மைலாப்பூர் உறவுகள்
22-08-2006 சென்னை தினத்தில், நான் சென்னைக்கு வந்து முதன்முதலில் குடியேறி பல ஆண்டுகள் வசித்த மயிலாப்பூர் பற்றி ஒரு கானா இயற்றி உங்களுக்கெல்லாம் சமர்ப்பிக்கிறேன். இதில் சொல்லியிருக்கும் அத்தனை வழிபாடு இடங்களும் நான் கூறிய வரிசையிலேயே மைலப்பூரில் அமைந்திருக்கின்றன.
மைலாப்பூர் உறவுகள் (கானா)
========================
-என்னா கஜா இன்னிக்கு ரொம்ப குஷியா இருக்கிற?
______ கஜாவுக்கு கண்ணாலம் வச்சிகிணேன் - என்
______ மைலாப்பூரு உறவுக்கெல்லாம் சொல்லிகிணேன்
______ (கஜாவுக்கு.........)
-உனக்கு ஏதுப்பா உறவெல்லாம். நீ தனிக்கட்டை ஆச்சே?
______ இன்னா சாமி அப்டி கேட்டே - இந்த
______ மைலாப்பூரே நம்ம பேட்ட
______ நெறயா ஒறவுக்காறங்க கீறாங்க
______ சுகுரா அத்தினிபேரும் வாராங்க!
-சரி வரிசையா சொல்லு பார்க்கலாம்! யார் யாரயெல்லாம் கூப்பிட்டே?
______ என்வூடு சித்திரக்கொளம் பக்கந்தான்
______ மொத ஒறவக் கூப்பிட போனேன் மேக்கதான்
______ தேங்கூரு செல்வ வினாயகன கூப்பிட்டேன்
______ கூடவே குந்திகிற வெள்ளீஸ்வரன கூப்பிட்டேன்
______ தெக்க வந்து மசூதில அல்லாவை கூப்பிட்டேன்
______ ______ ______ ______ நம்ம அல்லாவை கூப்பிட்டேன்
______ அப்பால மேக்கபோயி தண்டுமாரிய கூப்பிட்டேன்
______ (கஜாவுக்கு.........)
-ம், அப்பறம்
______ வடக்க போனா வந்துது நம்ம மடம்
______ ராமகிஸ்ண பரமஅம்சர் கீற எடம்!
______ அத்த தாண்டி வடக்கால சாயி கோயில் வருதுங்கோ
______ அப்பால கொஞ்சம் போனா நவசக்தி புள்ளாருங்கோ!
______ அவரையும் கூப்டுகினு அப்பால போனேங்கோ
______ அம்சமா வந்தாருங்கோ ஆஞ்சநேய சாமிங்கோ!
______ அம்சமா வந்தாருங்கோ ஆஞ்சநேய சாமிங்கோ!!
______ (கஜாவுக்கு.........)
-ஏ அப்பாடி, பெரிய பட்டியலா வச்சிரிக்கியே!
______ அய்யன் திருவள்ளுவரு அங்கே நின்னாரு
______ ______ ______ சிலையா அங்க நின்னாரு
______ அவருக்கு சலாமு அய்யா சொன்னாரு
______ ______ ______ இந்த அய்யா சொன்னாரு
______ அப்பாலே கிழக்காலே முண்டகன்னி அம்மன கூப்பிட்டேன்
______ அய்யன் திருவள்ளுவர அவரோட கோயில்ல கூப்பிட்டேன்
______ அதுக்கு பக்கத்துல மாதவப் பெருமாள கூப்பிட்டேன்
______ இன்னும் கொஞ்சம் கிழக்காலே கோலவிழியம்மன கூப்பிட்டேன்
______ இன்னும் நாலு எட்டு வச்சி காரணி ஈசனயும் கூப்பிட்டேன்
______ (கஜாவுக்கு.........)
-மூனு பக்கம் சுத்தி வந்திருக்கிற. இப்ப தெக்க திரும்ப போற! சரியா?
-கரீட் சாமி.
______ தெக்கால வந்தாக்கா நெடுநெடுன்னு நிக்கிதுங்கோ
______ கடக்கர காத்து வாங்கும் தோமையர் சர்ச்சுங்கோ
______ அவரையும் கூப்பிட்டேன் வாரேன்னு சொன்னாருங்கோ
______ என் வூட்டு பக்கத்துல கேசவப் பெருமாளுங்கோ
______ அவரையும் கூப்பிட்டேன் அவரு நம்ம ஆளுங்கோ
______ அல்லாரையும் கூப்டுகிணு நடுவுக்கு வந்தேங்கோ
______ ______ ______ ஊரு நடுவுக்கு வந்தேனுங்கோ
______ இஷ்ட தெய்வம் கபாலி கோயிலுக்கு வந்தேங்கோ
______ என்னோட
______ இஷ்டதெய்வம் கபாலி கோயிலுக்கு வந்தேங்கோ
______ (கஜாவுக்கு.........)
-அடி சக்க, கடைசியா கபாலியப் பாக்கிற.
______ உள்ள போயிக் கூப்பிட்டேன் மயிலேறும் முருகனத்தான்
______ வற்புருத்தி கூப்பிட்டேன் கற்பக வல்லி அம்மாவத்தான்
______ வெள்ளமாக அருள்புரியும் வெள்ளிமலை காபாலியத்தான்
______ மருடி மருடி கூப்பிட்டேன் கட்டாயமா வந்திடத்தான்
______ அறுபத்து மூனூபேரு நாயன்மாரு சாமிங்கோ
______ அவங்களையும் கூப்பிட்டேன் வருவாங்கோ பாருங்கோ
______ மத்த எல்லா சாமிங்களும் நவக்கிரக சாமிங்களும்
______ அல்லாரையும் கூப்பிட்டேன் அவங்களும் வருவாங்கோ
______ (கஜாவுக்கு.........)
-இன்னும் ஏதாவது சாமிங்க பாக்கி கீக்கி இருக்கா?
-இல்லாம...
______ மசூதி தெருவுல ஒரு விசேஷ இடமுங்கோ
______ மசூதி தெருவுல ஒரு விசேஷ இடமுங்கோ
______ அதுங்கோ பேயாழ்வார் அவதார தலமுங்கோ
______ ஆழ்வாருங்க மொத்தம் பத்து பேருங்கோ
______ ஆண்டாளும் இன்னுமொரு ஆழ்வாரு தானுங்கோ
-உறவுக்காறங்கன்னு சொல்லி சாமிங்களெல்லாம் கூப்பிட்ற..என்ன நியாமப்பா இது?
______ அல்லாருக்கும் பெரியவரா ஒரு பெரியாழ்வார் பாருங்கோ
______ அவரு இன்னா சொன்னார் கேளுங்கோ
______ அவரு இன்னா சொன்னார் கேளுங்கோ
-சாமிங்கெல்லாம் உனக்கு உறவுங்கன்னாரா?
______ ஆமாங்கோ, ஆமாங்கோ அப்படித்தான் சொன்னாருங்கோ!
______ ______ ______ ______ அப்படித்தான் சொன்னாருங்கோ!!
______ ஊரிலே ஒத்தகாணி நெலம் இல்லேன்னு சொன்னாரு!
______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!
______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!
______ சாமியத்தவிர
______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!
______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!
______ உறவு மத்தபடிக்கு
______ ______ ______ ஒருத்தர் இல்லேன்னு
______ ______ ______ ______ ______ சொன்னாரு...!!!
______ *************______ *************______ *************
அகச் சிவப்புக் கதிர்கள்
ஆடிப் பெருக்கை முன்னிட்டு இயன்றவரை இனிய தமிழில் ஓர் அறிவியல் புனை கதை. இது சென்ற ஆண்டு மரத்தடி யாகூ குழுமத்தில் வெளிவந்திருக்கிறது.
அகச் சிவப்புக் கதிர்கள்======================கி.பி 3006. அன்று ஆடிப்பெருக்கு. அதை நினைத்த வாணிக்கு வந்த முறுவல் அனிச்சையானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்துபோன ஆடிப்பெருக்கு எனும் சிறப்பு தினத்தை இன்றும் இனம் காணும் சொற்ப ஜீவன்களில் ஒருத்தி என்ற நினைவு தந்த முறுவல். மைலாவில் அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் - அப்போது மைலாவுக்கு மைலாடுதுறை என்று பெயர் இருந்தது - மைலாவில் ஆடிப்பெருக்கு எவ்வளவு கோலாகலமாய் இருந்திருக்கும். அவள் ஒரு வரலாறு விரும்பி. அவளுக்குத் தமிழே தாயும் தந்தையும். வாழ்ந்த வயதும், வரப்போகும் வாழ்வும் தேர்ந்த கல்வியும் எல்லாம் தமிழே. அவள் ஆழ்ந்த கற்பனையில் காவிரியின் கரையில் இளஞ்ஜோடிகளை கற்பனை செய்து பார்த்தபோது இன்று காலை பார்த்திபனுடன் காவிரியின் ஸ்பரிசம் பெற்றதை நினைத்துக் கொண்டாள்.
அரசு விஞ்ஞானியான பார்த்திபன் அவளுடைய உயிர்த்தோழன். அவசர அலுவல் அழைப்பில் சென்றிருந்தான். அலுவல் முடிவது எப்போது வரமுடியும் என்று தெரியாமல் உத்தேசமாக நாளை வருவதாகச் சொல்லியிருந்தான். பார்த்திபன் - ஒரு பல்லவ ராஜனின் பெயர் என்று நினைத்த மாத்திரத்தில் இப்போது இச்சையாக முறுவலித்தாள். இப்படி தானே வலிந்து சிரிப்பதை நினைத்தபோது அவளுக்கு கிளர்ச்சியாக இருந்தது. ஒளிர்த்திரை வரவழைத்து கண்ணாடித் தன்மைக்கு (mirror mode) மாற்றினாள். 'அழகை ரசிக்காத அறிவும் ஒரு அறிவா?' கண்ணாடியில் தன் முகத்திற்கு பின்னே பார்த்திபனின் பிம்பத்தை இட்டு அப்போது தன்முகம் மலர்வதை தானே பார்க்க ஆசை கொண்டாள். பார்த்திபன் திரையில் வந்தான். இப்போது அவள் கட்டுப்படுத்த விரும்பாமல் களுக்கென்று சிரித்தாள். குப்புறக் கவிழ்ந்து படுத்து தலையணையில் பார்த்திபனைத் துழாவித் தேடினாள்.
தஞ்சூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இருந்தாள் வாணி - அறிவிலும் அழகிலும் வாணிதான். அப்படித்தான் பார்த்திபன் சொல்லியிருந்தான். அன்று இருந்த அகமான மனநிலையில் குறுந்தொகையும் வேறு அகப்பொருள் இலக்கியங்கள் பலவற்றையும் மேய்ந்தாள். இந்தப் பசலை என்பது எப்படி இருக்கும் என்ற நெடுநாள் கேள்வியை மீண்டும் கேட்டுக்கொண்டாள். அவள் மனதில் குடையும் வண்டாய் மாறி பார்த்திபனின் ஒரு ரீங்காரம் கேட்டுக்கொண்டேயிருந்தது. 'பார்த்திபன், பார்த்திபன், பார்த்திபன்,.............'. அவள் வாய்விட்டுச் சொன்னாள், ........ "சீ போடா" . பிறகு மெதுவாக இவனின் பெயர் ஜபத்திலிருந்து கழன்று சுகமான பின்னினைவில் (flash back) ஆழ்ந்தாள்.
