வினவினார். இப்போது குற்ற உணர்வில் மனம் கொதிக்கிறது.

எல்லோருக்கும் இனியராய் இருந்திருக்கிறார். என்னுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் சென்ற மாதத்தில் பேசினார். தேன்கூட்டுக்காக பல திட்டங்கள் வைத்திருந்தார்.

ஒரே முறை நேர்சந்திப்பும் சில மணிநேர தொலைபேசி பேச்சுகளுமே அவருடன் உறவுகளாகக் கொண்ட எனக்குள் ஊற்றெடுக்கிறதே இத்தனை சோகம், அவர் குடும்பத்தினரின் சோகத்தை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

யார் ஆற்றுவார் இதை? நாளே ஆற்றவேண்டும்.

Friday, February 02, 2007

நல்ல காலம் வருகுது

நண்பர்களே,

இந்த பாடலைக் கேளுங்கள். மஹாகவி பாரதியின் பாடலை அவர் பேரன் ராஜ்குமார் பாரதி பாடியிருக்கிறார்.

சுட்டி: http://www.youtube.com/watch?v=TLB4LOpWxlo

பாடல் வரிகள்:

புதிய கோணங்கி:

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் குறையுது
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு

தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரமெல்லாம் வளருது வளருது

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ
அந்தரி வீரி சண்டிகை சூலி
குடுகுடு குடுகுடு

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுருசுருப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது
பயம் தொலையுது பாவம் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
பழைய பைத்தியம் படீலென தெளியுது
வீரம் வளருது மேன்மை கிடைக்குது
சொல்லடி சக்தி மளையாள பகவதி
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது.