Saturday, June 24, 2006

ஷாங்காய் பயணம்

அருந்ததி ராயின் சீனப் பயணம் வலைப்பூ உலகில் அலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்ற ஆண்டு ஏறக்குறைய இதே நாட்களில் சீனா சென்றுவந்ததை இங்கு பதிவு செய்கிறேன். இந்தக் கட்டுரை மரத்தடி குழுமத்தில் ஏற்கனவே வெளியிடப் பட்டிருக்கிறது.


ஷாங்காய் பயணம்

28.6.2005 அன்று செஞ்சீனாவில் கால் பதித்தபோது எனக்கு சிலிர்த்தது. இன்று செஞ்சீனா என்ற பதப்பிரயோகமே பரவலாக இல்லாமல் போய்விட்டாலும் பல காரணங்களுக்காகவும், பல நாட்களாக அறிவிலும் நினைவிலும் பதிந்துவிட்டிருந்த இந்தப் பெயர் சிறிதளவு மாறும் விதமாக இந்தப் பயணம் அமைந்திருந்தது. ஒரு விளம்பரத்துறை கண்காட்சிக்காக நண்பர் ஒருவரின் நிறுவனத்தின் ஆலோசகராக ஷாங்காயில் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். இந்த நான்கு நாட்களின் என் சீன அனுபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஷாங்காய் நகரம்: என் பயணத்தை சீனப்பயணம் என்பதை விட ஷாங்காய்ப் பயணம் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும். ஷாங்காயின் பளபளப்பும், அமைப்பும், வாழ்க்கைத்தரமும், வசதிகளும், வாழ்க்கை முறையும் சீனத்தின் மற்ற பகுதிகளைவிட பெரிதும் மாறுபாடுள்ளதாக இருக்கும் என்று உணர்கிறேன். இந்தியாவிற்கு எப்படி மும்பையோ அதுபோல சீனாவிற்கு ஷாங்காய் என்று சொல்வார்கள். வான்முட்டும் பல கட்டிடங்கள், நீண்ட அகன்ற சிறந்த சாலைகள், மேற்கிற்கு சவால் விடும் அளவிற்கு சிக்கலான மேம்பாலங்கள், வெளியூர் மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் கையைக் கடிக்காத கட்டணத்தில் அபரிமிதமாக வாடகைக் கார்கள், சுற்றுலாவிற்கான பல இடங்கள், அரும் கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான நீண்ட அங்காடிகள், விதம்விதமான (சீன) உணவகங்கள், இரவில் மேலும் பிரகாசமான பல தெருக்கள் என்று படு அமர்க்களமாக இருக்கிறது ஷாங்காய். ஆனால் நான் பார்த்த பகுதிகள் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன்.சுமார் 1.3 கோடி மனிதர்கள் வாழ்வதாகக் குறிப்பிடும் நகரத்தில் ஒரே ஒரு கடைத்தெருவைத் தவிர வேறெங்கும் நெருக்கமான மக்கள் நடமாட்டத்தைப் பார்க்க இயலவில்லை. எல்லா சாலைகளிலுமே வண்டிகளை சாலையோரங்களில் நிறுத்துவது தடை செய்யப்பட்டதோ என்று எண்ணுமளவிற்கு சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படவில்லை. சாலைகளில் செல்லும் கார்களில் பெரும்பாலானவை வாடகை வண்டிகள்தாம். தனியார் வாகனங்கள் மிக மிகக் குறைவு. காவலர்கள்(police) கண்ணில்படுவதே இல்லை. இவையெல்லாம் மேற்கத்திய மற்றும் இந்திய நகரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அம்சங்களாகும். சாலை நாற்சந்திகளில் பிரமாண்டமான நவீன சிற்பம் அல்லது நினைவுச்சின்னம் என்கின்ற கம்யூனிச நகரங்களின் அடையாளத்தை இரண்டு இடங்களில் பார்த்தேன்.

