Monday, November 27, 2006

மதங்களைக் கண்டு பயப்படாதீர்கள்

கத்திகள் கொலைகளைச் செய்கின்றன
ஆனாலும் எனக்கு
கத்திகளைக் கண்டு பயமில்லை.
கொலைகளைக் கண்டு மட்டுமே.
கத்திகள் இல்லாமல் சமையலே இல்லை
ஒவ்வொரு வீட்டிலும்.

சில கத்திகள் தெருக்களில்
கொலைகளை செய்யும் நேரத்தில்
நம் எல்லோருடைய வீட்டிலும்
அவை சமையல் செய்துகொண்டிருக்கின்றன
அமைதியாக
மிக அமைதியாக.

உலகெங்கிலும்!

Thursday, November 23, 2006

ஐம்பது சதவிகித எச்சில்

இந்தப் பதிவில் மூன்று சதவிகிதத்தின் எச்சிலைப் பற்றிய கதையும் கவிதையும் மிக உணர்ச்சிகரமாகப் பதியப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பெரும்பாலான பதிவுகள் உடனடியாக உணர்வைத் தொடும் வகையிலேயே எழுதப்படுகின்றன. பெரும்பாலும் அவை அறிவைத் தொடுவதில்லை என்பது என் அனுமானம். ஒரு பதினைந்து சதவீதத்தின் மேல் இருக்கும் பரிவாக இவற்றைக் கொள்வதா அல்லது மூன்றின் மேலிருக்கும் வெறுப்பாக இவற்றைக் கொள்வதா? என் கருத்துகளைப் பதிகிறேன்.

மூன்றைப் பொருத்தவரை பல நேரங்களில் ஐம்பதும் ஒன்றுதான் பதினைந்தும் ஒன்றுதான். மூன்றுக்கும் 65க்கும்(50+15) இடையே இருக்கும் பிரச்சனைகள் வேறு. 50க்கும் 15க்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் வேறு. 15ந்தின் இன்றைய பிரச்சனைகள் பலவும் 50லிருந்தே வருகின்றன. இதற்கு மூல காரணங்களை ஆராயும் போது நம்மை மூன்றுக்கு இட்டுச் செல்லலாம். அப்போது மூன்றைச் சாடுவதுடன் 50ன் வேலை முடிந்துவிடுகிறதா? ஆனால் அந்த சாடல்தான் எளிதாகவும் விருப்பத்துடனும் செய்யப்படுகிறது.

மூன்றின் எச்சில் முகத்தில் வடிவது இன்று இயலாத ஒன்று. 50ன் எச்சில் குளத்தில் தத்தளிப்பவனுக்கு உடம்பெல்லாம் எச்சில். அவனைக் கரை சேர்த்துவிட்டால் அப்புறம் 65ம் சேர்ந்து மூன்றின் முகத்தில் துப்பலாம்.

என் பதினான்கு வயதில் நானும் என் நண்பனும்ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தோம் அவ்வூரில் மூன்று ஒன்றுக்கும் குறைவு. 50 ஏறக்குறைய 90. 15 சுமார் 10. ஊர் எல்லையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்த்போது வெளியிலிருந்து வந்த ஒரு பெரியவர் துண்டைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு ஐயா என் விளித்து அங்கிருந்த இளைஞரிடம் ஏதோ சொல்லிவிட்டு பிறகு ஒற்றையடிப் பாதையில் ஊரை சுற்றிக்கொண்டு சென்றார். 35 ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் நிலமை அப்படியே இருக்கிறது.

இதற்கு காரணமாக மூன்றைக் கருத என்னால் முடியவில்லை. மூன்றின் ஆதிக்கத்தை ஒழிக்க நினைப்பவர்கள் 15ந்தை ஆட்டிப்படைகிறார்கள். என்னதான் நடக்கிறது தமிழகத்தில். ஆக்கப்பூர்வமாக ஏதாவது நடந்திருக்கிறதா? நானும் பிறந்ததிலிருந்து சாடல்களையே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

50 ஆண்டுகளாக 15 முன்னேறுவதற்கு 50ன் பங்களிப்பு என்ன? 50 செய்த கொடுமைகள் என்ன? தீர்வை நோக்கி அதன் செயல்பாடுகள் என்ன? கீரிப்பட்டியும் பாப்பாப்பட்டியும் காப்பாற்றியதை தொடர்ந்து காப்பாற்றுவதற்கும் அதைக் கூத்தைப்பாருக்கு நீட்டிப்பதற்கும் யோசனைகள் என்ன?

20-11-2006 அன்று வெளிவந்த இந்து பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். சுட்டி. ஆந்திராவில் 4 தலித் பெண்கள் இயக்கும் தனியார் வானொலி நிலையத்தைப்பற்றிய செய்தி. இது போன்றவை தமிழ்நாட்டில் நடக்கிறதா? எங்கே செய்திகள்? எங்கே விளம்பரங்கள்?

மொத்தப் பொறுப்பும் 50க்கு இருக்கிறது. நான் 50ல் இருந்துகொண்டு கூனிக்குறுகி இந்த கேள்விகளைக் கேட்கிறேன். 50ன் பதில் என்ன?

மூன்றாவது கவிதை
உவமைகளின் கயமை
உண்மையிலிருந்து
வெகு தூரம் விலகி இருக்கிறது
உண்மையான கவிதையைப் போலவே!

பி.கு:
1. அனானிப் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
2. அனானி இல்லையென்றாலும் அசிங்க மொழிக்கும் அனுமதி இல்லை
(எது அசிங்கம் என்பது என் அறிவுக்கே உட்பட்டது)
3. எதிர் கருத்துகளை விரும்பி வரவேற்கிறேன்.

Sunday, November 19, 2006

தூண்டில்

ஒரு முற்றுப் பெறாத தூக்குக் கயிற்றைப் போல தொங்கிக் கொண்டிருந்தது அந்த தூண்டில் முள். உள்ளிருந்த கொக்கியை அழகாய் முழுதும் மறைத்திருந்தது முள்ளில் நுழைத்திருந்த மண்புழு. திருப்தியுடன் ஏரியினுள் இறக்கினான் அந்த மீன்பிடிப்போன்.

கடிப்பதற்கு வாகாய் கட்டித் தொங்கவிடப்பட்ட இந்த தின்பண்டத்தின் மணத்தால் ஈர்க்கப்பட்டது ஒரு சிறுகெண்டை. தின்று பார்க்கலாம் என்று அதன் அருகே சென்றபோது எங்கிருந்தோ பாய்ந்து வந்தது ஒரு பெருங்கெண்டை. தன்னை உண்ண வருகிறதோ எனெ தப்பியோடிய சிறுகெண்டை திரும்பிப் பார்த்தது. அகலத் திறந்த வாயால் அப்படியே அத்தின்பண்டத்தைக் கவ்விய அப்பெருங்கெண்டை அலறித் துடித்தது. ஓ! அந்த புது உணவில் ஏதோ கோளாறு!! மேலே நீர்மட்டத்தில் ஒரு பெரும்பரப்பு மிதந்து கொண்டிருந்தது. அதிலிருந்து பெரும் கயிறும் அதன் நுனியில் பெரும்பெரும் கொக்கிகளுமாய் அந்த பெரிய ஏரியின் அடிவரை வந்து ஒரு பெரிய கொடிப்பின்னலில் மாட்டிக் கொண்டிருந்தது. சிறுகெண்டை அடங்கமாட்டாத ஆர்வத்தினால் பெருங்கெண்டை அருகில் சென்றது. இப்போது துடிதுடித்த பெருங்கெண்டை அதிவிரைவில் மேலே சென்றது. எதனாலோ இழுக்கப்பட்டதுபோல. அந்த விரைவுக்கு மேல்நோக்கி நீந்த முடியவில்லை. மேலே நீர்மட்டத்திற்கு அருகே சென்றபோது - பெருங்கெண்டையைக் காணவில்லை! சிறுகெண்டையின் சிறிய மூளை குழம்பித் தவித்தது.

