இநி
அறிவியல் புனைகதை.
சில நூறு டெர்ரா பைட்டுகளுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நினைவுத்திசுக் கடை இன்று உலகெங்கும் இநிக்களிடையே மிகப் பிரபலம். அந்த சில நூறு டெர்ரா பைட்டுகளின் கதையைத் தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
2005ம் ஆண்டு மார்ச்சு மாதம். பாஸ்டன் நகரில் டாக்டர் குரூஸ் வீட்டின் மாடியில் அவரது அறை மேஜையின் மீது ஒரு கொத்து காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த காகிதங்களின் மேல் மரத்தாலான ஒரு பேப்பர் வெய்ட். நல்ல கருங்காலி மரத்தில் கடைசல் செய்யப்பட்டு, வெகு நாட்கள் கைபட்டு கைபட்டு வழவழப்பாய் மெருகேறியிருந்தது. சதுரங்கத்தின் கருப்புச்சிப்பாய்க் காய் போன்ற வடிவத்தில் பெரிதாக ஆனால் கைக்கு அடக்கமாக வெகு அழகாகத் தான் இருப்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்தது. அந்த மிக விசாலமான அறை நிறைய கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு முந்தய தோற்றத்தில் இருந்தது. டாக்டர் குரூஸ் பழங்கலைப் பொருட்களின் பரம ரசிகர். ஒரு ஏலக்கடையில் மிகவும் விரும்பி இந்த பேப்பர் வெய்ட்டை வாங்கி வைத்திருந்தார். அப்போது அவருக்கு அதன் பெருமை தெரிந்திருக்கவில்லை. அந்த அறைக்குவரும் அழகு சொட்டும் மாடிப்படியைக் கூட பழங்கால முறையில் மரத்தால் அமைத்திருந்த குரூஸ் 'தட்' 'தட்' என்ற பூட்ஸ் காலடி ஓசையோடு மேலே வந்தார். தன் இருக்கையில் அமர்ந்து அந்த காகிதக் கொத்தின் மேலிருந்த பேப்பர் வெய்ட்டை எடுத்து சற்று தள்ளி வைத்துவிட்டு எழுத ஆரம்பித்தார். எழுத ஆரம்பிக்குமுன் அதை வாஞ்சையோடு ஒரு தடவு தடவினார்.
அந்த வெய்ட்டின் உள்ளிருந்த மர ரேகைகளுக்குள் ஒரு புள்ளியாய் உறைந்திருந்தான் ராமமூர்த்தி. குடந்தை ராமமூர்த்தி என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வாழ்க்கையில் அவன் இரு விதமாக இருந்து கொண்டிருந்தான். பல நேரம் அந்த கருப்பு மர வெய்ட்டினுள்ளே ரேகைகளுக்கிடையே ஒரு புள்ளியாய் கூட்டுப்புழுவைப் போன்றதொரு ஆழ்நிஷ்டை வாசம் ஒரு விதம். சில நேரங்களில் முண்டி முண்டி வெளியுலகைக் காணும் தீராத ஆசையொடு சில நானோமீட்டர்கள் அந்த ரேகைகளின் ஊடே அசைவாட்டம் இன்னொரு விதம். சில நாட்களுக்கு மட்டும் எங்கும் தடையின்றி பறந்து உலாவும் பட்டாம்பூச்சி போன்றதொரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டால், தன் மிச்ச எச்சங்களை ஒரு முறை கண்டுவந்துவிட்டால் பிறகு மீண்டும் பல நாட்களுக்கு அந்த மர வெய்ட்டினுள்ளே கூட்டுப்புழு வாசத்திற்கு தயாராய் இருந்தான்.
டாக்டர் குரூஸ் பத்திரிக்கைகளுக்க வினோதமான தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர். எழுபது வயதைக் கடந்த அவருக்கு கையால் எழுதுவதுதான் எப்போதும் பிடிக்கும். இப்போது 'மரணத்திற்குப் பிறகு ஏன் மனிதன்' என்று இன்னுமொரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். நம்முடைய காத்து கருப்பு சமாசாரம்தான் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அவருடைய பெற்றோர்களும் மூதாதையர்களும் காலம் காலமாக பேய் ஓட்டும் தொழில் செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்தவர்கள்தான். ஆனால் இவர் அப்படி இல்லை. இந்த ஆராய்ச்சியில் தன்வாழ்வையே அர்ப்பணித்திருந்தார். மருத்துவத்தில் 'காக்னிடிவ் நியூரோசைன்ஸில் (cognitive nueroscience) முதுகலைப் பட்டம் வாங்கியவர். அவரது இல்லமே ஒரு பெரிய ஆராய்ச்சிக் கூடம்தான். அவர் எழுதுகிறார்,
"உடலியக்கித்திற்குத் தேவையான கூறுகளைத் தவிர்த்துப் பார்த்தால் மூளையில் இருப்பதெல்லாம் நினைவுகள்தாம். அதாவது பதிவு செய்யப்பட்ட பல்வேறு செய்திகள். சிறு வயதிலிருந்தே ஒரு மனிதன் தான் பார்த்ததும் கேட்டதும் படித்ததும் உணர்ந்ததும் தர்க்கத்தால் அறிந்ததும் போன்ற பலவற்றால் பதியப்பட்ட செய்திகளை தேடிக் கண்டுகொள்ள முடிந்தால், அவையே நினைவுகள். உயிர்வாழ்தலுக்கும் இவற்றுக்கும் சம்பந்தம் இருந்தே ஆகவேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொண்டோமானால் பல அடிப்படை கேள்விகள் விடையளிக்கப் படாமலேயே இருக்கும். நினைவுகள் இயங்காத உயிர்வாழ்தல் 'கோமா' என்றால் அதைப்போன்றதொரு எதிர்நிலை இருந்தே தீரும். அதாவது உடலும் உயிருமற்று நினைவுகள் மட்டுமே இயங்குவதான ஒரு நிலை............" ...................... "அவையே இயங்கும் நினவுகள், இநி."
இவ்வாறு காற்றில் மிதக்கும் பல 'இயங்கும் நினைவு'களை பிடித்து தக்கை நெட்டிகளில் செலுத்தி ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார். ஆனால் ராமமூர்த்தி மட்டும் தானாகவே அந்த பேப்பர் வெய்ட்டின் மூலமாக அவரிடம் வந்து சேர்ந்தவன். கும்பகோணத்தில் தன் வீட்டில் நிகழ்ந்த ஒரு விபத்தில் மண்டையைப் பொத்துக்கொண்டு மூளைக்குள் நுழைந்த அந்த மரப்பொருளில் நினைவுத் திசுக்களாய் சிக்கி ஓர் இயங்காத இநியாய் இவரிடம் வந்து சேர்ந்தான். இநிக்கள் மேற்கொண்டு வாழ்வதற்கு அவர்களுக்குத் தேவை மேற்கொண்டு நிகழ்வுகளை தக்கவைத்துக் கொள்ள மேலும் நினைவிடங்கள் என்றறிந்த குரூஸ் இந்த 'இநி'களுக்கு கூடுதல் நினைவிடங்களைத் தருவதற்கு ஒரு முறை கண்டுபிடித்து வைத்திருந்தார். இன்று ராமமூர்த்திக்கு சில நூறு எக்சா(exa) பைட்டுகள் செலுத்தினார். இந்த இநி ராமமூர்த்தியை எப்படி இயங்க வைக்க சில முயற்சிகளும் செய்திருந்தார் இதுபற்றி சிந்தித்தபடியே அவர் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார்.
(டெர்ரா பைட் =1000,000 மெக பைட், எக்சா பைட் = 1000,000 டெர்ரா பைட்)
அவர் எழுதுவதை நிறுத்திவிட்டு சற்று சிந்தனையில் ஆழ்ந்தார். சிந்தனை சற்று ஆழமாய் போய் இடது கையால் அந்த வெய்ட்டை உருட்டைக் கொண்டிருந்தார். நீண்ட கூட்டுப்புழு வாசத்திற்குப் பிறகு இன்றைய எக்சா பைட் உள்ளீடலால் நிஷ்டை கலைந்த தயார் நிலையில் இருந்த ராமமூர்த்தி அவரது உருட்டலால் முற்றிலுமாக கலைக்கப்பட்டான். அவர் மேலும் எழுதலானார்.
"நினைவுகளற்ற உயிர் வாழும் கோமாவின் எதிர்நிலை உடலும் உயிருமற்ற நினைவுகளின் இயக்கம். காணவும் உணரவுமியலாத திசுக்களின் மேலேறி நினைவுகள் இயங்கும்போது.............", சற்று வேகமாக உருட்டப்பட்டதால் மேஜையிலிருந்து கீழே விழுந்த பேப்பர் வெய்ட்டிலிருந்து துடித்தெழுந்து, படபடக்கும் சிறகுகளுடன் நினைவுகளால் செய்த பட்டாம்பூச்சியாய் ராமு புறப்பட்டான். இந்த ஆள் என்னதான் எழுதுகிறார் என்று படித்துப்பார்த்தான். உதடுகளோடு கூடிய உடலிருந்தால் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்திருப்பான். காற்றசைவில் இயைந்து அவரறியாமல் வெளியேறினான்.
பாஸ்டனிலிருந்து வந்த விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது. நியூயார்க் விமான நிலையத்தை மேய்ந்த ராமு சென்னை செல்லும் லுப்தான்ஸா விமானத்தைக் கண்டறிந்தான். லுப்தான்ஸா புறப்பட்டது. சிறிது நேரம் காக்பிட்டில் பயணித்தான். விமானப்பணிப்பெண்ணில் சற்று நேரம். ஒரு முதியவரின் தாடியில் சிறிது நேரம். நெஞ்சில் பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கிய குழந்தைக்கருகில் சற்று நேரம் என்று பலநேரம் பயணித்து சென்னை வந்தான். தன்னைப் போலவே சில 'இநி'களையும் விமானத்தில் கவனித்தான். நள்ளிரவில் சென்னை வந்தவனுக்கு நாளை இரவுதான் கும்பகோணத்திற்கு ரயில். இடையில் எத்தனையோ பேருந்துகள் இருந்தாலும், அவனுக்குஅவசரமில்லை. அவன் விருப்பம் அந்த இரவு நேர கும்பகோணம் பாசஞ்சரில் குடந்தை செல்ல வேண்டும், அவ்வளவுதான். சென்னையில் அலைந்தான் திரிந்தான். எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தான். முன்னெல்லாம் அங்கிருந்துதான் அந்த ரயில் புறப்படும். ஆனால் இங்குவந்த போது நிலைமை மாறியிருந்தது. ரயில் புறப்படுவதை தாம்பரத்திற்கு மாற்றிவிட்டார்கள். இப்போது எழும்பூர் ரயில் நிலையம் வெகுவாக மாறி இருந்தது. உள்ளங்கை போலிருந்த நிலையம் இப்போது உள்ளங்கால்போல் நீண்டுவிட்டது. உள்ளங்கை ரேகைகள் போலிருந்த மீட்டர்காஜ் பாதைகள் எல்லாம் மாறி மண்புழு,மண்புழுவாய் பிராட்காஜ் பாதைகள் அவனுக்கு இவையெல்லாம் பிடிக்காமல் உடனே ஒரு மீட்டர்காஜ் மின்வண்டி பிடித்து தாம்பரம் சென்றான்.
இரவு கும்பகோணம் பாசஞ்சர் தாம்பரத்தில் புறப்பட தயாராய் இருந்தது. ஆயிரம் உயிருள்ள மக்களோடு அவனுக்கு ரயிலில் பயணிக்க பல இடங்கள் இருந்தன. ரயில் புறப்பட்டது. எஞ்சினுக்குச் சென்றான். பெட்டிப் பெட்டையாய் தாவினான். துக்கமே தாக்காத ஒரு நிலை. சந்தோஷம் அதிக சந்தோஷம், மிக அதிக சந்தோஷம் என்னும் நிலைகள் மட்டுமே கொண்டிருந்தான். இரயில் நிற்குமிடங்களில் நிலையங்களில் இறங்கி புறப்படும்போது உள்ளே ஏறிக்கொண்டு...... இரவைக் கிழித்துக்கொண்டு சீறிக்கொண்டிருந்த இரயிலை ஆனந்தித்தான், அனுபவித்தான்.