தஞ்சூர் பல்கலையில் 3005ம் ஆண்டின் திசு வளர்ப்பு (Tissue culture) மாநாட்டிற்கு பார்த்திபன் வந்தபோது தான் அவர்கள் முதன்முதலில் சந்தித்தார்கள். அனைத்து விஞ்ஞான ஆவணங்களும் தமிழிலும் வேண்டும் என்கிற அரசாணையால் திசு வளர்ப்பு பற்றிய அவனுடைய கட்டுரை மொழிபெயர்ப்பை நல்ல தமிழில் அழகானதாக மாற்ற வேண்டி அவன் அவளிடம் வந்தான். வாணிக்கு விஞ்ஞானிகள் மேல் எப்பொழுதுமே மரியாதை இருந்தது இல்லை. விஞ்ஞானிகளை பொறியாட்களுக்குச் (robot) சற்று மேலாகவோ அல்லது கீழாகவோதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் தன் மொழிபெயர்ப்பை மேலும் அழகானதாக்க முயலும் ஒரு விஞ்ஞானியை மனதளவில் நிராகரிக்க முடியாமல், மனிதனுக்கு அருகில் முதன்முறையாக எண்ணிப் பார்த்தாள். பல சிறந்த மொழிபெயர்ப்புகளை அவனே தமிழில் முன்மொழிந்த போது அவளுள் ஒரு மெல்லிய இரசாயனம் முளைத்தது. இவன் சொன்னதையெல்லாம் தமிழில் முனைவரான அவள் ஒப்புக்கொண்டு பாராட்டியபோது அவனுள்ளும் அதே இரசாயனம் துளிர்த்தது. இவனுள் எப்போது இரசாயனம் துளிர்த்ததோ அப்போதுதான் அவளுக்கு அழகு முளைத்தது போல் அவனுக்கு அவள் திடீரென அழகாக இருந்தாள். எந்த விதிகளும் எந்த காலத்திலும் இப்படி துளிர்க்கும் இரசாயனத்தை என்ன செய்துவிட முடியும்?
இந்தியாவின் எல்லா மனித தேவைகளுக்கும் அரசே பலவகை மனிதர்களை உற்பத்தி செய்தபோதும் இயல் மனிதவகை (wild human) என்றழைக்கப்பட்ட இந்த வகை மனிதர்கள்தாம் கற்காலம் முதல் கணிணிகாலம் (கணிணி காலம் கிபி 1950- கிபி 2050) வரையிலான மனிதர்களுக்கு ஓரளவிற்கு ஒப்பானவர்கள். மற்றெல்லோரும் பல திறத்துப் பொறியாட்களே. படி எடுக்கப்பட்டு (cloned) கணினி மூளையால் கட்டுப்படுத்தப் படுபவர்கள்.
தஞ்சூரில் ஒரு உணவகத்தில் அவர்கள் மீண்டும் முன்பேசி சந்தித்தபோது,
"வாணி என்ற நல்ல பெயர் உனக்கு வைத்திருக்கிறார்கள்".
" இல்லை பத்து வயதில் என்னைத் தமிழ்த் துறையில் சேர்த்தபோது பல பெயர்கள் கொடுத்து தேர்ந்தெடுக்க சொன்னார்கள். நானாக வைத்துக் கொண்ட பெயர்தான் இது."
"நீ எனக்கு மேல் படி (grade) போலிருக்கிறது. அதனால்தான் உன் பெயரை நீயே வைத்துக் கொள்ளும் உரிமை பெற்றவளாயிருக்கிறாய். நான் பிறப்பிலேயே பார்த்திபன் என்ற பெயரோடு விஞ்ஞானியாக உருவாக்கப்பட்டு விட்டேன். பத்து வயதில் திசு விஞ்ஞானி குழுவில் சேர்க்கப்பட்டேன்."
"..........."
"வாணி..."
"..........."
"உன்னை ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கிறது."
"அப்படியா! அதற்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா? உடனே உடலங்கடிக்குச் (Body shop) சென்று என்னைப்போல் ஒன்றைக் கேட்டு வாங்கி உன்னறைக்கு கூட்டிச் செல். நாமாக இணைவதற்குதான் அரசுக்கு முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். பல விளக்கங்கள் கொடுக்கவேண்டும். சிக்கல்தான். மேலும் நான் அதற்குத் தயாராயில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பமுமில்லை."
இவனுக்கு தோசையும் அவளுக்கு மாவைப் போன்றதொன்றும் கொணர்ந்த பொறிப்பெண் அவனைப் பார்த்து முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு போனாள்.