ஒரு சிற்றுலா நீந்தலும் தன் சக்கக்களுடன் சல்லாபமும் முடித்து திரும்பி அவ்விடத்திற்கு வந்தபோது சிறுகெண்டைக்கு ஆச்சர்யம்! மீண்டும் அந்த வினோத உணவு அங்கே தொங்கிக் கொண்டிருந்தது!! ஆடாமல் அசையாமல். அருகே சென்று பார்த்தது. இது வினோதம்! அற்புதம் இதன் மணம்!! ஆனால் ஆபத்து ஏதோ இருக்கிறது. தயங்கித் தயங்கி நாலைந்து சுற்று சுற்றிவந்து அந்த மணத்தையும் அதன் அருகாமையையும் முழுதும் அனுபவித்தபின் மெள்ள மெல்ல மெல்ல அருகில் சென்று மென்மையாக வாயால் கவ்வி அக்கொக்கிப் புழுவின் சிறுவிள்ளலை உண்டபோது, ஆகா! இன்னொரு விள்ளல்!! ஆகா!!! யாருக்கோ தோன்றியிருக்கிறது. இப்படி ஒரு சுவைமிகு உணவை இலவசமாய்த் தரவேண்டுமென்று. அதுவும் இப்படி சாப்பிட வசதியாய் கட்டித் தொங்க விட வேண்டுமென்று. மூன்றாவது விள்ளலுக்கு தயாரான போது சிறுகெண்டடைக்கு முக்கால் வயிறு நிறைந்துவிட்டிருந்தது. இலவச உணவு. இனிய உணவு. இந்த உணவு கிடைக்கும் நாட்கள் இனியநாட்கள்தாம் இனிமேல். கடித்த இடத்திலேயே மூன்றாவது கடியை அழுந்தக் கடித்தபோது, நளுங் என்று பல பற்கள் சுளுக்கிக் கொண்டன. தாங்க முடியாத வலி. ஆ! இதுதானா வில்லங்கம். இனிய இவ்வுணவிற்குள் இப்படியொரு கடும்பொருள். மூன்றாவது கடி வாய்க்குள்ளேயே மெல்லப்படாமல் இருந்தது. பல்வலியின் தீவிரம் குறைந்தபிறகு மெதுவாக ஞமஞமவென்று அதை மென்று உள்ளே தள்ளியதுபோது அந்த சின்ன மூளைக்குள் பல புது சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த இலவச படையலை விட முடியாது. மெல்லவே கடிக்க வேண்டும். புதுப்புது இடங்களில் கடிக்கவேண்டும். இந்த உத்தி பலித்தது. இது தொடர்ந்தது. சில விள்ளல்களில் தன் முழு வயிறும் நிறைக்கும் நாட்கள் அடிக்கடி வந்தன.

தூண்டிலின் தன்மையை ஒருபாதி அறிந்திருந்த அந்த வினோத சிறுகெண்டை இப்போது தினமும் தூண்டில்களை தேட ஆரம்பித்தது. ஆனால் ஒருநாள் தூண்டிலின் முனைப்புழு சதைக்கு ஆசைப்பட்டு அதை மெதுவாகக் கடித்தபோதும், அப்போது எதனாலோ ஏற்பட்ட நீரசைவில் முனைமுள்ளில் மாட்டிக் கொண்டது அந்த சிறுகெண்டை. துள்ளிய துள்ளலில் முள் மேலும் ஆழமாகப் பதிந்ததே தவிர விடுபட முடியவில்லை. தக்கையின் தவிப்பைப் பார்த்த மீன்பிடிப்போன் தூண்டிலை மேலே இழுத்தான். சின்னஞ்சிறுகெண்டையைப் பார்த்து ஏமாற்றமும் கோபமும் அடைந்தவன் அதன் வாயைப் பிளந்து முள்ளை விடுவித்து மீனைத் தூர எறிந்தான்.