காலை ஆறரை மணி குடந்தை இரயில் நிலையம். எல்லோரும் இறங்கி விட்டார்கள். அவனுக்கு அவசரமில்லை. வீட்டிற்குப் போகவும் அவசரமில்லை. எதற்குமே அவசரமில்லை. நகர் வலம் செய்யலாமென்று முடிவு செய்தான். மெதுவாய் மாமாங்கொளத்துக்குப் போனான் (மகாமக குளம்). ஒரு வட்டம் அடித்துவிட்டு சற்று தூரம் வந்தவன் காமாட்சியம்மன் கோயிலின் சிறிய கோபுரத்தில் ஏறினான். திடீரென்று வந்த ஒரு காற்றசைவில் ஜிவ்வென்று பறந்து சாரங்கபாணி கோயில் கோபுரக் கலசத்தின் உச்சி ஊசிமுனைக்கு வந்தான். குடந்தை வட்டாரத்திலேயே உயரமான இடத்தில் இருந்து ஒரு பறவைப் பார்வையில் நகரை நோக்கினான். ரம்யம், ரம்யம், மஹா ரம்யம். அதோ கும்பேஸ்வரன் கோயில் கோபுரம். அப்புறம் ராமசாமி கோயில். பிறகு நாகேஸ்வரன் கோயில். அவனுக்கு மிகப்பிடித்த சக்கரபாணிக் கோயில் கோபுரம். அதன்ருகிலுள்ள பள்ளியில்தான் அவன் படித்தான். ஜிவ்வென்று காற்றில் நீந்தி அந்த கோபுரத்திற்கு வந்தான். கோபுரதரிசனத்தைக் கோபுரத்திலேயே கண்டவன் தரையிறங்கி கடைத்தெருவில் நுழைந்தான். அந்த நுழைவாயில் வெங்காய வாசனையை அவன் தவற விடாமல் கோபால்சாமிக் கோயில், பெரிய கடைத்தெரு, ஆஞ்சநேயர் கோயிலைத் தாண்டி முராரி இனிப்புக் கடைக்கு வந்தான். அந்த இடத்துக்கு வந்ததும் காபி கிளப் ஞாபகம் வந்தது.
எதிர்சாரியில் தஞ்சை சாலையில் ஒரு பழையகாலத்து வீடு. பிராமனாள் காபி கிளப் என்று இருக்கும். இப்போது அங்கே புது மோஸ்தரில் ஒரு கட்டடமும் பக்கத்தில் பெட்ரோல் பங்கும் வந்திருந்தது. பெட்ரோல் பங்கெல்லாம் யாருக்கு வேணும்? பக்கத்தில் அந்த திண்ணைவீட்டின் ஒரு பகுதி இன்னும் மிச்சமிருந்தது. அந்தப் பழைய வீட்டின் உள்ளே நுழைந்தான். ஒரு பெரியவர் "சார் என்ன சாப்பிட்றேள்" என்று கேட்டதுபோல் இருந்தது. அவ்ரும் ஒரு 'இநி'யாக அங்கேயே இருப்பாரோ எனத் தேடினான். மெலிந்த தேகமாய் அவர் அறுபது வயதுக்கு மேலிருந்தபோது பார்த்தது. எப்போதும் வியர்வையிலும் சமையலறைப் புகையிலும் வெந்த அவரது வெந்நிற மேனியில் மேலாடையாய் ஒரு டீ டிகாஷன் கலரில் பூணூல் மட்டுமே இருக்கும். நான்கு முழ வேஷ்டி நெய்ததிலிருந்து அன்று வரை ஒரே காரிக்கன் நிறத்தில் மடித்து கட்டியிருப்பார். நெற்றியில் திருநீறும் சந்தனமும் மின்னும். அவரைத்தான் பார்க்கவேண்டும்போல் இருந்தது ராமுவிற்கு. அங்கிருந்து காந்திபார்க் வந்தான். அப்புறம் பந்தடி மேடை. பிறகு சங்கர மடம் பழைய பாலத்தில் காவிரியைத் தாண்டி அவன் படித்த ஆண்கள் கல்லூரி வளாகத்திற்கு வந்தான். ஒரு சிறுவட்டம் அடித்துவிட்டு காவேரியின் வடகரை வழியாகவே வந்து கொண்டிருந்தான். பெருமாண்டி வந்தது. அந்த ஊரில் அவனுடைய உடல் கடைசியாய் புதையுண்டு போன இடம். இந்த மண்ணில் தன்னுடல் கலந்த எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவன் நிஷ்டையைக் கலைத்த நோக்கம் மெதுவாக நிறைவேற ஆரம்பித்ததில் பல டெர்ரா பைட்டுகள் நிறைந்து போயின.