"பொறிப்பெண்ணுடனா? நானா? இப்போது வந்து போனதே பார்த்தாயா? ஆண்களைப் பார்த்து முறுவலிக்க வேண்டுமென்று ஜீனில் எழுதப்பட்ட ஒன்றின் கூடவா உறவாடச் சொல்கிறாய்? இல்லை வாணி, எனக்கு உன்னைப் போலவே இருந்தாலும் பொறிப் பெண்ணெல்லாம் வேண்டவே வேண்டாம்.......ஆமாம் அது என்னது மாவும் தேனும்?"
"இது தினை மாவு. சுமார் 3000 ஆண்டுகளுக்குமுன் இது மிகப் பழந்தமிழரின் உணவு."
"உனக்குப் பழமை இந்த அலவுக்குப் பிடிக்குமா. உனக்காக ஒன்று என்னிடம் இருக்கிறது".
எதிரே அமர்ந்திருந்தவன் அருகே வந்து அமர்ந்தான்.
"வாணி, உனக்குப் பழங்காலம் பிடித்திருக்கிறது அல்லவா, உன்னை பழங்காலத்தை உண்மையாய் உணரச் செய்ய என்னால் முடியும். காலப்பொறி ஆராய்ச்சிகளை அரசு தடை செய்திருந்தாலும் பொழுதுபோக்கிற்காக நான் ஒன்று செய்திருக்கிறேன். முடியும் தருவாயில் இருக்கிறது. இது பெரிய தண்டனைக்குரிய குற்றம். ஆனால் வாணி, உன்னிடம் சொல்வதில் எனக்கு பயமில்லை."
பிறகு அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். ஒரே அறையில் மைலாவில் வசிக்கவும் ஆரம்பித்தார்கள். நேற்றுதான் அவன் அந்த காலப்பொறியை பூர்த்தி செய்து அவளுக்கும் விளக்கினான்.
"இது இறந்த காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று இயல்பு நேரம் வரை மீளும். இயக்குபவரை ஒலி ஒளி உணரும் நிறமற்ற திசுக்களாக்கி, விரும்பும் காலகட்டத்திற்கு இட்டுச்செல்லும். நிகழ்காலத்தில் உடல் மட்டும் கோமாவில் நிறுத்தி வைக்கப் படும். உயிர்த்திசுக்களை மட்டும் காலத்தின் பரிமானத்தில் பின்னோக்கி இட்டுச்செல்லும். ஒரே நேரத்தில் இருவர் இயக்கலாம்."
சோதிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் பின் சென்று பார்த்து அந்த அலாதி அனுபவத்தை இருவரும் பெற்றார்கள்.
"வாணி, இந்தப் பொறியில் அகச்சிவப்புக் கதிர்களின் பயன்பாட்டை அதிகம் உபயோகித்திருக்கிறேன்."
"பார்த்திபா, infra red rays ஐச் சொல்கிறாயா? அது தவறான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. என்றோ யாரோ தவறாய்ச் செய்தது இன்றுவரை வந்திருக்கிறது என நினைக்கிறேன்."
"ஆம் வாணி. infra என்றால் 'தாழ்ந்த' அல்லது 'கீழான'. காணும் நிறமாலைக்குக் கீழே அதிர்வெண் உடைய கதிர்கள். அதற்கு 'உள்ளே' என்று பொருள்வரும் 'அகச்சிவப்பு' என்பது எப்படிப் பொருந்தும்".
"சரிதான். உண்மையிலேயே அகச்சிவப்பு கதிர்கள் எவை தெரியுமா பார்த்திபா? ஒரு நாள் தஞ்சூர் உணவகத்தில் என்னை உற்றுப்பார்த்தபடி மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னாயே, அப்போது நீ என் மீது வீசிய கதிர்கள்தான் அகச் சிவப்புக் கதிர்கள். அகம் சிவந்ததால் வீசிய கதிர்கள்".
"ஓ, ஆனால் அவை உன்னை பாதித்ததாக எனக்குத் தெரியவில்லையே".
"அந்த ஆரம்பத்தாக்குதலை இன்னும் ருசித்து முடிக்கவில்லை பார்த்திபா, அதற்குப் பிறகுதான் என் எதிர் தாக்குதல்".