உயிர் போகும் வலி. ஆனால் உயிர் போகவில்லை. வாய் கிழிந்து ரத்தம் வழிந்தது. பிழைத்துவிட்டோம் என்ற எண்ணமே வலியின் பெருமளவைக் குறைத்தது. சிறுகெண்டைக்கு முழுதும் சரியாக சில நாட்கள் ஆயின. இப்போது வாழும் வாழ்க்கை இலவமாகக் கிடைத்த இன்னொரு வாழ்க்கை. ஆனால் இப்பவும் தூண்டில் புழுவை சுவைக்காமல் விடுவதில்லை. இலவசம் எப்போதுமே கவர்ச்சியானதுதான். ஆனால் என்ன, அந்த முள்முனைப் புழுச்சதைக்கு ஆசைப்படுவதில்லை!

*********************

Wednesday, November 15, 2006

படைப்பின் இலவசம்

சென்னை நகரில் ஒரு சின்ன வீட்டுக்குள்ளே நடந்த ஓர் உரையாடல்.

"மச்சான், மச்சான், கபாலி மச்சான்"

"இன்னாமே கப்பு, இன்னா கூவுற, ரோசனய கலைக்காதமே"

"இன்னா ரோசன மச்சான், அப்புடியே முங்கிகின. என்னாண்ட சொல்லு "

"பிர்ச்சனயே உன்னாலதாமே! நீ யாரு எத்த கேட்டாலும் குடுத்துகினே கீறியே, அதான் பிர்ச்சனையே!!"

"கேட்டா குடுத்துடு மச்சான்"

"இன்னா பேச்சு பேசுற நீ, பாத்தரம் பாத்து பிச்ச போட தாவலயா?"

"பிச்சைய பத்தி நீ பேசாத மச்சான், நீயே பிச்ச எட்த்து துன்ற ஆளுதான"

"இன்னா குத்திக் காமிக்கிறியா?"

"ஆமா, பத்து ஊட்டு சோறு துன்றதுக்கோசரம் பிச்ச எடுக்கிற நீ. அத்த வுடு, யாரு உன்னாண்ட இன்னா கேட்டாங்க?"

"அல்லாருக்கும் வவுறு நெறைய சோறு வோணுமாம், அல்லாருக்கும் கரீட்டா படி அளக்குனுமாம். அல்லாரையும் அப்பிடியே எரிச்சி பஸ்பமாக்குலாமான்னு தோனுது"

"நீ பொண்டாட்டின்னு கூட பாக்காம என்னையே உயிரோட எரிச்ச ஆளாச்சே, நீ செய்வய்யா, கவாலி!"

"அதான் பொழச்சி முழுசா வந்துட்டியே கப்பு! இன்னா கப்பு ஒன்னு சொல்லகுடாதுன்ற. இந்த கபாலிய காவாலின்னு கபால்னு சொல்றியே!!"

"இதுக்கெல்லாம் ஒன்னியும் கொர்ச்சல் இல்ல!"

"கப்பு உனுக்கு காண்டு ஆவாதேடி,
கற்பகமே,
தப்பு ஏது செஞ்சேன், கப்பு உனுக்கு..."

"ஐயே, இன்னாதுய்யா அரத பழசு பாட்டு?"

"புச்சு வோணுமா? இந்தா கேளு,

'சிர்ச்சி சிர்ச்சி வந்த சின்ன கப்பு நீ
பிர்ச்சி பிர்ச்சி வச்ச பிச்சுப் பூவும் நீ.'..."

"டேய் கபாலி...."

"இன்னாடி புர்சனயே டேய்ன்ற?"