மக்கள்: சீன நாணயம் யுவான் அல்லது RMB நமது மதிப்பில் சுமார் 5.30 ரூபாய்கள் ஆகிறது. இந்த விகிதத்தில் பார்த்தால் விலைவாசிகள் நமது நாட்டிற்கு இணையாகவே இருக்கின்றன. சீன மக்களில் பெரும்பாலானோர் மிகவும் ஆரோக்கியமாக சிக்கென்ற உடலமைப்புடன் இருக்கிறார்கள். தொப்பையுடைய ஒரு ஆணையோ பெண்ணையோ நான் காண இயலவில்லை. மிகவும் நட்பாக இருக்கிறார்கள். உதவி கேட்கும் போது முகச்சுளிப்பு ஏதுமில்லாமல் மாறாக முகமலர்ச்சியடைகிறார்கள். ஆனால் அவர்களுடைய மொழிப்பிரச்சனை பூதாகாரமாக விஸ்வரூபமெடுத்து அவர்களுடைய உதவிக்கரத்தை செயலற்றதாக்கிவிடுகிறது. விமான நிலையத்திலேயே ஆங்கிலம் விடைபெற்றுக் கொள்கிறது. நான் புழங்கிய வட்டங்களில் நல்ல ஆங்கிலம் அறிந்த ஒரே ஒரு மாணவியைத் தான் பார்க்க நேர்ந்தது. வர்த்தக வட்டங்களில்கூட நூற்றிலொருவர்தான் சற்று உடைந்த ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். ஆனால் சாலைகளில் அனைத்து பெயர்பலகைகளும் சீனத்திலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்கள். சீனர்கள் ஆங்கிலத்தை அடைய முயற்சிப்பது கண்கூடாகத் தெரிகிறது. விமான நிலையத்திலேயே நாங்கள் செல்லவேண்டிய இடத்தை ஒரு காகிதத்தில் ஆங்கிலத்தில் எழுதி அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் அதற்குரிய சீனப் பெயரை சீனமொழியிலேயே எழுதி வாங்கிக்கொண்டோம். வாடகைக்கார் ஓட்டுனரிடம் இதைக் காட்டியவுடன் அவர் முகமலர்ந்து நாம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்றார். இந்த உத்தி மிகவும் உபயோகமாக இருந்தது.

சீனர்கள் அவர்கள் மொழியின் சித்திர எழுத்துக்களை எழுதுவதைப்பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது. ஒரு தேர்ந்த கார்ட்டூனிஸ்ட் கோடுகளை இடுவதைப் போல அவர்கள் சீனத்தை எழுதுகிறார்கள். ஒருமுறை வாடகை வண்டியோட்டி எங்களை தவறான முகவரிக்கு அழைத்துச்சென்றுவிட்டார். பிறகு அவரே வழி விசாரித்து நீண்ட தூரம் வேறுபாதையில் வந்து சரியான இடத்திற்கு வந்தபின் வாடகை வண்டியின் மீட்டர் காட்டிய கட்டணத்தைக் கேட்காமல் சரியான தூரத்திற்குரிய கட்டணத்தை விடவும் குறைவாகவே பெற்றுக்கொண்டதோடு மிகுந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

நெருடும் சம்பவங்களாக ஒரு கடைத்தெருவில் அதிகமான பிச்சைக்காரர்களையும் பெண் புரோக்கர்களையும் கண்டேன். இவர்கள் சற்று அதிக ஆங்கிலத்தை அறிந்திருக்கிறார்கள். மற்றொரு கடைத்தெருவில் ஒரு நடுத்தர வயது பிச்சைக்காரியுடன் அவளது சுமார் எட்டு வயது மகனும் பிச்சை கேட்டு தொந்தரவு செய்தனர். பிச்சை அளித்த பின்னும் வெகுநேரம் தொடர்ந்த நச்சரிப்பினால் என் நண்பரை ஏறக்குறைய கேரோ செய்யுமளவுக்கு சென்றுவிட்டார்கள். நாங்கள் செய்வதறியாமல் தவித்தபோது எங்கிருந்தோ வந்த சீருடையணியாத காவலர் ஒருவர் வந்து அவர்களைக் கொடூரமாக விரட்டினார். அவளும் அவள் மகனும் பாய்ந்தோடி எங்கோ மறைந்தனர். இந்த சம்பவம் தங்கமுலாம் பூசப்பட்ட ஷாங்காயை சற்று கீறிக்காட்டியதாக உணர்கிறேன்.