"என்மீது எப்போது வீசும்?"
"................."
"வாணி, பொறிப் பெண்களை அடுப்பில் போட்டு பார்க்கட்டுமா? நீ அப்படித்தானே யோசனை சொல்வாய்."
அவள் ஒன்றும் சொல்லவில்லை. சிறிய மவுனத்துக்குப் பிறகு சொன்னாள்,
"பார்த்திபா நாளைக்கு ஆடிப்பெருக்கு. நீ வேலைக்கு செல்லுமுன் கேயெம் நகருக்குச் செல்வோம். அங்கு உனக்கு நான் ஒன்றைக் காட்டுகிறேன்".
(KMநகர்-பழைய நாட்களில் கும்பகோணம் என்று பெயரிருந்தது.)
"எதைக் காட்டப்போகிறாய் வாணி?"
"என்னைச் செய்த பிரம்மாவை".
அப்பா அம்மாவே இல்லாத இன்றைய உலகில் அவள் பிரம்மாவைக் காட்டுவதாகச் சொன்னபோது அவன் ஆர்வமானான். விடியற்காலை கிளம்ப திட்டமிட்டார்கள்.
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு கடந்த பல நூற்றண்டுகளாக ஓடுகிறது. நதிநீர் இணைப்பில் காவிரியும், மற்றெல்லா ஆறுகளும் ஜீவ நதிகளான புண்ணியத்தில் மைலாவின் காவிரி மத்தியத்துறையில் படகிலேறி கேயெம்மின் சக்கரைப்படிக்கு வந்தார்கள். அவள் ஏதோ ஒரு கோவிலுக்கு கூட்டிச்சென்று ஒரு சிற்பத்தைக் காட்டினாள். அந்த சிற்பம் ஒரு தூணில் கல்லாய் சமைந்திருந்த ஆணும் பெண்ணும் தழுவிய நிலையில் இருந்ததைக் காட்டியது.
"இந்தப் பெண்ணைப்பார் பார்த்திபா. என்னைப் போல் இல்லை?"
அவன் ஆச்சர்யக் கடலில் மூழ்கினான்.
"அடேயப்பா! வாணி, அப்படியே உன்னை உரித்து வைத்தது போலிருக்கிறதே!"
"பார்த்திபா-உன்னைப் போலொரு முன்தலைமுறை திசு விஞ்ஞானி இவளைப் பார்த்துதான் எனக்கு வித்திட்டிருக்கிறான் என்று ஊகிக்கிறேன்".
"ஆமாம் வாணி, நிச்சயம் உன் யூகம் சரி".
அந்த சிற்பத்தில்,
நின்று பிணைந்த நிலையில்,
அங்கங்கள் அழுத்தி அழுந்திய நிலையில்,
பித்தம் தலைகேறிய நிலையில்,
தாங்களே உலகாய் நின்றது அந்த இணை,
சரியாய்க் காண்பவர்களிடம்
கோடிக்கண்கள் கேட்கும் அற்புத சிற்பம்.
ஆடைகள் ஏதுமின்றி
குறைந்த ஆபரணங்களே
அங்கங்களை மூடியன.
ஆண்மகன்
தலை குனிந்து கீழ்நோக்கி,
வலக்கரம் பெண்ணின் முகவாயாயை
மென்மையாய் முட்டிட்டு மேல் தூக்க,
அவள்
அகல விரிந்த அகக்கண்களொடும்,
பாசாங்காய் குவிந்து மூடிய புறக்கண்களொடும்
முகம் பூரித்த பெண்மகளாய்
ஐக்கியத்தின் முடிவில் இருந்தாள்.
அவன் முகம் தன்னுடையாதா என்று பார்த்தான் பார்த்திபன். அந்த ஆடவனின் இடக்கரம் செல்லுமிடத்தை ஊகித்து முறுவலித்தான். கிறங்கியபடி சொன்னான்,
"வாணி என் திசுக்களை உருமாற்றும் சக்தி இந்த கற்சிலைக்கு எப்படி வந்தது? என் அகமும் சிவந்து தவிக்கிறதே."