"இன்னாய்யா துப்புகெட்ட பாட்டு இது? யாரோ இன்னாவோ கேட்டாங்களே அத்த கவனிய்யா"

"என்னால எதையும் இலவசமா குடுக்க முடியாது"

"இன்னாது இலவசமா? எதுய்யா இலவசம்? நாம வழிய மட்டும் காமிச்சா போதும். சோறு கெடச்சிடும். அவுங்க கையில கீறத அவுங்கலாண்ட கொடுத்தா அது இலவசமா? சொல்ல போனா நீயே ஒரு இலவசம்".

"இன்னாது, இன்னாது, நான் இலவசமா?"

"நானும் தான் இலவசம். அந்த பெர்சு ஒரு கேள்வி கேட்டுச்சே இன்னிக்கி வரைக்கும் பதில் சொன்னியா அதுக்கு?"

"இன்னா பெர்சு, இன்னா கேள்வி."

"உன்ன எதுத்து கேள்வி கேட்டுச்சுன்னு உயிரோட எரிச்ச தமிழ் பெருசு, நக்கீரன்."

"கேள்வி இன்னா?"

"சங்கு அருப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்? - எனாக்கவது ஒரு சாதி கீது உனக்கு இன்னாய்யா சாதின்னு கேட்டுகினார் பாரு"

"ஆமா நமக்கு சாதி இல்ல. அது சரி, நாம இலவசமா?"

"மனுசன் மனுசனுக்காக குடுத்துகிட்ட இலவசம் தான் நாம. இன்னா பிரியுதா?"

"மனுசனுங்களே தயார் பண்ணி மனுசங்களுக்கு குடுத்துகிற அரசாங்கங்கள் மாதிரி"

"அக்காங்! வைரமுத்து ஒரு கவிதையில ஏதிகினார் பார் -
'மனுசா நீ படா ஆளுப்பா. இறைவனையே படைச்சுகினியே'..."

ஒரு அசரீரி கேட்கிறது.

"ஐயனே, குலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட உன்னை ஏது குலம் என்று கேட்டேனே, என்னை மன்னிப்பாயா? - சொர்கத்திலிருந்து நக்கீரன்."

"சரி நக்கீரா, இந்தா இலவசமா ஒரு மன்னாப்பு!"

*********************

Tuesday, November 07, 2006

திரு காளிமுத்து அவர்கள் மரணம்.

நல்ல தமிழில் சிறந்த பேச்சாளர். இந்த ஒரு காரணத்துக்காக எனக்கு பிடித்த மனிதர். அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எதிர்காலம் என்று ஒன்று - ஒரு கேள்வி.

திண்ணை-மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் பங்கு பெற்ற கதைகளில் சிலவற்றுடன் மேலும் சில கதைகளையும் சேர்த்து எனி இந்தியன் பதிப்பகம் 'எதிர் காலம் என்று ஒன்று' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இதில் என்னுடைய 'மரக்கலாஞ்சி மாஞ்சிளா' என்ற கதையும் உண்டு. இந்த ,சுட்டியில் கதையைப் படிக்கலாம்.

இந்த வார திண்ணை இதழில் வெங்கட் சாமிநாதன் இப்புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கிறார். சுட்டி. அதில் அவர் என் கதையைப் பற்றி கேள்வி ஒன்றை வைத்திருக்கிறார். ஒரு நிழ்கால நிகழ்வைச் சொல்லும் கதையை எப்படி அறிவியல் புனைகதையாகக் கொள்ள முடியும் என்பதே அந்தக் கேள்வி. கதையில் வரும் கற்பனை செடியான மஞ்சுளாவின் அதீத அறிவியல் சார்ந்த தன்மைகள் மட்டுமே இக்கதையை அறிவியல் புனை கதையாக சேர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இது பற்றி எனக்கு தோன்றியவற்றைக் கூற விரும்புகிறேன்.