உணவு: இந்த சீனப்பயணத்திற்கான முஸ்தீபுகளின்போது அதிகமாக பயந்தது மொழிக்கும் உணவிற்கும்தான். நாங்கள் வெந்நீர் ஊற்றி தயாரிக்கக்கூடிய நூடுல்ஸ் எடுத்துச்சென்றோம். ஆனால் நான் தங்கிய ஓட்டலில் அளிக்கப்பட்ட இலவச காலையுணவில் ஐரோப்பிய உணவுகள் பிரட், பன், ஜாம், வெண்ணை, பிரெஞ்ச் டோஸ்ட், கார்ன் பிளேக்ஸ், ஆம்லெட் எல்லாம் கிடைத்தன. மேலும் தேன், சாலட் மற்றும் பழங்களும் இருந்தன. ஒரு சுத்தமான சுவையான அரிசிக் கஞ்சியும் இருந்தது. இவற்றுடன் ஏராளமான சீன உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் மயிரிழை அளவிலிருந்து மண்புழு அளவு வரை நூடுல்ஸ் செய்கிறார்கள். கொழுக்கட்டைப்போன்றே உள்ளடைக்கப்பட்டு அவித்த அரிசிப்பண்டங்கள் செய்கிறார்கள். எல்லவற்றிலும் ஏதோ ஒரு அசைவம் இருந்தது. நாங்கள் அனைவரும் இங்கு அசைவ உணவு உண்ணுபவர்கள்தாம். ஆனால் இந்தப் பண்டங்களின் மணமே நம்மை இவற்றைப் பரீட்சிக்கும் முயற்சியிலிருந்து தடுத்து விடுகிறது. எதையும் முயற்சிக்கவில்லை. முதல் தடையான இந்த வாசனைப் பிரச்சனையைக் கடந்துவிட்டால் பிறகு ருசி முதலியவற்றைக் கண்டறியலாம். இந்த ஓட்டலின் காலை உணவுடனும் மதிய மற்றும் இரவு உணவிற்கு நாங்கள் கொண்டு சென்றிருந்த இந்திய நூடுல்ஸ்-உடனும் எங்கள் உணவுப் பிரச்சனை இனிதே முடிந்தது. இங்குள்ள Mc Donalds உணவகத்தில் இந்தியர்கள் உண்ணுமளவிற்கு உணவு கிடைக்குமென்று சொன்னார்கள். அதற்கு அவசியம் நேரவில்லையென்பதோடு நேரமும் கிடைக்கவில்லை. சீனர்கள் உணவுப்பிரியர்கள் என்பதை அவர்களுடைய வகைவகையான உணவுப்பண்டங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெரும்பகுதியில் இருந்த உணவுப்பண்டங்களின் பிரிவில் ஏராளமான உணவு வகைகள் கொட்டிக்கிடக்கின்றன. பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் இறால் வகைகளும் ஏராளமான வகைகளில் வைத்திருக்கிறார்கள்.

முடிவாக: ஒரு ஐரோப்பிய அல்லது அமெரிக்கப் பயணத்தின் பிறகு விஞ்சி நிற்கும் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி பற்றிய வியப்பைப் போலல்லாமல் பல விதங்களில் இந்தப் பயணம் வியப்புகளை அளித்தது. ஒரு முக்கியமான வியப்பைச் சொல்லவெண்டுமானால் ஒரேவிதமான உடல்வண்ணத்தில் சீரான உடலமைப்பில் அன்பான எளிமையான மக்களை பொதுவாகக் காணும்போது பல அறிவியல் புனைகதைகளில் வரும் சமூகம் நினைவுபடுத்தப் படுவதைச் சொல்லலாம். இது என்னுடைய அதீத கற்பனையாகக்கூட இருக்கலாம்.

சீனர்களின் உற்பத்திதிறன் மலைக்கவைப்பதாக இருந்தாலும் அவர்களுடைய தயாரிப்புகளின் விலைகுறைப்பிற்கு தரக்குறைப்பும் அல்லது தரத்திற்கான முனைப்பின்மையும் ஒரு காரணமாக எனக்குப் படுகிறது. வேறுநாட்டு சீனர்களான தாய்வான் மக்களால் இந்த விலைக்குறைப்பைச் செய்ய இயலவில்லை என்பதை தாய்வான் ஒரு குடியரசு நாடு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் விலைக்குறைப்பிற்கான பல பின்புலங்களை யூகித்தறிய முடியும்.

ஷாங்காய் முழுமதியென்றால் நான் பார்த்தது மூன்றாம் பிறைகூட இல்லை- முதற்பிறை மட்டுமே. ஆனாலும் முழுவதும் வேறுபட்டதான காட்சிகளும் பார்வைகளும் நிறைந்ததாக அமைந்தது இந்தப் பயணம்.