"நான் உன் கதிர்களை உணர்கிறேன் பார்த்திபா. இந்த சிற்பத்திற்குப் பின் ஒரு கதை இருக்கிறது. இவன் ஒரு பல்லவ ராஜன். 7ம் நூற்றாண்டில் சோழ நாடு பலவர் வசமிருந்தபோது இங்குவந்து இந்தப் பெண்ணைப் பார்த்தான். அனைத்தையும் மறந்து அவளைச் சேர்ந்தான். பலநாள் தன் நாடுமறந்து இங்கேயே இருந்தவன் பின் இவளுக்கு பெரும் சிறப்பு செய்தான். பின்னாளில் சோழர்கள் அவர்கள் நினைவாகச் செய்த சிற்பமிதுவென ஒரு கல்வெட்டு சொல்கிறது".
"அந்தப் பல்லவனின் பெயர் பார்த்திபனோ? அவன் நிலையில்தான் இப்போது நானிருக்கிறேன் - அவனைப்போல் அகத்தில் சிவந்து, உன் மேல் கதிர்களை வீசிக்கொண்டு".
"பார்த்திபா அந்த நகக்குறியையும் இந்த பற்குறியையும் பார்த்தாயா. நானே முகமும் அகமும் சிவந்து விட்டேன் பார்".
"ஆமாம். உன்னை இப்படி பார்ப்பதே பெரும் பரவசமாய் இருக்கிறது. இந்த முழுச் சுகமே எனக்கு முதற்சுகமா? அல்லது இந்த முதல் சுகமே எனக்கு முழுச்சுகமுமா?"
"பார்த்திபா, கவிதையை நிறுத்து. அலுவலுக்குச் செல். நான் உன் காலப்பொறியில் இந்த சிற்பம் வடித்த சிற்பியைக் கண்டுவருகிறேன். அந்த சிற்பிதான் என் முதல் பிரம்மா பிறகுதான் திசு விஞ்ஞானமெல்லாம்".
"வாணி, என் பணி முடிந்ததும் நானும் பொறியில் உடன் வந்து சேர்ந்து கொள்கிறேன். நேர இலக்கில் காலத்திற்கு பதில் வாணி என்று இட்டேனானால் உன் திசுக்கள் இருக்கும் காலத்திற்கு நானும் திசுக் கூட்டமாய் வருவேன்".
அவன் சென்ற பின்னர்தான் மைலாவில் அவள் இப்படித் தனியாகத் தவித்துக் கொண்டிருந்தாள். பிறகு பின்னினைவில் இருந்து மீண்டு காலப்பொறி பயணத்துக்கு ஆயத்தமானாள்.
காலப்பொறியின் சாய் நாற்காலியில் படுத்து இயக்கத் தொடங்கினாள்.
இலக்கு - நேரம்
அலகு -ஆண்டு. 3000.....2000....1000.....950...940...936.
அலகு - நாள். 364....251....145....144.
அலகு - மணி .............
கி.பி 936ன் 144வது நாளுக்கு வந்தாள்.
குடந்தையில்
முற்றுபெறாத அதே கோயில்.
கல்லுளிகளின் கிங்கினி சத்தம்.
அதோ கட்டுண்ட நிலையில் இருவர்
அந்த சிற்பத்தைப்போலவே
ஆனால் உண்மை மனிதர்கள்.
சிற்பியும் சொல்லச் சொல்ல....
பற்குறி பதித்தான்,
நகக்குறி இட்டான்,
அங்கங்களின் அழுத்த அளவைச் சொன்னார்,
சொல்லப்பட்டது சொல்லப்பட்டவாறே
செய்து நின்றனர் அந்த இருவர்.
அதைப் பார்த்துப் பார்த்துப் பார்த்து
அந்த கல்லும்
கிளங் கிளங் கினங் கினங்கென
ஒவ்வொரு வளைவாய்
உயிரேற்றம் பெற்றது,
இதை உற்றுநோக்கிய திசுக்கூட்ட வாணி
உருகி நோக்கிக் கொண்டிருந்தாள்.
அவள் உள்ளம் சிவந்தது. சிவக்க உடலில்லாத திசுக்களும் சிவந்தன.