அறிவியல் புனைகதைகளுக்கான விவரிப்பும் வரையரைகளும் திட்டவட்டமானதாக இல்லை என்று நான் கருதுகிறேன். அறிவியல் புனைகதை பற்றி சுஜாதாவின் கருத்துக்கள். இது அறிவியல் புனைகதை பற்றிய மாலனின் கருத்துக்கள். இது அறிவியல் புனைகதை பற்றிய ஜெயமோகனின் கருத்துக்கள். எதிர்காலத்தில் நடப்பதாயும், வேற்று கிரகங்கள் வினோத விலங்குகள் தொடர்புடையதாயும், இன்னும் இது போன்ற கற்பனைகள் கொண்டதாயும் இருப்பவை அறிவியல் புனைகதைகள் என்று ஒரு பொது கருத்து இருக்கிறது. புதுமைப் பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதை ஒரு அறிவியல் புனைகதை என வகைப்படுத்த முடியும் எனக் கருதப் படுகிறது. இது சமகாலத்தில் நிகழ்வதான கதைதான். என்னுடைய கதை சமகாலத்தில் நிகழ்வதாய் இருந்தாலும் இக்கதையில் ஒரு அறிவியல் சாத்தியக்கூறும் அரிய பல மூலிகைகள் முறையான அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சம காலத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படும் அறிவியல் சார்ந்த கதைகள் ஒரு சவாலான செயலாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் சமகாலத்தில் நடக்கும் அறிவியல் சார்ந்த கதைகளை அறிவியல் புனைகதையாக ஏற்றுக் கொள்வதில் இருக்கும் தயக்கம் எனக்குப் புரியவில்லை.

இன்னொரு கோணத்திலும் இக்கதையை அறிவியல் புனைகதையாக வகைப் படுத்த இடமுண்டு. சிறுகதைப் பிரிவுகளில் எதேனும் ஒன்றில் இக்கதையை வகைப்படுத்த முயலும்போது என்னைப் பொருத்தவரையில் அறிவியல் புனைகதையே முதன்மை தேர்வாக வருகிறது. சமகாலத்தில் நிகழ்வதாகவே விவரிக்கப்படும் என்னுடைய மற்றொரு கதையான 'விடுதலைப் பட்டறை' யைக் கூட அறிவியல் புனைகதையாகவே வகைப் படுத்த விரும்புகிறேன்.

இது தொடர்பான கருத்துகளை அறிய விரும்புகிறேன்.

இப்புத்தகத்திற்கும், என் கதைக்கும் விமர்சனம் அளித்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் திண்ணைக்கும் நன்றி.

இப்புத்தக விமர்சனம் பற்றி மீனாக்ஸின் பதிவு.

Wednesday, November 01, 2006

கார்பன் மானாக்ஸைடு - மரண எச்சரிக்கை.

சென்னை நகரில் பெய்த மழையில் 28-10-2006 அன்று தாங்கள் இருந்த சீருந்தில் (CAR) மூவர் மூச்சு திணறி இறந்திருக்கிறார்கள். இவர்கள் மரணத்துக்குக் காரணம் ஏராளமான கார்பன் மானாக்ஸைடை சுவாசித்ததுதான் என்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் தெரிய வருகிறது. இது பற்றிய விரிவான செய்தியை ஹிந்து நாளேடு 31-10-2006 அன்று வெளியிட்டிருக்கிறது.

வழக்கத்தில் மிக அரிதாக நடக்கும் இந்த மரணங்கள் எனக்கு பெரிய அதர்ச்சியை அளித்தது. ஏனென்றால் நான் சீருந்தின் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு ஏசியை ஓட விட்டு நான்கு மணிநேரம் கூட தூங்கியிருக்கிறேன். இதுபோல் பலரும் செய்திருக்கலாம். அல்லது செய்யக்கூடும். அவர்களுக்கான எச்சரிக்கை இந்த மரண எச்சரிக்கை.