பிற்சேர்க்கை - 25-06-2006

நான் அங்கு இருந்த நான்கு நாட்களில் சென்று வந்த இடங்கள் அப்பெரு நகரத்தின் சிறு பகுதி மட்டுமே. வர்த்தகக் கண்காட்சிக்கு நிறைய இந்தியர்கள் வந்திருந்தார்கள். ஷாங்காயில் நான் பார்த்த BMW, BENZ போன்ற கார் காட்சியகங்களைப் பார்த்தவுடன் எனக்கு பல கேள்விகள் தோன்றியது. யார் இவ்வகைக் கார்களை வாங்குகிறார்கள்? ஒரு BMW காரின் குறந்தபட்ச விலையே சுமார் 50 லட்ச ரூபாய்கள். நான் புரிந்திருக்கும் கம்ய்யுனிச கொள்கைகளின் படி சாதாரண குடிமக்கள் இந்த ஆடம்பரத்திற்கு அனுமதிக்கப் பட்டிருக்கிறார்களா என்பது புதிராக இருக்கிறது.

இன்று நினைவுபடுத்திப் பார்க்கும்போது நாம் ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்த மற்றும் படித்த அறிவியல் புனைகதை மாந்தர்களையும் நகரத்தையுமே மீண்டும் ஷாங்காய் என் கண் முன் நிறுத்தியது.

***** ***** ***** ***** *****

Monday, June 19, 2006

விடலைப் பருவம் விடைபெறும் தருணம்

விடலைப் பருவம் விடைபெறும் தருணம்

குழந்தைக் குணங்கள் குறைந்து மறைந்து
எழுந்த பெண்மையும் ஆண்மையும் நமக்கு
விடலைப் பருவம் வந்ததைச் சொல்லிடும்.
உடலின் மாற்றம் உளத்தையும் மாற்றிடும்.
பட்டாம் பூச்சிகள் பின்சென்று பிடிக்கும்
சிட்டுமனம் போய் சிலரின் பின்செல்லும்
சில்லரை மனமும் சினமும் வந்திடும்.
தாயின் முந்தானை பின்னின்ற பருவம்
மாயமாய் மாறி துப்பட்டா பின்செல்லும்.
பாயும் வண்டியில் பின்னிருக்கை குந்திடும்.

அகத்தின் உள்ளே இரண்டே நின்றிடும்
முகத்தில் அறையும் கூடாது எதனால்
இன்னும் ஒன்று அதனால் என்ன
எண்ணம் முழுக்க எதற்கும்
கேள்வியும் இவையே பதிலும் இவையே!
சிறிய அகமும் இவையால் நிரம்ப
அறிவும் நுழைய வழியும் குறைவே!

இன்றைய உலகில் இளைஞரின் தேவை
நுன்னிய கல்வியும் நுட்ப மதியும்
அதைப்பெறும் பருவம் அவதிப் பருவமாய்
திசையும் திருப்ப தீக்குழி ஆசைகள்
காதலும் வீரமும் கவர்ந்திடும் கண்ணிகள்
சோதனை செய்திடும் சோகத்தில் வீழ்த்திடும்.
அந்தோ மாந்தருக்கு இப்போது அல்லவா
சொந்தமாகும் எதிர்காலம் எழுதவும் படுகிறது!

நூறாண்டு முன்வரை குமுகாயப் பெரியோர்
மாறுதல், மட்டுறுத்தல், மற்றும் வழிகாட்டல்,
வழிவந்த பரம்பரை வம்ச வழக்கங்கள்,
எழுதாத சட்டங்கள் என்பன பலவைத்து
விடலைப் பருவத்தின் விபரீதம் குறைக்க
தடைபல செய்திருந்தார்.
தடைகளும் உடைய தற்போதின் உலகம்
விடலைகள் ராஜ்ஜியம்!
ஊடகம், விளையாட்டு, உணவகம், வித்தை,
ஏடுகள், கவிதை எதனை எடுத்தாலும்
இளைஞர் இன்று சாதனை இயற்றுகிறார்!
விளையாத சிலர் வீணாய்ப் போகிறார்!!

சிந்தை வளர்ந்தும் சிதைந்தும் மாறிய
விந்தைப் பருவமிதும் விடையும் பெறுகிறது.
முழுதாய் இன்றி மிச்சங்கள் வைத்தே
செழித்த இப்பருவம் செல்வது நடக்கிறது.
வேறாய் மாறும் வாழ்வின் ருசிகளில்
மாறுதல் செய்யும் மிச்சங்கள் இவையே.
விடலை ஏக்கங்களில் வெற்றி பெறாதவை
கடன்போல் மனதின் கருப்பு மூலையில்
தடமற்று ஒளிந்து தருணம் பார்த்திருக்கும்.