(பெருமாண்டி=இடுகாடு)
ஆனால் இந்த மகிழ்வும் பூரிப்பும் அவனுள் செலுத்தப்பட்டிருந்த எக்ஸா பைட்டுகளை நிரப்புவதை அவன் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. வடகரையோடு மெல்ல வந்து இடதுபுறம் திரும்பி புதுப்பாலத்தில் காவிரியின் தோற்றத்தில் தனக்கில்லாத மெய்மறந்தான். அப்போது காவிரியில் நன்றாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இப்படி சுழித்து ஓடும் காவிரி யாரைத்தான் மயக்காது? வடகரையில் பெருமாண்டியும், தோப்புகளும், ஆலும் அரசுமாக பச்சையடிக்க தென் கரை முழுக்கப் படித்துறைகளால் நிறைந்திருந்தது. இதைக் கண்டு சொக்கிப்போவது அவன் வழக்கம். ராமூ..உ. ராமுவே ராமுவை உசுப்பினான். வீட்டுக்குப் போகலாமா? அரசலாற்றையும் பார்த்து விடுவோமே என்று நினத்தான். நகர பேருந்துகள் அவனை தாராசுரம் கொண்டுசேர்த்தன.
(தாராசுரம்= பழைய பயையாறை நகரம்)
பொன்னியின் செல்வன் கதையில் கல்கி அப்படி வர்ணித்த அரசலாற்றை அவன் தவற விடுவானா? .மாஞ்சோலைகளைக் கடந்து ஆற்றுக்கு வந்தவன் நாகரீகத்தின் சுவடேபடாமல் இன்னும் இடங்கள் இருப்பதில் நிறைந்து மேய்ந்ததில் இன்னும் கொஞ்சம் நினைவகங்கள் நிறைந்தான். தாராசுரம் தண்டவாளத்தில் கால்வைத்து பேலன்ஸ் செய்து நடக்க ஆசை. அங்கு வந்தவனுக்கு ஏமாற்றம். தடிதடியாய் புது சரளைக் கற்களில் பிராட்காஜ் அகலப்பாதை. 'சட், உடனே மீட்டர் காஜைப் பார்க்க வேண்டும்'. குடந்தை ரயிலடிக்கு வந்தான். மாலை சுமார் நான்குமணியிருக்கும்.
ரயிலடிக்கு வெளியில் பத்து பதினைந்து பெரிய மரங்கள் இருக்கும். எத்தனையோ வயதான மரங்கள். அதில் ஆயிரம் ஆயிரம் பட்சிகள். கோஷ்டியாய் கானம் பாடிக்கொண்டிருந்தன. பண்டிதர் பலர் கூடி ஓதும் வேதகானம் போலவும், யாகமந்திரங்கள் போலவும், கோஷ்டியாய் சப்தித்தன. இந்த பட்சிகள் யுகம் யுகமாய் இந்த மரங்களே தங்களுக்கு வீடாக வேண்டும் என்று ஜபிக்கின்றன போலும், ராமமூர்த்தியைப் போல. ஆனந்தமாய் தன் வீட்டை நோக்கி காற்றில் மிதந்தான்.
ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான். பிறகு கூரை மீதேறி முற்றத்திற்கு வந்தான். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணி. இவனுக்கு முகத்தைக் காட்டவோ என்னவோ இவனிருக்கும் பக்கம் திரும்பினாள். பளீரென்ற திருநீறிட்ட இயற்கையான மஞ்சள் முகம். 'பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே' என்று ஒரு காலத்தில் இருந்தவள், இப்போது பார்வையிலேயே நோய் தீர்ப்பவள் போலிருந்தாள். இவளைப் பார்த்தபோது கொஞ்சம் அதிகமாகவே நினைவகம் நிறைந்து போனான் ராமு. வீடு ஏன் களேபாரமாய் இருகிறது. அவனுக்கு அறிந்தவர்கள், அறியாதவர்கள் எல்லாம் இருந்தார்கள். லதா எங்கே? ஆனந்தகுமார் எங்கே? சம்பூர்ணி கூப்பிட்டாள்.
"லதா..........லதா.."
லதா என்கிற ஹேமலதா உடனே வந்தாள். கொடி போலிருந்தாள். புது மணப்பெண்ணின் முழுப் பொலிவும் கொண்டு இருபத்து நான்கு வயதுக்கு பூரணமாய் இருந்தாள்.
"அத்தைகிட்ட அலங்காரம் பண்ணிக்கம்மா. பெண் அழைப்புக்கு அவங்க ஆறரை மணிக்கெல்லாம் வந்துடுவாங்க".
லதாக்குட்டிக்கு கல்யாணமா? ராமு நிறைந்து கொண்டிருந்தான்.
"ஆனந்தா...........".
"இதோ வந்துட்டம்மா".
"சித்தப்பா கொஞ்ச நேரத்தில வந்துடுவார். நல்லா கவனிச்சுக்கோ. நாளைக்கு லதாவுக்காக மனையேறப் போறவர். கொஞ்சம் கூட முகம் சுளிக்காம கவனிச்சுக்கோ".
"நீயேம்மா கவலைப்படறே. ஒருத்தருக்கும் ஒரு குறையும் வராது."
சின்ன வயதிலேயே படுசுட்டியான ஆனந்தன் இப்போது இருபத்தி எட்டு வயதில், துள்ளும் இளமையில் இரட்டை சுறுசுறுப்பில் இருந்தான். ராமுவுக்குத் தெரியும் சம்பூர்ணி இருக்குமிடத்தில் எல்லாரும் எல்லாமும் சுபிட்சம்தான். இவன் கலிபோர்னியாவில் மென்பொருள் பொறியாளனாய் இருந்தானே? திருமணத்திற்காக விடுமுறையில் வந்திருக்கிறான் போலிருக்கிறது. கூடத்தில் மாலையிடப்பட்டு ராமமூர்த்தியின் படம் தோற்றம் மறைவெல்லாம் எழுதியிருந்தது. 'அழகாய்த்தான் இருந்திருக்கிறேன். அதான் சம்பூர்ணி அப்படி சொக்கிப் போயிருந்திருக்கிறாள்'. இல்லை ராமமூர்த்தி அல்லவா சொக்கிப் போயிருந்தான். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணுரிமை தத்துவத்தை முழுக்க முழுக்க பின்பற்றியவனல்லவா அவன். அவளும் இதை அறிந்திருந்தாள். ஆனால் இதை வாய்ப்பாக நினைக்காமல் போனஸாக நினைத்திருந்தாள். அதனால் வாழ்க்கை முழுக்க கம்பி பதத்தில் வெல்லப்பாகாய் இடைவிடாத சந்தோஷம்.
மாப்பிள்ளை யார்? ஒட்டுக் கேட்டதில் அவனும் உள்ளூர்தான். ஆனால் வேலை சென்னையில். அப்படியென்றால் இனி சம்பூர்ணி எங்கிருப்பாள்? ராமுவுக்கு இந்தக் கவலையில்லை. எந்தக் கவலையுமில்லை. ஆனால் அறிந்து கொள்ளஆசைப்பட்டான். இரவில் அம்மாவும் மகனும் பேசிக் கொண்டார்கள்.
