Sunday, December 23, 2007

திருவாதிரை

திருவாதிரைத் திருநாள்

அந்த நாளும் வந்திடாதோ!அந்த சின்னப் பையனுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் விடுமுறை கிடைக்கும். காலையில் சுடச்சுட நெய்மணக்கும் களி கிடைக்கும். இந்தக் களிக்கு தான் எத்தனை ருசி! ஆண்டவன் இந்த களியின் ருசியைப் போல் வேறெங்கும் வைத்ததில்லை. புழுங்கலரிசியை வறுத்து, பொரியரிசி ஆக்கி, சற்றே (மிக முக்கியம்-சற்றேதான்) பொடித்து, வெல்லம் சேர்த்து, நெய்வார்த்து கிண்டியெடுத்த களியின் ருசி, ஆகா! ஒரு வருஷம் வரை அப்படியே நாவில் நிற்கிறதே!! அதனால்தானோ என்னவோ இதை திருவாதிரை அன்று மட்டும் செய்கிறார்கள்! இனி அடுத்த திருவாதிரைக்குதான் களி!

திருவாதிரை என்றால் சிதம்பரம்தான் சிறப்பு. ஆனால் அந்தச் சின்னப் பையன் குடந்தையில் அல்லவா இருந்தான். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பெரியத் தெருவுக்கு போவான். அப்பாவுடன் வெளியில் செல்வதென்றால் அது எப்பவும் லாபம் தான். ஏதாவது ஒன்று நிச்சயம் கிடைக்கும். அன்று அங்கு அத்தனை சிவன் கோயில் சாமிகளும் புறப்பட்டு வந்து வரிசையில் பெரிய கடைத் தெருவில் நிற்கும். அப்பா ஒவ்வொரு சாமியாய் கும்பிட்டு வரும்வரை அந்த கடைத்தெருவின் அத்தனை ஆரவாரத்தையும் ஆசை தீர பருகியனுக்கு அவ்வப்போது அப்பா திருநீறு பூசி விடுவார். சில சாமிகளைப் பார்க்க அவன் இரண்டு கக்கத்து இடுக்கிலும் கை கொடுத்து தூக்கி மேலே காண்பிப்பார். அவனும் கும்பிட்டுவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வான். அவர் இறக்கி விட்டவுடன் மறக்காமல் அப்பா கையைப் பிடித்துக் கொள்வான். அத்தனைக் கூட்டத்தில் அப்பாவை தொலைத்துவிடக் கூடாது அல்லவா!

நான் தாங்க அந்த சின்னப் பையன். ஒவ்வொரு திருவாதிரை அன்றும் மனதில் இந்த படத்தை ஒட்டிப் பார்த்துவிடுவேன். இந்த முறை உங்களோடு சேர்ந்து ஓட்டிப் பார்க்கிறேன்.

(சென்ற ஆண்டு திருவாதிரைக்கு எழுதியதின் மீள்பதிவு. பின்னூட்டங்களுடன் அந்தப் பதிவுக்குச் செல்ல: http://oagaisblog.blogspot.com/2007/01/blog-post.html"> திருவாதிரைத் திருநாள் )

Sunday, December 16, 2007

ந.ஒ.க:-போடி வெளியே...

போடி வெளியே...

- இனிமே உனக்கு இங்க இடமில்ல. கிளம்பு.

இதைக் கேட்டவுடன் அதிர்ந்து போன அவள் சொன்னாள்,

- என்னாச்சு இன்னிக்கி உங்களுக்கு. வேற மாதிரி பேசுறீங்க.
- நான் சொல்றது புரியுதா இல்லியா? நீ இன்னிக்கி கிளம்பனும் நல்லா புரிஞ்சுதா?
- நான் போக மாட்டேன். நான் ஏன் போகனும்?
- மேற்கொண்டு பேசறதுக்கு எதும் இல்ல. நீ இடத்த காலி பண்ணு.
- நான் இங்கேயே இருந்துகிறேன். எனக்கு போக விருப்பமில்லை.
- இவ்வளவு சொல்றேன் உனக்கு எட்டலியே.. போ வெளியே..

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை இத்தனை நாளாக வளர்த்தவர் திடீரென வெளியே போ என்று சொல்வது அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இருந்தாலும் போராட முடிவு செய்தாள்.

- நான் போக முடியாது. நீங்கள் இப்படி மாறுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
- இதோ பார். சும்மா சண்டித்தனம் பண்ணாத. சொல்றதக் கேளு. போ வெளியே..
- கண்டிப்பா முடியாது. நான் எங்க போவேன்? எனக்கு யாரத் தெரியும்? உங்கள விட்டா வெளியுலகமே தெரியாத என்னை வெளிய போச் சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வருது? உங்க மனசு அவ்வளவு கல்லா?
- திரும்பத் திரும்ப முரண்டு பிடிச்சியானா நான் உன்னை வலுக்கட்டாயமா வெளியேத்த வேண்டியிருக்கும். ஒழுங்கா போயிடு.
- முதல் முறயா நீங்க சொல்றத கேக்காம இருக்கறதுக்கு மன்னிக்கனும். என்னால போக முடியாது. நான் இங்கிருந்து போக மாட்டேன்.
- கழுத்த புடிச்சு தள்ளினாத்தான் நீ போவியா?

அவளைத் தள்ளிய தள்ளலில் அவள் நிலை குலைந்து தலை குப்பற ஆன அந்த நிலையிலும் அவள் சொன்னாள்,

- வேண்டாம். என்னை வலுக்கட்டாயமாத் தள்ளாதிங்க. நான் போகலை.
- இனிமே நீ செத்த அப்பறம்தான் நான் உன் மூஞ்சியிலே முழிப்பேன். போடி வெளியே....

ஒரு நெக்கு நெக்கித் தள்ளியதில் அவள் வெளியே விழுந்து அலறினாள்.

இது வரையில் நமக்குப் புரியாத ஒரு மொழியில் கடவுளுடன் நடந்த உரையாடலை எனக்குப் புரிந்தவரையில் மொழிபெயர்த்திருந்தேன். இன்மேல் என் மொழிபெயர்ப்பு தேவையில்லை. அவள் நம் மொழியிலேயே குவா என பேச ஆரம்பித்துவிட்டாள்.

நடராஜன்
17-12-2007