ஒரு சீருந்தோ அல்லது அதைப் போன்று அடைக்கப்பட்ட ஓர் இடமோ எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப் படுகிறதோ அதைவிட பன்மடங்கு பாதுகாப்பற்றது என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. விபத்தில் சிக்கிச் சிதைந்த ஒரு சீருந்து உள்ளிருப்பவர்களுக்கு உடனடி நரகத்தை வழங்கிவிடும். குடந்தையில் பள்ளி சிறுவர்களுக்கு ஏற்பட்டதைப் போல வெளியேற முடியாமையால் ஏற்படும் இன்னல்கள் சூழ்ந்துவிடும். நச்சுக்காற்றை சுவாசித்து அரை/முக்கால் மயக்க நிலைக்கு வந்தவர்களால் கதவைத் திறந்து வெளியேற்முடியாமல் போய்விடும்.

கார்பன் மோனாக்ஸைடு என்றால் என்ன?

இது ஒரு நிறமற்ற மணமற்ற சுவையற்ற நச்சு வாயு. மனிதனால் எந்த வகையிலும் இது தம்மை சூழ்ந்திருப்பதை உணரவியலாது.

ஒரு சீருந்தின் எஞ்சின் வெளியேற்றும் வாயுக்களில் மனிதனுக்கு ஒவ்வாத வாயுக்கள் மூன்று பிரிவுகளில் இருக்கின்றன. அவை 1. எரியாத எரிபொருளின் ஆவிகள். (unburned hydrocarbons), 2.கார்பன் மானாக்ஸைடு, 3. நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் (oxides of nitrogen - NOx). இவற்றில் முதலாவதான எரியாத எண்ணெய் ஆவிகள் உருவாதற்கு முக்கிய காரணம் எஞ்சினுக்குள் முழுவதும் எரிவதற்கு போதுமான ஆக்ஸிஜன் அதாவது காற்று இல்லாமல் போவதுதான். இது முற்றிலும் தவிர்க்க இயலாத ஒன்று. ஏனென்றால் எஞ்சின் தொடர்ந்து சரியாக இயங்குவதற்கு சில இயங்குநிலைகளில் காற்று எரிபொருள் விகிதத்தில் எரிபொருள் அளவைக் கூட்ட வேண்டியிருக்கிறது. மூன்றாவதான நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உருவாகக் காரணம் - எஞ்சினுக்குள் இருக்கும் உயர் அழுத்தம் மற்றும் வெப்ப நிலை காரணமாக பல சிக்கலான வேதி வினைகளினால் அங்கு சும்மா இருக்கும் நைட்ரஜனுடன் ஆக்ஸிஜன் சேர்ந்து கொண்டு சில நைட்ரஜன் ஆக்ஸைடுகளை உருவாக்கி விடுகிறது. இவை அமிலத் தன்மை கொண்டவை. இரண்டாவதான கார்பன் மானாக்ஸைடு ஒரு நிறைவுறாத கார்பன் - ஆக்ஸிஜன் கூட்டுப்பொருள். எஞ்சினுக்குள்ளே எரிபொருள் முற்றிலுமாக எரிந்து கார்பன் டை ஆக்ஸைடாகவும் நீராவியாகவும் மாறவேண்டும். ஆனால் பல காரணங்களால் இவ்வினை முழுமையாக நிகழாமல் கார்பன், குறைந்த அளவு ஆக்ஸிஜனுடன் சேர்ந்து இந்த விஷ வாயு உருவாகிவிடுகிறது. இவை மூன்றுமே எரிபொருள் சிக்கனம் மற்றும் உடல்நலத்துக்கு எதிரானவை. இவை எஞ்சினினுள் ஏற்படுவதை ஒழிக்கவும் குறைக்கவும் இடைவிடாத ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