"அம்மா ஆறு மாசத்துக்குள் பெங்களூரோ சென்னையோ செட்லாகிவிடுவேன். நீ அமெரிக்காவெல்லாம் வரவேண்டாம். நல்ல பொண்ணாப் பார்த்து வை. மிஞ்சிப் போனால் ஒரே ஒரு வருஷம். இங்கேயே வந்துடுவேன்."
கொஞ்சம் கொஞ்சமாக நினைவகம் நிறைந்துகொண்டிருந்தான். பெண்ணழைப்பிற்குப் பிறகு ஹேமலதா தங்கத்தாரகைபோல் ஜொலித்துக்கொண்டிருந்தாள். தன்னைக் கனமாக உணர்ந்த ராமுவுக்கு நினவகம் வெகுவாக நிறைந்திருப்பதன் பிரக்ஞை வந்தது. சத்திரத்தில் ஓர் உத்திரத்தில் ஒண்டிக்கொண்டான். அதிகாலை முகூர்த்தம்.
அப்போது அவன் முக்கால்வாசிக்கு மேல் நினைவகம் நிறைந்திருந்தான். பெரிய திருமண மாளிகை. மாளிகை நிறைய மக்கள். மங்கல வாத்திய முழக்கம். மணக்க மணக்க சாப்பாடு. இட்லிக்கு கடப்பாவா, கொத்ஸா? சம்பூர்ணிக்கு மைல்க்கல் போன்றதொரு நாள். அவனுக்கும்தான்.
முகூர்த்த நேரம். ராமு சம்பூர்ணியைப் பார்த்தான். மணவறைக்கு சற்றுத் தொலைவில் தனியாய் விழியோரக் கண்ணீர்த் துளிகளுடன் நின்றிருந்தாள். அப்போது ராமுவை நினைத்துக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது. ஆனந்தன் அதி சுறுசுறுப்பில் அங்கும் இங்குமாய் இருந்தான். அப்சரஸ் போல ஹேமலதா. கந்தர்வன் போல மணமகன். சுபமுகூர்த்தம். "ஆனந்தம் ஆனந்தம்........ஆனந்தமே." அந்த முகாரியில் முழுவதும் நிறைந்ததைப் போல் உணர்ந்தான். இன்னும் ஒரு சில எக்ஸா பைட்டுகளாவது மிச்சமிருக்குமா?. இந்த முகாரிக்குப்பிறகு அவனுக்கு எதையும் கேட்கப் பிடிக்கவில்லை. பால்பாயாசத்தில் ஆனையடி அப்பளத்தைப் பிசைந்து எல்லோரும் சாப்பிடுவதையெல்லாம் பார்க்க ஆசைதான். ஆனால் முழுவதுமாக புது நினைவுகளால் நினைவகம் நிறைந்துவிட்டவன் உடனே ரயிலடிக்கு வந்தான்.
காலை 10.15 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ். மாலை தம்பரம். நள்ளிரவு லுப்தான்ஸா.
அவனால் விமானத்தில் உள்ளே நுழைய முடியவில்லை. இங்கே சுற்றிலும் பல இநிக்கள். சூழ்நிலை வெகுவாக மாறி இருந்தது. அவனைத் தடுத்த ஓர் இநி கேட்டான்.
"நேற்றிலிருந்து சர்வதேச பயணம் செய்யும் இநிகளுக்கு கட்டணம் வசூலிக்கிறோம்."
அதர்ச்சியில் மேலும் சில டெர்ரபைட்டுகளை இழந்தான். பாஸ்டனில் இருக்கும் அந்த பேப்பர் வெய்ட்டுக்குள் நுழைந்துவிட வேண்டுமென்ற கவனம் வந்துவிட "நியூ யார்க்குக்கு எவ்வளவு?' என்றான்.
"சென்னை டு நியூ யார்க் - 500 டெர்ராபைட்டுகள்."
அவன் பாஸ்டன் வந்து அந்த பேப்பர் வெய்ட்டை நெருங்கியபோது அவனிடம் சில நூறு டெர்ரா பைட்டுகள் மிச்சமிருந்தன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேன் - சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான கதை.
ஓகை நடராஜன்.
26 ஜூலை 2008
*****************************
*****************************