ஆயினும் பெரும்பகுதி விடலை பொசுக்கெனப்
போய்விடும் நேரங்கள் பொன்னான தருணங்கள்.

பட்டப் படிப்பு முடித்தால் போய்விடும்.
இஷ்டமான வேலை கிடத்தாலும் போய்விடும்.
காதலில் வெற்றியால் சிலருக்குப் போய்விடும்.
வேலையின் போதையால் சிலருக்குப் போய்விடும்.
புதிதாய் பொறுப்புகள், சுயமாய் சம்பளம்,
அதிகரிக்கும் மரியாதை மற்றும் அதிகாரம்
இவற்றால் போய்விடும்; இன்னும் இருக்குமானால்
அவைநின்று ஒருதுணை அகத்திற்கு அழைக்கும்
திருமணம் வந்திடும் திசையெலாம் மாறிடும்.
விடலைக் குணங்கள் இதன்பின்னும் தொடர்ந்தால்
விரைவில் வந்திடும் விவாகரத்தும்தான்.

ஒருவர் பொறையும் நட்பைக் காப்பதுபோல்
ஒருவரின் முயற்சி மணமுறிவைத் தடுக்கலாம்.
இப்போது வந்திடும் இறுதிக் கட்டம்
அப்பாவோ அம்மாவோ ஆனதின் பின்னாலே
கட்டாயம் போய்விடும் கடிதான குணமெலாம்
கட்டியம் கூறுவேன் கனிவாய் நானே!

**** **** **** **** **** **** ****
குறிப்புகள்:
கூடாது எதனால் = why not
அதனால் என்ன = so what
போதையால் = by involvement

இந்த மரபுக் கவிதை இனைக்குறள் ஆசிரியப்பா வகைச் சேர்ந்தது.

**** **** **** **** **** **** ****

Saturday, June 10, 2006

வலைப்பூவின் விவரங்கள்

வலைப்பதிவர் பெயர்:
........நடராஜன் ஸ்ரீநிவாசன்

வலைப்பூ பெயர் :

........ஓகை

சுட்டி(url) :
........http://oagaisblog.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)


ஊர்:
........சென்னை

நாடு:
........இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
........இணையத்தில் மேய்ந்த போது வா வா என்றழைத்த வலைப்பூ உலகம்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
........13 பிப்ரவரி 2006

இது எத்தனையாவது பதிவு:
........12

இப்பதிவின் சுட்டி(url):
........http://oagaisblog.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

........அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அறிவை மேம்படுத்தவும்.

சந்தித்த அனுபவங்கள்:
........புதியன பல.

பெற்ற நண்பர்கள்:
........இனி நிறைய பெறவேண்டும்.

கற்றவை:
........கொஞ்சம். ஆனால் கற்பதற்கு இங்கு இருப்பவையோ ஏராளம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
........முழுமையாக இல்லையோ என்ற ஐயம் இருக்கிறது.

இனி செய்ய நினைப்பவை:
........ நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்தலும், தமிழின் பயன்பாட்டை பொது வாழ்வில் மேம்படுத்துவதற்கு ஏதாவது செய்ய முயற்சிப்பதும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
........கும்பகோணத்தில் பிறப்பு, கோவையில் பொறியியல் படிப்பு, சென்னையில் தொழிலும் வாழ்வும்.

........என்விவரம் கேட்பீர் அன்பீர்
...........என்வயது நாற்பத் தெட்டாம்
........நன்வசிப்பு சென்னை நல்லூர்
...........நாடுவது தமிழில் எல்லாம்
........என்னவளும் மகளிர் மக்கள்
...........இருவருமாய் இனிய இல்லம்
........இன்னுமொரு விவரம் கேட்டால்

...........இயம்புதற்கும் பெரிதாய் இல்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
........தமிழ் வலைப்பூ உலகம் மிக இனியதாய் இருக்கிறது. சிலர் அதைக் கடிதாக்குகிறார்கள். உணவில் சிறு கல் போல் வந்தால் கூடப் பரவாயில்லை. முறுக்கில் கல் போல் வந்து சில நேரம் முழுச்சுவையையும் கெடுக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ் வலைப்பூ உலகம் மிக உன்னத நிலை பெறப் போகிறது.