நட்டநடு நகரத்தில் மிக முக்கிய சாலையொன்றில் மூடியிருக்கும் சீருந்தில் எவ்வாறு இந்த கொல்லும் வாயுக்கள் உருவாக முடியும்? ஹிந்து செய்தி என்ன நடந்திருக்கலாம் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீருந்தின் அடியில் தேங்கிய மழைநீரால் நீர்மட்டம் உயர்ந்து வெளியேற்றும் குழாய் (Exhaust pipe or tail pipe) வரை வந்தபின் எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுக்களின் கசிவு வளிக்காற்றில் கலக்க முடியாமல் சீருந்தினுள் சென்று அடைந்திருக்கிறது. இது சீருந்தின் உள்ளிருக்கும் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கார்பன் மானாக்ஸிடின் அளவை அதிகரித்திருக்கிறது. நமது இரத்தத்தில் ஆக்ஸிஜன் ஏற்பிகளாக செயல்படும் ஹீமோகுளோபினுக்கு இந்த வாயுவின் மீது அதீத ஈர்ப்பு உள்ளதால் இரத்தம் இவ்வாயுவை அதிகம் உட்கொண்டு உடலுக்குக் கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் அளவை வெகுவாகக் குறைத்துவிட்டிருகிறது. இதன் இறுதி விளைவாக மரணம் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு சீருந்தின் எஞ்சின் குறைந்த அளவில் அதாவது எஞ்சின் இயங்கவும் ஏசி இயங்கவும் தேவையான சக்தியை உண்டாக்கும் நிலையில் (idling conditions) ஓடினால அது மிகக் குறைந்த வேலைத்திறனில் வேலை செய்யும். இந்நிலையில் எரியாத எண்ணெய் வாயுக்களும் கார்பன் மானாக்ஸைடும் அதிக அளவில் உருவாகும். இது பெட்ரோல் வண்டிகளுக்கு மிகவும் பொருந்தும். உயர்ந்த விலையுள்ள வண்டிகளில் கிரியா ஊக்கி மாசு மாற்றி (catalystic converter) என்ற கருவியை வாயு வெளியேறும் வழியில் எஞ்சினுக்கு அருகில் பொருத்தி இருப்பார்கள். மேலை நாடுகளில் இது எல்லா சீருந்துகளுக்கும் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது எனறு நினைக்கிறேன். இந்த மாசுமாற்றி எஞ்சினுள் உருவாகும் மூன்று அபாய வாயுக்களையும் அபாயமற்ற கார்பன் டை ஆக்ஸைடாகவும் நீராவியாகவும் மாற்றி வெளியே நமது வளிக்கு அனுப்புகிறது.

நாம் என்ன செய்யலாம்:

1. சீருந்துகளை அதிக நேரம் சும்மா நிலைகளில் (idling condition) ஓட விடுவது பெரும் தவறு.

2. ஏசியை தேவையான சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் மறுசுழற்சி நிலையில் வைக்காமல் (recirculation mode) காற்று உள்வரும் நிலையில் (ventilaating mode) வைக்க வேண்டும். இது மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலோனோர் அவ்வாறு செய்வதில்லை.

3. அடைக்கப்பட்ட சீருந்து எந்த அடைக்கப்பட்ட இடத்தையும் விட ஆபத்தானது. எஞ்சின் ஓடிக்கொண்டிருந்தால் இந்த ஆபத்து பன்மடங்காகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் இதை உணர்ந்திருக்க வேண்டும்.

4. நின்று கொண்டிருக்கும் சீருந்தை ஒரு ஏசி அறையாக பயன்படுத்தும் சபலத்தை அடியோடு நீக்குவது நலம்.

5. ஆனால் தற்போதைய கலாச்சாரத்தில் சீருந்தை ஒரு ஏசி அறையாக நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. தவிர்க்க முடியாத நேரங்களில் ஏசியை காற்று உள்வரும் நிலையில் வைத்து மிகக் குறைந்த நேரத்துக்கு அவ்வாறு பயன்படுத்தலாம்.

6. மாசுமாற்றி பொருத்தப்பட்ட சீருந்துகளை வாங்குவது நலம்.