மனம் கூச்சலிட்டது.
'பார்த்திபா......'
பசலை எங்கே படர்வது எனத் திகைத்துக் குழம்பியது.
மனக்கூச்சல் 'பார்த்திபா.....'
கதிர்களின் பெருங்கூவல், 'பார்த்திபா'.
அவளால் அதற்குமேல் தாங்க முடியவில்லை. பொறியை இயக்கினாள்.
இலக்கு - பார்த்திபன். ..... பதிலில்லை
இலக்கு - பார்த்திபன். ..... பதிலில்லை
....................................
இலக்கு - பார்த்திபன். ..... பதிலில்லை
இலக்கு - பார்த்திபன். ..... பதிலில்லை
...................................
அலுவல்கள் சீக்கிரமாகவே முடியப்பெற அவசரமாய் அறைக்கு வந்தான் பார்த்திபன். காலப்பொறியில் சாய்நாற்காலியில் கோமாவில் இருந்தாள் வாணி. அவனுக்கு எப்பொழுதும் அம்பாளைப் பார்த்தது போலிருப்பாள் வாணி.இப்போது அம்மனைப் பார்த்ததுபோல் இருந்தாள். முகம் சிவந்து, சற்றே தேகம் பூஞ்சை படர்ந்து, பூரண அகச்சிவப்பு கதிர்வீச்சில் வாணியின் உடல் காலப் பொறியில் இருந்தது. அவன் அவசரமாக பொறிக்குள் நுழைந்தான்.
அங்கு வாணி 936ல்
இலக்கு - பார்த்திபன். ..... பதிலில்லை
இலக்கு - பார்த்திபன். ..... பதிலில்லை .....
பார்த்திபன் பொறியை இயக்கினான்.
3006ல் -
இலக்கு - வாணி .
அலகு - ஆண்டு
....2506 ....2006....1976......1972.
அங்கே 936ல் வாணியின் பொறியில் விசைகள் உயிர்த்தன......
அலகு - ஆண்டு...
936........1938........1968.........1972.
1972ல் ஒரு திசுக்களாலான சங்கமம் நிகழ்ந்தது. உச்சமான கதிர்வீச்சில் நிறமற்ற அகச்சிவப்பில் திசுக்கள் ஒளிர்ந்தன, பிண்ணிப் பிணைந்தன. இருவரும் இணையாய் பொறியை இயக்க,
இலக்கு- 3006. அலகு ........ ஆரம்பித்தபோது...
அப்போது எங்கிருந்தோ மிதந்து வந்தது காற்றில் 'கலங்கரை விளக்கம்' திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்.
"பல்லவன் பல்லவி பாடட்டுமே...
பார்த்திபன் காதலி ஆடட்டுமே..."
இரண்டு திசுக்கூட்டங்களும் அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டன. இயக்கினார்கள்.
.......அலகு. வினாடி
- இயல்பு நேரம்.
மைலாவில் பரஸ்பர அகச்சிவப்பு கதிர்வீச்சு உச்சத்தை தொட்டது. ஆடிப்பெருக்கில் அன்பின் பெருக்கும் மகிழ்வின் பெருக்கும். மறுநாள் இதை மோப்பம் பிடித்துவிட்ட அரசுக்கு வழக்கு மன்றத்தில் இருவரும் அபராதம் கட்டினார்கள். முன்னறிவிப்பு செய்யாமல் கலந்ததற்கு அபராதம் கட்டிவிட்டாலும் வேறொரு விசாரனை வந்தது. உடலங்கடி அரசு அதிகாரி விசாரணை செய்தார்.
"உடலங்கடி பொறியாட்களிடம் உங்களுக்கு என்ன குறை? பொறியாட்களை விரும்பாமல் இயல்பு மனிதர்கள் ஒருவருக்கொருவர் விரும்பியற்கு நான் அரசுக்கு பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் தவறுக்குநானே பொறுபேற்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தீர்கள்?"
பார்த்திபன் சொன்னான்.
"அகச்சிவப்புக் கதிர்களுக்காகப் பொறியாட்களை அடுப்பில் போட்டுப் பயனில்லை".
********************************